சமீப காலமா ஆன்மிகத்தைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். அதுக்கு காரணம் ரெண்டு சம்பவம்:
ஒரு கோயில்ல சூட்டிங் எடுத்தப்போ கோயில் சுவத்துல எண்ணெயில் ஏதேதோ எழுதியிருந்தது. அதுல ஒரு இடத்துல சாமி, எங்க அக்காவுக்குச் சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்னு ஒரு சின்னப் பையன் எழுதியிருந்தான். இதுக்கு மேல ஒரு அடி எனக்கு வேணுமா?
இன்னொரு சம்பவம்: நான் தேனியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கத்துல ஒரு கோயில்ல சுமங்கலிகள் அய்ம்பது பேரு சேர்ந்து என் தாலியைக் காப்பாய் சிவசக்தின்னு உருகிப் பாடிக்கிட்டிருந்தாங்க. அந்த அய்ம்பது பேரும் என்னை முச்சந்தியில் நிறுத்தி வெச்சு செருப்பால அடிச்சமாதிரி இருந்துச்சு. அவங்க நம்பிக்கையைத் தவறுன்னு நான் எப்படிச் சொல்ல முடியும்? தப்புன்னு சொல்ல நான் யாரு? இனி நாத்திகக் கருத்துகளை நான் பேசவே மாட்டேன் என்கிறார் இயக்குநர் பாலா! (ஆதாரம்: – 16.03.2011 குமுதம்.)
போலிகளை நம்பி, போலிச் சாமியார்களை நம்பிப் போகிறவர்களைப் பார்த்தால்கூட அது அவர்களின் நம்பிக்கை. அதில் தலையிட நான் யார் என்று கேட்டாலும் கேட்பார் பாலா!
நோஞ்சான்களைப் பார்க்கிறபோது, வாங்க புல் தடுக்கிப் பயில்வான் என்று கிண்டலும் கேலியும் செய்வதை இன்றும் கிராமங்களில் காணலாம். உடலால் மட்டுமல்ல, உள்ளத்தால் மெலிந்தவர்களும் இருக்கிறார்கள். இயக்குநர் பாலா ஒரு எடுத்துக்காட்டு. இயக்குநர் பாலா அவர்களே! உங்களை யார் நாத்திகம் பேசச் சொன்னது? இனி பேசமாட்டேன் என்று சொல்வதற்கு…
தமிழன் விழுவதைப் பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. ஆனால், நேற்று விழுந்த இடத்திலேயே இன்றைக்கும் விழுந்துகொண்டிருக்கிறானே என்றுதான் கவலைப்படுகிறேன் என்றார் மறைந்த குன்றக்குடி அடிகளார். கால் இடறி விழுபவர்களைப் பற்றிக்கூட கவலை இல்லை. தடுக்கி விழவேண்டும் என்பதற்காகவே தள்ளாடுபவர்களை யார் என்ன செய்யமுடியும்!
அக்காவுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டிய கடமை கடவுளுக்குத்தான் இருக்கிறது. பெற்றோர்களுக்கோ, உற்றார் உறவினர்களுக்கோ இல்லை என்ற தோற்றத்தை அந்தச் சிறுவனுக்கு யார் கற்பித்தது? விரைவில் திருமணம் ஆகவேண்டும் என்ற வேட்கையைத் தூண்டிவிட்டு விண்ணப்பிக்க வைத்தது யார்? முதிர் கன்னியாய் வீட்டில் அடைந்து கிடக்கும் சகோதரிக்கு காலாகாலத்தில் ஒருவனின் கைத்தலம் பற்ற உதவாத கடவுள், ஒரு சின்னஞ்சிறுவனை மன உளைச்சலுக்கு ஆளாக்கி பைத்தியக்காரனைப் போல் தன் சன்னதியிலே கிறுக்கும் நிலைக்கு ஆளாக்கலாமா? பாலாவின் சிந்தனை ஓட்டம் இப்படியல்லவா இருந்திருக்க வேண்டும்!
பகுத்தறிவாளர் என்றே வைத்துக் கொள்வோம். பாலா என்ன செய்திருக்க வேண்டும்? அந்தச் சிறுவனைத் தேடிப்பிடித்து, அரவணைத்து ஆண்டவனுக்குப் போட்ட விண்ணப்பம் என்னாயிற்று என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அவன் சொல்லியிருந்தால், அவனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றியிருக்க வேண்டும். மனநிறைவு கொள்ளும்படி ஏதாவது செய்திருக்க வேண்டும். அதுதான் முழுமை பெற்ற நாத்திகன் சுட்டும் மனித நேயம். மணக்கோலம் கொள்ளாமல், மணப்பந்தல் நுழையாமல் முதிர்கன்னியர்களாய் காலமெல்லாம் காத்திருப்போர் நம் நாட்டில் கொஞ்சமா? அவர்களும் கோயிலுக்குப் போகிறார்கள்,. நெய் விளக்கு ஏற்றுகிறார்கள், கால் வலிக்க கோயிலைச் சுற்றி வருகிறார்கள், வேப்பிலை ஆடை அணிந்து கொள்கிறார்கள், விரதம் இருக்கிறார்கள், மண் சோறு சாப்பிடுகிறார்கள். எந்தக் கடவுளாவது கண்திறந்து பார்த்ததுண்டா? கரை சேர்த்ததுண்டா?
கோயில் குளம் என்று சுற்றித் திரியாமல், நேர்த்திக் கடன் என்று சொல்லி உடலை வருத்திக் கொள்ளாமல் சுற்றமும் நட்பும் சூழ மணம் முடித்து குழந்தை குட்டிகளோடு குதூகலமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்களா? கல்யாணம் என்பது வெறும் கனவாகிப் போனவர்களெல்லாம் பாவப்பிறவிகளா? இது என்ன கொடுமை?
எங்கள் ஊரில் ஓர் அபலைப் பெண். நைந்து போன அவளது வாழ்க்கையைப் பார்த்துப் பரிதாபப்படாதவர்கள் இருக்கமுடியாது. சிறு வயதில் தந்தை மரணம். சில ஆண்டுகளில் தாயும் நோயுற்று இறக்க குடும்பம் இருளில் மூழ்கியது. தனக்குப் பின் பிறந்த இரண்டு சின்னஞ்சிறு தங்கைகளைக் காப்பாற்றிக் கரைசேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு அவள் தலையில் விழுந்தது. பதின் வயதில் தீப்பெட்டித் தொழிற்சாலை, சித்தாள் வேலை, பத்துப் பாத்திரம் தேய்த்தல் என பல்வேறு வேலைகளைச் செய்து உடன் பிறந்தவர்களைப் பட்டினிபோடாமல் வளர்த்தாள். சிறுமிகள் பெரியவர்களாக ஆனதும் அவர்களின் விருப்பப்படியே எளிய முறையில் திருமணம் செய்து அனுப்பி வைத்தாள். இக்கடமைகளை அவள் முடித்தபோது நாற்பதைக் கடந்திருந்தாள். தொடர்ந்து தனக்காக வாழ உழைத்துக்கொண்டிருக்கிறாள். இன்று அவள் ஒரு மாமுதிர் கன்னி! தலையெல்லாம் கடல் நுரைபோல் நரைத்து அவ்வை போன்ற தோற்றம். அகவை அறுபதைக் கடந்துகொண்டிருக்கிறது. காலையில் எழுந்து குளித்து முடித்து, பிள்ளையார் கோயிலைப் பயபக்தியுடன் சுற்றிவருவதை இன்றுவரை நிறுத்தவில்லை. பாலா பார்த்தால் என்ன சொல்வாரோ!
ஒரு பெண்ணை நிராதரவாக்கி வாழ்க்கைச் சுகங்களை அண்டவிடாமல் செய்து துறவிபோல் நடமாடவிட்டது. அவள் இன்றும் நம்புகிற கடவுளின் செயல்தான் என்று பாலாவால் இனி சொல்ல முடியுமா?
50 சுமங்கலிகள் சேர்ந்து என் தாலியைக் காப்பாற்று சிவசக்தி என்று பாடி உருகி நின்றதைப் பார்த்த இவர் முச்சந்தியில் நிறுத்தி செருப்பால் அடித்ததாக, உணர்ந்து உணர்ச்சி வசப்பட்டதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. உண்மையில் இவருக்குப் பகுத்தறிவிலும், நாத்திகத்திலும் பற்று இருந்திருக்குமேயானால் என்ன செய்திருக்க வேண்டும்?
அவர்களை அணுகி, அவர்களின் பாமரத்தனத்தை – அறியாமையைச் சுட்டிக்காட்டும் வகையில் மூன்று முடிச்சில் தொங்கும் உங்கள் தாலி நீங்களாகக் கழற்றி வீசி எறிந்தால் ஒழிய தானாக அறுந்து போகாது. இனிமேல் உங்கள் கணவன்மார்களைச் சபரிமலைக்குப் போக அனுமதிக்காதீர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்ததையும் அவர்களது மனைவிமார்களின் தாலி பறிக்கப்பட்டதையும் மறந்துவிடாதீர்கள். டாஸ்மாக் போய்விட்டு தள்ளாட்டத்துடன் வரும் கணவனைப் பார்த்து இப்படிக் குடிச்சுத் தள்ளாடிட்டு வந்தா குடும்பமும் என் தாலியும் தள்ளாட ஆரம்பிச்சுடும்னு எச்சரிக்கணும். வெட்டியா இப்படி பிரேயர் பண்ணிப் பொழுதைப் போக்காதீங்கன்னு அறிவுரை சொல்லியிருக்கவேண்டும்.
உங்களின் சினிமாக்களில் நீதி போதனையும், உபதேசங்களும் செய்யாத படம் ஏதேனும் உண்டா? திருடாதே, கொலை செய்யாதே, கற்பழிக்காதே, ஏமாறாதே, ஏமாற்றாதே, கொள்ளையடிக்காதே, கோபப்படாதே, அடுத்துக்கெடுக்காதே, காதலிக்காதே, கவலைப்படாதே என்றெல்லாம் பரப்புரை செய்கிறபோது அப்படிச் சொல்ல நீங்கள் யார் என்று கேட்க முடியாதா? இந்தச் சமுதாயம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற நினைப்பில் படம் பண்ண உங்களால் முடியுமா? வணிக நோக்கில் எடுக்கும் படங்களில்கூட, பாடலில், உரையாடலில் புத்தி சொல்லாத இயக்குநர்கள் உண்டா?
நற்பண்புகள் அனைத்தையும் திணிக்கும் நீங்கள் நாத்திகத்தின் பக்கம் வரும்போது மட்டும் தொடை நடுக்கம் எடுக்கிறதே ஏன்? கடவுள் மறுப்புக் கொள்கை மட்டும் தீண்டத்தகாததா? மிக மலிவானதா எளிதில் கை கழுவ? கோழைத்தனத்தையும் பேராசையையும் செயலிழக்கச் செய்து தன்னம்பிக்கையை ஊட்டி, வெட்டிச் செலவுகளை வேரறுத்து சுயமரியாதையே சுகவாழ்வு என்பதைக் கற்றுத் தருவது நாத்திகம் மட்டும்தானே? வேறு எதையேனும் காட்டமுடியுமா?
உங்களின் சறுக்கி விழும் விளையாட்டுக்குப் பலியிட நாத்திகம்தான் கிடைத்ததா?
அரைவேக்காட்டு நாத்திகரைப்போல் ஆபத்தானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
– சிவகாசி மணியம்