மூளைக்குள்ளே ஞானக் கண் உண்டா?

மே 16-31 - 2014

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

 

அபத்தமா? அறிவியலா?

அண்மையில் வெளிவந்த ஒரு நூலினைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நூலின் பெயர் அறிவூட்டும் அறிவியல். அதன் ஆசிரியர் ஆர்.சண்முகம் அவர்கள், அந்நூலின்கண் உள்ள ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, மூன்றாவது கண். அக்கட்டுரை, அறிவியல் ஆய்வு அல்ல; அபத்தக் களஞ்சியம்! அந்தக் களஞ்சியத்துக்குள் நுழைந்து ஒரு கண்ணோட்டம் விடுவோமா?

நாசமாய்ப் போன நம்பிக்கை

நூலாசிரியர் பின்வருமாறு தொடங்குகிறார். மனிதனுக்கு ஞானக் கண் என்று ஒரு மூன்றாவது கண் இருப்பதாகக் கீழைநாட்டு மக்கள் நெடுநாட்களாகவே நம்பி வருகிறார்கள். (இவர்கள் எதைத்தான் நம்பவில்லை?) திபெத்திய லாமாக்கள் மெல்லிய மூங்கில் ஊசியால் நெற்றியில் குத்தி, மூன்றாவது கண்ணைத் திறந்து கொள்வது வழக்கம் என்று தெரிகிறது. எப்படி இவருக்குத் தெரிகிறது?

சொல்லாமலே யார் பார்த்தது?

இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாகப் பின்வருமாறு எழுதுகிறார். கி.பி.1526-இல், வடமொழி நூல் ஒன்றில் ஞானக்கண், பலகோடிச் சூரியர்களுக்குச் சமமான தேஜஸைத் தருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த நூலுக்குப் பெயரே இல்லையா? நூலாசிரியர் அவர்களே! கி.பி.1526இல் வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டிருந்தால் அதனைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிட வேண்டுமா? நூலின் பெயர் சொன்னால் என்ன? சொல்லக் கூடாதா? ஏன்? ஏன்? ஏன்?

எதற்காக இந்தக் கண்?

அது என்ன மூன்றாவது கண்? அது என்ன ஞானக்கண்? முகத்தில் உள்ள இரு கண்கள் மட்டும் ஊனக்கண்களா? இது மட்டும் ஞானக்கண்ணா? எதற்காக அந்த மூன்றாவது கண் இருக்க வேண்டும்? அதனால் என்ன பயன்?

தப்பித்து வந்தாரம்மா!

முன்பெல் லாம், இந்த நாட்டு மதவாதிகள் _ குறிப்பாக இந்துமதப் பற்றாளர்கள், தமது வேத, ஆகம, இதிகாச, புராணங்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகளை விளக்குவதற்கு வக்கில்லாமல் அவற்றிற்குத் தத்துவார்த்தம் (உட்பொருள்) என்பதாகத் தத்துப்பித்து என்று கூறித் தப்பித்து வந்தனர்.

மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம்

இப்பொழுது, அறிவியல் விரைவாக வளர்ந்து மலர்ந்துவரும் நிலையில் தத்துவார்த்தம் எடுபடாது என எண்ணி மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அறிவியல் விளக்கம் தர அரும்பாடு பெரும்பாடு படுகின்றனர். அவற்றில் ஒன்றுதான் இந்த மூன்றாவது கண்.

அது எது?

மூன்றாவது கண் என்பது எது? என்பதற்கு நூலாசிரியர் எழுதுகிறார். நம் மூளையின் பின்புறம் உள்ள பைனியல் சுரப்பி (Pineal Gland) தான் அது. நெற்றியின் புருவமத்திக்கு நேர் பின்னால் அது அமைந்திருக்கிறது. அதுதான் கீழ்நாட்டறிஞர்(?) கூறும் ஞானக்கண். அதாவது மூன்றாவது கண்!

இப்படிப் பாடுவரோ?

பைனியல் சுரப்பி ஒரு கண் என்று மெய்ப்பிக்கப்பட்டிருந்தால், தெரிந்திருந்தால்
பைனிய லே! இளமானே!
பச்சைமயில் எனப்

பார்த்தேன் உனை நானே! என்றும்,

ஆயிரம் பைனியல் போதாது வண்ணக்கிளியே! என்றும்,

பைனியல் படப் போகுதய்யா சின்னக்கவுண்டரே! என்றும்,

இன்றைய திரைப்பாடலாசிரியர்கள் எழுதியிருப்பார்களோ? நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,

பைனிய லின்பார்வை பாவையர்கள் காட்டிவிட்டால்

வையகத்தில் காளையர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்! என்று, பாடியிருப்பாரோ, என்னவோ? பாவம்! அவர்களுக்கு, சண்முகனார் சொல்லாமல் விட்டுவிட்டாரே! பைனியல் சுரப்பிதான் மூன்றாவது கண் என நம்புவது வடிகட்டிய மடத்தனம் அல்லவா? பத்தாம்பசலிப் பைத்தியக்காரத்தனம் அல்லவா?

இருக்கிறதா? இல்லையா?

சரி, பைனியல் சுரப்பி என்பதாக ஒரு சுரப்பி (Gland) மெய்யாகவே இருக்கிறதா? இருக்கிறது! அய்யமில்லை. மூளையின் பின்னால் ஒரு பட்டாணி அளவில் வெண்சாம்பல் நிறத்தில் உள்ளது. ஆனால் அது கண் அன்று; சுரப்பி! நாளமில் சுரப்பி – (Harmone). இதனை, குளிர் குருதியோட்ட விலங்குகள் (Cold blooded animals)ஒரு வெப்பமானியாகப் பயன்படுத்துகின்றன.

தட்ப வெப்பத்தைக் கட்டுப்படுத்த, பகலில் வெயிலிலிருந்து ஒளியவும், இரவில் பனிக் குளிரிலிருந்து ஒளிந்து கொள்ளவும் அல்லாமல் இது வேறு ஒன்று செய்வது இல்லை. இது, நீர், உப்புச் சமனிலை, குருதி அமைப்பு செரிமானம், பாலியல் முதிர்ச்சி, பாலியல் நடவடிக்கை ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறது. குருதியின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இவைதாம் பைனியல் சுரப்பியின் சில பணிகள்! இது பார்க்கப் பயன்படாது!

எது கண் என்பது

ஒன்றைக் கண் என்று சொல்ல, அதற்கு இமை அமைப்பு, தோற்றம், செயல்பாடு (பார்வை) இருத்தல் வேண்டுமே? அப்படி இருந்தால்தானே அது கண்? பைனியல் சுரப்பி அவ்வாறு அமைந்துள்ளதா? பார்வைக்குப் பயன்படுகிறதா? விழிவெண்படலம், கருவிழி, கண்மணி உள்ளனவா? ஒளியின் உதவியால் பார்க்கிறதா? அவ்வாறிருக்க, பைனியல் சுரப்பி எப்படி, கண் ஆகும்? அதனைக் கண் எனக் கதைக்கலாமா?

சண்முகனார் சாற்றுவது

இந்தப் பைனியல் ஓணான், தவளை முதலான விலங்கினங்கள் சிலவற்றிற்கும் உள்ளது. சில குறிப்பிட்ட நிறங்களை உட்கவர்ந்து அந்த உறுப்பாற்றலை நிறமாற்றங்களுக்குப் பயன்படுத்துகிறது என்று, நூலாசிரியரே நுவல்கிறாரே? இதிலிருந்து, கண் வேறு; அதன் செயல் வேறு; பைனியல் வேறு; அதன் செயல் வேறு என்பது தெரிகிறது அல்லவா? பின் எப்படி, பைனியல் கண் ஆகும்? அறிவுக் (ஞான) கண் ஆகும்? இதை அறிய எவருக்கும் சராசரி அறிவே போதுமே?

யார் யார் யார் அவர் யாரோ?

கீழ்நாட்டவர் கூறும், இந்தப் பைனியலைத்தான் ஞானக்கண் என்று இன்றைய விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் இப்படிக் கருதும் இன்றைய விஞ்ஞானிகள் யார்? அவர்கள் பேர் என்ன? ஊர் என்ன? இவரால் கூறமுடியுமா? அநாமதேயக் கடிதம் எழுதுவதுபோல் அல்லவா எழுதுகிறார்? சரியான அறிவியல் ஆதாரங்கள், அறிவியலாளர்கள் ஆய்வு முடிபுகள் முதலியவற்றை முன்வைக்க வேண்டாமா?

பார்வைக்குப் பயன்படவில்லையே?

1958இல் ஆரன் லெர்னர் என்பவர், இந்தச் சுரப்பியிலிருந்து மெலடானின் என்ற நாளமில் சுரப்பித் திரவம், தோலுக்கும் நிறத்திற்கும் மெலானின் (Melanin) என்ற பொருள் பரவுவதை இந்த ஹார்மோன் ஒழுங்குபடுத்துகிறது என்கிறார் நூலாசிரியர். சரி, ஒத்துக்கொள்வோம். கண்ணாக அமைந்து பயன்படுகிறது என்று சொல்லப்படவில்லையே? எப்படி இது இவருக்குச் சான்றாக அமையும்?

மூளைக்குள் மூங்கில் ஊசியா?

திபெத்திய லாமாக்கள் மூங்கில் ஊசியால் நெற்றியில் குத்தி பின்புற மூளைக்குக் கீழ் இருக்கும் கண்ணைத் திறப்பார்களாம்! என்ன கற்பனை? மூங்கில் ஊசியால் குத்தினால் முன் தலையின் மண்டை ஓட்டுக்குள் ஊடுருவி பின்புறம் போய்விடுமாமே? தலை என்ன ஆப்பிள் பழமா? ஒரு பக்கம் ஊசியால் குத்தினால் மறுபக்கம் எளிதாக உள்ளே ஊடுருவ? கெட்டியான மண்டை ஓட்டுக்குள் குத்தும்போது உடைந்து போக வாய்ப்புண்டே?

உள்ளே இருக்கும் மூன்றாவது கண்ணை மூங்கில் ஊசியால் நெம்பித் திறப்பார்களாமே? அந்தக் கண்ணில் ஊசி குத்திவிடாதா? மூன்றாவது கண்ணில் பழுது ஏற்பட்டு விடாதா? திபெத்திய லாமா இப்படிச் செய்யலாமா?

சூரியனின் சுடர் ஒளி

மூன்றாவது (ஞான) கண் பல கோடி சூரியர்களுக்குச் சமமான தேஜஸைத் (வெப்பச்சுடரை) தருகிறதாம். அதாவது பைனியல் பல கோடி சூரிய வெப்பச் சுடரைத் தருமாம்! பேர், ஊர் தெரியாத பேர்வழியால் 1526இல் வடமொழியில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாகத் தம்பட்டம் அடிக்கிறார் நூலாசிரியர் சண்முகம்.

வானில் கோடானு கோடிக்கணக்கில் விண்மீன்கள் உள்ளன. அவற்றுள் நமது பால்வெளிப் (Milky Way) பகுதியில் உள்ள நமக்கு மிகமிக அண்மையில் உள்ள விண்மீன் நமது சூரியன் (Sun). இந்தச் சூரியன் வெப்பமும் ஒளியும் நிறைந்த ஓர் அணு உலை (ஸிமீணீநீஷீக்ஷீ). இந்த ஒரு சூரியனின் விட்டம் 13,84,000 கி.மீ. இதன் வெளிப்புற வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ். மய்ய வெப்பம் 1 கோடியே 50 லட்சம் டிகிரி செல்சியஸ்.

2 லட்சத்து 44 ஆயிரத்து 800 கி.மீ. தொலைவு வெளியில் வீசி எறியப்படும் சூரியனின் சுடர்க் கொழுந்து (Prominenees)களின் வெப்பம் எத்துணை மிகுதியாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பலகோடி சூரியர்கள் பரப்பும் வெப்பம்

ஒரு சூரியனின் வெப்பநிலை வீச்சு இப்படி என்றால் வடநூல் கூறுவதுபோல பலகோடி சூரியர்கள் வசதிக்காக 10 கோடி சூரியர் என்று வைத்துக்கொண்டால் அவற்றின் வெப்பச்சுடரொளி (தேஜஸ்) எந்த அளவு இருக்க வேண்டும்? என்ன கேலிக்கூத்து இது?

உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வைச்சேன் மத்தியிலே!

பலகோடி சூரியச் சுடரொளியைத் தரும் மூன்றாவது கண் வெளியிலுள்ள சூரிய _ சந்திரரின் ஒளிச்சுடரால் தாக்குண்டு சிதைந்து போகாமலிருக்கத்தான் நெற்றியிலே பொட்டு வைக்கிறார்களாம்!

அந்தப் பொட்டு, கிட்டத்தட்ட ஒன்றரை கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தடுத்து விடுகிறதாம்! என்னமாய் நம் காதில் பூச்சுற்றுகிறார் சண்முகனார்!

என்ன பொட்டு இது?

ஆமாம், அது என்ன பொட்டு? தளதளக்கும் சாந்துப் பொட்டா? கமகமக்கும் சந்தனப் பொட்டா? பளபளக்கும் குங்குமப் பொட்டா? பலவண்ண ஒட்டு (Sticker) ப் பொட்டா? என்னவகைப் பொட்டு? இதற்கு இத்துணை ஆற்றல் உள்ளது என்று எந்த அறிவியலார் சொன்னார்கள்? நன்றாயிருக்கிறது கற்பனையின் விற்பனை?

என்ன செய்கிறது இந்தப் பொட்டு?

எந்த வகைப் பொட்டாக இருக்கட்டும்! அதிலுள்ள கூட்டுப் பொருள் எப்படி புருவ நடுப் பொட்டின் (Frontal Lobe)வழி உள்ளே புகுந்து, மண்டை ஓட்டினை ஊடுருவி நுழைந்து, மூளையின் வன்மையான நிலைச் சவ்வுப் பொருளைத் (Durametor) துளைத்து, மூளையின் பின்புறம் போய், சண்முகம் கூறும் பலகோடி சூரியர் தேஜஸைத் தடுத்து நிறுத்தும்? பாவம் பைனியல் சுரப்பி! அது படும்பாடுதான் என்னே! என்னே!

மனதிலே மயக்கமா?

இப்படி எல்லாம் பினாத்துவது, மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? அல்லது, மனநோயின் மறுபெயரா? மூடத்தனத்தின், மூடநம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த மூன்றாவது கண் நம்பிக்கை.

தீயினில் தூசாகும்!

நூலாசிரியர் சண்முகம் உள்ளிட்ட இத்தகைய மூடநம்பிக்கையாளர்களுக்கு, திபெத்திய லாமாக்கள் உதவிக்கு வரமாட்டார்கள்! அநாமதேய வடநூலும் காப்பாற்றாது!!

அறிவியல் இதனை அப்படியே ஊதித் தள்ளிவிடும். இது தீயினில் தூசாகும்!
வேண்டாம் வீண்முயற்சி!

ஆர்வமூட்டும் அறிவியல் _ என்று பெயர் வைத்துவிட்டு, அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான மூடநம்பிக்கை, மதக்கருத்து, கற்பனைக் கட்டுக்கதைகளுக்கு அறிவியல் முலாம் பூசும் வீண்முயற்சி வேண்டாம்! வேண்டாம், இந்த வெட்டி வேலை!

விட்டுவிடுங்கள்! நாமும் இத்தோடு விட்டு விடுகிறோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *