தற்போது மகாத்மா காந்தி இருந்தாலும்கூட அவரால் ஊழல் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. அப்படிச் செய்யாவிட்டால் அரசியலிலிருந்து அவர் விலக வேண்டியது இருக்கும். கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் பணிகளுக்கு ஊழல் இன்றி ஒன்றும் செய்ய முடியாது.
குமாரசாமி, மேனாள் முதல் அமைச்சர், கருநாடகா
நாட்டின் வளர்ச்சிக்கும் அறிவியல் துறைகளில் படிக்கும் மாணவர்களை ஆராய்ச்சிகளில் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் இந்தியக் குடிமைப் பணிகளைப் போல இந்திய அறிவியல் பணிகள் என்ற தனி பணிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளிலும் ஆண்களுக்குப் போட்டியாக பெண்களும் உருவெடுப்பார்கள்.
அப்துல்கலாம், மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
லோக்பால், லோக் அயுக்தா ஆகிய அமைப்புகளால் ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலை ஒழிக்க இவை உதவாது. தேர்தல் சீர்திருத்தம்தான் இப்போது நாட்டுக்கு அவசியமான தேவையாகும். தேர்தல் பிரச்சாரச் செலவுகளை அரசே ஏற்பது, கட்சிகளுக்கான நன்கொடைகளை வெளிப்படையாக அறிவிப்பது ஆகியவற்றின் மூலம் கறுப்புப் பணம் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.
அசோக் கெலாட், முதல்வர், ராஜஸ்தான்
தனது போராட்டத்தின் மூலம் எதைச் சாதிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரி நினைக்கிறாரோ, அதற்கு மாறாக எதிர்காலத்தில் இந்தியாவுக்குப் பெரும் தீங்கையே அது விளைவிக்கும். லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடுவது என்பது தவறானதல்ல என்பதுடன் அதற்கு ஊக்கமும் அளிக்கப்படவேண்டும். ஆனால், ஹசாரி என்ன செய்ய முயற்சிக்கிறார் என்றால், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டில் குறுக்கிட்டு, சட்டம் இயற்றும் நடைமுறையைக் கட்டாயப்படுத்தி மேற்கொள்ள பிளாக்மெயில் செய்கிறார்.
கிரண்பேடி, மேனாள் காவல்துறை உயரதிகாரி
அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொள்வதிலேயே கவனமாக இருக்கும். இந்த நாடுகள் யாருக்கும் வணக்கம்கூட சொல்லமாட்டாது. உங்களைப் பார்த்து ஹலோ என்று சொன்னால் அதற்கான வட்டியை 100 மடங்கு வசூலித்துவிடுவார்கள். உங்கள் பாக்கெட் காலியானால்தான் விடுவார்கள். எங்கேயாவது புரட்சி நடந்தால், எங்கேயாவது கொடுங்கோல் சர்வாதிகாரி ஆட்சி நடத்தினால் அந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் ஆதரவு நாடுகளாகத்தான் இருக்கும். அகமதினிஜாத், குடியரசுத் தலைவர், ஈரான்