– கி.வீரமணி
தேவாசுர யுத்தம் என்று புராணங்களில் வருகின்றனவே அவைபற்றி தந்தை பெரியார் அவர்கள் தமது சுதந்திர சிந்தனை மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்திப் பேசியும் எழுதியும் வந்துள்ளார்கள்.
தேவர் _அசுரர் போராட்டம் என்பது கடந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்துவரும் ஆரியர்_திராவிடர் போராட்டம் என்பதுதான்.
அக்காலத்தில் அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டனர்; இன்னும் பார்ப்பனர்கள் பூதேவர்கள் என்று அழைக்கப் படுகின்றனரல்லவா?
அசுரர்கள் என்றால் எளிதில் விளங்கிக் கொள்ள,
சுரபானத்தைக் குடித்தவர்கள்_சுரர்கள்
பூமியில் வாழுபவர்களுக்கு பூசுரர்கள் என்ற பெயர் உண்டு. புரட்சிக்கவிஞர் கவிதை வரிகளில்கூட
வான்சுரரை விட்டுவந்த பூசுரந்தம்… என்று வருகிறது.
சுரபானத்தைக் குடிக்காதவர்களுக்குப் பெயர் _ திராவிடர்களுக்கு _ அசுரர் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு அசுரர் பெயரும் அசுரர் என்றே பெரும்பாலும் முடிகின்றதல்லவா? நரகாசுரன்
மகிழாசுரன்
அசுரேந்திரன் என்பவன் அசுரர்களுக்குத் தலைவன்.
அசுரேந்திரன் – 1.(அசு) அசுரத்தலைவன். கஜமுகாசுரன் பிறப்பதற்குக் காரணமானவன். 2.(அசு) தாருகன் குமரன். சூரனுக்குத் தனக்குற்ற துன்பமுணர்த்தி பிரமனால் அறுந்த கை வாரப் பெற்றவன். சூரபதுமனுக்குத் தந்தையின் மரணமுணர்த்தி யுத்தத்திற்கு அனுப்பியவன்.
தேவேந்திரன் – தேவர்களின் தலைவன்.
அசுரர் யார்?
அசுரர் – சுரராகிய தேவர்களுக்கு விரோதிகள். பிரமன் சகனத்திலுதித்து, அப்பிரமனைப் பெண்ணாக நினைத்து இச்சித்தமையால் அசுரராயினர். அமிர்த பான மொழிந்தவர்.
– அபிதானசிந்தாமணி, (பக்கம் 29), புதிய பதிப்பு.
புராணங்களில் _ இதிகாசங்களில் _ யுத்தம் என்பதே இந்த இரு சாராருக்கும்தான்!
இதில் உண்மையான பலம் பொருந்தியவர்கள் (கதைப்படி) அசுரர்களே.
தேவர்களைப் புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டியவர்கள். அவர்கள் சென்று மும்மூர்த்திகளிடம் முறையிட்டு அவர்களைத் துணைக்கழைத்து வந்து, சூழ்ச்சி, சூது, வாது முறைகளிலேயே இந்த அசுரர்களை (வீரத்தால் அல்ல) வீழ்த்தியவர்களாகத்தான் அவர்கள் சித்தரிக்கப்படுகின்றனர்.
இரண்டு பிரபலமான கதைகளைச் சுட்டிக்காட்டினாலே போதுமானது.
பாற்கடலில் உள்ள மிகப்பெரிய விஷப் பாம்புகளைக் கண்டு பயந்து நடுங்கி, மஹாவிஷ்ணுவிடம் முறையிடுகின்றனர் தேவர்கள்.
அந்த வாசுகி பாம்பை அடக்கி விஷத்தை _ எடுத்தபிறகு அதனுள் உள்ள அமுதத்தைப் பருகிடும் அரிய வாய்ப்புப் பெறலாம் என்ற ஆசையுடன் சென்றுகூற, தேவர்களும் அசுரர்களும் அப்பாம்போடு போராடுகிறார்களாம் _ கதைப்படி.
அசுரர்களுக்குத் தலைப்பக்கம் ஒதுக்கியும் தேவர்கள் வால்பக்கம் ஒதுக்கியும் (சூது, சூழ்ச்சி, புரிகிறதா?) ஒப்பந்தம், சரி பகுதி இருவருக்கும் என்பதே.
அதுவே நியாயமா? தலைப்பக்கம் உள்ளவனின் ஆபத்து, வால்பக்கம் உள்ளவனுக்கு உண்டா? இல்லை என்றாலும் அப்பாவி அசுரர்கள் போராடி அதனைக் கிழித்து, அமுதம் வெளியே வரச்செய்தனர்; செய்தபிறகு ஒப்பந்தப்படி 50 விழுக்காடு தர வென்ற தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) மனம் வரவில்லை. அவர்களை ஏமாற்றத் திட்டமிட்டு, விஷ்ணுவே இதற்குக் கர்த்தா! (அவன் யோக்கியதை எப்படி பார்த்தீர்களா?) மோகினி அவதாரம் எடுத்து, (பெரிதும் அசுரர்களை அழிக்க மோகினிகளே அந்நாள் முதல் இந்நாள் வரை பயன்படும் கருவிகள் போலும்!) ஒப்பந்தப்படி 50 விழுக்காடும் தராமல் மோகினியைக் காட்டி மயக்கி 100க்கு நூறு சதவிகிதத்தை (கல்வி, உத்தியோகங்களில் வகுப்புரிமை _ நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம், தந்தை பெரியார் வருவதற்கு முன்பிருந்ததுபோல) தாங்களே ஏகபோகமாக்கி அனுபவித்தனர்!
இதைவிட பெரும் சமூக அநீதி வேறு உண்டா? வைகுண்ட ஏகாதசி _ ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு என்ற பெயரில் பார்ப்பனத் திருக்கூட்டம் _ பூதேவர்கள் கூட்டம் உண்டு கொழுக்கிறது.
தூங்கும் கடவுளுக்கு ஆறுவேளை பூசையோடு, நைவேத்தியங்கள் _ பிரசாதங்கள் சாமி சாப்பிடுவதாகக் கணக்கெழுதி, தூங்கும் சாமியை திருப்பள்ளி எழுச்சி பாடி கிளப்பிக் கிளப்பிப் பார்ப்பது ஒருபுறமிருக்கட்டும்.
இதுபற்றி ஒரு நாளேடு, அர்த்தமற்ற இந்தப் புராணக் குப்பைகளை _ மூலையில் எறியாமல் மக்கள் மூளைக்கே ஏற்றிடும் அன்றாடத் திருப்பணிகளைச் செய்துவரும் ஏட்டில், திருமாலிடம் தோன்றிய ஏகாதசி என்ற தலைப்பில் 7-_1_2014இல் வந்துள்ள கதையைப் படித்தாலே, அசுரர் பலம் _ தேவர்_ஆரியர் பலம் தெளிவாக விளங்கும்.
முன்காலத்தில் முரன் என்ற அசுரன், தேவர்கள், ரிஷிகள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் நடத்திய யாகங்களை அழித்து மகிழ்ச்சியடைவான். மேலும் இந்திரனை வென்று, அவனை இந்திர லோகத்தில் இருந்து விரட்டியடித்தான். தேவலோகத்தில் இருந்த கற்பகவிருட்சம், காமதேனு போன்றவற்றைக் கவர்ந்து சென்று தன் இருப்பிடத்தில் வைத்துக்கொண்டான்.
முரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் அனைவரும் கயிலாயம் சென்று, சிவபெருமானிடம் முறையிட்டனர். ஈசனோ, உங்கள் இன்னல்களைப் போக்கும் வல்லமை மகாவிஷ்ணுவிடமே இருக்கிறது. அனைவரும் அவரிடம் சென்று உங்கள் சங்கடங்களைத் தீர்த்து வைக்கச் சொல்லி வேண்டுங்கள் என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்றனர். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த நாராயணரைத் தரிசித்த தேவர்கள், தாங்கள் வந்த காரணத்தைக் கூறினர். சுவாமி! வெகு காலத்திற்கு முன்பு பிரம்மாவிடம் இருந்து தாளஜங்கன் என்ற பெரிய அரக்கன் தோன்றினான். அவனது மைந்தன் முரன் என்பவன், தேவலோகத்தை வதைத்து வருகிறான். தாங்கள் அருளிய சொர்க்கலோகத்தைத் தனதாக்கிக் கொண்டான். அஷ்டதிக்குப் பாலகர்களையும் விரட்டிவிட்டு, அந்தப் பதவியில் அரக்கர்களை நியமித்துவிட்டான். அவன் உலகை அழிப்பதற்குள் தாங்கள்தான் முரனை அழித்து உலகத்தைக் காத்தருள வேண்டும் என்றனர்.
திருமால், தேவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, சங்கு சக்கரத்துடன் கருடன் மீது ஏறி முரனுடன் போரிடப் புறப்பட்டார். மகாவிஷ்ணுவுக்கும், முரனுக்கும் போர் மூண்டது. இருவரும் பல ஆயுதங்களைக் கொண்டு பலமாக மோதிக்கொண்டனர். யுத்தம் பல நாட்கள் நடந்தது. முரன் பெற்ற வரத்தால், திருமாலின் சக்கராயுதம், அவனைத் துன்புறுத்தியதே தவிர உயிரைப் பறிக்க முடியவில்லை.
யுத்தத்தால் களைப்படைந்த திருமால், விதரியாசிரமம் என்ற இடத்திற்குச் சென்று அங்குள்ள ஒரு குகையில் பள்ளிகொண்டார். முரன் திருமாலைத் தேடி, அங்கேயே வந்துவிட்டான். குகைக்குள் பள்ளிகொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக, சூலாயுதப் படையை ஏவினான். அப்போது மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். திருமாலின் அபார சக்தியுடன் வெளிப்பட்ட அவள், வியக்கத்தக்க பல ஆயுதங்களைக் கையில் ஏந்தியவாறு போருக்கு ஆயத்தமானவள் போல நின்றாள்.
அந்தப் பெண்ணைக் கண்ட முரன், பெண்ணே! நீ என்னுடன் போர் புரியப் போகிறாயா? என்று கேட்டு ஏளனமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு அடங்குவதற்குள், அந்தப் பெண் தன் ஆயுதத்தால் அவனை மண்ணில் சாய்த்திருந்தாள். சத்தம் கேட்டு சயனத்தில் இருந்து விழித்துக் கொண்ட திருமால், முரன் இறந்து கிடப்பதையும், அருகில் ஒரு பெண் நிற்பதையும் கண்டார்.
அந்தப் பெண்ணிடம் யார் நீ? என்று வினவினார். சுவாமி! நான் ஏகாதசி. உங்கள் கருத்தறிந்து, தங்கள் திருமேனியில் இருந்து வெளிப்பட்டு முரனை அழித்தேன். இவை அனைத்தும் உங்கள் மகிமையே! என்று கூறினாள் அந்தப் பெண்.
மகிழ்ச்சி அடைந்த மகாவிஷ்ணு, ஏகாதசிக்கு வரம் அளித்தார். நீ தோன்றிய இந்த நாளில் உபவாசம் இருந்து என்னை வழிபடுபவர்களுக்கு நான் சொர்க்கம் வழங்குவேன் என்று கூறினார்.
பெண்களை விட்டுத்தான் ஆரியம் _ தேவர்கள் _ தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டார்கள் என்பதன் மூலம் பெண்களையும் அல்லவா இழிவுபடுத்தி இருக்கின்றார்கள்?
பெண்களே, இதை நீங்கள் கண்டு வெகுண்டு எழவேண்டாமா?
இதை உணர்ந்துதான் வள்ளுவர் குறளில்,
தேவர் அனையர் கயவர் என்று தெளிவாகக் கூறினார். தேவர் என்பது ஆரியர்களையே!
அவர் காலத்தில் உலாவந்த புராணங்களையே அவர் உவமையாகக்கூட காட்டியுள்ளாரே!
இந்திரனே சாலும் கரி என்று முடியும் குறள் இதற்குப் போதிய சான்று அல்லவா?
எனவே, இன்றும் தேவாசுரப் போராட்டம் நீடித்துக்கொண்டே உள்ளது. அண்மையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனப் பரிந்துரையில்கூட தேவாசுரப் போராட்டம் _ பார்ப்பனர்_அல்லாதார் போராட்டம்தானே சென்னை உயர் நீதிமன்றத்திலே வெடித்தது! முடியவில்லை… தொடர வேண்டும்.