ஆசிரியர் பதில்கள்

மே 01-15

கேள்வி : உலகில் எவ்வளவோ பிரச்சினைகளை அமர்ந்து பேச நேரமில்லாத போது கிரிக்கெட்டைப் பார்க்க மூன்று நாட்டுப் பிரதமர், அதிபர், குடியரசுத் தலைவர்கள் அமர்ந்து பார்ப்பது சரியா?  இவ்விளையாட்டிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

-சி. இரமேசு, பெரியக்கோட்டை

பதில் : சிக்கலான மில்லியன் டாலர் கேள்வி இது!  உயர்மட்ட – உயர் ஜாதியினர் விளையாட்டு. எனவே, இதற்குத் தனி மவுசு போலும்!  இதே ஆர்வம் மற்ற விளையாட்டுகளுக்கும் தரவேண்டாமா?

கேள்வி :: நாட்டின் முதுகெலும்பும், உண்மையான பொருளாதாரமுமான விவசாயம் நலிவதும், விவசாயம் சாராத பூமிக்குக் கேடு விளைவிக்கும் மாற்றுத் துறைகளின் வளர்ச்சி அதிகரிப்பதும், எதிர்காலத்தில் பூமியில் உயிர் வாழும் உயிரினங்களுக்கும், பொருளாதாரத் திலும் எந்த மாதிரியான குழப்பங்கள் ஏற்படுத்தக்கூடும்? பொருளாதாரத்திலும் புலமை பெற்ற தங்களின் கருத்து என்ன?

த. சுரேஷ், நாகர்கோவில்

பதில் : 1929 இல் அமெரிக்காவில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதாரப் பின்னடைவு. The Great Depression  போன்று வறுமை , வேலையில்லாத் திண்டாட்டம் – வீழ்ச்சி ஏற்படக்கூடும்.  அது சரி, பொருளாதாரத்தில் புலமை பெற்றவன் நான் என்று உங்களுக்கு யார் சொன்னது?  நான் பொருளாதார மாணவன்தான்!

கேள்வி : கேரளத்திலோ… வங்காளத்திலோ இல்லாத தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி, தமிழ்நாட்டிலே மட்டும் ஏன்? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : தமிழ்நாட்டில்தானே தி.மு.க. போட்டியிடுகிறது!  அரசியல் ரீதியாக தி.மு.க.வை அழிக்க ஒரு மறைமுக முயற்சியாகும்!

கேள்வி : அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம், லோக்பால் மசோதா அறிவிப்புகள் எதனைக் காட்டுகின்றன?  – பூ. சுப்பிரமணியம், திருவிடைமருதூர்

பதில் : விளம்பர வியாதி ஒரு தொத்து வியாதி. அது விரைந்து பரவும் என்று காட்டுகிறது!

கேள்வி : எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாமல் 49(ஓ) உபயோகித்தவர்கள் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதே…

– ஆ. மதியழகன், உத்திரகோசமங்கை

பதில் : நமது ஜனநாயக நாட்டில் 7.22 கோடி மக்களில் 24 ஆயிரம் ஒழுக்கசீலர்கள், யோக்கிய சிகாமணிகள் மட்டுமே உள்ளார்கள் என்று தெரிகிறது.

கேள்வி : அய்.பி.எல் கிரிக்கெட் நடைபெற்றபோது சாலைகள் வெறிச்சோடிக் கிடந்ததாக ஏடுகளில் செய்தி வந்துள்ளதே.  இது ஆரோக்கியமான செய்தியா?

 

-க. மங்கையர்க்கரசி, ஏரியூர்

பதில் : சூதாட்டத்திற்கு உள்ள போதையின் வெளிப்பாடு – வெட்கக்கேடான செய்தி இது!

கேள்வி : தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடந்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.  பத்திரிகையாளர் என்ற முறையில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?   – கே. ராமசாமி, சங்ககிரி

பதில் : வாக்காளர்களுக்குப் பணம் எதிர்க்கட்சிகள் கொடுக்கவில்லையா என்ற கேள்விக்கு ஆம் என்பதே மனச்சாட்சிப்படி உள்ள நிலை! இருந்தும் அவர்கள் ஆளுங்கட்சியையே அதிகமாகக் குறி வைத்தார்கள். மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் இந்தக் கெடுபிடி இல்லாதது என்கிற போது இது திட்டமிட்ட செயல், ஒரு சார்பு நிலை?  என்பது போகப் போகப் புரியும்.

கேள்வி : புட்டபர்த்தி சாய்பாபாவின் உடல்நிலையை அறிந்து கொள்ள நீதிமன்றம் சென்றிருக்கும் பக்தர்களைப் பற்றிய தங்கள் கருத்து?

– சோ. எழிலரசன், கவுண்டம்பாளையம்

பதில் : பகவான் உடல்நிலையை அறிய கோர்ட்டா?  அடபகவனே!  அவரது சர்வசக்தி என்னாச்சுது?

கேள்வி : கலைஞரின் பொன்னர் சங்கர் பற்றிச் சொல்லுங்களேன்…

-அ. இளங்கோ, கோவில்பட்டி

பதில் : அருமையான காவியம் – ஆங்கிலப் படங்களைத் தோற்கடிக்கும் பண்பாட்டு ஓவியம் – கலைஞரின் இந்தக் காவியத்தை உயிரோவியமாக்கி உள்ள இயக்குநர் தியாகராஜன், அவர் மகன் பிரசாந்த், நடிகர்கள் எல்லோரும் பொறுப்பாய் நடித்திருக்கிறார்கள்.  குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழலாம்.

கேள்வி : மேற்கு வங்கம், கேரளத் தேர்தல்களில் இடதுசாரிகளுக்கு மீண்டும் ஆளும் வாய்ப்புக் கிடைக்குமா? –  தா. தேன்மொழி, காரைக்கால்

பதில் : வாய்ப்புகள் 50; 50 தான். மண்டியிட்டு பழையவர்களுக்கு மன்னிப்புக் கேட்கும் பாணி பிரச்சாரம் இடதுசாரிகளால் நடத்தப்படுவது அவாளுக்கே அச்சம் வலுக்கிறது என்றே தெரிகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *