தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் இளங்கலைப் பட்டம் படித்து, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி மய்யத்தில் மேலாளர் பணியில் 1965ஆம் ஆண்டு சேர்ந்து, பசுமைப் புரட்சித் திட்டத்தினை அமல்படுத்தியவர். அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் பயன் தராதவை என்று கூறி பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தவர்.
இயற்கை வேளாண் முறையினை வலியுறுத்தி, போராட்டம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், பேரணிகளை நடத்தியதுடன் வானகம் என்ற இயற்கை விவசாயப் பண்ணையினை உருவாக்கி விவசாயிகளிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டவர். அண்மையில், மத்திய அரசின் காவிரிப் படுகையின் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும், விவசாயம் பாதிக்கும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பிப் போராடி வந்த நம்மாழ்வார் உடல் நலக் குறைவு காரணமாக டிசம்பர் 30 அன்று இயற்கை எய்தினார்.