அய்யாவின் அடிச்சுவட்டில்… 114 – கி.வீரமணி

மார்ச் 16-31

அம்மாவின் இறுதி ஆசை   – சென்னைக் கடற்கரை படைத்த சரித்திரம்

கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களின் மாபெரும் இரங்கற் கூட்டத்தில் முஸ்லீம் லீக் உறுப்பினர் ஜனாப் அப்துல் லத்தீப் எம்.எல்.ஏ. அவர்கள் ஆற்றிய இரங்கலுரையின் தொடர்ச்சி…

அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தாலும் தந்தை பெரியார் அவர்கள் எதற்காக வாழ்ந்தார்களோ, எந்த லட்சியத்தை நாட்டில் பரப்புவதற்காக வாழ்ந்தார்களோ

எந்தத் தன்மானத்தை உணர்த்துவதற்காக வாழ்ந்தார்களோ அந்தத் தன்மான உணர்வு இன்றைக்கு நாடு முழுவதும் பரவி இருக்கின்றது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. பெரியார் அவர்களுடைய உடல் மறைந்தாலும், அன்னை மணியம்மையார் அவர்களுடைய உடல் மறைந்தாலும் அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற உணர்வுகள் என்றும் நிலைத்து இருக்கும் என்பதை எல்லோரும் இன்றைக்குப் புரிந்து வைத்து இருக்கின்றார்கள்.

தமிழனுடைய எண்ணத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். தமிழனுடைய தன்மானத்திலே அவர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். நம்முடைய சிந்தனையிலே அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். தமிழனுடைய இதயத்திலே, இதயத் துடிப்பிலே, அவனுடைய ரத்தத்திலே, ரத்த ஓட்டத்திலே, அவனுடைய அங்க அசைவுகளிலே, பேச்சு மூச்சுக்களிலே இன்றைக்குப் பெரியாருடைய பாங்கும், பெரியாருடைய சிந்தனைகளும், பெரியாருடைய தன்மான உணர்வுகளும் தேங்கி அசைக்க முடியாத நிலையைப் பெற்று இருக்கின்றது என்பதை இந்த நாடு நன்றாக உணர்ந்து இருக்கின்றது. அவர்கள் அன்று ஆற்றிய சேவை இந்தக் காலத்தில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். ஆனால், ஒரு காலம் வரும்.

சம உரிமை

இந்தத் தமிழ்ச் சமுதாயத்திலே, நாம் ஆண்டாண்டுக் காலமாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்காலமாக கண்மூடித்தனமான எண்ணங்கள், மனிதனுடைய பிறப்பிலேயே கற்பிக்கப்பட்ட உயர்வு தாழ்வு எண்ணங்கள், ஒருவன் பிறப்பிலேயே உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற கண்மூடித்தனமான எண்ணங்கள், இவைகளை எல்லாம் வேரோடும் வேரடி மண்ணோடும் தகர்த்து எறிந்து _ மனிதன் எல்லாம் சமஉரிமை படைத்தவன்; சம அந்தஸ்து படைத்தவன்; அவன் கருப்பனாக இருந்தாலும் அல்லது வெள்ளையனாக இருந்தாலும் எந்த இனத்தை எந்த இடத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், எந்தக் கோலத்தை உடையவனாக இருந்தாலும், எந்தக் காலத்துக்குச் சொந்தக்காரனாக இருந்தாலும் மனிதனாகப் பிறந்தவன் எல்லாம் சம உரிமை படைத்தவன்தான், சம உரிமை பெறுவதற்கு உரிமை படைத்தவன்; யார் இந்த சம உரிமையினைக் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களைத் தகர்த்து எறிவதுதான் _ அந்த மாபெரும் மேதை _ தமிழ்ச் சமுதாயத்தால் தந்தை என்று அழைக்கப்படுகின்ற அந்தப் பெரியவர் தந்தை பெரியார் அவர்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட அவரது துணைவியார் அன்னை மணியம்மையார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் போற்றிப் பரப்பி வந்த கொள்கைகளும், அவர்களது நீண்ட வரலாறுகளும், கொள்கைகளும் அவை மறக்கப்பட்டு விடும் மறைக்கப்பட்டு விடும் என யாரும் கருதுவார்களேயானால் அவர்களைப் போல பைத்தியக்காரர்கள் நாட்டில் யாரும் இருக்க முடியாது.

அவர்கள் தொடங்கிய பிரயாணம் நீண்ட பிரயாணம்; அதைச் செம்மையாக நாம் நடத்தி இருக்கின்றோம். ஆனால் வருங்காலத்திலும் அந்தப் பிரயாணத்தைத் தொடர வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

என்றைக்கும் இந்தி ஆதிக்கம் நாட்டில் தலை தூக்குமா என்ற எண்ணம் மக்கள் மனதில் மட்டும் அல்லாமல், சட்ட மன்றங்களிலும்கூட எதிரொலித்துக்கொண்டு இருக்கின்ற நிலைமையினைப் பார்க்கின்றோம் எங்கே தமிழ் மொழியும் தமிழ்நாடும் நசுக்கப்பட்டு விடுமோ, உதாசீனப்படுத்தப் பட்டுவிடுமோ என்று எண்ணும் வகையில் காரியங்கள் நடைபெற்று வருவதை எல்லாம் பார்க்கின்றோம்.

இந்தச் சூழ்நிலையில்தான் தந்தை பெரியார் அவர்கள் மறையவில்லை. பெரியார் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அன்னை மணியம்மையாரோ, அறிஞர் அண்ணா அவர்களோ மறையவில்லை. அவர்களுடைய லட்சியங்களை எல்லாம் நிறைவேற்றக் கூடியவர்களாக  நாம் இருக்கின்றோம். அவர்கள் எதற்காக வாழ்ந்தார்களோ, அந்த வாழ்க்கைக்கு நாம் மதிப்பளிக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம். அந்த வாழ்க்கையை நாம் மதிக்கின்றோம்.

தந்தை பெரியார் அவர்களுக்கும் அன்னை மணியம்மையார் அவர்களுக்கும் நாம் மதிப்பளிக்கின்றோம் என்றால் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த அந்த வாழ்க்கையினை நாம் பாடமாகக் கொள்ளுகிறோம். பெரியார் அவர்களும், மணியம்மையார் அவர்களும் பெற்றிருந்த வீரங்களை பாடங்களாக நாமும் பெறுபவர்களாக ஆவோம்.

தந்தை பெரியார் அவர்களுடைய தெளிந்த சிந்தனைகளை தமிழ்ச் சமுதாயம் முழுமையாகப் பெறக்கூடிய சமுதாயமாக இன்றைக்கு இருக்கட்டும். பெரியார் அவர்கள் மக்களுக்கு எந்த உணர்வுகளை அளித்தார்களோ அந்த உணர்வுகளை மக்களுக்கு நாமும் பரப்பக் கூடியவர்களாக இருப்போம்.

அப்படி நாம் அளிப்போமேயானால் அதுவே மறைந்த மாமேதைகளுக்கு நாம் செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலியாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் சார்பாக, இஸ்லாமிய சமுதாயத்தினரோடு மிக நெருக்கமாகத் தொடர்புகளை வைத்து இருந்த இஸ்லாமிய சமுதாயத்தினுடைய மிகப் பெரிய நண்பராக, ஆசானாக விளங்கிய நம்முடைய பெரியார் அவர்களுக்கும் அவரது துணைவியார் மணியம்மையார் அவர்களுக்கும், நான் என்னுடைய சார்பாகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாகவும், குறிப்பாக முஸ்லீம் லீக்கின் பெருந் தலைவர்களில் ஒருவராக விளங்கும் திருப்பூர் முகைதீன் சாயபு சார்பாகவும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறி உரையினை முடித்தார் ஜனாப் அப்துல் லத்தீப் அவர்கள். எந்த இடர் வந்தாலும்…

நிறைவாக, உணர்வுமயமான அந்தச் சூழலில், கழகப் பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் உரையாற்றியபோது,

நான் இங்கே உரையாற்றவில்லை. தலைவர்கள் கட்சி வேறுபாடு இல்லாமல், கருத்து மாறுபாடு அல்லாமல், பெற்ற மிகப்பெரிய சோகத்தினை நீங்களும் பெற்றதாக உணர்ந்து, எங்களுக்குத் தக்கதோர் ஆறுதலைச் சொல்வதற்காக தங்களுடைய அரசியல் கோலங்களை எல்லாம் மறந்து காலத்தைத் தாண்டிய தந்தை பெரியார் அவர்களின் கொள்கையினை தன்னுடைய காலம் முடிவடைகின்ற வரையிலே _ கடைசி மூச்சு இருக்கிற வரை எங்களுக்குத் தாயாக இருந்து வழிகாட்டிய அன்னையாருக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட்டப்பட்டிருக்கிற கூட்டம்.

இங்கே ஒரு நிகழ்ச்சி எனக்கு உள்ளம் நெக்குருகச் செய்கிறது. பொதுவாக நம்முடைய நாட்டிலே ஒரு மரபு உண்டு. தாய், தந்தை, குடும்பம் என்று வருகிற நேரத்திலே பல்வேறு காரணங்களால் நம்முடைய அண்ணன் -_ தம்பிகளிடையே, சகோதர_ சகோதரிகளிடையே பல்வேறு வேறுபாடுகள் வந்தாலும்கூட ஒரு பெரிய துக்கம் நிகழுமேயானால் நாம் அதையெல்லாம் மறந்து அந்த வீட்டிலே ஒன்றுபடுவது _ அதன் மூலம் ஒரு புதிய அய்க்கிய உணர்வினை ஏற்படுத்துவதென்பது நீண்ட நெடுங்காலத்து மரபாகும். அந்த வகையிலே இந்த மேடையிலே ஒன்றினை நினைத்து நினைத்து நான் உணர்ச்சிவயப்பட்டு நிற்கிறேன். தந்தையின் மறைவு நேரத்திலேகூட கொஞ்சம் தள்ளி நின்ற புதல்வர்கள்கூட அன்னையின் மறைவின்போது தங்களை அறியாமல் இங்கே வந்திருக்கிறார்கள்; வந்து இங்கே சேர்ந்திருக்கிறார்கள்.

சேர்ந்தவர்கள் நீண்ட நேரம் சேர்ந்திருந்தார்களா என்பது பிரச்சினையல்ல, வாழ்நாளிலே தாய் விரும்பியதை _ அவர்கள் வாழ்நாளிலே தாய் பார்க்க முடியாவிட்டாலும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிற இந்த நேரத்திலே பார்க்கிறோம். அந்த வகையிலே அவர்கள் மிகப் பெரிய வெற்றியினை ஈட்டிச் சென்றிருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் தொண்டு செய்து பழுத்த பழம் என்று புரட்சிக்கவிஞரால் அழைக்கப்பட்டவர்கள் என்று சொன்னால் _ அந்தப் பழத்துக்கு வேலியாக நின்ற வேலி விழுந்ததே என்று நினைக்கிற வேதனை மட்டுமல்ல, அதற்குப் பிறகும் அந்தக் கொள்கைக்கு வேலியாக நின்று மிகப்பெரிய அளவிலே இருந்த எங்கள் தாய் இன்று எங்களோடு இல்லை. நாங்களெல்லாம் அநாதைகளாகி விட்டோமே என்ற உணர்வோடு உங்களைச் சந்திக்கிற நேரத்திலே, தமிழகத்திலே பல்வேறு அரசியல் இயக்கங்களிலே இருந்தாலும் நீங்கள் திராவிடர் கழகத்து நண்பர்கள், பகுத்தறிவுவாதிகள், அநாதைகளல்ல, இந்தக் கொள்கைகள் எல்லாம் எங்களுக்கு உடன்பாடு உண்டு, அந்த வகையிலே இந்தக் கொள்கைகளையெல்லாம் நாங்கள் தத்து எடுத்துக்கொள்கிறோம். தமிழ்நாட்டுக்கு மூச்சுக் காற்றுப் போன்றது தந்தை பெரியாருடைய கொள்கை. அந்த மூச்சுக் காற்றை விட்டுவிட்டு எவரும் வாழ முடியாது என்ற மாபெரும் உண்மையை இன்றைக்கு இங்கே கூடிய அத்துணை பேரும் எடுத்து வைத்திருக்கிறீர்கள். அன்னையார் அவர்களுக்கு தந்தை பெரியார் அவர்களைப் போற்றி, தந்தை பெரியார் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்து, மெழுகுவர்த்தியாக எரிந்து இன்றைக்கு ஒளிவிட்டுக்  கொண்டிருக்கின்ற அன்னையார் அவர்களைப்பற்றி அவர்களை _ ஒரு புறத் தாயாக _ புறநானூற்றுத் தாயாக _ வீரத்தாயாக _ போராட்டத் தாயாக _ கழகத் தலைமையுள்ள தலைமை தாங்கக்கூடிய தாயாக _ தந்தை பெரியார் அவர்களுக்குச் செவிலித் தாயாகத்தான் உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.

உங்களுக்குத் தெரியாத சில செய்திகளில் ஒன்றை மட்டும் _ உணர்ச்சிவயப்படுகிற காரணத்தால் ஒன்றைச் சொல்லி மாத்திரம் விடைபெறலாம் என்று விரும்புகிறேன். தந்தை பெரியார் அவர்கள் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கு கல்விக் கண்ணை அளித்ததைப் போலவே அநாதைகளாகக் கிடந்த அடக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மக்களுக்கெல்லாம் புதிய வாழ்வினைத் தந்த நிலைபோலவே, அவர்கள் ஒரு ஒரு காசாகப் பெற்றதை எல்லாம் _ அவர்கள் 101 காசாகப் பெற்றதை எல்லாம் _ அன்றைக்கு அவர்களிடம் கொடுத்ததை எல்லாம் _ கணக்குப் பார்த்து எண்ணி எண்ணி வைத்ததை எல்லாம் _ பெரியாரிடம் சொத்து இருக்கிறதே என்று நினைத்ததை எல்லாம், எப்படி அரசாங்கத்திடம் வரியாகக் கொடுத்தால் திரும்ப பாலமாக வரும், மருத்துவமனையாக வரும் என்பதைப் போல தந்தை பெரியார் அவர்கள் மிகப் பெரிய கல்வி நிறுவனங்களை எல்லாம் இந்த நாட்டிலே விட்டுச் சென்றார்கள். அந்தக் கல்வி நிறுவனங்களை எல்லாம் நடத்திக்கொண்டு தந்தை பெரியார் அவர்களையும் பாதுகாத்து வந்த பெருமை மறைந்த -_ மறைந்தும் மறையாமல் இருக்கின்ற அம்மா அவர்களுக்கு உண்டு.

நம்பிக்கை நட்சத்திரம்

அது மாத்திரமல்ல; தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுதும் தனக்காகத் தொண்டாற்றி, தனக்குப் பிறகு தன்னுடைய நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த அம்மா அவர்களுக்கு ஒருசில சொத்துக்களை வைத்து அவர்கள் வாழ்நாளுக்குப் பாதுகாப்பு _ குறைந்த அளவிலே பாதுகாப்பு _ வாழ்க்கைக்குத் தேவை என்பதற்காக அம்மா  அவர்களுக்கே தெரியாமல் சில ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

அய்யா இட்ட கட்டளை

அவரோடு நெருங்கி இருந்த எங்களுக்குத்தான் அது தெரியும். ஏனென்றால், அம்மா அவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; பிடிவாதமாக அதை மறுப்பார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் நினைத்த காரணத்தால்தான் அம்மா அவர்களுக்கேகூட இது தெரியக்கூடாது என்று எங்களுக்குக் கட்டளையிட்டு, நெருங்கியிருந்த நண்பர்களிடம் கூறி சில ஏற்பாடுகளைச் செய்து ஒருசில வருவாய்த்துறைகள் அம்மா அவர்களுக்கு இருக்க வேண்டும்; ஏனென்றால் என்னுடைய அத்தனை சொத்துக்களையும் இயக்கத்துக்கு என்று ஆக்கி வைத்துவிட்டேன் என்று அவர்கள் சொன்ன நேரத்திலே அம்மா அவர்களுக்கு அதை அவர்கள் செய்தார்கள். அது, அம்மா அவர்களுக்குப் பல ஆண்டுகள் கழித்துத்தான் தெரியும். அது தெரிய வந்ததும் அய்யா அவர்களுடன் சண்டையிட்டார்கள் அன்போடு.

பொதுச் சொத்தாக்கினார்கள்

அது எல்லாம் முடிந்த கதை என்று ஆகிவிட்டவுடனே, வேறு வழியில்லை என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை இருந்தது. ஆனால் உங்களுக்கு எல்லாம் ஒன்றைச் சொல்லுகிறோம் _ தந்தை பெரியார் அவர்கள் எப்படித் தனக்கு என்று ஒரு வாழ்க்கை இல்லாது பிறருடைய வாழ்க்கைக்காக _ திறந்த புத்தகமாக எப்படி வாழ்ந்தார்களோ அதுபோலவே அம்மா அவர்கள் _ அய்யா அவர்கள் தன் பெயரில் எழுதிய சொத்துக்களை எல்லாம் பெரியார் அவர்கள் மறைந்தவுடனே தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளாமல் பெரியார்_மணியம்மை கல்வி அறக்கட்டளை என்று ஆக்கி அதையும் பொதுச் சொத்தாக்கிவிட்டார்கள்.

தன்னுடைய சொந்தத்துக்காக எதையும்  வைத்துக் கொள்ளாமல் கல்வி அறக்கட்டளைக்காக எல்லாவற்றையும் அவர்கள் வைத்துவிட்டார்கள். சொந்தக்காரர்கள் என்பதற்காக எதனையும் அவர்கள் செய்துவிடவில்லை. அவர்கள் சொந்தமெல்லாம், யார் யார் தந்தை பெரியார் தொண்டர்களோ அவர்கள்தான். இந்த நாட்டிலே இப்படிப்பட்ட சரித்திரங்கள் இருக்கின்ற தலைவர்கள் வெகு வெகு குறைவு. தந்தை பெரியார் அவர்கள் அந்தப் பாரம்பரியத்தை உருவாக்கினார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை அம்மா அவர்கள் எப்படிக் கட்டிக் காத்தார்களோ அதேபோல தன்னுடைய சொந்த பந்தங்கள், ஆசாபாசங்களுக்குக் கொஞ்சம்கூட இடம் தராமல் சொந்தக்காரர்கள் என்பதற்காக எதையும் செய்துவிடவில்லை, எதையும் வைத்துச் செல்லவில்லை; அய்யா விட்டுச்சென்ற அந்தப் பாரம்பரியத்தையும் கட்டிக் காத்திருக்கிறார்கள். இப்படி இதன் மூலம் ஒரு சரித்திரத்தைப் படைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் இவை எல்லாம் வெளியாகும்.

தனி வாழ்க்கையும் பொது வாழ்க்கையும் ஒன்றே

ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், தனி வாழ்க்கை பொது வாழ்க்கை என்று எதையும் அவர்கள் பிரித்துக் கொண்டது கிடையாது. அவர்களுடைய வாழ்க்கை முழுதும் பொது வாழ்க்கை; அப்பட்டமான பொது வாழ்க்கை. அப்பழுக்கற்ற பொது வாழ்க்கை; தியாகத்தில் புடம் போட்ட பொது வாழ்க்கை; அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதன் மூலம் தமிழ்ச் சமுதாயத்திற்கு என்றென்றைக்கும் பாதுகாப்பாக மிகப் பெரிய பாதுகாப்பாக தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த பாதையில் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை ஆற்ற, தான் மட்டுமல்ல; இந்த இயக்கத்தையே வழிநடத்தி அழைத்துச் சென்றார்கள்!

தன் உடல் நிலையைப்பற்றி எல்லாம் கவலைப்படாது, எத்தனை முறை இருதய நோயால் அவர்கள் தாக்கப்பட்டாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் போராட்டமா, சிறைவாசமா, கொள்கைக்காகவா, அவைகளுக்காக எந்தத் தீயிலும் குதித்து புடம்போட்ட தங்கமாக _ அவர்கள் தயார் என்று காட்டினார்கள். அப்படிப்பட்ட அம்மா அவர்கள் இன்றைக்கு நம்மிடையே இல்லை.

அப்படிப்பட்ட நிலையிலே இந்தச் சமுதாயத்தைக் காப்பாற்றுகின்ற பொறுப்பு தமிழ்ச் சமுதாயத்திற்கு உண்டு என்பதைக் காட்டும் வகையிலேதான் முதலமைச்சர் இங்கே வந்தார்கள். கலைஞர் அவர்கள் இங்கே வந்தார்கள், செட்டி நாட்டரசர் அவர்கள் இருக்கிறார்கள்; பெருமதிப்பிற்குரிய ம.பொ.சி. அவர்கள் இருக்கிறார்கள், பக்தவத்சலனார் அவர்கள் வந்தார்கள், மூப்பனார் அவர்கள் வந்தார்கள், இப்படி எல்லாத் தலைவர்களும் வந்திருக்கிறார்கள். கருத்துகள் மாறுபட்டிருக்கும். இந்தக் குடும்பம் பேரியக்கக் குடும்பம். இந்தக் குடும்பத்தை ஒட்டி இருக்கின்ற அண்டை வீட்டுக்காரர்களும் சோகத்திலே பங்கு கொள்வதன் மூலமாக, இந்த ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற கொள்கை உறுதியோடு எங்களுக்கெல்லாம் இங்கே ஆறுதல் சொல்ல வந்திருக்கிறார்கள். இந்த இரங்கல் உரையை நாங்கள் ஏற்பதன் மூலமாக நன்றி என்ற சொல்லை நாங்கள் சொல்வது முறையாகாது; காரணம், அதை அவர்கள் கடமை என்று கருதி வந்திருக்கிறார்கள்.

அந்த இரங்கல் உரையை நாங்கள் ஏற்பதன் மூலமாக நாங்கள் கொள்கை வழி நடக்க கொஞ்சம்கூட சுயநல உணர்ச்சி இல்லாமல், அய்யா அவர்கள் எந்தக் கொள்கைச் சுடரை ஏற்றினார்களோ, அம்மா அவர்கள் அந்தச் சுடரை எப்படித் தூக்கிப் பிடித்தார்களோ, அது போலவேதான் இந்தக் கருஞ்சட்டைப் பட்டாளமும் அந்தக் கொள்கைச் சுடரை ஏந்திச் செல்லும். அந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கிற கருஞ்சட்டைப் பட்டாளம் தனது இறுதி மூச்சு அடங்குகின்ற வரை அந்தக் கொள்கைக்காகவே தன்னை அர்ப்பணித்துச் சாகும் என்ற உறுதிமொழியைத்தான் உங்களுடைய உரையிலிருந்து நாங்கள் தெளிவு பெறுகிறோம்.

அம்மா அவர்கள் இறுதியாக நினைத்தது ஒன்று. தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடக்க _ அதைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதைப் பார்ப்பதற்கு அம்மா அவர்கள் இல்லாவிட்டாலும் அந்தக் கொள்கையை அவர்கள் விரும்பியவாறு செய்து முடிக்கும் பொறுப்பு தமிழகத்திலே உள்ள அத்துணைக் கட்சிக்காரர்களுக்கும் உண்டு; அத்துணைத் தலைவர்களுக்கும் உண்டு. திராவிடர் பேரியக்கத்துக்கும் உண்டு; மற்ற அண்டை வீட்டுத் தலைவர்களுக்கும் உண்டு. காரணம், இந்த மூச்சுக் காற்றைத்தான் எல்லோரும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். இது ஈரோட்டு மூச்சுக்காற்று; அதைச் சுவாசிக்காமல் இருக்க முடியாது. இது சிலருக்குத் தெரியாது; எப்போது தெரியும் என்று சொன்னால், மூச்சுத்திணறல் ஏற்படும்போதுதான் தெரியும். மூச்சுத்திணறல் இல்லாது இயற்கையாக சுவாசித்துக் கொண்டிருக்கும்போது நமக்குப் புரியாது.

எனவே இங்கே வந்திருக்கின்ற முதல்வர் அவர்களை, எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்களை, மற்ற கட்சித் தலைவர்களை எல்லாம் நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறோம்:

தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டு விழா ஏதோ விழாக்கோலம் அல்ல; கொள்கைரீதியாக _ லட்சியரீதியாக நாங்கள் செய்யக்கூடிய பணிகளுக்கெல்லாம் நீங்கள் உறுதுணையாக இருங்கள். எங்களுக்கு லட்சியம் முக்கியமே தவிர வேறு எதுவுமே முக்கியம் அல்ல. எங்களுடைய நோக்கமெல்லாம் _ எங்களுடைய சூளுரை எல்லாம் இங்கே லட்சோப லட்சமாக கருஞ்சட்டைப் பட்டாளம் கூடியிருக்கிறதே அதனுடைய உறுதியெல்லாம் பெரியார் கொள்கையைக் காப்போம் பெரியார் கொள்கையைக் காப்போம் என்கின்ற உறுதியைத் தவிர வேறு எதுவுமே அல்ல.

எந்த இடர் வந்தாலும், எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், எத்துணை இடுக்கண் வந்தாலும், எங்களுடைய உயிரையே கொடுக்கக்கூடிய கட்டம் வந்தாலும், தூக்கு மேடையிலே தூக்குக் கயிற்றை நாங்கள் முத்தமிடக்கூடிய நிலை வந்தாலும்கூட பெரியார் கொள்கையைக் காப்போம், காப்போம். காப்பதிலே வெற்றி பெறாவிட்டால் அதற்காக மாய்வோம், மாய்வோம் என்பதுதான் அம்மா அவர்களின் வீர வணக்க நாளிலே நாங்கள் எடுத்துக் கொள்ளும் உறுதி, உங்கள் தேறுதல் மூலமாக நாங்கள் பெற வேண்டிய ஆறுதல் என்று கூறி விடைபெறுகிறேன் என்று நீண்டதோர் உரையை நான் ஆற்றினேன். இரங்கல் கூட்டத்திற்கு ஏராளமான கருஞ்சட்டைக் கழகக் குடும்பங்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு இருந்தனர். மேலும் பல்வேறு கட்சித் தொண்டர்களும், ஏராளமான பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இரங்கல் கூட்டமாக அன்று திகழ்ந்தது.

அய்யாவும் அம்மாவும் இல்லாத இந்த நிலையிலும் நாடு நம்மிடம் இருந்து எப்படி எதனை எதிர்பார்த்து ஊக்கப்படுத்துகிறது என்பதை உணர்ந்து ஒவ்வொரு தோழரும் ஒவ்வொரு இயக்கக் குடும்பமும் அவரவர் பணியைப் போட்டியிட்டு முந்த வேண்டிய அளவுக்குத் தீவிரமாய்ப் பாடுபட வேண்டும்.

நமது சூளுரை வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. உணர்ச்சிப் பிழம்பு, லட்சிய வெடிப்பு என்பதைப் பேச்சால் அல்ல, செயல் மூலம் நாடு கண்டறிய வேண்டும்.

கருஞ்சட்டை வீரர்கள் கடமை வீரர்கள் என்பதைக் கட்டுப்பாட்டுடன் காட்ட வேண்டிய அருமையான தருணம் இது!

எனவே, இப்போது வேண்டுவது பணி! பணி!! பணி!!!

சபலத்திற்கு இரையாகா லட்சிய வீரர்களுக்கு எக்கட்சியினரும் எஞ்ஞான்றும் தலைதாழ்த்துவர் என்ற பேருண்மையைக் கண்ட நாம், நமது பெரும் பயணத்தைத் தொடருவோம், தொடருவோம், எந்த இடர் வரினும் தொடருவோம்.

நம் கடன் பணி செய்து முடிப்பதே!.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *