பல்வலிக்கு கற்பூரத்தை வைக்கக் கூடாது!
கற்பூரம் வேதிப் பொருள்களால் (Chemicals) ஆனது. அதைப் பல்லில் வைக்கும்போது, கன்னத்தின் உட்புறமுள்ள மென்மையான சதைப் பகுதியை அரித்துவிடும். கற்பூரம் வைக்கும்போது (பல்லில்) தற்காலிகமாக வலி நின்றதுபோல் தோன்றினாலும், அது நிரந்தரத் தீர்வு அல்ல. பல்வலிக்கு வலிக்கும் பல்லால் இரு கிராம்பை மென்று அப்படியே அவ்விடத்தில் வைத்தால் வலி நீங்கும். பின் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
நீண்ட நேரம் பல் தேய்க்கக் கூடாது
பிரஷ் கொண்டு பல் தேய்க்கும்போது அதிக நேரம் தேய்க்கக் கூடாது. அதிக பற்பசையும் உபயோகிக்கக் கூடாது. பட்டாணிக்கடலை அளவிற்குப் பற்பசை எடுத்துக் கொண்டு, பற்களில் கீழ்வரிசைப் பற்களைக் கீழிருந்து மேலும், மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழும் தேய்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் இரண்டு மூன்று முறை மென்மையாய்த் தேய்த்தால் போதும் ஓரிரு நிமிடங்களில் தேய்த்து, முடித்து நன்றாகக் கொப்பளித்துத் துப்பி வாயைத் தூய்மை செய்ய வேண்டும்.
கருவேலன், வேம்பு, ஆல மரவிழுது இவற்றைக் கொண்டு பல் துலக்குவது பல்லுக்கு நன்மை பயக்கும். கிடைக்கின்றவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதே நலம்.
காலை எழுந்தவுடனும், இரவு படுக்கப்போகும் முன்னும் பல் துலக்குவது நலம்.
விரலால் பல் துலக்கக் கூடாது
விரலால் பல் துலக்கினால் பல்லிடுக்கில் உள்ள உணவுத் துணுக்குகள் வெளியில் வராது தங்கி, பற்களுக்கும், உடல் நலத்திற்கும் கேடு தரும். எனவே, மேற்சொன்ன குச்சிகள் அல்லது பிரஷ் கொண்டு துலக்குவதே நன்று. விரலால் துலக்கக் கூடாது.
அதிக குளிர்ச்சியோ, அதிக சூடோ பற்களில் படக் கூடாது
அதிக குளிர்ச்சியான அய்ஸ்கிரீம், அய்ஸ், குளிர்பானம், மிகச் சூடான வெந்நீர், பால், காபி போன்றவற்றைச் சாப்பிடுதல் கூடாது. அவை பற்களுக்கும் நல்லதல்ல; உடலுக்கும் நல்லதல்ல.
செங்கற்பொடி, சாம்பல் கொண்டு பல் தேய்க்கக் கூடாது
செங்கல்லைத் தூளாக்கி அல்லது சாம்பலைப் பொடித்துப் பற்களில் விரலால் தேய்ப்பர். இவை ஈறுகளைத் தேய்த்துப் பற்களையும் கெடுக்கும். பற்களின் மேலுள்ள பளபளப்பைத் தேய்த்து அழித்துவிடும். ஈறுகள் தேய்ந்து பற்கள் வலுவிழந்து போகும். எனவே, செங்கற்பொடி, சாம்பல் கொண்டு பல் துலக்கக் கூடாது.
இயற்கையாய் ஏற்படும் பல்வலிக்குப் பனிக்கட்டியை வைக்கக் கூடாது
பல்லில் அடிபட்டு வலியிருந்தால் பனிக்கட்டி வைக்கலாம்.
உப்பு கலந்த நீரை (ஒரு டம்ளர் நீரில் ஒரு டிஸ்பூன் உப்பு கலந்து) வாயில் ஊற்றிக் கொப்பளித்து வந்தால் பல்வலி நீங்கும். ஈறுகளிலுள்ள கிருமிகளும் அழியும். இதைத் தினமும் செய்தால் பல்வலி வரவே வராது.
கடும் வெய்யிலில் சென்று வந்தவுடன் குளிர்பானம் அருந்தக் கூடாது
பொதுவாகச் செயற்கைக் குளிர்பானங்கள் அருந்தக் கூடாது. காரணம், அதில் கலக்கப்படும் எப்பொருளும் உடலுக்கு நன்மை செய்வன அல்ல. மாறாகக் கேடு பயப்பன.
கடும் வெய்யிலில் செல்லும்போது நம் உடலும் நரம்புகளும் சூடேறியிருக்கும். சூடான பொருளில் திடீரென குளிர்ந்த நீர்பட்டால் உடனே அது நொறுங்கும். சூடான கண்ணாடியில் குளிர்ந்த நீர் ஊற்றினால் அது நொறுங்கிவிடும். அப்படித்தான் நம் உடல் நரம்புகளும் சூடேறி இருக்கும்போது அச்சூடு தணிவதற்குள் குளிர்ந்த பானம் குடிப்பதோ, குளிர்ந்த நீரில் குளிப்பதோ கூடாது. அவ்வாறு செய்தால் நமது நரம்புகள் பெரிதும் பாதிக்கப்படும்.
அதேபோல் உடல் சூடாகியுள்ள நிலையில் குளிர்ந்த நீர் குடிக்கவும் கூடாது. உடற்சூடு தணிந்த நிலையிலேதான் குடிக்க வேண்டும். அய்ஸ் கலந்த நீர் எவ்வகையிலும் நல்லதல்ல. குளிர்ந்த நீர் வேண்டுமானால், மண்பானையில் வைத்துக் குடிக்க வேண்டும். குளிர்ந்த மண்பானை நீரைக்கூட வெய்யிலிருந்து வந்தவுடன், உடல்சூடு தணிவதற்குள் குடிக்கக் கூடாது.
மண்பானை நீரில் வெல்லம் கலந்து பருகுவது உடல்நலத்திற்கு உகந்தது. சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை ஏழுமுறை அலசி, சோற்றுக்கற்றாழையில் தேன் கலந்து சாப்பிடுவதும், வெந்தயத்தை ஊற வைத்து உண்பதும், பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி கீரைகள் சாப்பிடுவதும் உடல்சூடு தணிக்கும். வளமை தரும்.