அண்மைக் காலமாக நரேந்திர மோடி பேசும் பொதுக் கூட்டங்களில் எல்லாம் தான் டீ விற்று வந்தவன் என்பதை அடிக்கடி சொல்லி, அவ்வாறு சொல்வதன் மூலம், சாமான்ய மக்களின் பிரதிநிதி போல காட்டிக் கொள்ள முயல்கிறார்.
ஆனால் நடைமுறையில், குஜராத்தின் முதல்வராக மோடியின் செயல்பாடுகள், சாமான்ய மக்களின் வளர்ச்சிக்காக இல்லை; மாறாக, இந்த நாட்டின் பெரு முதலாளிகள், பெரும் கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள்தான் மோடி தலைமையிலான குஜராத்தில் முன்னுரிமை பெறுகின்றன.
இந்த பெரும் தொழில் நிறுவனங்களால், பெரிய அளவில் வேலைவாய்ப்பு நடைபெறவில்லை. வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக்கும் சிறு, குறு தொழில் செய்யும் தொழில் துறையினருக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை.
குஜராத்தின் வரவு செலவுக் கணக்கில் 40 விழுக்காடு, பெரு முதலாளிகளுக்கான மானிய நிதியாகவும், சிறுதொழில் செய்வோருக்கு 2.3 விழுக்காடு மானிய நிதியாகவும்தான் அளிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், அதானி குழுமத்திற்கும்தான் குஜராத்தில் அதிக அளவில் சலுகைகள் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை.
மோடியைப் பிரதமராக்கிடுவதில் பெரு முதலாளிகள்தான் அதிக அளவில் பணம் செலவழித்து வருகிறார்கள். ஆனால், அதனை மறைப்பதற்கு, தன்னுடைய தொடக்க கால நிலையைக் கூறி, மக்களிடம் அனுதாபம் பெற முயலுகிறார் மோடி. குஜராத்தில் 2003 முதல் 2011 வரை சுமார் 673 பில்லியன் டாலர்கள் அன்னிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும், அதில் 84 விழுக்காடு அளவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் மோடியின் அரசு செய்தி வெளியிட்டது. இது உண்மையாக இருந்திருக்குமானால், குஜராத், சீனாவின் அன்னிய முதலீட்டு அளவைவிட கூடுதல் நிதியைப் பெற்றுள்ளதாக அர்த்தம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை; மாறாக 2012-13க்கான அன்னிய நேரடி முதலீடு, குஜராத்திற்கு ரூ.2,473 கோடிதான். அதாவது, நாட்டின் மொத்த அன்னிய முதலீட்டில் 2.38 விழுக்காடு பெற்று, ஆறாவது இடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலம் 40 விழுக்காடு. அதாவது, ரூ.49,000 கோடி நேரடி அன்னிய முதலீட்டைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில், தில்லி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, அன்னிய நேரடி முதலீடு, மராட்டிய மாநிலத்திற்கு 45.8 பில்லியன் டாலர்கள்.
தில்லிக்கு 26 பில்லியன் டாலர்கள். கர்நாடகா 8.3 பில்லியன் டாலர்கள், தமிழ்நாடு 7.3 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் கிடைத்தது. மோடியின் குஜராத் அரசுக்கு 7.2 பில்லியன் டாலர்கள்தான் கிடைத்தது. (தி ஹிந்து 13.4.2013) ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்த தகவலின்படி, குறைந்த அளவு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக குஜராத்தை அறிவித்துள்ளது. கல்வி, வீட்டு வசதி, வறுமைக் கோட்டின் அளவு, மருத்துவம், கல்லாதவர் விகிதம் ஆகிய காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் மனித வளக் குறியீட்டில், 12ஆவது இடத்தைத்தான் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. கேரளா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. (டெலிகிராப் செப். 27, 2013). கார்ப்பரேட் முதலாளிகளின் காவலனாக இருக்கும் மோடி, இந்த உண்மை நிலையை மறைத்து, தான் ஏதோ சாமான்ய மக்களுக்குக் காவலன் போலவும், குஜராத் மாநிலம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிவிட்டதைப் போலவும், தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். முன்னேற்றம், முன்னேற்றம் என்றுதான் மோடி சொல்கிறாரே தவிர, ஒரு இடத்தில் கூட, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முன்னேற்றம் என்பதை மறந்தும் சொல்லவில்லை; அவரது பேச்சிலும், செயலிலும் சமூக நீதியைப் பற்றிய எந்தக் கருத்தும் இல்லை. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, கோயபல்ஸ் புளுகு என்பதையெல்லாம் மிஞ்சி, இனி மோடி புளுகு என்று வரலாற்றில் பதிவு செய்யும் அளவுக்கு, திரும்பத் திரும்ப பொய்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார். தமிழக மக்கள் மோடி புளுகை நம்பும் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் தேர்தல் மூலம், மோடிக்கும், அவருக்குக் கைலாகு கொடுக்கும் கூட்டத்திற்கும் உணர்த்த வேண்டும்.
– முகநூலில் கோ.கருணாநிதி