*புதுமையான மணமக்கள்
திருமணம் அல்லது மகிழ்வான நிகழ்வு என்ற தகவலைச் சொல்வதற்கானதாக மட்டுமன்றி, தங்களின் பணக்காரத்தன்மையை, ஆடம்பரத்தை, படாடோபத்தைக் காட்டுவதற்காகவும் சர்வ சாதாரணமாக ஓர் அழைப்பிதழ் ரூ.50 முதல் 500, 1000 வரைக்கும் செலவு செய்கிறார்கள். சிலர் திறந்தால் பேசும் அழைப்பிதழ் தருகிறார்கள். அதன் மூலமே குரலால் அழைக்கிறார்கள். இன்னும் சிலர் சி.டி. தந்து பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், அழைப்பிதழ் வாங்கும்போதே எங்கு, என்று, யாருக்கு என்ற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அதைப் போட்டுப் பார்க்கப் போவதில்லை. (அவனவன் கல்யாண வீடியோவையே திரும்பப் பார்க்கிறதில்லை.)
அதையும் தாண்டி, யாரும் அந்த அழைப்பிதழை எடுத்து கண்ணாடிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாக்கப் போவதில்லை. திருமணம் முடிந்த பின்னோ, முடியும் முன்னோ குப்பைக் கூடைக்குப் போகப் போகிறது. ஆனாலும், அப்படிச் செலவு செய்வதற்கும் அழகுப்படுத்துவதற்கும் பின்னால், இதை யாராவது வைத்திருக்க மாட்டார்களா என்ற நப்பாசையும் சிலருக்கு இருக்கும். அப்படி ஏதாவது பயன்உள்ள அழைப்பிதழைத் தருவார்களா என்றால் அதுவும் இல்லை.
இந்த வரிசையிலிருந்து வேறுபட்டவர் புதுக்கோட்டை நண்பா அறக்கட்டளையின் பிரகாஷ் செல்வராசு. கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது தங்கை திருமணத்திற்கு ஓர் ஆண்டின் நாள்காட்டியை வடிவமைத்து அதையே அழைப்பிதழாக்கி பயன்படுத்த வைத்தார். இவ்வாண்டு நடைபெற்ற அவரது திருமணத்திற்கான அழைப்பிதழை, பயன் முடிந்ததும் தூக்கி மண்ணில் போடுங்கள் என்கிறார். அது உரமாவதற்கு அல்ல – விதையாவதற்கு! ஆம். அவர் தந்த அழைப்பிதழுக்குள்ளேயே விதைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவை விதைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட கைத் தயாரிப்புக் காகித அட்டைகள். நீங்கள் மண்ணில் தூக்கிவீசுவதோடு மட்டுமல்லாமல், அதை நீரூற்றி வளர்த்தால், அடுத்த தலைமுறைக்கு நம் பரிசாகவும் அல்லவா இருக்கும்! என்கிறார் பிரகாஷ்.
இத்தகைய பயனுடைய முயற்சிக்கு அவர் மட்டுமல்லாது, நண்பா அறக்கட்டளையில் அவருடன் இருக்கும் ராதாகிருஷ்ணன், சாரதா, கார்த்திகேயன் மற்றும் தோழர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
– ச.பிரின்சு