விரலும் விழியும் எழுப்பும் வினாக்கள்

ஜூலை 01-15

மனிதர்களை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துவது பேச்சாற்றல். பேச்சு இன்றேல் கருத்துப் பரிமாற்றம் இல்லை. பேச்சால் பிறந்தது மொழி. பேச்சு இடத்திற்கு இடம் வேறுபட்டது. எனவே, மொழியும் இடத்திற்கு இடம் வேறுபட்டது. பேச்சு செய்திப் பரிமாற்றம் என்ற நிலையைக் கடந்து, கருத்துப் பரிமாற்றம், கதைப் பரிமாற்றம், பாடல் பரிமாற்றம் என்று வளர்ந்தது.

 

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மொழி மொழியப்படுவதாக (பேசப்படுவதாக) மட்டுமே இருந்தது. அதன்பின் செய்திகள் எழுத்து வடிவில் கற்பாறைகளிலோ, களிமண் தட்டைகளிலோ, பானைகள், செப்புத்தகடுகளிலோ எழுதப்பட்டன.

அந்நிலையில் பேச்சு எல்லோருக்கும் உரியதாகவும், எழுத்து ஒரு சிலருக்கு உரியதாகவும் இருந்தன. அதன்பின் எழுத்து ஓலைச்சுவடிகளில் பதியப்பட்டது. அந்நிலையில் எழுத்து இன்னும் பரவலாக்கப்பட்டு படிப்போர் எண்ணிக்கை சற்றே கூடியது. அதுவும் கல்வி கற்க உரிமையுடைய உயர்சாதியினருக்கு மட்டுமே உரியதாயிற்று.

காற்றை எல்லைக் கோடிட்டு நிறுத்தமுடியாதது போல் பேச்சு மொழியை எந்த மக்களிடமும் எவராலும் பறிக்க இயலவில்லை. ஆனால், ஆற்று நீரை அணைகட்டி ஒரு பகுதிக்கு உரிமையாக்கிக் கொள்வது போல, படிப்பறிவு சாத்திரங்களால் ஒரு சிலருக்கு உரிமையாக்கப்பட்டது.

பொதுக் கல்விக் கூடங்கள் இல்லாது குருகுலக் கல்வி முறை இருந்ததால், கல்வியைக் கட்டுக்குள் வைப்பதும், ஒரு பிரிவினரே கல்வியை ஒதுக்கிக் கொள்வதும் எளிதானது.

கல்வி என்பது நான்குவழித் தொடர்புடையது. காது, வாய், கண், விரல் என்பன அந்த நான்கும். காதால் கேட்டு வாயால் மொழிதல். இங்கு காதும் வாயும் ஊடகங்களாக உதவுகின்றன. இது அனைவருக்கும் கிடைத்தது. காரணம், அதை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. காதும், வாயும் தடையற்று உரிமையுடன் செயல்பட்டதால், அனைத்து மக்களுக்கும் பேசுதல் என்பது சாத்தியப்பட்டது. பேச்சுரிமை அனைவருக்கும் பொதுவாய் இருந்தது.

ஆனால், எழுத்து என்பது விழி, விரல் ஆகியவற்றோடு தொடர்பு உடையது. ஆம். விரல் எழுதியதை விழி படிக்கும். விழி படித்ததை விரல் எழுதும்.

படிப்பு என்பது உயர்சாதிக்கு மட்டுமே என்று உரிமை செய்யப்பட்டபோது, உறுதிசெய்யப்பட்ட போது விழிகளுக்கும், விரல்களுக்கும் உரிமை மறுக்கப்பட்டது. விழி பார்க்கவும், விரல் வேலை செய்யவும் என்று ஆக்கப்பட்டு, பெரும்பான்மை மக்கள் உழைப்பாளிகளாய் மட்டுமே ஆயினர்.

தத்துவ ஞானிகளைவிட அரிய கருத்துக்களை பழமொழியாகச் சொன்ன எம் பாட்டனுக்கும், பாட்டிக்கும்; கருத்தும், நயமும் மிக்க கவிதைகள் பாடிய எம் முன்னோர்களுக்கும் காதும், வாயும் உரிமை பெற்றிருந்தனவேயன்றி விழியும், விரலும் உரிமை பெறவில்லை. எனவே, அவர்கள் செவிவழி அறிந்து வாய்வழி தம் திறமையைக் காட்டினர்.

அப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்த நம் முன்னோர்கள், ஏட்டைக் கண்ணால் கண்டனரேயன்றி கற்க முடியாமல் நின்றனர். அவர்கள் விழிகளும், விரல்களும் வினா எழுப்பின. வாயும், காதும் பெற்ற உரிமை, எங்களுக்கு ஏன் இல்லை? இதுவே அவை எழுப்பிய வினா.

நம் நாட்டில், நம் இன மக்கள் எத்தனை ஆயிரம் பேர் இனிய இசைப்பாட்டுக்காரர்களாகவும், கலை நயம் மிக்க ஆட்டக்காரர்களாகவும், எதுகை மோனையுடன் கவிபாடக் கூடியவர்களாகவும்,  சிறந்த சிற்பங்களைச் செதுக்கக் கூடியவர்களாகவும், அழகிய ஆடைகளை நெய்யக் கூடியவர்களாகவும், அழகிய பொருட்களைச் செய்யக் கூடியவர்களாக வும் இருந்தும் அவர்கள் கண்களுக்கு கற்கும் வாய்ப்பும், விரல்களுக்கு எழுதும் வாய்ப்பும் அளிக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டனர். ஆரிய பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தால் சாத்திரங்கள் எழுதப்பட்டு, சட்டமாய் அது ஆக்கப்பட்டு, ஆட்சியாளர்களின் அதிகாரத்தோடு, ஆதரவோடு இது நிகழ்த்தப்பட்டது.

எத்தனை ஆற்றலாளர்களாய், அறிவுக் கூர்மை உடையவர்களாய் இருந்தும் அவர்கள் ஏட்டைக் காணும்போது கண்ணிருந்தும் குருடர்களாய் விரல் இருந்தும் எழுத முடியாத முடவர்களாய் ஆயினர். அதனால், அவர்கள் அறிவும், ஆற்றலும் வளரவும், விரியவும் வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று.

அவர்கள் விழிகளில் வெளிப்பட்ட ஏக்கமும், விரல்களில் ஏற்பட்ட துடிப்பும் காலங்காலமாய் காணப்பட்டாலும் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே அவை தாக்கத்தை ஏற்படுத்தின.

ஆரிய பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமையாய் இருந்த கல்வி, மெல்ல மெல்ல மற்ற மக்களுக்கும் கிடைத்தது. என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாயும் அது நிகழ்ந்தது. அதன் விளைவாய் பார்ப்பனர் அல்லாதவர்களில் சிலரும் உயர் கல்வி பெற்றனர். அவர்கள் விழிகளும், விரல்களும் புதியனவற்றைப் பார்த்தன, புதியனவற்றைச் செய்தன. அந்தப் புதிய செயல்கள் அவர்களுக்கு விழிப்பூட்டின, அறிவூட்டின, திறன் பெருக்கின, தெளிவூட்டின.  இப்படிப்பட்ட விழிப்பும், அறிவும், திறனும் தெளிவும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் வேகமாய் வளர்ந்தது. அதிகம் கற்றவர்களைவிட, ஓரளவே கற்றவர்களுக்கே அந்த வேகம் கூடுதலாய் இருந்தது. அப்படிப்பட்டவர்களில் இருவர் முதன்மையானவர் கள். ஒருவர் பெரியார். மற்றவர் காமராசர்.

ஆரியர் ஆதிக்கம் ஒழிந்து நம் மக்களின் வாழ்க்கை மானமும் அறிவும் உள்ளதாக மாறவேண்டும் என்றால், அவர்களுக்கு கல்வி கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்று எண்ணினர். அதனால், மட்டுமே ஆரியர் ஆதிக்கத்தை வீழ்த்தவும் முடியும், நம்மவர் வாழ்வை உயர்த்தவும் முடியும் என்று எண்ணினர்.
தந்தை பெரியார் விழியாகவும், காமராசர் விரலாகவும் மாறினர். ஆம் தந்தை பெரியார் வழிகாட்ட, காமராசர் செயல்பட்டார். அதன் விளைவு, கல்விக்கூடங்கள் கணக்கில்லாது உருவாக் கப்பட்டன. கல்விக்கூடம் இல்லாத ஊர்களே இல்லை என்னும் நிலை உருவாக்கப்பட்டது. உட்கிராமங்கள், சிற்றூர்களில்கூட மாணவர்கள் அதிக அளவு கற்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.  ஏங்கிய கண்களிலெல்லாம் அறிவு ஒளி வீசியது. துடித்த விரல்கள் பிடித்தன எழுதுகோல். அடித்த ஆரிய கொட்டம் பொடித்து நொறுக்கப்பட்டது. ஆரிய ஆதிக்கக் கோட்டை இடித்து தகர்க்கப்பட்டது.

தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராசரும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்து முடுக்கிவிட்டனர். ஊருக்கு ஊர் கற்றோர் எண்ணிக்கையும் பட்டம் பெற்றோர் எண்ணிக்கையும் பெருகியது.
படித்தவர்களுக்கு பதவி அளிக்கப்பட வேண்டிய நெருக்கடி, கட்டாயம் வந்தது. கல்வியை தனக்கு மட்டுமே என்ற மொத்தமாய் கைக்குள் வைத்திருந்த ஆரியர் கூட்டம், பதவிகளையும் தங்கள் ஏகபோகத்திலே வைத்திருந்தனர். எனவே, பெரியாரின் பார்வை பதவியின்பக்கம் திரும்பியது.

பரம்பரையாய் படித்த பார்ப்பனர் கூட்டமும் முதல் தலைமுறையாய் படிக்கும் நம்மவர்களும் போட்டியிடுதல் ரேஸ்குதிரையும், ஜட்கா வண்டி குதிரையும் போட்டியிட்டதாய் அமையும். எனவே, இடஒதுக்கீடு நம் மக்களுக்கு வேண்டும். இடஒதுக்கீடு ஒன்றே ஆரிய கோட்டையின் அடித்தளத்தை அகற்றும் என்ற முடிவு செய்து, அதற்காகப் போராடி அரசியல் சட்டத்தையே திருத்தச் செய்து அடித்தட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றார்.

தந்தை பெரியாரின் எண்ணம் ஈடேறியுள்ளது. இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் நம் மக்கள் முன்னணியில் வந்துள்ளனர். அவர்கள் கண்கள் கசிந்து பெரியாருக்கு நன்றி கூறுகின்றன; அவர்களது விரல்கள் பெரியாருக்கு வணக்கம் சொல்கின்றன. ஆனால் பெரியாரின் கனவு, நோக்கு முழுவதம் நிறைவேற வேண்டுமானால், நம் மக்களின் எல்லா விழிகளும், விரல்களும் முறையே படிக்க வேண்டும், எழுதவேண்டும். பள்ளிக் கல்வியாண்டு தொடங்கியுள்ள நேரம் இது. நம் இனத்தின் பெரியவர்கள் கல்லாத அனைவரையும் கற்கும்படி செய்யவேண்டும். அப்போதுதான் அவர்கள் விழிகளுக்கும், விரல்களுக்கும் விடை கிடைக்கும்!

– மஞ்சை வசந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *