புதுப்பாக்கள்

ஜூலை 01-15

நடக்கும் நம்புங்கள் என்பது
ஆன்மீக நம்பிக்கை.
நடக்கட்டும் நம்புகிறோம் என்பது
நாத்திக நம்பிக்கை.
திருவிழாவில் அம்பாளின்
அருள்கிடைத்து விடும் என்பது
பக்தையின் நம்பிக்கை.
கூட்டத்தில் எப்படியும் தங்கத்தாலியை
அறுத்து விடுவோம் என்பது
திருடர்களின் நம்பிக்கை.
கருவறையே ஆனால் என்ன?
அந்த கடவுள் வரமாட்டான்
என்பது
காஞ்சிபுரம் தேவநாதனின் நம்பிக்கை.

– ப.நாகராஜன், பன்னத்தெரு.

 

அவர்களே மகான்கள்!

எதையுமே துறவாமல்…
முற்றும் துறந்தவராய்…
நடிக்க…
மகான்களால் மட்டுமே
முடியும்!…

நடிகைகளைத்
தொட்டுப் பேச
ரசிகனுக்கு மட்டுமா
ஆசை?
மகான்களுக்கும்
கூடத்தான்!
ரசிகர்களால் முடியாது!
காவல்துறை
விரட்டி, விரட்டி அடிக்கும்!

ஆனால்…
மகான்களால் முடியும்!
காவல்துறையின்
ஒத்துழைப்போடு!!

இந்த அற்புதம்(!)
செய்வதால்தான்
அவர்கள் மகான்கள்

– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

 

அளவுக்கு அதிகமானால்

ஆதின எடுப்புப் பிள்ளை
நித்யானந்தா;
மனங்குளிர்ந்தது மதுரை.

இனி நித்தியமும் ஆனந்தமாய்
மனோரஞ்சித மலர்கள் மணம்வீசும்.

துறவற நெறியில்
அறம் துறக்கப்பட்டது.
கோடிகளுடன்
கோடிகள் சங்கமம்.

பெண்களை மார்போடு அணைத்து ஆசீர்வதிக்கும்
அழகுக்கலை வாத்யாயனர்
நித்தியானந்தா.

இனி
நித்தம் பணிவிடை செய்ய,
நித்ய கல்யாணிகளினால்
ஆதீனம் நிறையும்.

வாரிசில்லா மதுரையாதீனம்
வளைந்ததில்
வளைத்துப் போட்டது கோடிகள்

நித்தியானந்தா
இளமை ததும்பும் முகத்தின் கிருதாவில்
மண் பொன் பெண்
முப்பரிமாண ஊஞ்சல் கட்டுகின்றன.

துறவறத் தகுதி,
சுவரும் சுண்ணாம்புமாய்
உதிர்கிறது.
சட்டப்படிதான்
அரியணை;
முறைப்படிதான் தத்தெடுப்பு.
அருணகிரிநாதர் அருள் வாக்கு.

சங்கம் கண்ட மதுரை
உடல் முழுதும்
தங்கம் கண்ட ஆதீனம்.

துறவறத்தில் தூர்வார யார் கேட்பது?
அரசியல் வாதிக்கும்,
ஆன்மீக வாதிக்கும்.
தேவையில்லை;
நீதி, நீதிமன்றம், சட்டம்.
இவர்களே கடவுளர்கள்.
இன்றைய நடைமுறைச் சட்டம்.
அளவுக்கு அதிகமானால்
மது
கண்ணை மறைக்கும்;
அளவுக்கு அதிகமானால் பக்தி
அறிவை மறைக்கும்.

– தஞ்சை சு.பொன்னியின் செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *