கேள்வி : மாநில அரசுகள் விளம்பரம் செய்ய எந்த உச்சவரம்பும் இல்லையா?
– சா. கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : மாநில அரசுகளின் விளம்பரங்கள் ஒவ்வொரு (ஆதரிக்கின்ற) ஜால்ரா ஏடுகளுக்கும் 5 அல்லது 6 முழுப்பக்க விளம்பரம் தமிழக அரசில் வந்ததை வைத்துக் கேட்கிறீர்கள் போலும்!
மக்கள் வரிப்பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்பது, விழிப்புற்ற ஜனநாயகத்தில் நடக்காது. அதுதான் உச்சவரம்பு!
கேள்வி : தமிழக முதல்வர் விளம்பரத்தின் மூலமாக தனது புகழை நிலைநிறுத்திக் கொள்ள வரைமுறை இன்றி செலவு செய்வது அதிகார அத்துமீறல் இல்லையா? – கோ.நளினி, பெரியார் நகர்
பதில் : முதல் கேள்விக்கான பதிலில் இதற்கு விடையளிக்கப்பட்டுள்ளது!
கேள்வி : தாங்கள் சிறு பத்திரிகைகளைப் படிப்பதுண்டா? தங்களுக்குப் பிடித்த சிறு பத்திரிகையைப் பற்றிக் கூறுங்களேன்? – திலகர் தமிழன் (மின்னஞ்சல் கேள்வி)
பதில் : முகம் மாமணி அவர்கள் நடத்துவதைத் தவறாமல் படிக்கிறேன்; சிறிய பத்திரிகை _ பெரிய சாதனை _ அரிய கருத்துகள்!
கேள்வி : இந்து மதத்திற்கும் சீக்கிய மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? சீக்கிய மதத்தில் குறிப்பிட்டுக் கூறும்படி ஏதேனும் நன்மைகள் உள்ளனவா? கடவுள், மத மறுப்பு நூல்கள் சிலவற்றைக் கூறுங்களேன்?
– கோ.சந்திரன், (மின்னஞ்சல் கேள்வி)
பதில் : ஹிந்துமதத்தை எதிர்த்து ஜாதி, வர்ணதர்மம், உருவவழிபாடு இவைகளை எதிர்த்துத்தான் தொடங்கப்பெற்றது. குருநானக் _ கிரந்த சாகேப் நூல் விளக்க நூல். அம்மதத்தில் ஜாதி அப்படியே நுழைந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
கேள்வி : உலகளவில் மரண தண்டனையை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் தனி மனித மனநிலைகளில் உள்ள எண்ணங்களின் வேறுபாடுகள்தான் அடிப்படைக் காரணமா? – த. சுரேஷ், நாகர்கோவில்
பதில் : மனிதநேய அடிப்படையிலும், குற்றம் செய்தவர்களைத் திருத்துவதே சரியான தண்டனையின் தத்துவம் என்ற அடிப்படையில் மரண தண்டனை உலகம் முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை. தனிநபர்களை எண்ணிக் கோருவது வெறும் ஆசாபாசத்தின் வெளிப்பாடு!
கேள்வி : நேரு தம்மை ஒரு அக்னாஸ்டிக் என்று கூறிக் கொண்டார். அக்னாஸ்டிசம் என்பதன் விளக்கம் என்ன? – ரெ.மகாலிங்கம், கூடுவாஞ்சேரி
பதில் : ‘Agnosticism’ என்றால் கடவுளைப்பற்றிக் கவலைப்படாதவர். அவர்கள் உண்டு, இல்லை சர்ச்சைகளில் ஈடுபடாத கடவுள் மறுப்பாளர்கள்தான்!
கேள்வி : தோழர் ஜெயகாந்தன் அவர்கள் சபை நடுவே என்ற புத்தகத்தில் ஆத்திகமான காட்டுமிராண்டித்தனங்களும் நாத்திகமான காட்டுமிராண்டித்தனங்களும் வளர்ந்து கொண்டு இருக்கின்றன என எழுதியுள்ளாரே, இதைப்பற்றி தாங்கள் கூறுவது என்ன?
– க. திராவிட முரசு, காஞ்சி
பதில் : தோழர் ஜெயகாந்தன் எனது இனிய நண்பர்; அவர் கருத்தையெல்லாம் அதற்காக நான் ஏற்க முடியுமா? நட்பு வேறு; கொள்கை வேறு.
கேள்வி : பா.ஜ.க. கூட்டணிக்கு ராம்விலாஸ் பஸ்வான் சென்றுள்ளார். வடநாட்டில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறி விட்டதா? – அ. தேன்மொழி, திருச்சி
பதில் : காங்கிரஸ் செய்கின்ற பல தவறுகளில் இதுவும் ஒன்று; அவரை அங்கே செல்ல விட்டிருக்கக் கூடாது! என்றாலும் அவரது நிலைப்பாடு நமக்கு ஏற்கத்தக்கதல்ல.
கேள்வி : அய்.நா.வில் அமெரிக்காவின் இன்னொரு தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு விடியலைப் பெற்றுத் தருமா? – வீ. நெடுஞ்செழியன், மதுரை
பதில் : தலையங்கத்தில் உங்கள் கேள்விக்கான பதில் இருக்கிறது.
கேள்வி : மகளிர் தினம் கொண்டாடுவதால் மகளிர் விடுதலைக்கு ஏதேனும் பயன் உண்டா? பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லையே?
– தி. கண்மணி, வியாசர்பாடி
பதில் : பெரும்பாலான இடங்களில் நல்ல பேச்சுக் கச்சேரி நடைபெறுகிறது. மற்றபடி உரிமைக்கான போராட்ட உணர்வை அது தூண்டுவதாக இதுவரை அமையவில்லை.