திராவிட மொழி அறிஞர் இராபர்ட் கால்டுவெல் 200ஆம் ஆண்டு பிறந்த நாள்

மே 16-31 - 2014

7.5.2014 அன்று திராவிட மொழி அறிஞர் இராபர்ட் கால்டுவெல் பாதிரியாரின் 200ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!

தமிழுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் அளப்பரிய தொண்டு செய்தோர் தமிழ்ப் புலவர் பெருமக்களும், தமிழ் இலக்கியப் படைப்பாளிகளும் மட்டுமல்ல, அதன் மொழிக் கூறு எப்படிப்பட்ட மூத்த, முதிர்ந்த தன்மைகளைத் தன்னகத்தே கொண்ட மொழிக் குடும்பம் என்பதை வெளிநாட்டிலிருந்து கிறித்துவ மத போதகர்களாக வந்தவர்களாயினும், அவர்கள் செய்த ஒப்புயர்வற்ற பணி என்றென்றும் மறக்க இயலாத ஒரு திருப்புமுனைப் பணியாகும்.

ஆராய்ச்சி அறிஞர் பெருமக்களான இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), ஏக்கல் (Haeckal) பி.கயில்ஸ்(P.Giles), என்.ஆண்டர்சன், எச்.சுவீட் (H.Sweet),, பாப் (Bopp) டெயிலர் (Taylor), எப்.எம்மல்  (F.Hammel) போன்ற, உலகில் உள்ள மிகப் பழைமை சார்ந்த மொழிகள் அனைத்தும், ஒரு மூலமொழியினின்றும் உண்டானவை என்றும், அந்த மூல மொழியானது குமரிக் கண்டத்தில் முதலில் பேசப்பட்ட தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்றும், தமிழ் மொழியின் சொற்கள் உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் சில பலவாகக் காணப்படுவதே, தமிழ் மொழியின் பழைமைக்கும், சிறப்புக்கும் ஏற்ற, சான்றாகும் என்றும், எடுத்துக்காட்டும் சில குறிப்புக்களிலிருந்து தெளிவான கருத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன், திராவிட இயக்க வரலாறு முதல் தொகுதி – பக்கம் 97.

மேலும் அதே திராவிட இயக்க வரலாறு முதல் பகுதியில் நாவலர் டாக்டர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் திராவிட மொழியான தமிழைப்பற்றி கால்டுவெல் பாதிரியார் என்ற தலைப்பில் எழுதுகையில், பின்வரும் அரிய குறிப்புக்களைத் தருகிறார்கள். அதனை அப்படியே தருகிறோம்:

திராவிட மொழியான தமிழின் தனித்தன்மைப்பற்றியும், தனிச்சிறப்பியல்புகள் பற்றியும், சிறப்பாகவும், செம்மையாகவும் உலகிற்கு உணர்த்திய பெருமகனார், கால்டுவெல் பாதிரியார் ஆவார். கிருத்தவ சமய நெறியைத் தமிழகத்தில் பரப்பும் நோக்கோடு 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை தந்து, தமிழகத்திலேயே பல ஆண்டுகாலம் தங்கியிருந்து, தமிழர்களோடு நெருங்கிப் பழகியும், தமிழ் மொழியை நன்கு அறிந்தும் சிறந்து விளங்கிய கால்டுவெல் பாதிரியார் அவர்கள், ஆராய்ந்து எழுதிய திராவிட ஒப்பியல் இலக்கணம் என்னும் சிறப்பிற்குரிய ஆராய்ச்சி நூல், திராவிட மொழியான தமிழ் மொழியின் சிறப்புக் கூறியல்களைத் தெள்ளத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றது.

கால்டுவெல் பாதிரியார், தமிழைப் பற்றிச் சுட்டிக் காட்டியுள்ள சில சிறப்புச் செய்திகள் வருமாறு:

1) திராவிட மொழிகளில், பெரும்பாலும் முதன் முதல் பயன்படுத்தப் பெற்ற மொழி, தமிழ் மொழியேயாகும்.

2) அவைகளில் தலைசிறந்த மொழியாக வளர்க்கப்பட்ட மொழியும் தமிழேயாகும்.

3) திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த கிளைமொழிகள் அத்துணைக்கும் தலைமை தாங்கும் பெற்றி தமிழ் மொழிக்கே உண்டு.

4) தமிழ்தான் திராவிடக் குடும்ப மொழிகளில் மிகத் தொன்மைக் காலந்தொட்டு, மிகச் சிறப்பாகப் பண்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வரும் மொழியாகும்.

5) தமிழானது, பழைமையான வடிவங்களைப் பெற்று மிகுந்த வளமுடனும், வலிவுடனும் திகழும் மொழியாகும்.

6) தமிழானது வடமொழித் தொடர்பு சிறிதும் இன்றித் தனித்து நின்று வழங்கும் தன்மையைப் பெற்றதாகும்.

7) வடமொழியின் உதவி இல்லாமல், தனித்துத் தழைத்தோங்கும் தகைமை தமிழுக்கு உண்டு.

8) வடமொழிச் சொற்களைத் தன்னிடத்திலிருந்து அறவே நீக்கி விடுவதன் மூலம், தமிழ் தூய்மையானதாகவும், நடையில் உயர்ந்ததாகவும், நேர்த்தி உடையதாகவும் திகழும் தன்மையைக் கொண்டதாகும்.

9) தமிழின் இலக்கிய நடை, உலக மொழிகள் பலவற்றின் நடைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டுச் சிறந்து விளங்குவதாகும்.

10) தமிழின் சொல்வளம், இலக்கண வடிவுகள், வகைதொகைகள் குறியீடுகள், திசைச்சொற்கள், புணர்ச் சொற்கள், வேர்ச் சொற்கள் போன்றவை வளம் பொருந்திக் காணப்படுபவைகளாகும்.

11) பிற திராவிட இன மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ் தொன்மையானதாகவும், தூய்மையானதாகவும் காணப்படுவதாகும்.

12) தமிழ் இலக்கியம் தெலுங்கு, கன்னட இலக்கியங்களுக்கு மிகவும் முற்பட்டதாகும். மலையாள இலக்கியத்திற்கு மிகமிக முற்பட்டதாகும்.

13) தமிழிலுள்ள எண்ணுப் பெயர்கள், வேற்றுமை யுருபுகள், வினைவிகுதிகள் போன்றவை. பல்லூழிக்காலம் கடந்த நிலையிலும், திரிபுக்கு இடமின்றி நிலைத்தவையாக இருந்து வருகின்றன.

இவ்வாறும், இவைபோன்றும் தமிழுக்கு உள்ள சிறப்புக் கூறுபாடுகளைக் கால்டுவெல் பாதிரியார் சுட்டிக்காட்டி யிருப்பது, நமக்கெல்லாம் பெருமிதவுணர்வை அளிக்க வல்லதாகும். சங்ககால நூற் பயிற்சியும், தனித்தமிழ் உணர்ச்சியும் இல்லாதிருந்த அந்தக்காலத்தில், அயல் நாட்டாரான அவர், ஆரிய மொழியினின்றும் திராவிட மொழியைப் பிரித்துக் காட்டிய செயல், மிகவும் பாராட்டுவதற்குரியதாகும்.

பொதுவாக, ஜி.யு.போப் அவர்களின் தமிழ்த்தொண்டு, அவரது கல்லறையில் ஒரு தமிழ்த் தொண்டன் உறங்குகிறான் என்று ஆக்ஸ்ஃபோர்டு பகுதியில் உள்ளது.

அவர் மரணத்திற்குப் பிறகும் வாழும் தமிழ்த் தொண்டர் என்பதைக் காட்டவில்லையா?

தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை,

தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?

என்று வினவினார் புரட்சிக்கவிஞர்!

வீரமாமுனிவர் போன்ற பெரும் இலக்கியச் செறிவாளர்கள், (இவர்களுக்கெல்லாம் சென்னைக் கடற்கரைச் சாலையில் அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திராவிடர் ஆட்சி – தி.மு.க. அமைச்சரவை அரசு சிலைகளை உலகத் தமிழ் மாநாட்டின்போது திறந்து வரலாறு படைத்ததே!)

அதுமட்டுமா?

ஆல்பர்ட் ஷைவட்சர் என்ற ஜெர்மானிய அறிஞர் திருக்குறளை மிகவும் பாராட்டி உலகப் புகழ் அடையச் செய்தாரே!

கில்பர்ட் சிலேட்டர் என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக வந்து, பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுக்கும் அதிகாரியாகவும் பணிபுரிந்தவர்.

அவரது இந்தியப் பண்பாட்டில் உள்ள திராவிட கருத்தியல்கள் (‘‘Dravidian Elements in Indian Culture’’) என்று எழுதிய நூல் ஓர் அரிய நூல்.

இந்த 20ஆம் நூற்றாண்டு, 21ஆம் நூற்றாண்டிலும், ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா (ஜார்ஜ் ஹார்ட்), கபிலசுவல் (செக்கோசுலோவேகியா) போன்ற பல பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் பணி (இன்னும் எவ்வளவு பேர்கள் உள்ளனர்) செயற்கரிய வரலாற்றுப் பணி, மிகவும் பாராட்டத்தக்கது.

அவர்களை இங்கே சிலர் மதக் கண்ணோட்டத்தோடுதான் பார்க்கும் குள்ள மனப்பான்மையைவிட்டு, பரந்த விரிந்த உள்ளத்தோடு அவர்களது பாராட்டு விழாவை நன்றித் திருவிழாவாக (Thanks Giving Festivalநடத்துவோம், வாரீர்! வாரீர்!!

– கி.வீரமணி,    ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *