– மஞ்சை வசந்தன்
புத்தாண்டும், பொங்கலும் தமிழர் விழாக்கள் என்று குறுக்கிச் சுருக்கிச் சொல்லக்கூடாது. அவை தரணிக்குத் தமிழர் தந்த கொடை; தரணி முழுமைக்கும் ஏற்றது, உரியது. தமிழர் உருவாக்கியது என்று சொல்லலாம். மாறாக, அது தமிழர்க்கு மட்டும் உருவாக்கியது அல்ல.
தமிழர் வாழ்வும், சிந்தனையும், கலையும், ஆய்வும், பண்பாடும், நாகரிகமும், மொழியும், மருத்துவமும் தமிழர்க்கு மட்டுமே உரியவை அல்ல. அவை உலகிற்கே உரியவை; உலகு உள்ளளவும் உகந்தவை.
யாதும் ஊரே யாவரும் கேளிர், இது தமிழர்க்கு மட்டும் உரியதா? இது சொல்லப்பட்ட காலத்திற்கு மட்டும் பொருந்துவதா? இது சொல்லப்பட்ட மொழிக்கு மட்டும் ஏற்றதா?
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இச்சிந்தனை பொருந்தாமல் போகுமா? அல்லது இதை மாற்றி, மறுத்து வேறு ஒரு சிந்தனையை வைக்க முடியுமா? அல்லது இதைவிட உயர்வாய், உலக நோக்கில், மனிதநேய மலர்ச்சியில், ஒற்றுமை, பாசம், நேசம், உறவு, உணர்வு செறிந்த ஒன்றை வேறு யாராவது இனி எதிர்காலத்திலாவது கூறிவிட முடியுமா?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் வள்ளுவர் கூறியதைவிட வேறு எவராவது கூறியுள்ளனரா? கூறிவிட முடியுமா? இதைவிட உயரிய நோக்கு உலகில் உண்டா?
இயற்கை மருத்துவத்தில் இணையற்ற அறிவு:
மாதுளையும் மிளகும் சேர்த்து உண்டால் மானுடர்க்குச் சிறந்தது, உடலுக்கும் குடலுக்கும் உகந்தது என்பது தமிழன் உண்டறிந்து, உண்மை கண்டறிந்து சொன்னது. மருத்துவம் இது சரியென்கிறது. நுரையீரலுக்குத் தூதுவளை தமிழன் கண்டது. உலக சுகாதார நிறுவனம் ஏற்கிறது.
வேம்பும், மஞ்சளும், உயர்ந்த மருத்துவப் பயன்தரும். கண்டவர் தமிழர். இன்று உலக மருத்துவர்கள் ஒட்டுமொத்தமாய் ஏற்றுக் கொள்கின்றனர்.
கீழாநெல்லி _ மஞ்சள்காமாலை, கல்லீரல் நோய்களுக்குக் கைகண்ட மருந்து _ தமிழன் சொன்னான். இதைவிட்டால் மருந்தே இல்லை, உலகம் ஒத்துக்கொள்கிறது.
நிலவேம்பு காய்ச்சலுக்கு நிகரற்றது. தமிழன் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறிந்து சொன்னான். அறிவியல் உலகம் இன்று வியந்து ஏற்கிறது. அரசும் பரிந்துரைக்கிறது.
பொன்னங்கண்ணியும், முருங்கையும், சோற்றுக்கற்றாழையும், நொச்சியும், ஆடுதொடா இலையும், முசுமுசுக்கையும், வல்லாரையும், கரிசாலையும், வில்வமும், துளசியும், செம்பருத்திப் பூவும், தாமரைப் பூவும், அருகம்புல்லும், மருதம் பட்டையும், அத்தியும் அனைவரையும் காக்கும் என்பதைத் தமிழன் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன் அறிந்து சொன்னான். இன்று அனைத்து நாடுகளும் ஏற்றுத் தேடி அலைகின்றனவே!
அடுக்கிக் கொண்டே போகலாம். ஆயிரமாயிரம் மருத்துவச் செய்திகளைச் சொல்லலாம். அவ்வளவும் தமிழர் கண்ட, சொன்ன மருத்துவ அறிவுகள்; அதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன்.
பரதநாட்டியம்:
பரதம், பரதவர் என்பவை பரவை என்பதிலிருந்து வந்தவை. பரவை என்றால் கடல். கடல் சார்ந்து வாழ்ந்தவர்கள் பரதவர்கள். கடல் அலையில் படகு ஆடிவருவது போல் அப்பக்கமும் இப்பக்கமும் ஏறி இறங்கி ஆடுவது பரதநாட்டியம் எனப்பட்டது. இது தமிழர் கலை. ஆரியர் இதைக் களவாடி, தமதாக்க முயன்றபோது சொல்லாய்வில் தோற்றனர்.
தமிழர் உரிமையை எவர் களவாடினாலும், எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் தமிழ்ச் சொற்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்; தமிழர் எச்சங்கள் அவற்றை நிலைநாட்டிவிடும்! தமிழன் தொன்மையும், ஆழமும் அப்படி.
ஆரியம் களவாடியவையெல்லாம் இன்று அடுக்கடுக்காய் வெளிப்படுவது இப்படித்தான்! தொடர்ந்து வெளிப்படுத்தி தமிழர் சிறப்பை நிலைநாட்ட வேண்டியது தமிழ் ஆய்வாளர்களின் கட்டாயக் கடமையாகும்.
பெருமிடு தமிழர் கட்டியது!:-
எகிப்தில் உள்ள பெருமிடு தமிழர் கட்டடக் கலை; தமிழர் கட்டியது. எகிப்தில் வாழ்ந்ததும் தமிழர்; ஆண்டதும் தமிழர். அக்கட்டடக் கலைக்கு, நுட்பத்திற்கு, ஆற்றலுக்கு, அறிவியல் திறனுக்கு இணையாய் உலகில் எதைக் காட்ட முடியும்?
பெருமிடு என்பது தூய தமிழ்ச்சொல். இடுதல் என்றால் புதைத்தல், இடுகாடு என்றால் புதைக்கும் இடம் என்று பொருள். இறந்தால் புதைப்பது தமிழர் மரபு; இறந்தால் எரிப்பது ஆரிய மரபு.
தமிழர் மரபுப்படி சாதாரண எளிய மக்கள் இறந்தால், ஆறு அடி நீளத்திற்குச் சிறு குழிவெட்டி இடுவது (புதைப்பது) சிற்றிடு எனப்பட்டது. அரசர் இறந்தால் பெரிய அளவில் கட்டடம் எழுப்பிப் புதைப்பது பெரும்+இடு=பெருமிடு எனப்பட்டது. அதுவே பெரமிடு என்று மருவி அழைக்கப்படுகிறது.
பெண்ணுரிமை:
பெண்களைச் சம உரிமையுடன், உயர் நிலையில் போற்றியவர்கள் தமிழர்கள். சடங்கற்ற, ஜாதியற்ற, காதல் மணம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைவரும் செய்து கொண்டவர்கள் தமிழர்கள். தாலியில்லாமல் மாலை மட்டுமே மாற்றி மணம்புரிந்து கொண்டனர். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டு ஆனாலும் இதுதானே புரட்சி மணம். இப்புரட்சியை அப்போதே செய்தவர்கள் தமிழர்கள்!
மதமற்ற ஜாதியற்ற சமுதாயம்:
ஆரியர் நுழைவதற்கு முன் தமிழர் வாழ்வில், மதமும் இல்லை, கடவுளும் இல்லை; ஜாதியும் இல்லை, ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் இல்லை. எல்லோரையும் உயர்வாகவும், உறவாகவும் எண்ணி உயர்வாழ்வு வாழ்ந்தனர்.
பகுத்தறிவும் மனிதநேயமும்:
தமிழர், ஆரிய கலப்பிற்கு முன் வாழ்ந்த வாழ்வு பகுத்தறிவு வாழ்வு. அவர்களிடையே எந்த மூடநம்பிக்கையும், மூடச் சடங்கும் கிடையாது.
அதேபோல், பிறருக்குத் தொண்டு செய்யவே வயது முதிர்ந்தநிலையில் குடும்ப வாழ்வு விட்டு, பொதுத் தொண்டு ஆற்ற அந்தண வாழ்வு மேற்கொண்டனர். அந்தணர் என்பது ஜாதியல்ல. அது பொதுத் தொண்டாற்றுவோருக்கான பெயர்.
காதலும், வீரமும், தொண்டறமும், பண்பாடும், பகுத்தறிவும், அறிவியலும், கலைநுட்பமும், நன்றி பாராட்டலும் தமிழர் வாழ்வின் அங்கங்கள்.
மாண்பின் உச்சம்:
ஓர் இழவு வீடு. கணவன் இறந்துவிட்டான். ஆற்றாத அழுகுரல் ஒருபக்கம்; இளம் வயதில் அவன் இறந்து போனதால் வேதனை விளிம்பில் அமைதி மறுபக்கம்.
ஒரு மூதாட்டி ஒரு நீர்ச்சொம்புடன் வெளியில் வந்தாள். எல்லோரும் அவளையே நோக்கினர். நீர்ச்சொம்பைத் தரையில் வைத்தவள், கையிலிருந்த முல்லை மொட்டுக்களில் ஒன்று என்று சொல்லி ஒரு மொட்டை நீர்ச்சொம்பில் போட்டாள். அடுத்து இரண்டு என்று சொல்லி இரண்டாவது மொட்டை நீர்ச்சொம்பில் போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.
அங்கிருந்த அனைவரும் ச்சச்சோ… என்று நாக்கொலி எழுப்பி இரக்கத்தை வெளியிட்டனர். இறந்தவனின் மனைவி இரண்டு மாத கர்ப்பத்துடன் உள்ளாள். ஊர் அறிந்து கொண்டது. எதிர்காலத்தில், கணவன் இறந்தபின் பிள்ளை எப்படிப் பிறந்தது என்ற பழி, இழிப்பேச்சு வரக்கூடாது என்ற மனிதநேயத்தில், எவ்வளவு மாண்போடு, இழவு வேளையில், சொல்ல வேண்டியதை எவ்வளவு மாண்போடு, குறிப்பால் வெளிப்படுத்தும் மரபைத் தமிழர் கையாண்டனர் பாருங்கள்! இப்படியொரு மாண்பை, மனித நேய மலர்ச்சியை, உலகில் எங்காவது காணமுடியுமா? காட்ட முடியுமா?
பொங்கலும் புத்தாண்டும்:
பொங்கல் தமிழர் உருவாக்கிய விழாவானாலும், அது தமிழர்க்கு மட்டும் உரிய விழாவன்று. நன்றியுணர்வுடைய அத்தனை மனிதர்க்கும் அது உரியது. அவர்கள் உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த நாட்டினராய், எந்த இனத்தினராய், எந்த மதத்தினராய் இருந்தாலும்.
உற்பத்திக் காரணிகளுக்கு நன்றி பாராட்ட எடுக்கப்படும் விழா இது. எனவே, இது எக்காலத்திற்கும் எல்லோருக்கும் உரியது; எல்லோரும் கொண்டாட உரிமையுடையது. எனவே, இது உலக விழா, உலக மக்களுக்கான விழா!
தை முதல் நாள் புத்தாண்டின் தொடக்கம் என்பது தமிழர் கணக்கீடு என்றாலும், தமிழர்க்கு மட்டுமல்ல உலகிற்கே உகந்தது; உரியது.
சூரியன் இருப்பு தென்கோடியிலிருந்து வடக்கு நோக்கி, நகரத் தொடங்கும் நாள் ஆண்டின் தொடக்கமாகத் தமிழர் கொண்டனர். அதை உலகின் பல நாடுகள் ஏற்றன. ஆங்கிலப் புத்தாண்டும் அதை ஒட்டியதே! ஏசு பிறப்பு ஆங்கிலப் புத்தாண்டு என்பது அறியாமை. ஏசு பிறந்தது டிசம்பர் 25. காலக் கணக்கீட்டிற்கு ஏசு பிறப்பதற்கு முன் பின் என்று கொள்ளப்பட்டதே தவிர ஆண்டு பிறப்பதற்கு அல்ல.
சூரியன் காலையில் தோன்றி மீண்டும் காலையில் தோன்ற ஆகும் காலம் ஒருநாள். ஒரு முழு நிலவு தோன்றி மீண்டும் ஒரு முழுநிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம். அதேபோல் சூரியன் தென்கோடியிலிருந்து வடக்குநோக்கி நகர்ந்து வடகோடிக்குச் சென்று மீண்டும் தென்கோடியை அடைய ஆகும் காலம் ஓராண்டு. ஆக, எல்லாம் இயற்கை நிகழ்வை அடிப்படையில் வைத்த கணக்கீடு. இது அறிவியல் அடிப்படையிலானது. ஆனால், சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு, மூடநம்பிக்கையில் முளைத்தது. எனவே, தமிழர் கண்ட புத்தாண்டு அறிவுக்குகந்த உலகிற்கு உரிமையான ஆண்டு. எனவே, தை முதல் நாள் புத்தாண்டு என்பது உலகிற்கே உகந்தது! இது தமிழர்க்குச் சிறப்பு.