புதுமை இலக்கியப் பூங்கா :
தேவதரிசனம்
– ஆ.மாதவன்
திராவிட இயக்கத்தினை, சமூக சீர்திருத்த இயக்கமாகப் பார்த்த பெருமைக்குரியவர். இமயம், பேரிகை போன்ற தேசிய சஞ்சிகைகள், பகுத்தறிவு மாத ஏடு போன்றவற்றில் பிறமொழிக் கதைகளை முதலில் மொழிபெயர்த்து எழுதி பின்னர் சிறுகதைகள் எழுதியவர்.
இன்று அம்பாள் தரிசனம் அமோகமாக இருந்தது. அம்பாள், மணிமூக்கில் முத்துப் புல்லாக்கு அணிந்திருந்தாள். கண்ணிற்கு அஞ்சனமெழுதியிருந்தாள். நெற்றிக்குச் சிந்தூரத் திலகமிட்டிருந்தாள். சங்கு மார்புக்கு கிளிப்பச்சை கச்சணிந்திருந்தாள். இடுப்புக்கு வயிரத்தால் ஒட்டியாணம். காலுக்கு முத்துக் கொலுசு. உடலுக்கு ரத்த வர்ணப் பட்டாடை… இன்று அம்பாள் தரிசனம் அமோகமாக இருந்தது.
பிரகாரத்தின் இருள் வளைவில், சுற்றி வரும்போது வசுமதி பின்னாலேயே வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தேன், அவள், கச்சிறுக்கை பிச்செறிந்த முலைதெரியும் பாவை விளக்கருகில் நமஸ்கரித்துக் கொண்டிருந்தாள். பாவை விளக்கு. அல்ல, விளக்கின் பாவை! என்ன கம்பீரம்! ஆறடி உயரத்தில் தலையும், மார்பும், பின்புறச் சரிவும் நல்ல செதுக்கு வேலை!
இன்றும் அம்பாள் தரிசனம் அமோகமாக இருந்தது. நடையைத் தளர்த்தினேன். வழக்கம்போல் வசுமதியும் பின்னால் வந்து கொள்ளட்டுமே. இந்தப் பிரகாரத்தின் யானை தூக்கியாளிகளும், ஆள் தூக்கி வேங்கைகளும் அவளுக்குப் பயமாக இருக்குமோ… வசுமதியும் வந்து கொள்ளட்டுமே… அடிவிட்டு எரியும் ஒற்றை எண்ணெய் விளக்குகள், மௌனத் தியானம் செய்யும் யோகிகள் போல அமைதியில் நின்று சுடர் விடுகின்றன. இருளான பிரகாரத்திற்கு அந்தத் துளி விளக்குகளின் ஒளி சத்தியத்தின் பலவீனம் போல எட்டமாட்டேன் என்கிறது.
நடையைத் தொடர்ந்து வசுமதி பின்னால் வந்தாள். வசு, இன்று அம்பாள் தரிசனம் திவ்யமாக இருக்கிறது. பார்த்தாயா? பட்டர் கைவண்ணம் இன்று ஜ்வாலிக்கத்தான் செய்கிறது…
அம்பாளுக்கு இன்று திருக்கல்யாணம். அதனால் திருக்காப்பு திவ்யமாக செய்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு அம்பாள் என்றும் போலதான் தெரிகிறாள்…
மூலஸ்தானத்தின் பின்புறம் பிரகாசமான விளக்கொளியில் வசுமதியை வியப்பால் அளக்கிறேன்.
விடியாக் காலையிலேயே மஞ்சள் தடவி குளித்த முகம். டாலடிக்கும் அன்ன மூக்குத்தி. நேற்றிரவின் வெற்றிலைக் காவி துடைத்த உதடுகள். காதின் சரிவில் பூனை மயிரின் ஒழுங்கு திளங்கும் கழுத்து. அம்பாளின் பெரிய குங்குமமணிந்த நெற்றி எழுதிவிட்ட புருவம். வசுமதியே அம்பாள் தரிசனமாகச் சொலிக்கிறாள்.
ஆமாம். அம்பாள் என்றும் போலதான் இருக்கிறாள். ஆனால் இவள் நேற்றுபோல இல்லை. நேற்று முன் நாள் போலவும் இல்லை. பத்து, பதினைந்து, இருபது நாட்களுக்கு முன்பு முதன்முதலில் காலை முதல் தொழுகைக்கு வந்தபோது கண்டது போலவும் இல்லை. அத்தனை சிறிய கெடுவில் எத்தனை மாறுதல். கீழ்வான நட்சத்திரம் போல, அந்தியில் புள்ளியாகத் தோன்றி, இரவின் சந்திப்பில் வைரமாகச் சொலிக்கும் திறமோ! வசுமதி. அழிவற்ற இளமையின் ரிஷி பத்தினி போல திகழ்கிறாள்.
என்ன மௌனம் சாதித்து விட்டீர்கள்? மூன்று சுற்று வலம் வந்துவிட்டோம். நான் தெற்கு வாயில் வழியாகப் போகிறேன். தினமும் வடக்கு வாசலில் தங்களையும் என்னையும் சேர்த்துப் பார்க்கிறவர்களுக்கு என் பக்தியும் தங்கள் நேர்மையுமா தெரிகிறது? என்னை இனியும் பழைய கதாநாயகியாகவே பார்க்கிறது. குளித்து வந்த பின்னர் சேற்றைத்தான் என் அபிஷேகத்திற்காக வைத்துத் தருகிறார்கள். நான் இது வழியே போகிறேன்…
வசுமதி போகிறாள். அந்தத் தெற்கு வாசலே திடீரென்று அடைத்துக்கொண்டு இருள் கவிழ்ந்தது போலிருக்கிறது. ஆனால் பிரகாரத்தின் அத்தனை பாவை விளக்குகளும் நின்று எரிகின்றன. ஒளியில் இருட்டு வருமோ?
என் பக்தியும் உங்கள் நேர்மையும் என்றாளே, நல்ல நேர்மை. கோழி அடைகாத்துப் பொரித்த வாத்துக்குஞ்சு தண்ணீரைக் கண்டதும் நழுவிவிட்டது போல மனதின் ஆண்மை அவள் கவர்ச்சியில் லயித்து விடுகிறது. அதிலும் அம்பாள் தரிசனத்தின் அமோகப் பொலிவு நிறை குடத்தில் கல் விழுந்ததுபோல மனவெளியில் வழிகிறது. வசுமதி மஞ்சள் குளித்த முகத்துடன் சிரிக்கிறாளே?
வெளியே வீதியில் வந்தபோது விடிந்து கொண்டு வருகிறது. உதயதாரகை அரச மரக் கிளைகளுக்குக் கீழ் வந்த வழி பார்த்து திரும்புகிறது. அடிவானம் சூல் கொண்ட பெண்ணின் முகமாக விளறிச் சிவக்கிறது. பக்கவாட்டுக் குளக்கரையில் துணி துவைக்கும் டப்டப் கேட்கிறது. பூக்கடைக்காரன் தூங்கி வழிகிறான். அத்தர் சந்தனக் கடையில் பையன்கள் கடை பரப்புகிறார்கள். கோயில் பசு தேர்வீதியில் படுத்துக் கிடக்கிறது. குளிர்ந்த காற்றில் நீந்துவதுபோல நடந்து வருகையில் தரிசனத்தில் அம்பாள் முகமாக மலர்ந்த இடத்தில் வசுமதி அமர்ந்து சிரிக்கிறாள்.
சீ; இதென்ன அபச்சாரக் கூத்து. போயும் போயும் அந்தப் பெண்ணையா மனதில் ஏற்றுவது? கோயில் என்ற நற்கூடத்தின் நெருக்கத்தினுள்ளே அவளுடன் நடந்து பேசுகையில், வசுமதி ரிஷிகன்னி போல புனிதமாகத் தெரிகிறாள். ஆனால் வெளியே தெருவில் வசுமதி அந்தப் பழைய கழிசடைதான். என்னதான் எண்ணெய் குளித்துக் காப்பிட்டாலும் அம்பாள்கூட கோயிலுக்கு வெளியே வெறும் சிலைதானே?
வசுமதி ஆரம்பத்தில் எப்படியோ வாழ்ந்தவள். அழகி ஒருத்தி ஆரம்பத்தில் எப்படி வாழ்ந்திருந்தால் என்ன? இந்த உலகம் ரொம்பவும் முன்னேறிவிட்டது. அவளின் வாடிக்கைக்காரரில் ஒருவனே அவளை நிரந்தரமாக்கிக் கொண்டு கழுத்தில் சரடேற்றி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டான். முரடன், ஊர் முதலைக் கொள்ளையடித்தால் கேட்பார் வேண்டுமே? அதிலிருந்து இவள் தன் பத்தினித் தன்மையை நிலைநாட்டிக்கொள்ள தினமும் விடியாக் காலையின் முதல் தொழுகைக்கு கோயிலுக்கு வருகிறாள். கோயிலின் சங்கூதும் ஆள்; எனக்கென்ன என் சங்கை விட்டு பிரகார வளைவில் அவளுடன் சுற்றிவிட்டு மனதோடு அலமலங்கல் படுகிறேன். கிராமத்தில் அவளை அறியாதவர் யாரிருக்கிறார்கள்? அந்த அறிமுகத்துடனேயே முதன் முதலில் கோயிலில் அவளைச் சந்தித்ததும்; நீயா? என்றேன் வியப்பில்.
ஆமாம். நான் வரக்கூடாதா? பாப பரிகாரத்திற்கென்று வைத்துக் கொள்ளுங்களேன், இப்பொழுது நான் முறைப்படி என்னை மணந்துகொண்ட ஒருவரின் மனைவி. வாழ்ந்து வந்த சுடிவன், குழியில் மனசு விழுந்து விடாமலிருக்க இந்த விடியாக் காலை தேவ தரிசனத்தை விரதமாகக் கொண்டிருக்கிறேன்
குச்சியில் நிமிண்டி எடுத்த அருவருப்பான பிராணியை எட்ட இருந்து பார்ப்பதுபோல அவளைப் பார்க்கிறேன்… ஆனால் நாட்களின் சுழலிலே _ வசுமதி மனதின் பீடத்தில் கொலுவேறி வந்தாளோ?
பிறகுள்ள நாட்களில் கோயிலுக்கு வெளியே அவளுடன் நடந்து வருகையில், தெருவின் தூங்குமூஞ்சி கண்களில் கரிப்புக் கொட்டுவதைப் பார்க்கத்தான் செய்கிறேன்.
வசுமதி நீ என்னதான் புதுவாழ்வு துவங்கி விட்டாலும் உலகம் உன்னைப் பழைய கதாநாயகியாகத்தான் கணிக்கிறது. நீ உன் சோதரனுடன் நடந்து போனால்கூட விஷமப் பார்வையே உன்னைத் தொடரும். தவளை நீராடி நோம்பு நோப்பதுபோலதான் இருக்கிறது உன் செய்கை… என்னதான் நீ தேவி தரிசனம் செய்தாலும் உன்னைப் பழைய வசுமதியாகவே _ ஊர் பார்க்கிறது….
உலகம் ஒரு கண்ணாடி. கண்ணாடியில் பார்ப்பவர்களுக்கு அவரவர் முகம்தான் தெரியும். மனதைப் பார்க்க கண்ணாடி உதவுமோ?
பிறகு ஒவ்வொரு நாளும் கோயிலில் அவள் தரிசனத்திற்காக சங்கை மூலையிலிட்டு காத்துக் கிடக்கிறேன்.
உறக்கத்திலிருந்து விழித்துணரும்போது, அவளை நினைக்கிறேன். தேவீ! மகா மாயே என்று கொட்டாவியுடன், என் சங்கை முழக்குகிறேன். குளிர்ந்த நீரில் குளித்து சுத்தமான ஆடை உடுத்தி தெருவில் நடக்கும்போது, தூங்கு மூஞ்சி உலகம் இன்னும் இழுத்து மூடி தூங்கிக் கொண்டுதான் இருக்கும். தெருக்கோடியின் மாடி வீட்டின் வாசலில் _ விடியாக் காலையில் _ என் வருகைக்கு முன்பு அவள் காத்து நிற்கிறாள். சந்தடியற்ற காலைப் பொழுதில் கோயில் பணியாள் என் வருகை அவளுக்குத் துணை. வாசலில் வந்ததும், போவோமே… என்கிறேன். அவள் தொடர்கிறாள்.
வயலுக்குப் போகும் மாட்டுக்காரனும், கீற்றுச் சாய்ப்பின் இட்லிக் கடைக்காரனும் காலை இருளில் விகற்பத்தால் பார்க்கிறார்கள், இது வாழ்க்கை. ஆனால், புதிய வாழ்விற்கு அவளை இட்டு வந்த அந்தப் புதிய கணவன், இவளை இப்படித் தனியாக தெய்வதரிசனத்திற்கு விட்டுவிட்டு நிம்மதியாக அங்கே தூங்குகிறானே, என்ன இருந்தாலும் அதி தைரியசாலி அவன்!
கோயிலில் கொடியேறி திருவிழா துவங்கியிருக்கிறது. இனி பத்து நாளும் கூத்தும் குரவையும் அலமலங்கல்படும். எங்கும் தொங்கலும் தோரணங்களும் தேவி, புதிய ஆடை ஆபரண பூஷிதையாக கல்யாணக் கோலத்தில் திகழ்கிறாள். விழா துவங்கி விட்டபின்பு அவளுக்கு நித்யமும் வாணவேடிக்கைதான். இப்பொழுது விடியாக் காலையிலும் நிறைய கும்பல் வருகிறது. புதிய ஆடைகளின் மணவும், சந்தனமும் ஊதுவத்தியும் பன்னீருமாக பிரகாரமே மனத்தில் நிறைகிறது. இத்தனைக்கும் எந்தக் கும்பலிலும் பிரகாரத்தில் என் நிழல் போல பின்னாலேயே வருகிறாள், வசுமதி.
கும்பல் அதிகமாகி விட்டால் மனதின் ஏகாந்தம் கலைந்து விடுகிறது. இல்லையா வசுமதி?
என்னமோ கும்பலைப் பற்றி எனக்குத் தெரியாது
நீ இன்னும் பக்குவமடையவில்லை. நான் இந்த வெள்ளைச் சங்குடன் ஆண்டவன் சேவைக்கு வந்து வெகு காலமாயிற்று… எந்த வித்திக்கும் ஏகாந்தமே மூலதனம். தீபாராதனைக்கு முன்பு _ கதவை அடைத்துக் கொண்டு அர்ச்சகன் என்ன செய்கிறான் தெரியுமா?
எனக்குத் தெரியாது
அதனாலேயே கேட்டுக் கொள். அர்ச்சகன், வெளியே தொழுகைக்கு வந்த கும்பலிலிருந்து தேவியை அடைந்து கதவிற்குள் தனிமையில் சந்திக்கிறான். சந்தித்து பக்தர்பால் கண்திறந்து பார் என்று அவளைத் தட்டி எழுப்புகிறான். அவள் கண் திறக்கும் அபூர்வபொழுதை கதவைத் திறந்து நமக்குக் காட்டுகிறான். இப்பொழுது புரிந்ததா? எந்த முந்திக்கும் ஏகாந்தமே உறைவிடம். உனது இந்த விடியாக் காலையின் நிர்மால்ய தொழுகை இருக்கிறதே இதுவும் ஒருவகை ஏகாந்தம்தான். ஆனால் இந்தப் பத்து நாள் திருவிழாவின் சலசலப்பு _ ஆலயத்தை எதிர் மேடையாக கலகலங்க அம்பாள் இந்தக் கலகலப்பை வெறுக்கத்தான் செய்வாள்… வசுமதி _ உன் தொழுகைக்குக் கூட ஏகாந்தமே சிறப்பானது, வா அதோ ஈசானிய மூலைக்குப் போவோம். அங்கு கும்பல் இல்லை….
வசுமதிக்கு பக்தி முக்கியம். அவள் என்னைத் தொடர்கிறாள்.
ஈசானிய மூலையின் ரதி மன்மத சிலையை அழகாக வடித்திருக்கிறான், சிற்பி. பொங்கும் இளமையின் பொற்கலசங்களை மார்பிலேந்திக் கொண்டு மோகக் கிறுக்கில் மன்மதனின் இடையைச் சுற்றி அவன் கைக்கரும்பை வளைக்க முயலும் ரதிப் பெண். அவள் கைக்கிளி. மன்மதனின் இதழருகில் முத்தமிட முந்தும் வேகம். மனிதனின் பொறி பறக்கும் கோலத்தை வசுமதியின் கண்கொண்டே பார்த்தபோது வெளியே உற்சவ மண்டபத்தில் முரசு அறையும் ஒலி நெருப்பிற்கு நெய்யூற்றியது போல மனதின் எரிவிற்கு எண்ணெயாகிறது.
வசுமதி, மன்மதனும் ரதியும் நிற்கும் பரவசத்தில் சிற்பியின் கை வண்ணத்தை விட காதலின் திமிர்ப்பே கல்லில் பளிச்சிடும் கலையின் வெற்றியைப் பார்த்தாயா?
எனக்குக் கலை தெரியாது.
வசுமதி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
வசு, உனக்கா கலை தெரியாது? நீ கலைக்கூடம் வைத்திருந்த கதையை மறந்துவிட்டுப் பேசுகிறாய்…
என்ன இது? உங்கள் சுவரமே மாறுகிறது… பாம்பா பழுதையா என்றே பயமாக இருக்கிறது… பாபத்தைக் கழுவிக்கொள்ள கன்னி தேடி வந்த இடத்தில் நாற்றக் குப்பையைக் கிளறுகிறீர்கள். தேவியின் சன்னிதானத்தில் சங்கொலிக்கும் நல்லவரென்று _ உங்களைப் பின்தொடர்ந்தேன் பொறி நெருப்பாமுன் நான் போகிறேன்…
ஈசானிய மூலையின் ரதிமன்மதக் கோலத்தில் எதிர்ச்சுவறில் சனி தேவன் காக்கை உருவில் தியானம் செய்கிறான்.
பிரபஞ்சம் என் உள் எரிகிறது. காலகாலமாக எட்டிய கைகளிலெல்லாம் துவண்டவள். இன்று தியான வேஷத்தில் என் மனத்தை எரிக்கிறாள். தாகம் கொண்ட மிருகம், கானல் நீரை ஓடிஓடித் துரத்தியதுபோல மனம் தரிசன நாயகியை வசுமதியாகவே கண்டது.
வசுமதி எங்கே போகிறாய். என் குரலுக்குப் பதில் சொல். என்னைப் பின்தொடர்ந்த நாளிலெல்லாம் என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்றே எண்ணினேன். உன் விரதத்திற்கு என் துணை அவசியமாயினும் என் வேண்டுகோள் ஒன்றே ஒன்று. ஒரே ஒரு முறை… பிறகு உன் விரதத்திற்கு நான் குறுக்கே வரவில்லை….
எனக்கு வழிவிடுங்கள். இது பாபம்…
நீ பாபகாரியம் செய்து கொண்டிருந்த காலத்தில் உன் மேல் சுமத்தப்பட்டிருந்த மலிவு காரணமாக என்னால் உன்னை அணுக முடியவில்லை… இப்பொழுது நீ புடம்போட்ட தங்கம். தீக்குளித்து வந்த புராண நாயகி போல புனிதமான உன்னை நான் வேண்டுவதெல்லாம் ஒரே ஒரு முறை…
நான் தீக்குளித்து விட்டு என்னை நம்பும் ஒருவருக்கு மனைவியாகி விட்டேன். இன்னும் என்னை பழைய சேற்றுக்கு இழுக்காதீர்கள். இது தேவாலயம்… எனக்கு வழி விடுங்கள்… விடுங்கள்… விட்டுவிடுங்கள். உங்களது புனிதமான தொழிலுக்கும் உங்கள் ஆண்மைக்கும் இந்த பாபம் பொருந்தவே இல்லை…
ஆலயத்தில் உங்களை என் பக்திக்கு வழிகாட்டியாக எண்ணித் தொடர்ந்தேனேயன்றி களங்கமாக எண்ணினேனில்லை… பிரகார வளைவுகளில் உங்களுடன் தனிமையில் வருகையில் அந்தத் தனிமையே என் முக்தியின் பலம் என்று எண்ணினேன்… விட்டுவிடுங்களேன்…
வசு, இன்று நீ என்னிடமிருந்து தப்ப முடியாது….
என் பேச்சுக்குக் கொஞ்சம் செவி கொடுங்கள்….
முதலில் என் செயலுக்கு வழிவிடு…
அவ்வளவு தானா! இது தேவி சன்னிதானம். மோகம் உங்கள் கண்ணை மறைக்கிறது…
இனி பேசிப் பயனில்லை… பிரகார வளைவில் யானை தூக்கி யாழிகளும், ஆள் தூக்கி வேங்கைகளும் வடித்து வைத்த சிலைகளாக கம்பீரம் குறையாமல் எழுந்து நிற்கின்றன. ஈசானிய மூலையின் முகட்டில் ரதி_மன்மத இணைகள் தங்கள் மோகக் கிறக்கிலும் இருளில் எங்களைத் தேடியிருக்குமோ?
பொழுது நிம்மதியாக விடிந்திருக்கிறது. வழக்கம்போல சங்கையும் எடுத்துக்கொண்டு கிளம்புகிறேன். வயலுக்குப் போகும் மாட்டுக்காரனும், கீற்றுச் சாய்ப்பின் இட்லிக் கடைக்காரனும் அதே விகல்பப் பார்வையினால் என்னை அளக்கிறார்கள். தெருக் கோடியில் அந்த அவளது மாடி வீட்டு வாசலுக்கு வருகிறேன். என்றுமில்லாத புதுமையாக வசுமதி, தெளித்த வாசலில் கோலமிட்டுக் கொண்டிருக்கிறாள்.
வசுமதி இன்று கோயிலுக்கு வரவில்லையா? நேரமாகி விட்டது…
அப்பொழுதுதான் அவளைக் கூர்ந்து பார்க்கிறேன். கந்தர்வ சாபம் கொண்ட ரிஷிபத்தினி போல கலைந்த கேசமும் குலைந்த ஆடைகளுமாக _ என்ன இது? என் வியப்பு அடங்குமுன் அவளே பேசினாள்.
கோயிலுக்கு நான் வரவில்லை. என் விரதத்தின் ஈடேற்றம் அம்பாள் சன்னிதியில் இல்லை. என் தேவன் விடிவின் பொய்மையை அறியாமல் வீட்டினுள் தூங்குகிறார். எனக்குக் கோயில் வேண்டாம்…!
திரும்பி நடக்கிறேன். பொழுது விடிந்து கொண்டிருந்தது!
நன்றி : முரசொலி பொங்கல் மலர்