– அன்பன்
கோயில் ஒரு பொது நிறுவனம்
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி கொண்டு வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தால் பல நன்மைகள் விளைந்து வருகின்றன. அண்டவே முடியாத கோவில் கொள்ளைகள் பல கண்ட நாட்டில் நாம் வாழ்கிறோம்.
புறம்போக்கு நிலத்தில் எவர் வேண்டுமானாலும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தால் கூட்டம் அலை மோதும்; உண்டியல் நிரம்பும்; கட்டியவனும், அதை வைத்துப் பிழைக்கும் அர்ச்சகனும் கல்லாக் கட்டுவார்கள். தவறுகள் பல நடக்க கோவில்களே உடந்தையாக இருக்கின்றன.
இப்படித் தறிகெட்டு ஓடிய கோவில் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தி அதன் வருமானத்தை அரசின் பக்கம் மாற்றிவிட்டது நீதிக்கட்சி ஆட்சிதான்.
இந்து சமய அறநிலையத் துறையை ஏற்படுத்தியதால் கடவுளே கூட இப்போது அரசின் ஆதரவை நாடித்தான் இருக்கவேண்டிய சூழல். மக்களிடம் இருந்து உண்டியல் வாயிலாகப் பணம் வசூலித்து அரசின் கஜானாவை நிரப்பத்தான் கோவில்களே கட்டப்பட்டன. மன்னர்களுக்கு இந்த யோசனையைச் சொன்னவன் சாணக்கியன். அது அறியாமை நிரம்பிய காலம்.
எனவே, அப்படி ஏமாற்றவேண்டிய தேவை இருந்திருக்கலாம். ஆனால், அதன் பின் கோவில் சொத்துகளும், உண்டியல் பணமும் அந்தக் கோவிலின் அர்ச்சகர்களான பார்ப்பனர்கள் வசம் போனது.
பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த அந்தக் கொடுமையிலிருந்து கோவில்களை விடுவித்தது நீதிக்கட்சி ஆட்சி. கடந்த சில ஆண்டுகள் வரை அறநிலையத்துறையின் கீழ் வராமல் இருந்த சிதம்பரம் கோவில் கடந்த தி.மு.க.ஆட்சியில் அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது.
சில மாதங்களிலேயே 5 இலட்சம் ரூபாய் உண்டியலில் சேர்ந்தது. ஆனால்,அதற்கு முன் ஆண்டுக்கே 30 ஆயிரம் ரூபாய்தான் உண்டியல் வருவாய் என்று அந்தக் கோவில் பார்ப்பனர்கள் கணக்குக் காட்டினர். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு உதாரணம்.
அண்மையில் சென்னை வடபழனி வெங்கீஸ்வரர் நாகாத்தம்மன் கோவில் நிர்வாகி ஒருவர் உயர்நீதிமன்றத்தில், கோயில் என்பது அறநிலையத் துறையின் ஒரு நிருவாகப் பிரிவோ அல்லது பொது அதிகாரம் பெற்ற ஓர் அலுவல கமோ அல்ல என்பதால் அதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது என்று மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபடி கே.சந்துரு, கோயில் என்பது ஒரு பொது நிறுவனம். ஒரு பாரம்பரிய அறங்காவலரால் நிருவகிக்கப்படுகிறது என்ற காரணத்திற்காக மட்டுமே கோயிலின் பொதுத் தன்மை காணாமற் போய்விடாது. கோயில்கள் இந்து அறநிலையத் துறை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் கோயிலின் அன்றாட சடங்குகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக பொது மக்களிடமிருந்து பணமும் வசூலிக்கப்படுகிறது. கோயில்களை நிருவகிக்கும் துறைக்காக மாநில அரசும் பெரும் அளவு பணம் செலவிடுவதுடன், கோயில் புனர மைப்புக்காக மானியங்களையும், கும்பாபி ஷேகங்களுக்காக சிறப்பு மான்யங்களையும் தருகிறது.
அப்படி இருக்கும் போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மட்டும் கோயில் ஒரு தனியார் நிறுவனம் என்று கூற முடியாது என்று கூறியுள்ளார்.கோவில்களை அரசு பக்தர் கமிட்டியிடம் கொடுக்கவேண்டும் என்று இந்துத் துவாக்கள் கூறி வருகின்றன.
அப்படிக் கொடுத்தால் என்னாகும் என்பதற்கு சிதம்பரம் கோவில் கொள்ளையே சாட்சி. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு மக்கள்நலப் பார்வையில் வரவேற்புக்குரியதுதானே.
மதவெறியின் கொலைவெறி
உலகில் பஞ்சத்தால் உயிரிழந்தவர்களை விட மதவெறி யால் நிகழ்ந்த போர்களால் உயிரிழந்தவர்களே அதிகம். இந்த உயிரிழப்புகளால் ஓரளவு பாடம் பெற்ற மக்கள் மதவெறியை விடுத்து, மனிதநேயத்தின் பக்கம் மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.
ஆனாலும், மதவெறி இன்னும் புதிய உயிர்ப்போடுதான் இருக்கிறது. அதனை அவ்வப்போது உறுதிப் படுத்தும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் மதவெறிக்கு பெண்கள் தங்களது சுதந்திரத்தை இழந்து வருகிறார்கள்.
அதனை யொட்டிய பாகிஸ்தானிலும் தாலிபான்களின் மதவெறி ஒரு இசைக்கலைஞரைக் கொன்றுவிட்டது. அங்கு பெண்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ள தாலிபான்கள் கணவர் அல்லது குடும்ப உறுப்பினருடன் மட்டுமே வெளியே செல்லவேண்டும்; வெளியிலும் நீண்ட நேரம் இருக்கக்கூடாது. பெண்கள் படிக்கக்கூடாது, பாட்டுப் பாடவோ நடனம் ஆடவோ கூடாது என எச்சரித்து வருகிறார்களாம்.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரபலமான பாடகியான கஜாலா ஜாவேத் என்பவருக்கும் பலமுரை கடிதம் மூலமாகவும், தொலைபேசியிலும் இனிமேல் பாடக்கூடாது என்று எச்சரிந்திருந்தார்களாம். ஆனால்,இசைக்கலையின் மீது பற்றுக் கொண்ட கஜாலா தலிபான்களின் எசாரிக்கையைப் புறந்தள்ளி விட்டு தனது இசைப் பயணத்தைத் தொடர்ந் துள்ளார்.
இந்நிலையில் கஜாலா ஜூன் 18 அன்று தனது தந்தை மற்றும் சகோதரியுடன் அழகு நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்து தந்தையுடன் கஜாலா திரும்பும்போது இரண்டு பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டனர். இதில் இருவருமே உயிரிழந்தனர். தங்கை காயங்களுடன் தப்பிவிட்டார்.
இசை என்பது மனிதனின் உணர்வோடு கலந்ததல்லவா? இஸ்லாமியர்கள் வழங்கிய கஜல் பாடல்களையும், மொகலாயர்களின் தப்லா இசையையும் ரசிக்காதவர்கள் இருக்கமுடியுமா? பாகிஸ்தான் பாடகி நசியா ஹசன் தனது குரல் வளத்தால் உலக இசை ரசிகர்களையெல்லாம் ஈர்த்தாரே மறக்கமுடியுமா? கஜாலாவைக் கொன்றவர்களே, அவரது குரலை காற்று உள்ளவரை உலகம் கேட்டுக்கொண்டேதான் இருக்கப்போகிறது. அதுவரை உங்களின் மதவெறியும் மறக்கப்படாமலும் இருக்கப்போகிறது.
கருது நெரிப்பு
இணையம் இன்று உலகையே ஒன்றாக்கி வருகிறது. அதனினும் வலைப் பூக்களும் (blogspot), முக நூலும் (facebook) தனிமனிதர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு கதவுகளைத் திறந்து விட்டிருக் கிறது. ஒரு காலத்தில் தனது சில வரி வாசகர் கடிதங்களாவது பத்திரிகையில் வராதா என ஏங்கியவர்கள் உண்டு.
ஆனால், இப்போது அப்படியா? நினைத்தவுடன் தனது எண்ணத்தை, எந்தப் பொருள் மீதான கருத்தையும் உடனுக்குடன் வெளிப்படுத்தி அதனைப் பல நூறு பேர் படித்தும் விடுகின்றனர். கருத்து மோதல்கள் ஏற்பட்டாலும் அதில் கண்ணியமாக வாதிடுவோராகப் பலர் இருந்தாலும் சிலர் இன்னும் கீழ்த்தரமானவர்களாவும் இருப்பதுண்டு.
என்றாலும், ஆரோக்கியமாகவே இருக்கிறது இந்தக் களம். ஆனால், மதங்கள் ஆளும் நாடுகளில் கருத்துரிமையின் குரல்வளையை நெரிக்கும் செயல்கள் நடந்துவருகின்றன. இந்தோனேசியா, மேற்கு சுமத்ராவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆன் (30) என்ற இளைஞர் நாத்திக கருத்தை பதிவு செய்தமையால் ஜகார்த்தா நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
“கடவுள் இல்லை” என்றும் முகமது நபிகள் பற்றியும் கேலி சித்திரம் ஒன்றை, அவர் பதிவு செய்திருப்பதாக ஜகார்த்தா காவல் துறை குற்றம் சாட்டியுள்ளது.
வழக்கம்போல மதவாதிகள் தங்கள் மனம் புண்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
ஆனால், ஆன் செய்தது எந்த விதத்திலும் தவறு இல்லை என்று மினங் நாத்திக அமைப்பு முகநூலில் தெரிவித்துள்ளது. “எனக்கு நம்பிக்கை என்பது தனிப்பட்ட ஒருவரை சார்ந்ததாக தெரிகிறது, ஆனாலும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஆன் கூறியுள்ளார்.
ஜகார்த்தா நீதிமன்றம் நாத்திகக் கருத்தை இணையத்தில் பதிவு செய்தமைக்காக, 30 மாத சிறைத் தண்டனையும், 10,600 டாலர் அபராதத்தையும் விதித்து தீர்பளித்துள்ளதாம். எனது கருத்தை சொல்ல எனக்கு உரிமை உண்டு; எனது கருத்தை மறுக்க உனக்கு உரிமை உண்டு. ஆனால், உன் கருத்தைச் சொல்லக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை என்றார் தந்தை பெரியார்.
ஆன் கூறிய கருத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்றால் அவர் கூறிய கருத்து அவ்வளவு வலியானது என்பதுதானே அதற்குக் காரணம். இணையமும்,முகநூல்களும் மனங்களால் பேசிக்கொள்கின்றன. அவற்றை மதங்களா தடுக்க முடியும்?