கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க… – 4

ஜூலை 01-15

படைப்பு என்னும் அயோக்கியத் தனம்

ளர்த்த கிடா மார்ல பாய்ஞ்ச கதையாகல்ல இருக்கு ஊர் பக்கம் நன்றி மறந்தவர்களை குறித்து இப்படி கூறுவதுண்டு. ஒருவருடைய முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்து, பின்னர் நாம் புறக்கணிக்கப்படும் சூழல் வரும் பொழுது இந்த சலிப்பு ஏற்படக்கூடும். ஏறி வந்த ஏணியை எட்டி உதைச்சுட்டான்யா..என்று கூட நாம் சில நேரங்களில் வருந்துவதுண்டு. அப்படியான ஒரு சூழல்தான் கடவுள் கற்பனைகளும், அது நம்மை படைத்தது என்று நம்பிக் கொள்வதும், மனிதனுக்கான கடவுளர்கள் காலம், காலமாக மாறி வருவதையும் இறந்து வருவதையும் கண்டோம். எத்தனை கடவுளர்கள் வந்தாலும்,  மிகச்சமீபத்தில் மனிதர்களால் படைக்கப்பட்ட புதிய கடவுளர்களே பழைய நம் மூதாதையர்கள் உட்பட அனைவரையும் படைத்ததாக நம்புவதில் மட்டும் நம் மக்கள் தயங்குவதில்லை. அதில் ஆழ்ந்து சிந்திப்பதுமில்லை. ஏன் பிரேமனந்தா  என்ற சாமியார் பாலியல் வழக்கில் கம்பி எண்ணி, எண்ணி செத்து போன சமகாலத்தில்தான், கேன்சர் வந்து செத்துபோன புட்டபர்த்தி கூட கடவுளின் அவதாரமாக நம்பப்பட்டார். மக்களின் இந்த அறியாமையை எள்ளி நகையாடுவதல்ல நம் நோக்கம்,  இத்தனை ஏற்றத்தாழ்வுகள் உள்ள சமூகத்தில் தம் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வில்லாத சூழலில் இப்படி வடிகால்களை தேடி அலையும் மனது வாய்ப்பது இயல்புதான். ஆனால், அவை தீர்வு கிடையாது என்று சொல்லும் கடமை உள்ளபடியால் மேலும் தொடர்கிறோம்.

கடவுள் உலகை படைத்ததா? உலகம்  எப்படி உருவானது? என்ற கேள்வி பன்னெடுங்காலமாக உள்ள கேள்வி. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலந்தொட்டு, தம்மைச் சுற்றியுள்ள இயற்கையை புதிரென கண்டு வியப்புற்ற காலந்தொட்டு, தம் அன்றைய அறிவின் எல்லைக்குட்பட்டு காரணிகளை தேடி, கண்டடைய முடியாத காரணிகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள டம்மி பீஸ்  ஒன்று தேவைப்படவும், எதிர்த்து கேள்வி கேட்காத ஒரு கற்பனையை பொறுப்பாக்கி அதை கடவுள் என்று உருவகப்படுத்திக் கொண்டு, காலப்போக்கில் தான் படைத்த கற்பனைதான் என்பதை மறந்து… ஒருவேளை அதுதான் உலகை படைத்திருக்குமோ? என்று பொருத்தமில்லா கேள்வி கேட்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

அப்படியான டம்மி பீஸ்  கடவுள்களை முன்வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பிழைப்புவாதக் கூட்டம் உலகம் முழுக்க என்னென்ன அட்டூழியங்கள் காலம், காலமாக  செய்து வருகின்றது என்பதை நாம் அறிந்த பிரபலமான  மதங்களை முன்வைத்து கொஞ்சம் சோதித்து பார்க்கலாம்.

பார்ப்பனிய இந்து மதம்

திருமூர்த்திகள் என்று அழைக்கப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன்  போன்றவர்களால்தான் உலகம் உண்டானதாக இந்த மதத்தில் நம்பப்படுகிறது. இதில் பிரம்மனின்  முகம், மார், தொடை, பாதம் போன்ற உறுப்புகளிலிருந்து முறையே பிராமணர்களும், சத்ரியர்களும், வைஷ்யர்களும், சூத்திரர்களும் பிறந்ததாக பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், மற்ற மிருகங்கள், பூச்சிகள் இவையெல்லாம் எங்கிருந்து வந்தன என்று கேள்வி கேட்டுவிடக்கூடாது.

அதையும் மீறி, உலகம் எப்படி தோன்றியது என்று கேள்வி கேட்பீர்களாயின், அவர்கள் உங்களை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டு போய் வேதங்களில் நிறுத்தி விடுவார்கள். அதை மட்டும் படிச்சிட்டு வந்து பேசுறியே, கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா? என்று வந்து நிற்பார்கள்..

இதோ  ரிக்வேதம், 90 இல் பாருங்கள் இன்னொரு கதை விட்டு வச்சிருக்கோம்…அதுக்கு பேருதான் புருஷ சூக்தம்.. அதன்படி

கடவுளர்கள் அவனைத் துண்டு, துண்டாக  வெட்டினார்கள். அவன்  எத்தனை துண்டுகளாக வெட்டப்பட்டான்? பார்ப்பனன் புருசனுடைய வாய் ஆனான். சத்ரியன் புருசனுடைய கரங்கள் ஆனான். வைசியன் புருசனுடைய தொடைகள் ஆனான். சூத்திரன் புருசனுடைய பாதங்களானான். என்ற வாசகத்தை தூக்கி எறிவார்கள். உலகம் பிரம்மத்திலிருந்து தோன்றியது என்பார்கள்.. கேள்வி கேட்கக் கூடாது. பிரம்மம்தான் அனைத்திற்கும் மூலமென்பார்கள். உலகம் பெருவெளியிலிருந்து தோன்றியது. ஏனெனில் எல்லா உயிரினங்களும், பெருவெளியிலிருந்து தோன்றி அதனிடம் செல்கின்றன. பெருவெளி எல்லாவற்றையும் விட அளவிறந்தது. பெருவெளி எல்லாவற்றிற்குமான உறைவிடம். (சாந்தோக்கிய உபநிடதம் வீவீவீ, 1.8.9) சாந்தோக்கிய உபநிடதத்தில், உலகம் எவ்வாறு தோன்றியது என்று சாலவாத்தியா  கேட்டதற்கு ஜைவாலி பிரவாகனன் இவ்வாறு பதில் கூறுயிருக்கிறானே  என்று உங்களில்  எவரேனும் பிரும்மம் முதலுமல்ல, முடிவுமல்ல என்பது இதிலிருந்து புலனாகிறதே!

ஆனால், பிரும்மம் தொடக்கமென்று கூறுவீர்கள் என்று கேள்வி கேட்டால் உடனே ஒரு பழைய கடவுளை டிங்கரிங், பெயின்டிங் செய்து அல்லது புதுக்கடவுளை கண்டுபிடிப்பார்கள்; பின்னர் விளம்பரம் செய்வார்கள். இப்பொழுது கேட்டுப்பாருங்கள். எவரும் பிரும்மம் அது, இதுவென்றெல்லாம் பேசுவதில்லை… ஒன்று காஞ்சி காமகோடிகள் மற்றும் அவர்தம் அடிவருடிகள் அல்லது நம் நித்தி போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் வேண்டுமானால் அப்படி உளறிக் கொட்டலாம். பொதுவாக, இன்று பிள்ளையார்தான் முழுமுதற்கடவுள் அல்லது சிவன் அல்லது விஷ்ணுதான். தம்மைப் படைத்தவன் எவனென்றே இத்தனை குழப்பமுள்ள பார்ப்பனிய மத தத்துவத்திற்குதான் இன்று அறிவியல் முலாம் பூசிக் கொண்டு, இதோ, இதோ இங்கே பாருங்க… இதில் அறிவியல் இருக்கிறது, அதில் அறிவியல் இருக்கிறது என்று கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். நாம் மதவாதிகளிடம் முன்வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், கடவுள் உலகத்தை படைத்ததா? என்ற கேள்விக்கு முன்  எவன்  கடவுள் என்ற முடிவுக்கு வாருங்கள். இந்த கூவி விக்குற கோஷ்டிகளிடம் அன்றே கேள்வி கேட்டவர்கள் இருந்திருப்பார்கள். அதெப்படிண்ணே.. என்று செந்தில் கவுண்டமனி  பெட்ரோமாக்ஸ் லைட் பாணியிலோவது யாராவது கேள்வி கேட்டிருப்பார்கள் அல்லது புத்தர் பாணியில் அறிவுப்பூர்வமான வழியில் கேள்வி கேட்டிருப்பார்கள். அப்படி கேள்வி கேட்பவரை மிரட்டுகிற தொனியில்தான் கீழ்க்கண்ட சம்பவம் நடந்தாக எழுதி வைத்திருக்கிறது இந்த பார்ப்பனக் கூட்டம். பார்ப்பன யக்ஞவல்கியரிடம், அவரது மனைவி கார்க்கி வாசாக்கினவி, பிரபஞ்சம் எவ்வாறு உருவாகியது என்று கேட்டதற்கு, எல்லாவற்றுக்கும் காரணம்  பிரம்மம் என்று பதில் கூறினார். அவள் மீண்டும்  கேள்விகளை அடுக்க,  தனது மனைவியின் துடுக்குத்தனமான கேள்வியில் எரிச்சலுற்ற பார்ப்பன முனிவன்  யக்ஞவல்கியன், அவள் வாயை அடைக்கும் விதத்தில்  இவ்வாறு பதில் கூறினான்,  கார்க்கி பெண்ணே! அளவு மீறி பேசினால் தலையை துண்டித்துவிடுவேன். இறைவனைப் பற்றி நீ பேசக் கூடாததையெல்லாம் பேசுகிறாய். எனவே இனி எதுவும் கேட்காதே. (பிருகத உபநிடதம் ஸ்வீவீ, 111.4.9) இங்கே தலையை கொய்துவிடுவேனென்று மிரட்டிய பார்ப்பன முனிவரின் எண்ணத்தைத்தான் மனுவும் வெளிப்படுத்துகிறது. மனு 12:4 சூத்திரன் மனப்பாடம் பண்ணும் நோக்கத்துடன் வேதம்  படிப்பதை கேட்டால் அவனது காதுகளில் காய்ச்சிய ஈயத்தையும், அரக்கையும் ஊற்ற வேண்டும்; அவன் வேதம் ஓதினால் ஓதும் நாக்கு துண்டிக்கப்பட வேண்டும். வேதத்தில் முழுத் தேர்ச்சி அடைந்தால் அவனது உடம்பு துண்டு, துண்டாக வெட்டிச் சிதைக்கப்பட வேண்டும்.

நன்றாக மேற்கண்ட பதிவை ஆராய்ந்தீர்களே யானால்  இந்த வன்மத்தின் பின்னுள்ள காரணம் தெளிவாகப் புலப்படும். சூத்திரர்களுக்குப் பார்ப்பனர்கள் வேதங்களை கற்கும் உரிமையைக் கொடுத்திருந்தால், பரவலாகப் போய் சேர்ந்திருக்கும், வேதங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கும், பார்ப்பன மேலாண்மை ஆட்டங்கண்டிருக்கும், பூணூல்கள் அறுத்து எறியப்பட்டிருக்கும்.

அதையும் மீறி புத்தர் கேள்வி கேட்டார்; அவரது சீடர்கள் கேள்வி கேட்டார்கள்; சமணர்கள் கேட்டார்கள். அரசர்களை வஞ்சகமாக தமது வலைக்குள் வீழ்த்தி வைத்திருந்தவர்கள் புத்த மடாலயங்களை இடித்தார்கள்; கேள்வி கேட்க எவரும் துணிந்திடாத அளவுக்கான கொடூரங் களைச் செய்தார்கள். இதற்கு வரலாற்றில் பிரபல மான ஒரு எடுத்துக்காட்டுதான் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிய கொடூரம்.

(பௌத்தம் என்னும் பார்ப்பன எதிர்ப்பு நெறியை  வீழ்த்துவதற்காக எப்படியெல்லாம் கீதை என்னும் கொலை நூல் பயன்பட்டிருக்கிறது என்பதை அறிய ஆசிரியர் கி.வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம், பிரேம்நாத் பசாஸ் எழுதிய இந்திய வரலாற்றீல் பகவத் கீதை  போன்ற நூல்களை ஒரு முறையாவது நம் வாசகர்கள் படிக்க வேண்டுமென்பது இத்தோடு நான் விடுக்கும் வேண்டுகோள்களில் ஒன்று)\

– மகிழ்நன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *