அஞ்சல் பெட்டியே!
உன் திறந்த வாயில்
திணித்த எதையும்…
நீ செரித்துக் கொண்டதில்லை.
உன் வயிற்றைத் துடைக்க
மீண்டும் மீண்டும்
வெற்றுப் பெட்டியாய்
நிற்கிறாய்
எம் தமிழர்களைப் போல.
தாய்மொழிப் பற்று
பகுத்தறிவு
இனமானம்
தன்மானம் என
எல்லாம்தான் போட்டோம்
தமிழன் மண்டையில் பாரேன்
உன்னைப் போலவே
வெற்றுப் பெட்டியாய் நிற்கிறான்
எதையும் செரித்துக் கொள்ளாமல்.
நீ திறந்தவாய் மூடமாட்டாய்
கடிதங்களுக்காக.
எம் தமிழர்களும்
பொருளுக்காக
பதவிக்காக
வீணரைப் புகழ்வதற்காக
வாய் திறந்தே இருக்கிறார்கள்.
உனக்குக் கண் இல்லை
காதும் மூக்குமில்லை
வாயும்
நேரம் காட்டும்
வெளியும்தான்.
தமிழனுக்கோ
அய்ம்பொறியும் உண்டு
ஆறறிவும் உண்டு
ஆனாலும்
உன்னைப் போலவே
வாயும்
வெளியும்
உள்ள பெட்டியாய் நிற்கிறான்.
அஞ்சல் பெட்டியா நீ?
வெடிகுண்டை உன் வாயில் இட்டாலும்
அஞ்சாமல்
வாய் திறந்தே நிற்கும்
நீயா அஞ்சல் பெட்டி
கல்லுக்கும்
உலோக, மரபொம்மைக்கும்
மாட்டுச் சாணிக்கும் அஞ்சி கும்பிட்டுக் கூத்தாடும் மனிதர்களே
முழுமூட அஞ்சல் பட்டிகள்
– பொன்.இராமசந்திரன், பம்மல்