கேள்வி : மதுவையும், ஊழலையும் ஒழிக்க கழகத்தின் சார்பில் பிரச்சாரம் செய்யப்படுமா?
– சு.வெ.பெரியார்செல்வன், இராணிப்பேட்டை
பதில் : அடிப்படை மாற்றங்களை உருவாக்கினால் ஒழிய இந்த இரண்டையும் ஒழிப்பது எளிதான செயல் அல்ல; வேண்டுமானால் விளம்பரம் தேடிட அந்த முயற்சிகள் சிலருக்குப் பயன்படும்.
கேள்வி : தமிழக அரசு, கோவில்களுக்குச் சொந்தமான யானைகளுக்குப் புத்துணர்ச்சி முகாம்களை நடத்துவது சரியா?
– சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : மனிதர்கள் செத்தாலும் பரவாயில்லை; யானைக்குப் புத்துணர்வு வருவது அவசியம் என்பது சாஸ்திரோக்கம்; ஆட்சி நீடிக்க இத்தகைய சாஸ்திர சம்பிரதாய, ஜோதிட ஆலோசனைகள் பெரிதும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கைப்படிதான் எல்லாமும்!
கேள்வி : பார்ப்பனீயத்தை நாம் கண்டிக்கும்போது, பார்ப்பனர்களைவிட, பார்ப்பன தாசர்களுக்கு மட்டும் அதிக கோபம் வருவது ஏன்?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
ஆசிரியர்_பதில் பேயைவிட பேய் பிடித்தவர்கள்தானே அதிகமாக ஆடுகிறார்கள்; கூச்சல் போடுகிறார்கள், அதுபோல!
கேள்வி : பெரியார் உலகம் உண்டாக்குவதைப்போல் அன்னை மணியம்மையாருக்கு கழகத்தின் சார்பில் சிறப்புச் செய்யப்படுமா?
– அ. எழிலரசன், திருவண்ணாமலை
பதில் : பெரியார் உலகம் என்பதில் அன்னையாரின் தொண்டும் பணியும் அடங்கியதுதானே!
கேள்வி : உலக நாத்திகர்கள், நாத்திக அறிவியலறிஞர்கள், சமுதாயப் போராட்ட விஞ்ஞானிகளின் வரலாற்று ஆவணம், புகைப்படங்கள் பெரியார் உலகம் அருங்காட்சியகத்தில் நிறுவப்படுமா? – பொன்.வெங்கடேசன், வடமணப்பாக்கம்
பதில் : வந்து பார்த்து மகிழுவீர்கள். அதற்கு முன்பு நன்கொடைகள் திரட்டுங்கள் அய்யா!
கேள்வி : கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டில்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றி இருப்பதன் மூலம் இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளதா? – ஜெ.ச. மாசிலாமணி, மதுராந்தகம்
பதில் : அதன் தாக்கம் ஓரளவு இருக்கும்; ஆனால் பெரிய அளவில் இருக்குமா என்பது கேள்விக்குறியே!
கேள்வி : லோக்பால் மசோதா நிறைவேற்றுவதால் ஊழலை ஒழிக்க முடியுமா?
– வெங்கட.இராசா, ம.பொடையூர்
பதில் : முடியும் என்று நம்புகிறார்கள்; ஊழலைச் செய்தவர்களைத் தண்டிக்கும் சட்டம் அது! அப்படியானால் ஊழல் நிரந்தரமாகிவிட்டதோ என்றும் எண்ண வேண்டியும் உள்ளது!
கேள்வி : மத்திய மாநில அரசுகளின் தவறான நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்திலேயே எதிர்த்துக் குரல் கொடுக்காமல் காலம் கடந்து கர்ஜிக்கும் ராகுல் காந்தி பற்றி? – செ. சாந்தி, அம்மாபாளையம்
பதில் : அரசியலில் அவ்வப்போது வித்தைகளும் வித்தகர்களும் தோன்றிக்கொண்டே இருப்பது விந்தை அல்லவே!
கேள்வி : ஆயிரக்கணக்கான குஜராத் மக்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி தற்பொழுது நீதிமன்றத் தீர்ப்பால் நிம்மதி அடைந்துள்ளேன் என மனச்சாட்சியின்றி பேசியுள்ளது பற்றி?
– கோ.சரஸ்வதி, பெரம்பலூர்
பதில் : மனச்சாட்சி அவருக்கு(மோடிக்கு) இருந்தால் காரில் அடிபட்ட நாய்க்குட்டி உவமையை 1000 பேருக்குமேல் கொல்லப்பட்ட இஸ்லாமிய சகோதர சகோதரிகளைப் பற்றி ஒப்புவமை கூறியிருப்பாரா?
கேள்வி : மத்திய அரசினால் கொண்டுவரப்பட உள்ள நீதித்துறை நியமன ஆணையத்தின்மூலம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா?
– சா. கலியபெருமாள், ஆவூர்
பதில் :பொறுத்திருந்து பார்க்க வேண்டும்; அக்குழு அமைப்பைப் பொறுத்துத்தான் உறுதியாகச் சொல்ல முடியும்.