தமிழ் மண்ணில் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்ததினால் தூக்கிலிடப்பட்டான் கட்டபொம்மன். அந்த வீரனின் பிறந்த நாள் ஜனவரி 3 என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர் தமிழரல்ல, தெலுங்கர் என்கிறார்கள், பச்சைத் தமிழர்கள்.
கட்டபொம்மனை வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை மன்னன் ராஜாதி ராஜா ராஜகுல விஜயரகுநாத தொண்டைமான், பச்சைத் தமிழன்தான்.
கட்டபொம்மன் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டார் என்பதற்காக அவர் தியாகத்தைத் தள்ளி வைப்பதும், தமிழன் என்பதற்காக புதுக்கோட்டை மகாராஜாவின் துரோகத்தைக் கொண்டாடவும் முடியுமா?
தமிழர்களான மருது சகோதரர்கள், தெலுங்கு பேசுகிறவர் என்பதற்காக கட்டபொம்மனைக் காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக ஊமைத்துரை, கட்டபொம்மன் சகோதரர்களுக்காக தன் ராஜ்ஜியத்தையும் தன் உயிரையுமே தியாகம் செய்தார்கள்; சின்ன மருது பெரிய மருது என்கிற அந்த வீர சகோதரர்கள்.
தன்னைப்போலவே தெலுங்கு பாளையக்கார மன்னன் என்பதற்காக கட்டபொம்மனை ஆதரிக்கவில்லை எட்டப்பன். வெள்ளையனிடம் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான்.
தூக்கு மேடை ஏறும்போது தன் இனத்தைச் சேர்ந்த எட்டப்பன் முகத்தில் காறி உமிழ்ந்தான் மாவீரன் கட்டபொம்மன்.
தமிழன் புதுக்கோட்டை மகாராஜாவும் தெலுங்கன் எட்டப்பனும் ஓர் இனம்.
தமிழன் மருது சகோதரர்களும் தெலுங்கன் கட்டபொம்மனும் ஓர் இனம்.
துரோகிகள் எப்போதும் இனம் மொழி பார்ப்பதில்லை. தியாகிகளும் அப்படித்தான்.
வெள்ளையனை எதிர்த்து தன்னையும் தன் குடும்பத்தையுமே தியாகம் செய்து மதத்தைத் தாண்டி மாவீரனாக நின்றான் திப்புசுல்தான். அவன்தான் நமது முன்னோர். அவன் காலத்திலே வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்தார்கள் ஆற்காடு நவாப்பும், ஹைதராபாத் நிஜாமும்.
எந்த மொழி பேசினாலும் தியாகிகளே நமது முன்னோர்கள். சொந்த மொழி பேசினாலும் துரோகிகளே நமது எதிரிகள்.
– முகநூலில் வே. மதிமாறன்