தலைமுறைகள்
– சமா.இளவரசன்
மொத்தமாக 30 ஆண்டுகளில் 15 படங்கள் தான் தமிழில் இயக்கியிருக்கிறார் இதுவரை! ஆனால், தமிழ்த் திரையின் கதை சொல்லல் தரத்தை, ஒளிப்பதிவை, திரை மொழியை மாற்றியமைத்ததில் ஒளிஓவியர் பாலுமகேந்திராவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது தலைமுறைகள். நாற்பது ஆண்டுகால திரை வாழ்வில் திரைக்குப் பின்னால் இருந்தே இயங்கி வந்த பாலுமகேந்திராவே படத்தின் முக்கியப் பாத்திரமேற்று, எப்போதும் எங்கும் சூடியிருக்கும் தலைப்பாகையைத் தூக்கி வைத்துவிட்டு, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சுப்பு பிள்ளையாக வாழ்ந்திருக்கிறார். தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளிதான் தலைமுறைகள். 12 ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் படித்த, தமிழ் தெரியாத, பெற்றோரில்லாமல் வளர்ந்த ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சென்னையில் பெரிய மருத்துவராகத் திகழ்கிறார் சிவராமன். அடுத்தடுத்த முன்னேற்றம், புதிய மருத்துவமனை என்று வாழ்பவருக்கு, அவரின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீடு திரும்பியிருக்கும் சேதி சற்று தாமதமாகக் கிடைக்கிறது.
அவரைப் பார்க்கச் சொல்லி மனைவி வற்புறுத்த, காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் கிராமத்திற்குச் செல்கிறார் சிவராமன். தந்தை வரவேற்க மறுத்தாலும், தங்கையின் அழைப்பின் பேரில் வீட்டில் தங்குகிறார். அண்ணனின் காதல் திருமணத்தின் காரணமாக தந்தை சுப்பு பிள்ளை தன்னை விரைவாக திருமணம் செய்துவைத்துவிட்ட வருத்தத்தைப் பகிர்கிறாள் தங்கை. பெண் பிள்ளை பிறக்குமா என்ற கணவனின் எதிர்பார்ப்புக்காக, மூன்று ஆண் பிள்ளைகளுக்குப் பிறகு நான்காவது கருவைச் சுமந்து கொண்டிருக்கும் தங்கை ஒரு புறம் என்றால், பிறந்த பிள்ளைகளுக்கெல்லாம் பிள்ளை என்ற ஜாதிப் பெயரையும் சேர்த்துச் சொல்லிப் பழக்கி வைத்துக் கொண்டிருக்கும் தந்தை மறுபுறம் என பிற்போக்கான மனநிலைக்குள் இன்னும் உழன்று கொண்டிருக்கும் குடும்பம் அது. ஜாதி, மதம் என்று பேசிக் கொண்டிருக்கும் சுப்புவுக்கு இன்னொரு மனைவி மூலமாக ஒரு மகள் இருப்பதைக் காட்டும்போது ஜாதிப் பெருமை எதுவரைக்கும் என்ற எள்ளல் இயல்பாகப் பதிகிறது. அதிலும், வெளியில நான் சாப்பிடமாட்டேன்னு உனக்கும் உங்க அம்மாளுக்கும் தெரியாது? என்று அண்ணன் முன்னால் எரிந்து விழும் அப்பாவைப் பார்த்து, நல்லா தான்ணே வீட்டுல சாப்பிடுவார். இப்போ என்னமோ இப்படிப் பேசுறாரு என்று அவள் வெட்டி ஜம்பத்தைப் போட்டுடைக்கும் காட்சி ரசிக்க வைக்கக் கூடியது. முதலில் மகனையே வீட்டிற்குள் விட மறுக்கும் சுப்பு, மருமகள் வந்தால் வீட்டுக்குள் சமைக்கக் கூடாது என்று மகளிடம் போடும் நிபந்தனை அவரது எதிர்ப்பு முன்பு போல் இல்லாமல் முனை மழுங்கிவிட்டது என்பதற்கு அடையாளம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பேசும் மருமகளைக் கண்டு மகிழ்ந்தாலும் 10 வயதாகியும் தமிழ் தெரியாத பேரனைப் பார்த்து வருத்தம் அடைகிறார் சுப்பு. மகனிடம் இருக்கும் மனவருத்தத்தையும் தாண்டி, பேரனிடம் பாசம் ஏற்படுகிறது. பேரனோடு விளையாடத் தொடங்குகிறார்; பேரனுக்குக் கற்றுக் கொடுக்கிறார்; பேரனிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்; பேரனின் கேள்விகளுக்குப் பதில் தருகிறார். தாத்தாவுக்கும் பேரனுக்குமிடையிலான அந்த உறவு பார்க்க அழகானது. தான் அமர்ந்து உறங்கும் சாய்வு நாற்காலியின் கைப்பிடியில் காலைத்தூக்கிப் போட்டபடி உறங்கும் பேரனை ரசிப்பதும், அவன் உள்ளங்கையில் வைத்திருக்கும் மிட்டாயை அவன் எழுந்துவிடாத வண்ணம் மெல்ல எடுத்துச் சுவைப்பதும் அழகு. ஆற்றைப் பார்த்திராத, ஆட்டைப் பார்த்திராத பேரனுக்குக் கிராமத்தின் எளிய வாழ்க்கையைப் பழக்குகிறார். தான் பண்பாடு என நினைக்கும் பழக்கங்களைப் பேரனுக்கும் சொல்லித் தருகிறார். அந்தக் காலத்து வாத்தியாராக, விஜயதசமி என்று கோவிலுக்குக் கூட்டிப் போய் நெல்லைக் கொட்டி, அதில் அ என்று கைப்பிடித்து எழுத வைத்து தமிழ் கற்றுத் தருகிறார் தாத்தா சுப்பு! தனக்குத் தமிழ் கற்றுத் தரும் தாத்தாவுக்கு, நல்ல நாள் பார்க்காமல், நெல்லைக் கொட்டியோ கோதுமையைக் கொட்டியோ கி எழுதாமல் ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்குகிறான் பேரன். அதற்குப் பிறகு தாத்தா கற்றுக் கொடுத்த அவை சிறுநீர் கழிக்கையில் மணலில் வரைந்து பார்க்கும் பேரனைப் பார்க்கும் போது, அய்யய்யோ வருத்தம் கிருத்தம் படப்போகிறாரோ என்று நாம் நினைத்தால், அதற்கு மாறாக காவி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பேரனைப் போலவே தாத்தாவும் சிறுநீரில் அ வரைந்து பார்ப்பதும், அதைப் பேரன் ரொம்ப ஷேக்கிங் என்று சொல்வதும் இரண்டாம் குழந்தைப் பருவத்தைப் பதிவு செய்யும் காட்சிகள். ஆற்றில் குளிக்கப் பழக்குவது, தூண்டிலிட்டு மீன் பிடிப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது என்று இன்றைய நகர வாழ் குழந்தைகள் தவறவிட்ட தருணங்களை நினைவூட்டுகிறது தலைமுறைகள். தாய்ப்பால் காட்சியையெல்லாம் எந்த இடையூறும் இல்லாமல் வெகு அழகாகக் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.
மகள் வயிற்றுப் பேரன்களுக்கெல்லாம் சிவகுருநாதன் பிள்ளை, சிவ… பிள்ளை, சிவ… பிள்ளை என்று பேர்வைத்து ஜாதியோடு சொல்லப் பழக்கியவர் மகன் வழிப் பேரனுக்கும் ஆதித்யா பிள்ளை என்று சொல்லித் தருகிறார். அந்தப் பேரைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான் பேரன் ஆதித்யா. இந்த ஜாதி மதப் பிரிவினைக் குப்பையெல்லாம் நம்மோடவே போகட்டுமே! அடுத்த தலைமுறைக்கும் போகணுமா? என்று பாதிரியார் எழுப்பும் கேள்விக்குப் பிறகு, தானும் அதை விட்டுவிடுகிறார் சுப்பு. ஒரே தடவையில் திருந்திவிட்டாரா என்று சிலர் விமர்சனத்தில் கேட்டிருந்தார்கள். இந்தக் கேள்வியை ஒருமுறை கூட யாரும் கேட்காமலேயே பலருக்குக் காலம் கடந்துவிட்டிருக்கிறதே, ஒருவரின் கேள்வி கூட சுருக்கெனத் தைக்கலாம். கிறிஸ்துவ மருமகள் எட்டுக் கிலோமீட்டர் நடந்து சர்ச்சுக்குச் சென்று வர வேண்டுமா என்று யோசித்து, தான் வணங்கும் கடவுள்களுக்கு மத்தியிலேயே ஏசு படத்தையும் வைத்து, மற்ற கடவுளரைப் போலவே பூமாலையும் போட்டு வைக்கும் அளவுக்கு சுப்புவின் மனநிலையில் பாசம் மாற்றத்தை உண்டாக்குகிறது. வயதான காலத்தில் நிகழும் மாற்றங்கள் இப்படித்தான் வரும் என்று சொல்ல முடியாது. யாராலும் அடங்காதவர்கள் பேரனுக்காக மாறும் இயல்புகளைத் தனியே விவரிக்க வேண்டியதில்லை. வெகு இயல்பாக இவற்றையெல்லாம் பதிவு செய்கிறார் பாலுமகேந்திரா. கம்பீரமான தோற்றத்துடன், வீராப்புடன் திகழ்வோரெல்லாம், கால மாற்றத்தில் புதியன அறியாதவர்களாக, வயதான காலத்தில் வெகு குழந்தைகளாக மாறிப் போவதைக் கண்டிருப்போம். சுப்பு கதாபாத்திரத்திற்கு இது சரியாகப் பொருந்தும். சுப்பு என்ற கதாபாத்திரத்தைத் தாண்டி பாலுமகேந்திராவை நாம் ஒரு வேளை தேடிக் கண்டுபிடித்தோமானால், அவரின் நடிப்பு எத்தனை இயல்பாக இருக்கிறது என்பதையும் நாம் உணரமுடியும். கையைக் கையை ஆட்டிப் பேசும் பாவனைகளில் சில நேரம் செயற்கைத்தன்மை இருப்பதாக நமக்குத் தோன்றலாம்; ஆனால் மூத்தோரை மனதில் வைத்துப் பார்த்தால் சுப்புவின் பாவனைகள் நமக்குத் தனித்துத் தோன்றவில்லை.
சென்னையில் விட்டுவந்த மருத்துவப் பணியைத் தொடர விரையும் மகன் சிவராமன், கிராமத்து மக்களுக்கும் மருத்துவமனை தேவை; அதற்கு, தானே இங்கிருந்து நடத்தத் தயார் என்று சொல்லும் மருமகள் போன்ற முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், உங்க கல்யாணத்துக்குக் கையெழுத்துப் போட்டேன்னு எப்பவும் திட்டுவாரு.. இப்போ பார்த்தாலும் திட்டுவார் என்று மறைந்து மறைந்து ஓடும் சிவராமனின் நண்பன், சுப்புவின் நண்பர் லட்சுமணன், இரண்டாம் மனைவியின் மகளாக வரும் சிறுமி என்று அவ்வப்போது வரும் கதாபாத்திரங்களும் இயல்பானவை _- நம் குடும்பத்தைப் போல! ஆங்காங்கே காட்சிகள் கோர்வை இல்லாமல் இருப்பது உறுத்தல்தான். அப்படிக் கோர்வையற்ற ஒரு காட்சித் திணிப்புதான்- கடவுள் பற்றி அவர் பேரனுக்குக் கூறும் காட்சியும். ஆற்றங்கரை வழியில் இருக்கும் பிள்ளையார் சிலையை கடவுள் என தாத்தா அறிமுகப்படுத்த, இல்லை அது கல்லுதான் என்கிறான் பேரன். அடுத்த காட்சியிலேயே சம்பந்தமில்லாமல், தாத்தா என் போட்டோ என்று ஒரு படத்தைக் கொண்டு வந்து காட்டும் பேரனிடம் இது நீயில்லை; வெறும் பேப்பர் என்று வாதாடுகிறார் தாத்தா. காட்சி நிறுத்தப்பட்டு, வளர்ந்துவிட்ட பேரனின் குரலில் கண்ணதாசனின் தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்ற வரிகளுக்கு எனக்கு ரொம்ப காலம் கழிச்சுத்தான் அர்த்தம் புரிஞ்சுச்சு என்று ஒரு வசனம். என் போட்டோ என்றும் போட்டோவிலிருப்பது என் உருவம்தான் என்றும் கூறும் பேரனிடம் இது நீயில்லை என்று நிறுவப் பார்க்கிறார் பாலுமகேந்திரா. கல்லைக் கடவுளென்றும் அதற்குச் சக்தி உண்டு என்றும் நம்பச் சொல்வதைப் போல, அந்த போட்டோதான் சிறுவன் என்பது வாதமில்லையே! போட்டோவை தங்கள் உருவத்தின் பிரதிபலிப்பாகத்தான் பார்க்கிறார்களே தவிர, அதுதான் தாம் என்று யாரும் பார்க்கவில்லை. கடவுள் விசயத்தில் பாலுமகேந்திராவின் இந்தப் பதட்டத்தை நாமும் ஓரிரு நிகழ்ச்சிகள் மூலம் அறிந்திருப்பதால் இந்தத் திணிப்பை நம்மால் உணரமுடிகிறது. அது அவசியமில்லை என்பதை அந்தக் காட்சியே உணர்த்தும். தேவையான அளவு, தேவையான இடத்தில் இசை.
அதற்குப் பெயர் தான் இளையராஜா. மென்மையோடு நாம் பார்த்த பழைய பாலுமகேந்திரா படங்களுக்கு குளிர் பின்னணியும், பிலிமும் காரணமாக இருந்தன. இந்தப் படத்தில் டிஜிட்டலில் படமாக்கியிருப்பதால் வெளிறித் தெரியும் சில இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் நெருடலின்றி இயல்பான ஒளியமைப்புடன் கண்ணுக்கு இதமளிக்கிறார் பாலுமகேந்திரா. முற்போக்கான படம் என்றோ, அனைவருக்கும் அவசியமான கருத்துகளைத் தந்திருக்கும் படம் என்றோ நம்மால் இதைச் சொல்ல முடியாதுதான். ஆனால் முன்னேற்றத்தை முடக்கிவிட்டு, கிராமத்தில் முடங்குங்கள் என்று இந்தப் படம் சொல்லவில்லை; நவீன வாழ்க்கை முறையை நோக்கி விரல் நீட்டி குற்றமும் சாட்டவில்லை; வேர்களை மறந்துவிடாதீர்கள் என்று மட்டும்தான் வேண்டுகோள் விடுக்கிறது. வேர்கள் என்பது கிராமம் என்ற இடம் அல்ல; அங்கிருக்கும் மனிதர்கள் என்பதையும் படம் காட்டிச் செல்கிறது. ஜாதியைப் பாதியில் விட்டுவிட்ட சுப்பு, தன் கடைசி வேண்டுகோளாக தமிழை மறந்துடாதே; இந்தத் தாத்தாவையும் மறந்துடாதே என்று கோருகிற இடத்தில் படம் அதற்கான முக்கியத்தைப் பெறுகிறது. வணிகம் குறித்துப் பெரிதும் கவலைப்படாமல் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் சசிக்குமார் பாராட்டுக்குரியவர். திரை மொழியை நன்கு பயன்படுத்தத் தக்க அண்மைக் காலத்துக் கலைஞர்களெல்லாம் பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான். அதன் அடுத்த கட்டத்திற்கு இப்படம் இட்டுச் செல்லும். திரைப்படம் என்ற பார்வையில் ஆரவாரம் இல்லாமல், வணிகச் சமரசமில்லாமல், எளிமையாக இனிவரும் படங்களுக்கு இது முதல் தலைமுறை; தொடக்கம்; முதல் நெருப்பு. திரைப்படங்களை ரசிப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு!