Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

கமலைப் பிறாண்டும் பூணூல்கள்

கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட வருமான வரி செலுத்துங்கள் நாட்டிற்காவது நன்மை உண்டாகும் என்று கலைஞானி கமல்ஹாசன் பொறுப்புணர்ச்சியோடு கூறியுள்ளார். அவ்வளவுதான் கல்கி, தினமலர் உள்ளிட்ட பார்ப்பன வகையறாக்கள் கமல் மீது விழுந்து பிறாண்டுகின்றன.

நாட்டில் நிதிச் சிக்கல் ஏன் ஏற்படுகிறது? அயல்நாடுகளிலும், உலக வங்கியிடமும் ஏன் கடன் வாங்க வேண்டியுள்ளது? எல்லாம் ஒழுங்காக வருமான வரி கட்டததால்தானே! மறுக்க முடியுமா?

கமல்ஹாசன் ஒழுங்காக நாட்டை ஏமாற்றாமல் வருமான வரி கட்டுபவர்.அதனால் வரி செலுத்தும் விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்ட அவரை அழைத்துப் பேசவைத்தது வருமான வரித்துறை. அந்த நிகழ்ச்சியில்தான் பேசினார். இதில் இந்தப் பூணூல்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும். நம் முன் கண் முன்னேயே பார்த்தோமே. சிதம்பரம் கோவில் கடந்த முறை இருந்த கலைஞர் ஆட்சியில் அரசுடமை ஆக்கப்பட்டது. அப்போது இலட்சக்கணக்கில் உண்டியல் வசூல் அரசு கஜானாவுக்குக் கிடைத்தது. ஆனால் அதே கோவில் தீட்சிதர்களின் பிடியில் இருந்தபோது வெறும் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே கணக்குக் காட்டப்பட்டதே, பேனா பிடிக்கும் கல்கி-தினமலர் பூணூல்களுக்குத் தெரியாதா?

நீதிக்கட்சி ஆட்சி, கோவில்களின் வருமானத்தை நிருவகிக்க இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றி, அரசுத்துறையை உருவாக்காமல் போயிருந்தால் மக்கள் பணம் அனைத்தும் அக்ரஹாரங்களின் தொப்பைகளுக்கே போயிருக்குமே!

இப்போதும் பெரும் பணக்காரர்கள் தமது கணக்கில் வராத கறுப்புப் பணங்களை கோவில் உண்டியல்களில் கொட்டுகிறார்களே.அதற்குப் பதில் அரசுக்கே வரியாகச் செலுத்தினால் மக்களுக்குத் திட்டங்களாகத் திரும்பி வருமே.அதைத்தானே கமல்ஹாசன் சொன்னார்.இதிலென்ன தவறு?

– பெரியாரிடி