– பரஞ்சோதி, நீதிபதி (ஓய்வு)
கேள்வி: அய்யா, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி என் மீது பொய் வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பியவர்கள் மீது, எனக்கு வயது 85 ஆகி உடல்நலமும் சரியில்லாமல் இருப்பதால் அவர்கள்மீது நடைமுறையில் உள்ள நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு ரூ.5 லட்சத்திற்குப் போட்டு காலம் கடந்து அதனால் நான் இறந்துவிட்டால் என் வாரிசுதாரர்கள் மேல்படி வழக்கைத் தொடர்ந்து நடத்தலாமா? அப்படி முடியாதென்றால் விரைவு நீதிமன்றத்தில் கட்டணம் இல்லாமல் வழக்குத் தொடுக்கலாமா, எந்த கோர்ட்டில் தொடுக்கலாம். மேலும் இது சம்பந்தமாக தங்களின் மேலான கருத்துகளையும் தெரிவித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். – ஆ.முனுசாமி
பதில்: அன்புள்ள முனுசாமி அய்யா, தாங்கள் தொடுத்த மான நட்ட வழக்கு தாங்கள் 85 வயது ஆன மூத்த குடிமகன் என்பதால் உடனே முன்னுரிமை அளித்து தங்கள் வழக்கை நீதிமன்றம் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தால் உடனே நடத்த வாய்ப்பு உள்ளது. நீதிமன்றங்கள் வயோதிகர் வழக்கை உடனே நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளது. தங்களுக்குப் பின் தங்கள் வாரிசுகள் வழக்கை நடத்தலாம். முன்பே வழக்கு நிலுவையில் உள்ளதாக தாங்கள் கூறியுள்ளதால் வேறு நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி: நான் எம்.எஸ்சி., பி.எட். படித்துள்ளேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. எனது அப்பா இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவருடைய ExServiceman Quotaஎனக்குத் தந்துள்ளார். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ExServiceman முன்னுரிமையை எனக்குப் பயன்படுத்த சான்றிதழ் திருமணத்திற்கு முன்பே பெற்றுத் தந்துவிட்டார். ஆனால், எனக்குத் திருமணம் ஆகிவிட்டதால் எனக்கு அந்த முன்னுரிமை செல்லுபடி ஆகுமா என்பதைத் தயவுசெய்து தெரியப்படுத்தவும். – ஏ.வாசுகி
பதில்: திருமதி வாசுகி அவர்களுக்கு, தங்கள் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவர் வாரிசான தங்களுக்கு தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்பதால் சலுகைச் சான்று பெற்றுத் தந்துள்ளார். தங்களுக்குத் திருமணம் ஆனாலும் அந்தச் சான்று பொருந்தும்.
கேள்வி: அய்யா, எனக்குத் திருமணமான மனைவி 1, திருமணம் ஆகாத வைப்பாட்டி 1. மனைவிக்கு 2 மகன்கள், 1 மகள். வயது 64, 58, 54. வைப்பாட்டிக்கு 2 மகள்கள். வயது 44, 41. மனைவியின் மகளுக்கு 1976ஆம் ஆண்டும், வைப்பாட்டி மகள்களுக்கு 1995, 1996ஆம் ஆண்டும் திருமணம் நடந்தது. பூர்வீக சொத்துக்களோடு நான் வாங்கிய சொத்துக்களும் உள்ளன. மேற்படி சொத்துக்களில் மேற்படி பெண்பிள்ளைகளுக்கு சொத்துரிமைப் பாத்தியம் உண்டா, இல்லையா என்பதைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். – ஆறுமுகம்
பதில்: அன்புள்ள ஆறுமுகம் அவர்களுக்கு, தாங்கள் சொந்தமாக தங்கள் வருவாயில் வாங்கிய சொத்து என்றால், தாங்கள் விருப்பப்பட்டவருக்கு எழுதி வைக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது.
மூதாதையர் சொத்து என்றால் அது தங்கள் வாரிசுகளுக்கும் அதாவது (வைப்பாட்டி நீங்கலாக) பிள்ளைகள் அனைவருக்கும் பாகம் கோரும் உரிமை உள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு சம பங்கு (கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது) சட்டப்படி உண்டு.
கேள்வி: என் குடும்பத்தில் தந்தை, தாய், அண்ணன், அக்காள் உட்பட மொத்தம் 8 பேர். இப்போது, அண்ணன், அக்காள் மற்றும் நான் உள்ளோம். தகப்பனார் சொத்து 2 ஏக்கர் 86 சென்டு. எனது அண்ணன் இறந்துவிட்டார். 10 வருடம் சாகுபடி செய்து வாங்கிய சொத்து 2 ஏக்கர். எனது அம்மா தான் சம்பாதித்து சுயமாக வாங்கிய பவுன் 8. எனது அக்காள் (பெரியவர் உடல் ஊனம் உள்ளவர்) வாங்கியது 4 பவுன். அண்ணன் மனைவியின் பேரில் பெரியவர் வாங்கிய சொத்தையும் எடுத்துக்கொண்டார். நான் வாங்கிய 1 ஏக்கரையும் வைத்துக்கொண்டார். இப்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு 18 ஆண்டுகள் வைத்துக்கொண்டு தன்னுடைய பிள்ளை மூலமாக சாகுபடி செய்து வருகிறார். நான் பலமுறை முயற்சி செய்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. அதனால் சொத்தும் இதுவரை வைத்திருந்ததற்கு பணமும் கிடைக்க ஆவன செய்யவும்.
– கே.ராஜேந்திரன், உமையாள்புரம்
பதில்: அன்புள்ள இராஜேந்திரன் அவர்களுக்கு, தாங்கள் தந்த விவரத்தில் தந்தை இப்போதும் வாழ்கிறாரா இல்லையா என தெரியப்படுத்தவில்லை. தாங்கள் அளித்த இதர குடும்பச் சூழலை வைத்து தங்கள் தந்தை இயற்கை எய்தியதாக அனுமானிக்கின்றோம். (தந்தை இருப்பின் மன்னிக்கவும்). தந்தை சுயமாகச் சம்பாதித்த சொத்து எனில் அதில் அவர் யாருக்கும் சொத்து எழுதி வைக்காத நிலையில் இறந்த பிறகு தாய், மற்றும் அவரின் ஆண், பெண் பிள்ளைகள் எல்லோருக்கும் இப்போது சமபங்கு உள்ளது. அதாவது, இயற்கை எய்திய தங்கள் அண்ணன் வாரிசுகளுக்கு அவரின் பங்கு பெறத் தகுதி உண்டு. தங்களின் பங்கு கேட்டு தாங்கள் சிவில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பாகப் பிரிவினை வழக்கு தாக்கல் செய்து தங்கள் பங்கைப் பெற வாய்ப்பு உள்ளது.