இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் ஜூன் 11இல் பொறுப்பேற்றார்.
சட்டமன்ற புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 12இல் நடந்தது. 73% வாக்குகள் பதிவாயின. அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றி பெற்றார்.
அரிசிவிலையைத் தொடர்ந்து பருப்பு விலையும் ஜூன் 12ல் உயர்ந்தது.
தலைமறைவாக இருந்த நித்யானந்தா ஜூன் 13ல் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்றார். மீண்டும் ஜூன் 14ல் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார். பிடதி ஆசிரமத்தை கர்நாடக காவல்துறை சோதனையிட்டது.
குடியரசுத் தலைவர் வழங்கும் நன்கொடைகளின் விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என ஜூன் 14ல் டெல்லி உயர்நிதிமன்றம் தீர்ப்பளித்தது.
பழம்பெரும் நடிகர், கலைவாணரின் சீடர் காகா ராதாகிருஷ்ணன் (வயது 86) ஜூன் 14 அன்று காலமானார்.
நடப்பாண்டில் நெல்லுக்கு ஆதார விலையாக ரூ.170 உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.1250 ஆக நிர்ணயித்து மத்திய அரசு ஜூன் 17ல் அறிவித்தது.
குடியரசுத் தலைவர் தேர்தல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவதாக ஜூன் 15 அன்று சோனியா காந்தி அறிவித்தார்.
ஆந்திராவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 18 சட்டமன்றத் தொகுதிகளில் 15லும், ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஜூன் 19ல் வெற்றறிபெற்றது.
மம்தா மற்றும் பா.ஜ.க.வின் கோரிக்கையை மறுத்து, தாம் குடியரசுத் தலைவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஜூன் 18 ல் அறிவித்தார்.
எப்போதும் இல்லாத வகையில் ஒரு மாதத்தில் அரிசி விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது என ஜூன் 18ல் அரிசி வணிகர்கள் தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க தகுதியிழந்துவிட்டார் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஜூன் 19 அன்று தீர்ப்பளித்ததை அடுத்து,அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பாகிஸ்தானின் புதிய பிரதமராக ராஜா பர்வேஷ் அஸ்ரப் ஜூன் 22 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுரங்க ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் பா.ஜ.க.அமைச்சர் ஜனார்த்தன (ரெட்டியிடம்) ரூ. 13 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு அவருக்கு பிணை வழங்கிய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த ஆந்திர நீதிபதி பட்டாபி ராமாராவ் ஜூன் 19 அன்று கைது செய்யப்பட்டார் மும்பையில் உள்ள மஹாராஷ்டிர மாநிலத் தலைமைச் செயலகமான மந்திராலயத்தில் ஜூன் 21 அன்று நிகழ்ந்த தீவிபத்தால் ஊழல் வழக்குகள் தொடர்பானவை உள்ளிட்ட ஏராளமான முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாயின.