திரைப்பார்வை : புறம்போக்கு

திரைப்பார்வை ஜூன் 16-30

இயல்பாகவே தான் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் என்று சொல்லாமல் தன் படங்களின் வாயிலாக அதனை வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

இவரின் படங்கள் அனைத்தும் அனைவராலும் அந்தந்த காலகட்டத்தில் பேசப்படுபவையாகவே அமையும், அதற்கு இந்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம் விதிவிலக்கல்ல.

இந்த திரைப்படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. தேசத் துரோகக் குற்றச்சாட்டிற்காக மூன்று மரண தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டிய குற்றவாளி ஆர்யா. இந்த மரண தண்டனையைக்கூட அனுபவமிக்க, கைதேர்ந்த தூக்கிலிடும் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை வைத்தே செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இந்த பாலுச்சாமி என்கிற ஆர்யாவின் தேசத்துரோகம் அமைந்திருக்கிறது.

தூக்கிலிடும் அனுபவத்தை தன் தந்தையின் மூலமாக பெற்றிருக்கும் எமலிங்கம் என்கிற விஜய் சேதுபதியை வலை வீசிப் பிடிக்கிறது சிறை நிர்வாகம். கலாசியாக பணியாற்றும் விஜய் சேதுபதி முதலில் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்து பின்பு ஒத்துக்கொள்கிறார். தூக்கிலிட அல்ல, தூக்கில் தொங்க வேண்டியவரைக் காப்பாற்ற.   கதாபாத்திரங்களின் பெயர்களையே பொருத்தம் பார்த்து வைத்துள்ளார் இயக்குநர். தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வசித்து, பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலியின் பெயர் கார்த்திகாவிற்கும், சுதந்திரப் போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயரை ஆர்யாவிற்கும், ஆங்கிலேயர்களின் கல்வி முறையையும், அவர்களின் கடுமையான தண்டனையையும் அறிமுகப்படுத்தியவருமான மெக்காலேவின் பெயர் சிறைத்துறை அதிகாரி ஷாமுக்கும் வைக்கப்பட்டுள்ளன.

படத்தின் தொடக்கத்திலேயே வெளிநாடுகளில் குப்பை என்று சொல்லப்படுபவையெல்லாம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அப்பாவி மக்களுக்கு ஆபத்தாக மாறி வருவதையும், குப்பைக் கூளங்களால் இந்தியாவே குப்பையாகிக் கொண்டிருப்பதையும் இந்த ஏகாதிபத்திய அவலட்சணத்தை இந்திய அரசு மறைமுகமாக ஊக்குவித்து வருவதையும் கடுமையாகச் சாடியிருக்கிறார் இயக்குநர்.

திரைப்படத்தின் வசனங்கள் மிகவும் கூர்மையானவை. நம் புத்தியை குத்திக் கிளறுகிறது. கிடங்குகளில் இருப்பு வைத்து வீணாகிக் கொண்டிருக்கும் தானியங்களை மக்களுக்கு பிரித்துக் கொடுக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. எடுத்துக் கொடுத்தால் உள்ளூர் போலீஸ் கைது செய்கிறது  என்று நாயகன் பேசும்போது காட்சியோடு ஒன்றிப்போன பார்வையாளர்களுக்கு அரசின் மீதான கோபம் கைத்தட்டலாக வெளிப்படுகிறது.

இப்படிப்பட்ட வசனங்கள் வாயிலாக பொதுவுடைமை என்றால் என்ன? மார்க்சியம் என்றால் என்ன? மக்களுக்கும் மார்க்சியத்திற்கும் இடைவெளி ஏன்? யார் மக்கள் என்பதையெல்லாம் விலாவாரியாக இயக்குநர் விளக்கியுள்ளார்.

நடிகர் ஷாமுக்கும், ஆர்யாவுக்குமான பல வசனங்கள் இன்றைய புரட்சிகர அரசியலை எடுத்துக் காட்டுகிறது.

நீ கொஞ்ச நாள்ல சாகப்போற தூக்கு தண்டனைக் கைதி என்ன எழுதப்போற? என்று சிறை அதிகாரி ஷாமின் கேள்விக்கு எல்லோருமே ஒரு நாள் சாகத்தான் போறோம், சாகுறதுக்கு முன்னாடி என்ன செய்யுறோம் என்பதுதான் முக்கியம் என்ற பாலுவாகிய ஆர்யாவின் பதில் இறப்பதற்கு முன் வயலின் வாசிக்க கற்றுக்கொண்ட சாக்ரடீஸை நினைவுப்படுத்துகிறது.

வெறுமனே தூக்குத் தண்டனைக்கு எதிரான திரைப்படமாக காட்டாமல், ஏன்? எதற்கு? எதனால்? என்பதற்கான காரண காரியங்களுடன் விளக்கமாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.

இன்றைய குடி தமிழகத்தின் அவலநிலையை தோலுரித்துக் காட்டும் வகையில், குடும்பம் அழியுது ஆனால் அரசு நடக்குது என்ற பாடல் வரிகளை இடம்பெறச் செய்து அசத்தி இருக்கிறார்.

பாலியல் தொழில் செய்யும் பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, அவளையும் நல்லவளாக மாற்றிடலாமே என்ற தாயின் வசனங்கள் தோழர்களின் சமூகம் சார்ந்த அக்கறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

சிறைச்சாலையை வடிவமைத்த கலை இயக்குநரையும், அதை அழகாக பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளரையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
மொத்தத்தில் புறம்போக்கு என்னும் பொதுவுடைமை, பாலைவனத்தில் ஒரு சோலை? பொதுவுடைமை ஒளிச்சிந்தும் புரட்சி வெடி!

– அமுதரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *