மரண தண்டனைக் கைதிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்ட தீர்ப்பு, கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டுவதாக அர்த்தம் அல்ல. கருணை மனுக்களின் மீது முடிவு எடுப்பதில் விளக்கிக் கூற முடியாத தேவையற்ற காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம். மரண தண்டனைக் கைதிக்கும் கருணை காட்டும்படி கோருவதற்கு உரிமை உண்டு. அதைப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் அரசியல் சட்டக் கடமையாகும்.
– பி.சதாசிவம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
ஜாதி, மத, மொழி, பாலினப் பாகுபாடுகளைக் களைந்து புதிய பார்வை கொண்டு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதே பகுத்தறிவாகும். மனித வாழ்க்கையின் சுழற்சியை முழுமையாகப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். காதல் என்பது ஒரு குழந்தையின் தந்தையையும் தாயையும் பிணைத்து வைத்திருக்கும் பசை என்பதைப் புரிந்துகொண்டால் அற்ப மாயைகளை நம்பி ஒரு ஆணோ பெண்ணோ தவறான வழியில் செல்ல மாட்டார்கள்.
இந்திர விழா போன்ற பெயர்களில் காதலர் தினம் தமிழ்க் கலாச்சாரத்தின் அங்கமாக எப்போதும் இருந்திருக்கிறது. காதலைக் கொச்சையாகப் பார்ப்பதும் அழகாக _ கம்பீர மாகப் பார்ப்பதும் நமது பார்வையில்தான் உள்ளது.
– ஷாலினி, மனநல மருத்துவர்
இலங்கைத் தமிழர்கள் மீதான இன அழிப்புக் குற்றம், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்காக பன்னாட்டு விசாரணைக் குழுவை நிறுவ வேண்டும். அதற்கான கருத்துகளை அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டமாகவோ முன்மொழிய வேண்டும். இலங்கையில் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது குறித்து சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சியை இந்திய அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இந்த 2 தீர்மானங்களை இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் மக்களவைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.
– விஸ்வநாதன் ருத்ரகுமாரன்,
நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர்
காதலிப்பவர்களைத் தாலி கட்டித் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறவர்கள் திருமணம் என்பதைத் தாலி கட்டிக்கொள்ளும் சடங்காக மட்டுமே பார்க்கிறார்கள்.
கலாச்சாரத்தைக் காக்க வேண்டும் என்று பேசுகிறவர்களுக்கு தாலி என்பது தமிழ்க் கலாச்சாரம் கிடையாது என்பது தெரிவதில்லை. – சந்தியா, எழுத்தாளர்