– கலைஞர்
புயலும் மழையும் ஓய்ந்து ஊர்மக்கள் வெளியில் தலைகாட்டத் தொடங்கினார்கள். ஆங்காங்கே பெருமரங்கள் அடியற்றுக் கிளைகளுடன் வீழ்ந்து கிடந்தன. காற்றுக்கு வளைந்து கொடுத்துத் தப்பித்துக் கொள்ளும் நாணலும், படுகை மண்ணோடு தூக்கியெறியப்பட்டுத் தலைகுப்புறச் சாய்ந்து கிடந்தது. ஊர்க் கோவிலின் கோபுரத்துக் கலசம், ஒரு கல் தொலைவுக்கப்பால் உருண்டு கிடந்தது. கால்நடைகள் ஒன்றிரண்டு தெருக்களில் மூச்சற்றுக் கிடந்தன. கிழங்கள் நடுங்கும் மேனியைப் போர்த்துக்கொண்டு தங்கள் இல்லத்துத் திண்ணைகளில் படுத்திருந்தன. வீதிகளில் தேங்கியிருந்த மழைநீர்க்குட்டைகளில் குறும்பு செய்யும் இளைஞர் கூட்டம்
குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. கழனிகளில் தலைசாய்ந்து மிதந்த வண்ணமிருந்த நெற்கதிர்களை உழவர்கள் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். புயலுக்குப்பின் ஏற்பட்ட அந்த அமைதியில் பெரும்பாலும் சோகத்தின் பின்னணியே ஒலித்துக் கொண்டிருந்தது. ஊரின் நடுவே தலையில் வகுத்த நேர்வகிடு போல் அமைந்திருந்த ஆறு; நிம்மதியிழந்து வெறி பிடித்தது போல் ஓடிக்கொண்டிருந்தது. கடுமழையும் புயலும்தான் ஆற்றின் ஆவேசத்துக்குக் காரணம்! இலைதழைகள், கிளைகள், ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டிகளின் சவங்கள் ஆற்றின் தோள்மீது சவாரி செய்து கொண்டிருந்தன.
ஊர் நாட்டாண்மைக்காரரும், அவருடைய உதவியாளரும் ஆற்றின் வேகத்தைக் கண்டவாறு ஆற்றங்கரை மீது நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்க்கரையில் ஒரு கட்டுடல் படைத்த வாலிபன் ஆற்றையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் பரபரப்பு அடைந்திருந்தான். அவனை நாட்டாண்மைக்காரர் பார்த்துவிட்டு, உதவியாளரிடம் கேட்டுச் சந்தேகத்தைப் போக்கிக் கொண்டார்.
ஏய்! எதிர்க்கரையில் நிற்பவன் நம்ம ஊர் சிங்கன்தானே?
ஆமாங்க! அவனே தான்! உங்க பரம விரோதி சிங்கனேதான்!
என்ன அப்படி, ஆற்றையே பார்க்கிறான் வைத்த விழி வாங்காமல்?
சாமி! சாமி! அடடே! ஒரு மான்குட்டி உயிருக்குத் தவிக்குதுங்க! அதோ பாருங்க ஆற்று நடுவினிலே!
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, எதிர்க்கரையில் நின்ற சிங்கன், மான்குட்டியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துவிட்டான். குதித்தவனைச் சிறிது நேரம் காணவில்லை. நாட்டாண்மைக்காரருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
பாரடா! பார்! என் பகைவன் ஆற்றோடு போய்விட்டான் அமிழ்ந்து! என்று அவர் கூச்சல் போட்டார்!
இருங்க சாமி! அவசரப்படாதீங்க! அவனுக்கு நீச்சல் தெரியும் என்றார் உதவியாளர்.
அவர் சொன்னபடியே சிங்கன் நீச்சலடித்துக் கொண்டு மான்குட்டியைக் காப்பாற்ற முன்னேறிக் கொண்டிருந்தான். ஆற்றின் கடுமையான வேகத்தைச் சமாளிக்க முடியாமல் அவன் தத்தளித்தான்.
நாட்டாண்மைக்காரர், தன் உதவியாளரிடம் சொன்னார்:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
என்று வள்ளுவர் சொன்ன வாக்குப் பொய்யாகப் போகாது பார்! ஊழைவிட மிக்க வலிமையுள்ளது எதுவுமில்லை! அதை விலக்குவதற்காக மற்றொரு வழியைப் பின்பற்றினாலும் அங்கேயும் ஊழ்தான் முன்வந்து நிற்கும். எனவே, இப்போது சிங்கனைவிட ஊழ் வலிமையாக நிற்கிறது! அதோ, அவன் திண்டாடுகிறான் பார்! அவன் கைகள் ஓய்ந்துவிட்டன பார்! மான்குட்டியை வேறு தோளிலே போட்டுக் கொண்டு நீந்துவது எளிதா? தொலைந்தான் சிங்கன்!
இவ்வாறு நாட்டாண்மைக்காரர் துள்ளிக் குதித்தார். உதவியாளர் விளக்கினார்:
சாமி! ஊழை வெல்ல முடியாது என்பது சரிதான். ஒன்று நம்மை வெல்லும்போது ஊழ் வென்றுவிட்டது என்கிறோம்! மாறாக, நாம் வெற்றி பெறும்போது ஊழ்தான் அந்த வெற்றியை நமக்குத் தந்தது என்கிறோம். எனவே, ஏற்படுகிற ஒரு விளைவுக்கு நாம் கற்பிக்கிற காரணம்தான் ஊழ் என்பதாகும். அதைத்தான் வள்ளுவர் கூறுகிறார்.
உதவியாளரின் விளக்கத்தைக் கேட்டு நாட்டாண்மைக்காரர் வியந்து போனார். அதற்குள் சிங்கனும் ஆற்றுச்சுழல்களை எதிர்த்து வெற்றி கண்டு மான் குட்டியுடன் கரையை வந்து அடைந்தான். நாட்டாண்மைக்காரருக்கு மேலும் வியப்பு! சிங்கன்மீது கொண்டிருந்த பகையைக்கூட மறந்துவிட்டு அவன் வீரத்தையும், மன உறுதியையும், இரக்கமுள்ள இதயத்தையும் பாராட்டி, ஓடிப்போய் அவனைத் தழுவிக் கொண்டார்.
எப்படியப்பா உன்னால் இந்தப் பயங்கர வெள்ளத்தைக் கடக்க முடிந்தது? என்று அவர் முகமலர்ச்சியுடன் கேட்ட கேள்விக்குச் சிங்கன் அளித்த பதிலும் ஒரு திருக்குறள்தான்.
அய்யா! சோர்வின்றி உறுதியுடன் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் ஊழையும் தோல்வி காணச் செய்து விடுவார்கள்! இதோ அதற்குக் குறள்! என்று உரக்கப் பாடினான் சிங்கன்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்
நன்றி : கலைஞரின் குறளோவியம்