– சு.அறிவுக்கரசு
ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆண்ட மன்னர்களின் வாரிசு எனப்படும் கரண்சிங் என்பவர் அண்மையில் பேட்டி ஒன்றில் மதச்சார்பின்மை என்னும் செயல் பற்றிச் சில கருத்துகளைக் கூறியுள்ளார். SECULAR எனும் இங்கிலீஷ் சொல், இங்கிலாந்து நாட்டின் மன்னர் எட்டாம் ஹென்றி என்பவர் ஆறாம் முறையாக கல்யாணம் செய்துகொள்ள விரும்பியதை முன்னிட்டு முந்தைய திருமணத்தை ரத்து செய்திட அனுமதி கிடைக்காததால் அவர் பிரிந்து போய் நாங்கள் செக்யுலர், ஆகவே சர்ச் (கிறித்தவ வழிபாட்டிடம்/மதத் தலைமை) தனி என்று அறிவித்துவிட்டார். அது இந்திய நாட்டுக்குப் பொருந்தாது, இங்கே அந்த மாதிரியான சர்ச் கிடையாது என்கிறார்.
ஆறாம் முறையாகத் திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது விவாகரத்துக் கிடைக்கவில்லை என்கிறார். முன்னதாக அய்ந்து திருமணங்களிலிருந்து விவாகரத்துப் பெற்றாரா? பெற்றிருந்தால், ஆறாம் திருமணத்திற்கு மட்டும் ஏன் விவாகரத்துக் கிடைக்கவில்லை? அவர் பதில் கூறவில்லை. அய்ந்து திருமணத்தையும் ரத்து செய்யாமலே அவர் ஆறாம் திருமணத்தைச் செய்து கொண்டாரா? இதற்கும் அவர் பேட்டியில் விளக்கம் இல்லை.
ஆனால் வரலாற்றில் அறிந்தவரை, அவரது விவாகரத்துக்குக் கிறித்தவ மதத் தலைவரான போப் அனுமதி தரவில்லை. காரணம், அந்த மதத்தில், அது கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட முடிச்சு. அதனை மனிதன் அவிழ்க்கவோ, அறுக்கவோ அனுமதியில்லை. இதைக்காட்டி போப் (சர்ச்) மறுத்தார். அரசர் அதனை ஏற்க மறுத்து, அவராகவே விவாகரத்துக் கொடுத்துவிட்டு, மறுமணம் செய்து கொண்டார். அரசரது தொடர் நடவடிக்கைகளும் சர்ச்சுக்கு எதிர்ப்பாகவே அமைக்கப்பட்டன. அரச பீடத்தை மதபீடம் எதிர்க்கக் கூடாது, அரசு தனி, மதம் தனி என்று அறிவிக்கப்பட்டது. அந்தக் கொள்கை செக்யுலர் என்று சொல்லப்பட்டது.
அரசரைப் பின்பற்றியவர்கள் கிறித்தவ மதத்தில் எதிர்ப்பாளர் (புரோட்டஸ்டன்ட்) என்று அழைக்கப்பட்டனர் என்பதுதான் வரலாற்றுப் பதிவுகள்.
அரசு தனி, மதம் தனி என்பதையோ அரசுச் செயல்பாடுகளில் மதம் மூக்கை நுழைக்கக் கூடாது என்பதையோ, ஏற்றுக் கொள்ள மனமில்லாத கரண்சிங், இங்கிலாந்து மன்னரைக் கொச்சைப்படுத்திடும் கெட்ட எண்ணத்தில் அவர் ஆறாம் திருமணத்தை ரத்து செய்யக் கேட்டார் என்கிறார்! பந்தை அடிக்காமல் ஆட்டக்காரனை அடிக்கும் அல்பத்தனம்!
இவர் யார்? காஷ்மீர் பகுதியை ஆண்ட ஹரிசிங் என்பாரின் மகன்! ஹரிசிங் என்பார் யார்? பம்பாயில் குடியிருந்த இந்து மன்னர். காஷ்மீரிலோ, ஜம்முவிலோ இருந்து ராஜ்ய பரிபாலனம் செய்வதைவிட பம்பாய் நகரின் குதிரைப் பந்தய மைதானங்களில் குதிரைகள் ஓடுவதைப் பார்த்துப் பரவசப்பட்டுப் பணம் கட்டித் தோற்றுப் போகும் அசுவ பரிபாலனம்தான் அவருக்கு மிகவும் பிடித்தது. காஷ்மீர் பகுதி அவரது நாடு என்பதைவிட அவரது சொத்து என்றே கூறவேண்டும். மன்னர் எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே என்று கூறத்தக்க மாதிரியில் ஆட்சி நடத்திய அரச பரம்பரைக்காரர் அல்லவே!
பாட்டன் சம்பாதித்த சொத்தை ஆண்டு அனுபவித்து வந்தவர்தான் ஹரிசிங்! அவரது பாட்டன் குலாப் சிங். ஒரு சாதாரண ஆள். தெளிவாகச் சொன்னால், சராசரி மனிதனைக் காட்டிலும் கீழான ஆள். காட்டிக் கொடுத்தவர்களுக்குச் சமூகத்தில் என்ன மரியாதை? அந்த மரியாதையைப் பெறவேண்டிய ஆள் குலாப்சிங். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் பஞ்சாப், காஷ்மீர் பகுதியை ஆண்ட சீக்கியருக்கும் நடந்த யுத்தத்தின்போது, சீக்கியருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு உளவுகள் சொல்லி, போரில் பிரிட்டிஷார் வெற்றி பெற உதவி செய்தவர். காட்டிக்கொடுத்த காரியத்தைச் செய்தவருக்குக் கிடைத்த சன்மானம்தான் காஷ்மீர் நிலப்பரப்பு. வெள்ளையர் கொடுத்த பணம் (அன்றைய நிலையில்) 75 லட்ச ரூபாய். ஆண்டுதோறும் ஒரு குதிரை, 12 செம்மறி ஆடுகள் (இவற்றில் 6 ஆண் 6 பெண் ஆடுகள்) மேய்த்துக்கொண்டும் வளர்த்துக் கொண்டும் பழைய பரம்பரைப் பண்பாட்டைக் காப்பாற்றிட! இதன்னியில் காஷ்மீர் சால்வைகள் 3 செட். ஆடு மேய்க்கக் கம்பளிப் போர்வை வேண்டும் அல்லவா? அதற்காக ஆண்டுதோறும்! இவர்தான் காஷ்மீர் மகாராஜா! அந்தப் பரம்பரைதான் பேட்டி தந்தவர்!
ஆள் அப்படிப்பட்டவர் என்பதற்காக அவரது சொற்களை அலட்சியப்படுத்தவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எட்டாம் ஹென்றி செக்யுலர் எனக் கூறியபோது எந்த எண்ணத்தில் கூறப்பட்டதோ, அது 1866ஆம் ஆண்டில் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டது. ஜியார்ஜ் ஜேகப் ஹொலியோக் (GEORGE JACOB HOLYOAKE) என்பார் லண்டன் நகரில் செக்யுலர் சங்கம் (SECULAR SOCIETY) என்ற ஒன்றைத் தொடங்கினார். செக்யுலம் (SECULUM) எனும் லத்தீன் சொல்லிலிருந்து உருவான இங்கிலீஷ் சொல் செக்யுலர். அதன் தன்மைகள் இன்னின்ன என்பதை அவர் விளக்கினார்.
1. பொதுக் கல்வியிலிருந்து மதம் பிரிக்கப்படல்.
2. ஆட்சியிலிருந்து மதம் விலக்கப்படல்.
3. அறம், ஒழுக்கம் ஆகியவற்றிலிருந்து மதம் அகற்றப்படல்.
செக்யுலர் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட லிபரேட்டர் (LIBERATOR) எனும் ஏட்டின் ஆசிரியர் ஆஸ்திரேலிய சுயசிந்தனை (FREE THOUGHT மாநாட்டில் பேசும்போது சொன்ன கருத்து இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 15.2.1885இல் மாநாடு நடந்த சேதி ஏட்டில் வெளிவந்துள்ளது. செக்யுலரிசம் பற்றிப் பேசும்போது அது ஏதோ 1866இல் வந்த தத்துவம் என்பதாகக் கொள்ளக்கூடாது.
இங்கிலீஷ் மொழியில் உள்ள PROFANE (புரோஃபேன்) எனும் சொல் இதே பொருளைத் தரக்கூடியதாக உள்ளது என்றார். FANE அல்லது FANUM எனும் சொல் வழிபடும் இடம் பற்றிக் குறிப்பது. சர்ச், கோவில் என்பதைப் போன்ற இடங்களைக் குறிப்பது. PRO என்றால் முன்னால் (கோவிலின் முன்னால்) என்று இங்கு பொருள்படும். ஆக PROFANE என்றால் கோவிலுக்கு முன்னால், கோவிலுக்கு வெளியே, கோவிலுக்கு அப்பால் என்று ஆகும். ஆகவே, கோவிலுக்கு உள்ளே இருப்பது புனிதம், கோவிலுக்கு வெளியே இருப்பது புனிதமற்றது என்று பொருள்படுகிறது. கோவிலுக்கு உள் இருப்பது சமயம் சார்ந்தது, கோவிலுக்கு வெளியே இருப்பது சமயம் சார்பற்றது என்று ஆகிறது. எனவேதான், PROFANE என்றால் புனிதமற்றது என்றோ சமயச் சார்பற்றது என்றோ பொருள் கூறப்படுகிறது. ஏறக்குறைய செக்யுலர் என்பதுவும் அதுவேதான்! எனவே செக்யுலர் என்பது அண்மைக்காலச் சொல் அல்ல, பழமையான தத்துவத்திற்கான சொல்லே என்றார்.
இங்கிலீஷ் தற்காலத்திய மொழி. லத்தீன் பழமையான செம்மொழி. அந்த மொழிச் சொல்லான செக்யுலம் என்பதுதான் செக்யுலர் எனும் இங்கிலீஷ் சொல்லுக்கு மூலம் என்பதால், தத்துவமும் பழமையானதே!
எனவே, கரண்சிங் சொல்வதைப் போல, எட்டாம் ஹென்றி கூறியது அல்ல! லத்தீன் மொழிக்கு வயது எத்தனை ஆயிரம் ஆண்டுகளோ, அத்தனை ஆயிரம் ஆண்டுப் பழமையானது அந்தத் தத்துவமும்!
உலக இயக்கத்தில், மனித வாழ்வில், வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய வகையில் அமைந்துள்ளவை பற்றியவை செக்யுலர் என்றுதான் எல்லா இங்கிலீஷ் அகராதிகளும் அர்த்தம் எழுதுகின்றன. அப்படியென்றால் என்ன? பரலோக வாழ்க்கையை அல்லாமல் இகலோக வாழ்க்கையைப் பற்றிப் பேசுவது! ஆனால் மதம் இகலோக வாழ்க்கைக்கு தூசு அளவுகூட மரியாதை கொடுக்காமல் பரலோக வாழ்க்கை பற்றியே பேசுகிறது. எந்த மதமானாலும் இதே பல்லவிதான்! அதனைப் பிரித்து, விலக்கி, அகற்றி இந்த உலக வாழ்க்கை பற்றிப் பேசுவதுதான் மதச்சார்பற்ற தன்மை! சமுதாயத்திற்குத் தேவையானவற்றைச் செய்து தருவதுதான் அரசின் கடமை. இந்தக் கடமையில் மதம் குறுக்கிட்டு, பரலோக சாம்ராஜ்யம் காத்திருக்கிறது, ஆகவே இங்கே உனக்கு எதுவும் வேண்டாம் என்று கூற அனுமதிக்கலாமா? அனுமதிக்க மறுப்பதுதான் மதச்சார்பின்மை!
உலகம், உயிர்கள் போன்றவை மலர்ந்த விதம், வளர்ந்த விதம், வளர்ச்சித் தன்மை போன்றவற்றைக் கற்பித்து அறிவைச் செழுமைப்படுத்த வேண்டியது கல்வியின் நோக்கம்! அந்த விஞ்ஞானத்தைப் போதிக்காமல், படைத்தானே, உலகத்தை ஆண்டவன் படைத்தானே என்கிற விஞ்ஞான விரோதக் கல்வியைப் (மதத்தை) பிரிப்பதுதான் செக்யுலரிசம்! தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மனித சமுதாயத்திற்குத் தந்திருக்கும் நிலையில், அதனை ஊக்குவித்திடும் வகையில் அறிவியல் கல்விதானே அவசியம்? அதனைவிடுத்து ஆவது ஒன்றும் நம்மால் இல்லை என்று தேங்கிக்கிடக்க வைத்திடும் கல்வியைப் பிரிப்பது முக்கியமும் அவசியமும் அல்லவா?
மானுட சமுதாயத்திற்குக் கேடு பயக்கும் எதுவும் அறமல்ல. அத்தகைய கேடுகளைச் செய்வது ஒழுக்கமல்ல. எவை அறம், எது ஒழுக்கம் என்பதைத் தேர்ந்து, தெளிந்து, தெரிவு செய்வதுதான் மனிதனின் பகுத்தறிவு. அதனைப் பயன்படுத்தி _ இருப்பதைச் சீர்தூக்கி, செய்வதை எடைபோட்டு, சமூகத்தின் எந்தப் பிரிவும் பாதிக்கப்படக் கூடாதவற்றைச் செய்வதுதான் ஒழுக்கம். இப்படிப்பட்ட ஆய்வுக்கே வாய்ப்புத் தராமல், மத நூல்களில் எழுதப்பட்டிருப்பனவற்றை அப்படியே நம்பு, அப்படியே கடைப்பிடி, ஆராய்ச்சிக்கு இடம் தரக்கூடாது என்று வற்புறுத்தும் மதம் எப்படி ஒழுக்கத்தை வளர்க்கும்? மதங்கள் ஒழுக்கத்தை வளர்க்கவில்லை என்பதால்தான், அதனை அகற்றி, பகுத்து அறியும் தன்மையை ஊக்கப்படுத்துவதுதான் செக்யுலரிசம்.
மதம் மக்களுக்குச் செய்ததுதான் என்ன? 700 கோடி மக்களுக்கும் உணவு, உடை, தேவைப் பொருள்கள், வசதிக்கு உபகரணங்கள் என்று எல்லாவற்றையும் ஆக்கி அளிப்பது அறிவியல் கல்விதானே தவிர, மதக்கல்வி அல்லவே! மதம் தேவை என்பவர்களும் இத்தனையையும் அனுபவித்துக் கொண்டே, மதம் பற்றிப் பேசிப் பொழுதைப் போக்குகிறார்கள். அவர்களது மதமோ, கடவுளோ இவற்றைத் தரவில்லை என்பதை உணர மறுக்கிறார்கள்.
கடவுள் நம்பிக்கையைப் பரப்பவும் மக்கள் கடவுளை மறந்துவிடாமல் இருக்கவும் உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் மதம். அந்த மதங்கள் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. மாறாக, மனிதர்கள் தாம் கடவுளையும் மதத்தையும் பற்றிக் கவலைப்பட்டு மாய்கிறார்கள். இத்தகைய நம்பிக்கை தனி மனிதனைப் பொருத்தது. ஆனால் ஒழுக்கம் ஒட்டுமொத்த சமுதாயத்தைப் பொருத்தது. ஒழுக்கம் கெட்டுப்போனால் சமுதாயமே சீரழிந்துபோகும். அந்த நிலையில் நம்பிக்கையாளர்கள் தன்னலவாதிகள்!
நம்பிக்கையற்றவர்கள் பொதுநலம் விரும்பிகள்! எது தேவை? தன்னலமா? பொதுநலமா? தனிமனிதன், (இல்லாத) மறுஉலகம் போவதா? எல்லா மனிதர்களும் கண்காணும் உலகில் வசதியாக வாழும் நிலையை ஏற்படுத்துவதா? எது தேவை?
இந்தச் சிந்தனையின் முடிவுதான் செக்யுலரிசம்! செக்யுலம் எனும் லத்தீன் மொழிச் சொல்லின் பொருளோ, இந்த உலகம் என்பதுதான்!
கரண்சிங், இத்தத்துவம் இந்தியாவுக்குப் பொருந்தாது என்கிறார். சர்வதர்ம சம்பவ என்பதுதான் செக்யுலரிசமாம். அப்படித்தான் அவர் கருதுகிறாராம். வேதாந்த முடிவுகள்தான் இந்து மதமாம். இது உலகளாவியதாம்! (UNIVERSAL) எல்லா மதங்களையும் ஒரே நிலையில் வைத்துப் பார்ப்பதுதான் செக்யுலரிசம் என்கிறார் இந்த மேதாவி! சரியா? ஒரு கடவுள் மட்டுமே என்கிறது இசுலாம், கிறித்தவம், யூதம், சீக்கியம் போன்றவை. கோடிக்கணக்கான கடவுள்கள் என்கிறது இந்துமதம். இரண்டும் எப்படிச் சமமாகும்?
கடவுளே இல்லை என்கிறது ஜைனம்! கடவுள் பற்றிய கவலை மனிதனுக்கு வேண்டாம் என்கிறது பவுத்தம். முந்தையவற்றோடு இவை இரண்டையும் எப்படிச் சமமாகக் கருதமுடியும்?
உருவமற்ற கடவுள் என்கின்றன இசுலாமும் மற்றவையும்! இந்து மதமோ, ஒருமுகம், பல முகங்கள், இரு கைகள், 12 கைகள் என்றெல்லாம் உருவம் அமைத்து பொம்மைகளை வைத்துள்ளது. எப்படி ஒரே மாதிரிப் பாவிக்க முடியும்?
பிறப்பு, இறப்பு அற்று, விருப்பு, வெறுப்பு அற்ற கடவுள் என்கிறது இசுலாமும் தொடர்புடைய ஏனைய மதங்களும்! பிறந்து, இறந்து, மனைவி, வைப்பாட்டி என வாழ்ந்து சகல கெட்ட குணங்களோடும் தீய பழக்க வழக்கங்களோடும் இந்துக் கடவுள்கள் இருக்கின்றன. இரண்டையும் எப்படி ஒரே மாதிரிப் பாவிக்க முடியும்?
ஆகவேதான், அவரவர் மதத்தின்படி அவரவர் வாழ்க்கையை நடத்தட்டும், எவர் கொள்கையையும் சாராத நிலையில் ஆட்சி நடக்கட்டும்! கல்வி கற்பிக்கப்படட்டும்! அறஞ்சார்ந்த ஒழுக்கங்களை மக்கள் பின்பற்றட்டும்! சமூகம் முழுமைக்கும் பயன்படும் வகையில் மானுடம் செல்லட்டும் என்பதுதான் செக்யுலரிசம்! மதம் கடவுள் தனிமனிதன் தொடர்புடையது! ஆட்சிக்கும் அதற்கும் தொடர்பில்லை. கல்விக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஒழுக்கத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. இதுதான் செக்யுலரிசம்!
கரண்சிங் இதைத் தெரிந்தவர் என்றாலும் குழப்புகிறார்! காரணம், அவர் விரும்பும் இந்துயிசம்! வேறெங்கும் போக வேண்டாம். காஷ்மீர் பெருநிலப் பகுதியையே எடுத்துக் கொள்வோம். காட்டிக் கொடுத்ததற்காக சன்மானமாகப் பெற்ற இடம் அது. ஆனால் அவரின் தாத்தா குலாப்சிங் தோற்றுவித்த ராஜ்யம் என உண்மையை மறைக்கிறார். 84 ஆயிரம் சதுரமைல் இருந்த பரப்பு இப்போது 42 ஆயிரம் சதுரமைல் பரப்பாக _ பாதியாகக் குறைந்து உள்ளது. மீதிப்பாதி பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் இருக்கிறது. இங்கு இருக்கும் பகுதியில் 1. காஷ்மீர் முசுலிம்கள் பகுதி, 2. ஜம்மு பார்ப்பன இந்துப் பகுதி, 3. லடாக் பவுத்தர் பகுதி. முதன்மையாக மூன்று மதங்கள். மூன்று விதக் கலாச்சாரங்கள். மொழிகள் தனித்தனி. உணவு தனித்தனி. கலாச்சாரங்கள் தனித்தனி. உடைகள் தனித்தனி. அரசியல்கூடத் தனித்தனிதான்.
அவரவர்க்குரியவற்றை அவரவர்கள் கடைப்பிடிக்கட்டும், அரசு அதில் தலையிடக் கூடாது. தலையிடும்போதுதான் தகராறு வருகிறது. ஆளுநர் இந்துவாக இருந்ததால் ஏற்படுத்தப்பட்ட இந்துயிசத் திணிப்புதானே, ஜம்முப் பகுதிப் பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வெளியேறிய நிலை ஏற்பட்டதற்குக் காரணம்! இசுலாமிய முதலமைச்சர் இருந்தாலும் இந்துக்கள் அமர்நாத் போகக் கூடாது என தன் கொள்கையைப் புகுத்தாததால்தானே வெளிமாநில இந்துக்களும் இன்றைக்கும் குகையில் பனிலிங்கத்தைப் பார்க்கப் போகிறார்கள்!
எனவே, ஆட்சியாளர்கள் மதத்தை மனதில் கொண்டு ஆளக்கூடாது. நியுட்ரலாக (NEUTRAL) ஆளவேண்டும். அதுதான் செக்யுலரிசம்!
இந்த அறிவார்ந்த கொள்கை இங்கிலாந்து நாட்டில் பேசப்பட்டபோது, 12 ஆண்டுகளிலேயே இந்தியாவில் பேசப்பட்டது. 1866இல் இங்கிலாந்தில் பேசினார்கள். தமிழ்நாட்டில் சென்னையில் 1878இல் பேசினர். பகுத்தறிவாளர் (RATIONALIST) என்று லண்டன் பகுத்தறிவு நூல் சங்கம் (RATIONALIST PRESS ASSOCIATION) ஏடு நடத்தியது.
இங்கே இந்து சுயசிந்தனையாளர் யூனியன் (THE HINDU FREE THOUGHT UNION) சென்னையில் தொடங்கப்பட்டது. தத்துவ விசாரிணி எனும் தமிழ் ஏடு 1878இல் தொடங்கப்பட்டது. வார ஏடு. பின்னர் 1882இல் தத்துவ விவேசினி எனப் பெயர் மாற்றப்பட்டது. அதே ஆண்டு ஜூலை மாதத்தில் THE THINKER (சிந்தனையாளர்) எனும் இங்கிலிஷ் ஏடும் நடத்தப்பட்டது.
கரண்சிங் காங்கிரசுக்காரர் எனக் கருதப்படுகிறார். அவரது கட்சியை 1885இல் ஆங்கிலேயர் ஒருவர்தான் தொடங்கி வைத்தார். செக்யுலரிசம் தமிழ்நாட்டில் எவர் தூண்டுதலும் இல்லாமலேயே தோன்றிவிட்டது. காங்கிரசுக்கு 7 ஆண்டுகள் முன்னாலேயே தொடங்கப்பட்டுவிட்டது.
பொது ஆண்டு 1600 (கி.பி.)இல்தான் பகுத்தறிவின் பெருமை உலகுக்கு உணர்த்தப்பட்டது, AGE OF REASON எனப்படும் பகுத்தறிவின் காலம் என உலகம் அந்த ஆண்டைச் சிறப்பிக்கிறது. எனவே, அந்த ஆண்டிலிருந்து அறிவியல் காலம் தொடங்குவதாகக் கணக்கிடப்பட வேண்டும் என முடிவாகியது. அப்போதும் தற்போதும் கி.பி. என்பதை இங்கிலீஷில் A.D. (ANNO DOMINI) என்று அழைப்பதைப் போல அறிவியல் ஆண்டினை A.S. (ANNO SCIENTIOE) என்று அழைக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆண்டு 1884. இந்த ஆண்டினைச் சுருக்கமாக 84 என்று எழுதுவதைப்போல, பேசுவதைப் போல அறிவியல் ஆண்டையும் 84 என்றே அழைக்கலாம் என்று விளக்கினர். 1884க்கு 1600 + 284 = 1884 என்பதால் 84 என்றே அழைத்தனர்.
இந்நிலையில் 13.2.1887இல் இந்து சுயசிந்தனையாளர் சங்கத்தின் பெயர் சென்னை லவுகிக சங்கம் (MADRAS SECULAR SOCIETY) என மாற்றப்பட்டது. இந்துமதம் சாராதவர்களும் சங்கத்தில் சேரும் பொருட்டு இப்பெயர் மாற்றம். தத்துவ விவேசினி ஏடு வாராந்திர ஆங்கிலோ திராவிட சுயக்கியான பத்திரிகை என விளம்பரம் செய்யப்பட்டு வெளிவரத் தொடங்கியது. எல்லா மத மோசடிகளும் அம்பலப்படுத்தப்பட்டன.
ஆக, பகுத்தறிவு பரப்பப்பட வேண்டும் என்கிற உணர்வு உலகில் லண்டனில் ஏற்பட்டது என்றால் உடனடியாக அது எதிரொலிக்கப்பட்ட இடமாகத் தமிழ்நாடும் சென்னை நகரும் இருந்தன. வங்கம் முதலில் விழித்துக்கொள்ளும் என்று அவர்கள் பெருமை பேசிக் கொண்டது உண்டு.
இந்து மதத்தையும் வேதங்களையும் கட்டி அழுவதற்கும், கிருஷ்ணன் எனும் கடவுளின் முறைதவறிய ஒழுக்கக்கேடான தன்மையை நாட்டின் பக்தி மார்க்கமாக மாற்றியமைக்கும் அவர்கள் முன் உரிமை கொண்டாடிப் போகலாம். ஆனால் அறிவுலகில், அறிவியல் உலகில், நாத்திகத்தில், வேதமறுப்பில், கடவுள், மத எதிர்ப்பில் தமிழ்நாடுதான் பாரம்பரியப் பெருமை கொண்டது. இந்து மதத்தின் ஆணிவேர் எனப்படும் நான்கு வர்ணப் பாகுபாட்டுக்கு எதிர்ப்பாக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று எழுந்து நின்றது தமிழ்நாடுதான். மானுடர்கள் எங்கிருந்தாலும் ஒன்றே என ஓங்கிக் குரல் எழுப்பி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று முழங்கியதும் தமிழ்நாடுதான்.
அதேவேளையில் அன்றும் இன்றும் பகுத்தறிவு நாத்திகத் தலைநகரும் சென்னைதான்! பெரியார் திடல்தான்!