அம்மாவின் மறைவுக்குப் பின் எனது “விடுதலை” பொறுப்பு
அம்மா அவர்கள் மறைந்து அய்ந்து நாட்கள் ஆகிய நிலையில் 21.03.1978 முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் விடுதலையின் ஆசிரியராகவும், பிரசுரதாரராகவும் கொண்டு திராவிடன் அச்சகத்தில் எண்.2, ரண்டால்ஸ் ரோடு, வேப்பேரி, சென்னை – 600 007 இலிருந்து அச்சிடப்படும் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு முன்பு வரை (அய்யா இருக்கும் பொழுது) அம்மா அவர்கள்தான் விடுதலையின் வெளியீட்டாளராகவும், பிரசுரதாரராகவும் இருந்து வந்தார்கள். 21.03.1978 அன்று விடுதலை இரண்டாம் பக்கத்தில் நான் எழுதிய முதல் தலையங்கம் அர்ப்பணிக்கும் பொது வாழ்வு! என்ற தலைப்பில் அம்மாவின் மறைவிற்குப் பிறகு எழுதியது. அந்தத் தலையங்கத்தில், அம்மா என்ற சொல் வெறும் ஒரு சொல் அல்ல _ உள்ளத்தின் அடித்தளத்தில் தோன்றும் அப்பழுக்கற்ற அன்பின் வடிவம் அது. அந்த நாளில் குடிஅரசு அலுவலகத்தை குருகுலமாக நடத்திய பாசமிக்க சுயமரியாதைக் குடும்பத்தை வளர்த்த தாயுள்ளமது.
இயக்கத்தை விட்டு, இன்று பல்வேறு அமைப்புகளிலும் இருக்கின்ற உள்ளங்கள் எல்லாம், இனிய அந்த வசந்தத்தை நினைத்து நெக்குருகி நிற்கின்றனர்.
தந்தையைக் காக்கும் செவிலியராக மட்டுமல்ல _ இயக்கத் தனயர்களின் பாசத்திற்குரிய சரணாலயமாகத் திகழ்ந்தவர்கள் நமது அம்மா அவர்கள்.
வேறு எந்த அரசியல் முகாம்களைவிட, அமைப்புகளை விட வெறும் சொற்களின் கூட்டாக உறவு கொள்ளாமல் கொள்கை வழிப்பட்ட பாசப் பிணைப்புக்குரியவர்களாக குடும்ப உறவினர்களாக அன்று தொட்டு இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர். தந்தை பெரியார் அவர்களால் காணப்பட்டு, அன்னை நாகம்மையார் அவர்களால் விருந்தோம்பப்பட்டு, அன்னை மணியம்மையார் அவர்களால் பின்பற்றப்பட்ட சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வழி வந்தவர்கள்தான் இயக்கத்தவர்கள்.
ஒருவர் வீட்டுக்கு மற்றவர்கள் சென்றால், அது வெறும் திண்ணைப் பேச்சு சம்பிரதாயம் காபி இவற்றோடு இல்லாமல் சமையற்கூடம் வரை தங்குதடையின்றி செல்வது, வீட்டுக் கஷ்டங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது, குடும்பப் பிரச்சினைகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி பரிகாரம் காண்பது என்பது போன்ற வாழ்க்கை நெறியை இந்த இயக்கம் வகுத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றது.
இத்தகைய அரவணைப்புப் பாங்கு இயக்கத்தில் திளைத்துச் செழித்து வளருவதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை அமைப்பும் அன்னை நாகம்மையார், மணியம்மையார் ஆகியோரின் தாயுள்ளங்களும்தான்!
எந்தச் சந்தர்ப்பத்தின் காரணமாகவோ எதிரும் புதிருமாக இருக்க வேண்டிய அரசியல் சோடைக்கு ஆளானாலும் சுயமரியாதை இயக்கத்திலே குருகுலவாசம் செய்தார்களே அந்த உணர்வுக் குருதியோட்டத்திலே எப்படியோ இழையோடிக் கொண்டு தானிருக்கிறது. எந்த அரசியல் வெறுப்பும் அந்த இழையை வீழ்த்த முடியவில்லை.
அன்னை மணியம்மையார் அவர்களின் உடல் பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த நேரத்தில் சுயமரியாதைக் குடும்பங்கள் எல்லாம் மீண்டும் சங்கமம் ஆயிற்றோ என்று கருதும் வண்ணம் ஒருசேர வந்து கூடிய காட்சியைக் கண்டோம். அவர்கள் வடித்த கண்ணீரில் எல்லாம் பழைய நினைவுகள், அந்தப் பாச வசந்தங்கள், அதே விருந்தோம்பல்கள், அந்தக் குருகுல வாசம் குமிழிட்டு நின்றன.
திராவிடர் இயக்கங்கள் சிதைந்து பலகீன முற்றுச் செல்வதைக் கண்டபொழுதெல்லாம் அம்மா அவர்கள் கண்ணீர் விட்டார்கள். பதைபதைத்துப் போனார்கள். தன் சக்திக்கு இயன்றதைச் செய்து, குறிப்பாக தி.மு.க.வுக்குள் ஒரு பிளவு நேர்ந்து டாக்டர் கலைஞரும் டாக்டர் நாவலரும் கருத்து மாறுபாடு என்கிற நிலையை அடைந்த நேரத்தில் உடல்நலமற்று திருச்சியிலே இருந்த கழகத் தலைவர் அம்மா அவர்கள் தொலைப்பேசி மூலம் பொதுச்செயலாளரிடம் தொடர்புகொண்டு இருவருக்கும் ஏற்பட்ட ஊடலைத் தீர்க்க முடிந்த முயற்சிகளை மேற்கொள்ளச் செய்தார்கள்.
தி.மு.க. தலைவர்கட்கு முக்கிய வேண்டுகோள் என்ற தலைப்பில் அம்மா அவர்கள் விடுத்த அறிக்கை (17.4.1977) தமிழின ஒற்றுமை மீதும் திராவிட இயக்கத்தின் ஒற்றுமை மீதும், அம்மா அவர்கள் கொண்டிருந்த அப்பழுக்கற்ற கவலையையும், பொறுப்பையும் வெளிப்படுத்தும்.
கோபதாபங்களும், மாச்சரியங்களும் ஒரு மாபெரும் இயக்கத்தை அழித்துவிட இடம் கொடுத்து விடலாமா? ஒரு தமிழர் நல இயக்கத்தை அழித்து பழியை ஏற்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். யார் முந்திக் கொண்டார்கள் என்று மக்கள் அறியாவண்ணம் கட்சியைக் காப்பாற்ற முந்திக் கொள்ளுங்கள் என்று உரிமையோடு, அன்போடு வேண்டிக் கொள்ளுகிறேன்! இதில் இன்று காட்டப்படும் அலட்சியம் எதிர்காலத்தில் என்ன விளைவை உண்டாக்கும் என்பதை ஒரு கணம் அனைவரும் சிந்திக்க வேண்டும். (அம்மா அவர்களின் அறிக்கை 17.4.1977 விடுதலை)
அம்மா அவர்களின் மேற்கண்ட அறிக்கை அவர்களது மேன்மையான தமிழர் சமுதாய நலனை என்றென்றைக்கும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கும்.
பொது நிலையிலிருந்து இன நலக் கண்ணோட்டத்தோடு தந்தை பெரியார் அவர்களது மறைவுக்குப் பிறகு பிரச்சினையை அணுகிய தலைவராக விளங்கிய அம்மா அவர்களது இழப்பு இயக்கத்தைப் பொறுத்தவரை மட்டுமல்ல _ இனநலக் கண்ணோட்டத்திலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
தனது பொது வாழ்வில் அவர்கள் ஏற்ற ஏச்சும் பேச்சும் கொஞ்ச நஞ்சமல்ல. அதைப்பற்றி அம்மா அவர்களே ஒருமுறை எழுதியுள்ளார்கள்.
இயக்கத்தில் அசிங்கம், அவமானம், பழிதூற்றல், நச்சுப் பேச்சு விஷமம் இவைகளை நான் அனுபவித்துள்ள அளவுக்கு வேறு எந்தப் பெண்ணும் அனுபவித்திருக்க முடியாது. பெருமைக்காகச் சொல்லவில்லை. இந்த உண்மையை நாடே ஒப்புக்கொள்ளும். அவைகள் எல்லாம் எனது பொதுவாழ்க்கைக்கு நான் பெற்ற தரமான உரமாகும் என்று தெரிவித்து இருந்தார்கள். (5.10.1975 விடுதலை அறிக்கை) மேலே கண்ட வரிகளில் ஒரு எழுத்துக்கூட உண்மைக்கு மாறானதல்ல என்பது மட்டுமல்ல, தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கைக்குச் சிறிதளவும் வீண்போகாத சிறந்த வாரிசுதான் அம்மா அவர்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்? நம் தோள்மீது சுமந்து இருக்கிற மகத்தான பொறுப்பு எத்தகையது என்பதை, இத்தகைய ஒப்பரிய தலைவரை இழந்துவிட்டிருக்கிறோம் என்பதை உணரும்பொழுது, நாம் உணரவேண்டியவர்களாக இருக்கிறோம்.
தந்தை பெரியார் அவர்கள் தமிழ் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். நமது அம்மா அவர்கள் அந்தக் கொள்கைகளுக்காக, அந்தக் கொள்கைகளை உருவாக்கிய தலைவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
தந்தை பெரியார் அவர்களுக்கும், அம்மா அவர்களுக்கும் தீர்க்கதரிசனமான ஒற்றுமை இருந்தது என்று கூறும் அளவில் அய்யா அவர்கள் இறுதியாகப் பேசியது தியாகராயர் நகர் பகுதி. அதே இடத்தில்தான் கழகத் தலைவர் அம்மா அவர்களும் உரையாற்றினார்கள். தந்தை பெரியார் இறுதியாக உரையாற்றிய தேதியும் 19. அம்மா அவர்கள் இறுதியாக உரையாற்றிய தேதியும் 19தான் என்பதைப் பாருங்கள். எனவே, அய்யா அவர்கள், அம்மாவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுதெல்லாம் இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கின்றது என்றால் இந்த அம்மாவால்தான் என்பது யாருக்கும் தெரியாது என்று பல்வேறு இடங்களில் அய்யா குறிப்பிடுவார்கள்.
எனது உடம்புக்கு ஏற்ற உணவினைப் பக்குவப்படிக் கொடுப்பது, என்னைக் குளிக்கவைப்பது, உடை மாற்றுவது எல்லாம் அம்மாதானே! என்று அடிக்கடி கூறுகின்ற அந்த வார்த்தைகளை நினைத்து அம்மா சந்தோசப்படுவார்கள். கடைசி 25 ஆண்டுகள் எவ்விதத் தொந்தரவுமின்றி இருக்கக் காரணம் அம்மாதான். அத்தகைய தாய்மை உள்ளம் இயற்கையாக அமைந்த கழகத் தலைவர் அம்மா அவர்களின் இழப்பு மிகவும் வேதனைக்குரியது.
நமது கழகத் தலைவர் வணக்கத்திற்குரிய அம்மா அவர்கள் தனது 60ஆவது வயதை அடை வதற்கு மூன்று ஆண்டுகளே இருந்தபோதும், தன் 57ஆவது வயதுத் தொடக்கத்திலேயே நம்மை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்தார்கள். என்னே சோதனை! கழகப் பொன்விழாவைக் காணாது நமது அய்யா அவர்கள் மறைந்தார்கள்! அய்யா அவர்களின் நூற்றாண்டு விழா காணாது நமது அம்மா அவர்கள் மறைந்தார்கள். அதைவிடக் கொடுமைதான் ஏது?
அம்மாவின் பிரிவு மட்டுமல்ல; அடுத்து அய்யா என்ற இமயமும் அவரால் அடையாளம் காட்டப்பட்டு அவரை 95 ஆண்டுகள் வாழ வைத்து, அவர் கண்ட இயக்கத்தையும் மேலும் 5 ஆண்டு வழிநடத்தி கட்டிக்காத்த அன்னையார் தலைமையில் இருந்த இயக்கத்தை இனி எப்படி நாம் கூட்டுப் பொறுப்பில் நடத்தப் போகிறோம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
ஒரு பகலவனும், கலங்கரை விளக்கும் வழிகாட்டிய வெளிச்சத்தினை, எப்படி இந்தச் சிறு அகல்விளக்கால் தரமுடியும் என்ற நெஞ்சக் குமுறல் என்னை நிலைகுலையச் செய்தது!
என்றாலும் நமக்கு அய்யா -_ அம்மா தந்த பாடங்கள் உள்ளனவே; அதை அப்படியே கடைப்பிடித்தால், வருவதை எதிர்கொள்ளும் துணிவும் தெளிவும் தானே ஏற்படும்; தந்தை பெரியாரிடம் அன்பு காட்டும் அறிஞர்கள் பலர் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளாகி அவ்வெளிச்சத்தில் ஒரு பகுதியை நிச்சயம் தருவார்கள் என்ற ஆறுதலை வரவழைத்துக் கொண்டோம்!
தந்தை பெரியார் மறைந்த நிலையில், அம்மா தலைமை தாங்கியபோதே தலையெடுத்து ஆடிய துரோகம், நம் காலத்தில் மேலும் விஸ்வரூபம் எடுக்காமலா இருக்கும்? அதனையும் அல்லவா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?
ஒருபுறம் இன எதிரிகளின் தாக்குதல்; மறுபுறம் துரோகத்தின் பாய்ச்சல். இவை அனைத்தும் எதிர்கொள்ளப்பட வேண்டியவை ஆயிற்றே; பாதை ரோஜா மலர்கள் கொண்ட பாதை அல்ல; முட்களும் ஆணிகளும் நட்டு வைக்கப்பட்டவைகளாக இருக்கும் என்பதால் சமாளிப்போம்.
தந்தை பெரியார் போதித்த கட்டுப்பாடும் ஒழுக்கமும், நாணயமும் நம் இயக்கத்தின் தனி உடைமைகளாக உள்ளதால் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் வரவழைத்துக் கொள்ளப்பட வேண்டியதுதானே என்ற முடிவுடன் துயரத்திலிருந்து மெல்ல மீண்டு கடமைகளை ஆற்றும் துணிவு பிறந்தது.
(நினைவுகள் நீளும்…)