பெரியாரின் தொலைநோக்கு
சீனாவில் 40 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு குடும்பம் ஒரு குழந்தைத் திட்டத்தை அந்த நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இதனால் கடந்த 42 ஆண்டுகளில் 40 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று ஒரு செய்தி. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா என்பது நாம் அறிந்ததுதான்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றித்தான் நாட்டைக் காக்க வேண்டியிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் கொண்டு வந்து இது சாத்தியமாகி இருக்கிறதே, அது எப்படி? 1970களில் அரசு குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. நாம் இருவர் நமக்கு இருவர் என்று பரப்புரை செய்தார்கள். ஆனால், சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் 1930களிலேயே குடும்பக் கட்டுபாடு குறித்துப் பேசிவிட்டார்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வில்லை என்றால் நாடு சிக்கலில் உழலும்; வறுமை தாண்டவமாடும் என்பது பெரியாரின் தொலைநோக்கு. அதனால் அவர் திருமண வீடுகளில் பேசும்போது, மணமக்கள் உடனே பிள்ளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்; 5 ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்; பின்னர் ஒன்றோ, இரண்டோ பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஆனால், அப்போது எல்லா மதவாதிகளும், பிள்ளைப் பேறு என்பது கடவுள் அளிப்பது. அதனைத் தடுப்பதா எனக் குதித்தனர். ஆனால், கடவுளையே கடாசி எறிந்த பெரியார், பிள்ளை கொடுக்கும் கடவுள், கூடவே அதனைக் காப்பாற்ற ரெண்டு மாட்டையும் கன்றையும் அல்லவா தந்திருக்க வேண்டும்? வசதி வாய்ப்பைத் தரவில்லையே, ஏன்? அப்படித்தராதவன் பொறுப்பானவனா? என்று கேள்வி எழுப்பினார். தன் தோழர்களுக்கு அவர் வழங்கும் முக்கியமான அறிவுரையும் இரு குழந்தைகள் போதும் என்பதுதான்.
பல்லாண்டுகள் தமிழ் மண்ணில் பெரியார் செய்த பிரச்சாரத்தால் அரசின் திட்டம் வெற்றிகரமாக நடந்தது. இரு குழந்தைகள் திட்டம் இப்போது ஒரு குழந்தைத் திட்டம் என்றாகி, நாமே குழந்தைகள்; நமக்கேன் குழந்தைகள்? என்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டது.
சீனாவில் கணக்கெடுத்தது போல இங்கும் கணக்கெடுத்தால் பலகோடி பிறப்புகள் தடுக்கப்பட்டது தெரியவரும்.
குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்த பின்னும்கூட பசியும் பட்டினியும் வறுமையும் இருக்கும் நிலையை நாம் காண்கிறோம். இன்னும் இலவச அரிசி கொடுக்க வேண்டிய நிலை. இத்திட்டம் இல்லாமல் இருந்திருந்தால்…? எல்லாம் கடவுள் செயல் என்ற நிலை தொடர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்?
நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே…!
– அன்பன்