– மதிமன்னன்
தமிழர்தம் மொழியையும் வாழ்வையும் கலையையும் அறிவையும் அழித்தது ஆரியமே. ஆரியத்தின் அழிம்புகளை ஆதாரத்தோடு நாம் எடுத்துக்காட்டி எண்பித்தால் ஏற்க மறுத்திடும் ஏமாளிகளாக நம் மக்கள் இன்னமும் இருக்கின்றனர். எதிர்த்தும் பேசி விதண்டாவாதம் செய்கின்றனர் பார்ப்பனர் திருந்திவிட்டனர் என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, அவரைத் தனித்துப் பிரித்துச் சுட்டக்கூடாது என்றும் அவாளும் நம்மாளே என்கின்றனர். பார்ப்பனரும் தமிழரே என்கின்றனர். எப்படியாம்?
பார்ப்பனர் திராவிட இனத்தவரா? தமிழர் திராவிட இனத்தவர். தமிழ்மொழி திராவிட மொழிகள் 40இல் ஒன்று. பார்ப்பனர் தமிழர் என்றால், ஆரியர் யார் என்ற வரையறை வேண்டாமா? ஆரியர் வந்தேறிகள் அல்லர் என்று ஆர்எஸ்.எஸ்சும் அவர்தம் பரிவாரங்களும் பேசத் தொடங்கி உள்ளனர். அப்படி என்றால், அவாள் ஏன் மொழியாலும் பழக்கவழக்கத்தாலும் வேறுபடுகின்றனர்? வேறெங்கும் போகவேண்டாம், பார்ப்பனர் தம்மைத் திராவிடர் என ஒப்புக்கொள்கின்றனரா? உடையால், பேச்சால், பழக்கவழக்கத்தால், வாழும் முறைகளால், வேறுபட்டுத்தானே காண்கின்றனர்?
மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே எனக்கூறும் தொல்காப்பியம் (பொருள் 31) நான்குவர்ணப் பிரிவைச் சுட்டிக்காட்டுகிறது. ஓதுவதும் தூதுபோவதும் நால்வர்ணத்தாரில் உயர்ந்தோராகிய மன்னர்க்கும் பார்ப்பனர்க்கும் உரியது என்பதை அவற்றுள் ஓதலுந் தூதும் உயர்ந்தோர்மேன எனவும் தொல்காப்பியமே கூறுகிறது (பொருள் 28). பார்ப்பனர்க்குரிய புற அடையாளங்களைக்கூடக் கூறிடும் அந்த இலக்கண நூல், மெய்ப்பாடுகளின் எட்டு வகைகளையும் பாடல் 247இல் கூறுகிறது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று கூறுகிறது. அவாள் நவரசம் என ஒன்பதைக் கூறுகின்றனர். இந்த வேறுபாடு ஒருபுறம்.
அவாளின் தமிழ்ப் பேச்சு
முதல் மெய்ப்பாடாம் நகை (சிரிப்பு) என்பதை விளக்கும் வகையில் பாடல் 248 எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப்பட்ட நகை நான்கென்க எனக் கூறி நான்கு வகைகளில் சிரிப்புத் தோன்றும் என்கிறது. சிரிப்புக்கு இடமாகும் செய்கைகள் எவையெவை என்பதைச் சுட்டும்போது, ஆரியர் கூறும் தமிழின் கண்ணும் எனக் கூறுகிறது. பார்ப்பனர் பேசும் தமிழ் சிரிப்புக்கு இடமாகிறது என்பது இரண்டாயிரம் ஆண்டுகளாகவே இருந்து வரும் நிலை. 2014ஆம் ஆண்டிலாவது அந்நிலை மாறியிருக்கிறதா?
பாஷை, ஜலம், பிரசங்கம், உபன்யாசம், போஜனம், பரிகாரம், தர்மம், பரிகரித்தல், பகிஷ்காரம் என்றெல்லாம் பேசுவதும் எழுதுவதும் ஜெயேந்திர சங்கராச்சாரி, சுப்ரமணியசாமி போன்ற பார்ப்பனர் அனைவர்க்கும் பழக்கமாகவே உள்ளதே! இப்படிப் பேசியவரும், இப்படித்தான் பேச வேண்டும் எனத் தம் நண்பர்களாகிய பார்ப்பனரல்லாதாரை வற்புறுத்தியவரும் ஆன ஆள்தான் இங்கே தமிழ்த்தாத்தா! என்ன கொடுமை? இந்த அழகில் இவர்களும் தமிழர்களாம்!
தமிழாக்குறிச்சி, தமிழ்ப்பாடி என்றெல்லாம் தம் ஊர்களுக்குப் பெயர் வைத்து மகிழ்ந்தனர் தமிழர். அவர்களின் ஊர்களை மாயவரம், (மயிலாடுதுறை) வேதாரண்யம் (மறைக்காடு), விருத்தாசலம் (முதுகுன்றம்) என்றெல்லாம் தம் வடமொழியில் மாற்றி வழங்கச் செய்து வருபவர்கள் பார்ப்பனர்கள்தானே! அவர்கள் தமிழர்களா?
நம் பண்பாட்டுக்கு மாறானோர்
சோறும் நீரும் விற்பனைக்கு உரியன அல்ல என்பது தமிழர் பண்பாடு. வறியவர்க்குச் சோறிடுவதும் ஊர்த் தொழிலாளர்க்கு இரவுச் சோறு தருவதும் தமிழர் பண்பாடு. இன்றளவும் இருந்து வருவதாகும். மாறாக, சோறு விற்கும் தொழிலைச் செய்துகொண்டும் அந்தக் கடைக்குத் தம் ஜாதிப் பெயரை வைத்துப் பீற்றுவதும் பார்ப்பனரின் வேலையாக உள்ளது. மனுதர்மப்படியே கூட சோறு விற்கக் கூடாது. இந்நிலையில் இவர்கள் தமிழர்களா?
மாடுகளை மேய்த்துக் கொண்டு நாடோடிகளாய்த் திரிந்தவர்கள் நாட்டின் வளமான பகுதிகளில் தங்கிக் கொண்டதோடல்லாமல் சுட்ட செங்கல்லால் வீடு கட்டிக் கொள்ளவும், மாடி வைத்துக் கட்டிக் கொள்ளவும் வீட்டில் குடிநீருக்காகத் தனித்தனிக் கிணறு வெட்டிக் கொள்ளவும் அரச அனுமதி பெற்று கட்டிக்கொண்டனர். அத்தகைய அனுமதியை மண்ணின் மக்களுக்கு வழங்க மறுத்தனர் அக்கால மன்னர்கள். அப்படி மன்னர்களை மயக்கி மந்தகாச வாழ்வு வாழ்ந்து வருபவர்கள் தமிழர்களா?
தாய்மையைப் போற்றி, தாய் வழிச் சமூகத்தை வளர்த்தவர் தமிழர். வந்தவரான ஆரியர் தந்தை வழிச் சமூகமாக அதனை மாற்றி மகளிரைப் பண்டப் பொருளாக்கி விட்டனர். தாய்நாடு என நாம் சொன்னால் தந்தைநாடு என்பவர்கள் ஆரியர்கள். எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே என்றுதான் பார்ப்பன பாரதி பாடல் எழுதினான். இவர்கள் எப்படித் தமிழர் ஆவர்?
தமிழர் நாட்டில் 1834இல் தொடங்கப்பட்ட சென்னை உயர்நிலைப் பள்ளியில் (பின்னர் தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு இது முன்னோடி) 1855வரை தாழ்த்தப்பட்ட இன மாணவர் யாரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பின்னர் அவர்களைச் சேர்த்துக்கொள்ள ஆங்கில அரசு அனுமதித்ததால், கல்விக்கழக மேலாண்மைக் குழுவிலிருந்து விலகியவர் பார்ப்பன உறுப்பினர் ஒருவர். மண்ணின் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் எப்படித் தமிழர் ஆவர்?
பார்ப்பனர் பலவகை
சங்க காலத்திலிருந்து இன்றுவரை பொருள் மாறாமல் வழக்கில் இருந்துவரும் சொற்கள் என இரண்டைக் குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். பரதவர்(மீனவர்), பார்ப்பனர் என்பனவே அவை. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல்காப்பியம்-_பொருள் 75) பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் (பாடல் 502) என்றும் தொல்காப்பியம் குறிப்பிடும். வேளாப் பார்ப்பான் வாள் அரந்துமிய எனும் அகநானூற்று (பாடல் 94) வரிகள் பார்ப்பனர் சங்கு அறுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது. சங்கதனைக் கீறுகீறென அறுக்கும் கீரனோ என் பாட்டைப் பழுதென்பவன்? என்று சிவன் கேட்டதாக நாட்டார் பாடல் ஒன்று உண்டு. சிவன் எழுதி பார்ப்பனத் தருமிக்குக் கொடுத்த பாடலில் பொருள் குற்றம் கூறியமைக்காக நக்கீரனைப் பற்றிக் கூறிய சொற்களாம்.
தூதொய் பார்ப்பான் எனக் கூறும் அகப்பாடல் (எண் 337) வரிகளால் அவாள் தூதுபோகும் தொழிலையும் செய்துள்ளனர். காதலன், காதலி இடையே தூதுபோகும் தொழிலில் அவர்கள் ஈடுபட்டிருந்துள்ளனர்.
கர்நூல் மாவட்டம், கம்மம் வட்டத்தில் மாதங்கியை வழிபடும் பார்ப்பனர்கள் தங்கள் வீடுகளில் எருமைக்கறி சமைத்து மாதிகா இன மக்களுக்குப் பரிமாறுகின்றனர். மாதிகா ஜாதி ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதி ஆகும். எருமைக் கறி விருந்து உண்ட மாதிகா ஜாதியினர் தம் வீட்டில் சமைத்த ஆட்டுக்கறியைப் பார்ப்பனர்க்குப் பரிமாறுகின்றனர். இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் விழாவில் நடக்கிறது. (படிக்க: பண்பாட்டு அசைவுகள் _ ஆசிரியர் பேரா. தொ.பரமசிவம் _ காலச்சுவடு பதிப்பகம்). பார்ப்பனர் விலை குறைந்த மாட்டுக் கறியைத் தந்து விலை கூடிய ஆட்டுக் கறியைப் பெறுகின்றனர் என்பதையும் நோக்கலாம். ஆக, பார்ப்பனர்கள் இறைச்சி உணவுக்குப் பழகியவர்களே. சமணக் கொள்கையின் செல்வாக்கால் வெட்கப்பட்டு, கறி தின்பதை நிறுத்தியவர்கள். காலத்திற்கேற்ப வேசம் போடும் பார்ப்பனர்கள் தமிழர்களா?
நமது நிலை பற்றி பெரியார்
ஆதிக்க ஜாதியரான பார்ப்பனர்கள் மூவேந்தர் காலம் முதல் இன்றைய மூவர்ணக் கொடி காலம் வரையிலும் அரசர்களையும் அரசுகளையும் அடிவருடியும் அண்டிக் கிடந்தும் ஆதிக்கம் செலுத்திவருவது கண்கூடு. இதனை மனம் பொறாத தந்தை பெரியார் கொதித்துக் கேட்ட கேள்விதான் இவை!
தோழர்கள் ஆரியா எங்கே? சக்கரை எங்கே? வரதராஜூலு எங்கே? (திரு.வி.) கல்யாண சுந்தரம் எங்கே? பவானிசிங் எங்கே? தர்மலிங்கம் எங்கே? எல்லோரும் காங்கிரசு ஜாதிவிட்டு நீக்கப்பட்டாய் விட்டது. சிதம்பரம்பிள்ளை கதி என்ன ஆயிற்று? கள்ளு, சாராயம் குடித்துக் கொண்டு கஞ்சா, அபின் அடித்துக் கொண்டு திரிந்த ஒரு சுப்ரமணிய அய்யருக்கு பாரதி பட்டம் கொடுத்து இன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது… அவரைவிட யோக்கியமாக நாட்டுக்கு உழைத்த மற்ற குடும்பம் பல இன்று சோற்றுக்கு வழி இல்லாமல் திண்டாடுகின்றன என்று கேட்டார். (குடிஅரசு 6.6.1937).
இன்றைக்கும் இதே நிலைதானே! இன்றைய சூழலில் பெயர்களை மாற்றிப் பார்த்தாலும் நிலை ஒன்றேதானே!
அவர்களும் தமிழரே என்பவர்கள் இதனை உணரும் அறிவு பெற வேண்டாவா?
மேலாதிக்கம் ஒழிந்ததே
மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்து
வருணாச்சிர மமெனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவும் மற்றைப் புலையும் அழிந்தது
குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
கொதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
எனப் பாடினார் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள்.
எல்லாமும் சாய்ந்தது, ஒழிந்தது, அழிந்தது, அடங்கியது, முடங்கியது என்று முடிந்துபோன நிலை கண்டு நாம் எக்காளம் எழுப்புவது எப்போது?
வேதமரபுக்கு எதிராகவும் விதைக்காது விளையும் கழனியாகவும் பார்ப்பனர்கள் இருந்ததை எதிர்த்தும் அவர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட வரி இல்லாத நிலங்களைத் திரும்பப் பெற்று மக்களிடம் ஒப்படைத்ததாலும்தானே, களப்பிரர் ஆண்டகாலத்தை இருண்ட காலம் என்று 100 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று ஆசிரியர்கள் உள்பட பலரும் எழுதிவிட்டனர்!
இனி போடுவதற்கு வரியே கிடையாது என்று மக்களுக்கு வரி போட்டுக் கொடுமைப்படுத்தியவன் சோழன் ராஜராஜன். அவன் செய்த கொடுமைகளால் வேளாண் குடிகளுக்கும் வெட்டிக் குடிகளுக்கும் இடையே உறவு கெட்டது. இந்த இரண்டு வகைக் குடிகளுக்கும் கோவில்களுக்கும் இடையே உறவு கெட்டது. கோவிலின் ஆதிக்கத்தைக் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக மகேந்திர சதுர்வேதிமங்கலம் கோவிலையே கொளுத்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டும்கூட சோழர்காலத்தைப் பொற்காலம் என்று எழுதுகிறார்கள். ஏன்?
களப்பிரர் காலத்தில் பார்ப்பனர்கள் பாதிக்கப்பட்டனர். இருண்டகாலம் என்று எழுதினர். சோழர் காலத்தில் பார்ப்பனர்கள் கொழுத்தனர். ஆகவே பொற்காலம் என்றனர். அவர்களது வாழ்நிலையை வைத்து வரலாற்றை எழுதுபவர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் தமிழர்களா?
ஆரியர் சேர்க்கை தமிழுக்கும் தமிழர்க்கும் ஆகாது என்றார் மறைமலை அடிகள். ஆண்ட தமிழில் ஆரியம் சேர்த்தார்
ஆயினும் தமிழர் நெறிகண்டு வேர்த்தார்
என பார்ப்பனரின் பண்பு பற்றிப் பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
ஆகவே அவர்கள் அற்ற நாம், திராவிடர் எனக் கூறினால்தான் கீர்த்தியால், அறத்தால் செழுமையால், வையப் போர்த் திறத்தால், இயற்கை புனைந்து ஓருயிர் நாம், நம் உயிர், இனம் திராவிடம் எனும் உணர்வு மேலோங்கினால்தான் மேலும் தாழ்வுறாமல் தப்பித்திட இயலும். மேலும் மேலும் வெற்றிகளைப் பெற்றிட இயலும்.
வந்தவர் வஞ்சகர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம் செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாம் உணர்ந்தோம் அவரஞ்சி விழித்தார்
என்கிற நிலை நீடிக்க வேண்டும். செய்வோமா?.