மறைந்த விடுதலை ஆசிரியர் குருசாமி அவர்கள், இந்த இரயில்வே நிருவாகம்பற்றிக் குறிப்பிடுகையில் SIR என்பதைச் சீரங்கம் அய்யங்கார் ரயில்வே என்று கூறுவார். இன்றும் அந்த இரயில்வே போர்டு தங்களது சுபாவத்தை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கிறோம். இவற்றை எல்லாம் நாங்கள் சொன்னால் எங்களை வகுப்புவாதிகள், வகுப்புத் துவேஷிகள் என்று கூறுவார்கள். இவர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் பாஞ்சாலசிங்கம் லாலா லஜபதிராய் சொன்னார்: தென்னாட்டில் சில விசித்திரமான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வகுப்புவாதத்தை விட்டுக் கொடுக்காமல் மற்றவர்களைப் பார்த்து வகுப்புவாதிகள் எனக் குற்றம் சாட்டுவார்கள்.
பார்ப்பனர்கள் தங்களது வகுப்புணர்வை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் போது மற்றவர்களைக் குற்றம் கூறுவது என்ன நியாயம்? நாங்கள், வகுப்புகள் எல்லாம் ஒழிந்தால்தான் வகுப்புவாதமும் ஒழியும் எனக் கருதுகிறோம். ஜாதிகளும் வகுப்புகளும் ஒழியாத வரையில், எப்படி வகுப்புவாதம் ஒழியும்.
அடுத்து குறிப்பிடத்தக்க வெற்றி, பொன்மலை இரயில்வே ஒர்க்ஷாப்பில் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, ஒரு தமிழருக்குக் கொடுக்கப்பட வேண்டிய வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் மேலிடத்திற்கு நமது தோழர்களால் துண்டறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டு, அதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் குறைகளைச் சுட்டிக்காட்டித்தான் – தட்டிக் கேட்டுத்தான் நியாயம் பெற முடியும் என்கிற நிலை ஏற்படுமானால் தமிழர்களாகிய நீங்கள் அவற்றை விடுதலைக்குத் தெரிவிக்க மறக்காதீர்கள்! நியாயமான, -உண்மையான எந்த ஒரு செய்தியையும் விடுதலைக்குத் தெரிவியுங்கள். செய்தி கொடுத்தவர்கள் யார் எனத் தெரியுமோ என அஞ்சவேண்டாம். ஒரு முறை ஒரு பார்ப்பன அதிகாரி விடுதலையில் வந்த ஒரு செய்தியைப்பற்றி, அந்தச் செய்தி யார் மூலம் வந்தது என டெலிபோனிலே எங்களிடம் கேட்டார். உடனே, அது யார்மூலம் வந்தது என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுவதில்லை, செய்தி உண்மையா – பொய்யா என்று மாத்திரம் பாருங்கள் என்று பதில் கூறியதோடு, அதைச் சொன்னவர் உங்கள் அலுவலகத்திலே பணிபுரிகின்ற ஒரு பார்ப்பன அதிகாரிதான் என்றும் சொன்னோம். அவர் உடனே போனைக் கீழே வைத்து விட்டார் !
போட்டோகிராபர்களிலே இரண்டு வகை உண்டு. நாங்கள் சாதாரண போட்டோகிராபர்கள் அல்ல; எக்ஸ்ரே போட்டோகிராபர்கள். சாதாரண போட்டோகிராபர்கள் படம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகக் குறைகளை எல்லாம் டச்சப் செய்து காட்டுவார்கள். எக்ஸ்ரே படமோ உள்ளதை உள்ளபடியே- உடைந்த எலும்பை உடைந்தபடியே காட்டும் நாங்கள் ஓட்டு வேட்டைக்காரர்கள் அல்ல; எங்களுக்கு ஓட்டோ சந்தாவோ முக்கியமில்லை. எனவே, குறைகளைச் சுட்டிகாட்ட நாங்கள் அஞ்சுவதில்லை. தமிழர்கள் இன நலனுக்கு எந்த ஊறு என்றாலும் நாங்கள், நீங்கள் கூப்பிட்ட நேரத்தில் பணியாற்றக் காத்திருக்கிறோம், காத்திருக்கிறோம், எனக் கூறி என்னுரையை நிறைவு செய்தேன்.
14.8.1973- விடுதலையில் அய்யா அவர்களின் பிறந்தநாள் அழைப்பாக பக்கம் 2-இல் கழகத் தோழர்களுக்கு நான் அழைப்பு விடுத்தேன், அதில், தஞ்சை அழைக்கிறது என்ற தலைப்பில் வெளியான செய்தியினை அப்படியே தருகிறேன்:
தமிழர் இனத்தின் தனிப்பெரும் காவலரும், தமிழர்களுக்குத் தன்மான உணர்ச்சி ஊட்டிய, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நமது ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு, தமிழர்கள் தங்கள் நன்றி உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளும் நாள், வர இருக்கிற ஆகஸ்ட் 19. தந்தை பெரியார் அவர்கள் நம் இனத்திற்கு மலையளவிற்குச் செய்த வரலாற்றுப் பெருமைமிகு நன்மைகளுக்காக, நாம் தினையளவு நன்றி காட்ட நல்லதோர் வாய்ப்புப் பெற்ற நாளாகும் ஆகஸ்ட் 19.
95-ஆவது வயது என்ற முதுமை நிலையிலும், 25 வயது இளைஞரைப் போல் என்றென்றும் சுழன்று சுழன்று சுயமரியாதைச் சூறாவளியைப் பரப்பிடும் சொக்கத் தங்கமாக உள்ள நம் தலைவருக்கு, தமிழ்ச் சமுதாயம், மிக்க பல்வகை வசதிகளை உள்ளடக்கிய ஒரு வேனை (Van) அளித்து, அவர்கள் தொண்டிற்கு மேலும் வேகமும், விறுவிறுப்பும், முறுக்கும் ஏற்படுத்தும் புதிய காவியம் படைக்கும் பொன்னாள் அந்த ஆகஸ்ட் 19!
ஓய்வு என்பதே உழைப்புதான் என்று புதுப்பொருள்கூறி, பதவி நாடா – புகழ் தேடா, பொது வாழ்க்கைதான் தனது வழி என்று தனி வழி வகுத்து, இன்று தூய தொண்டின் அரும்பெரும் இமயமாய் உயர்ந்துள்ள நமது பெருமைக்குரிய அய்யா அவர்களுக்கு, நாம் ஒரு காரினை அளிக்கிறோம். நன்றிப் பெருக்குடன் நாட்டோர் அனைவரும், கட்சி வேறுபாடு, கருத்து மாறுபாடு, கொள்கை வேறுபாடு இன்றிக் குவித்த காணிக்கையால் உருவாக்கப்பட்ட காரினை, தஞ்சைத் தரணி மாபெரும் விழா நடத்தி, அதனை அளித்திட வெகுவாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளது!
தஞ்சை, தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல; தமிழர்களுக்கு அறிவுக் களஞ்சியமான கொள்கைகளை ஏற்றுச் செயல்படும் அறிவியக்கக் களஞ்சியமும் ஆகும். கருஞ்சட்டை அணிந்த கர்ம வீரர்களின் – கடமைச் செம்மல்களின் பாடி வீடும் ஆகும்!
தமிழகத்தில் எந்த மாவட்டம் அதிகமாக நிதி அளிக்கிறதோ, அந்த மாவட்டத்திலேயே அக்காரினை வழங்குவோம் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் அறிவித்ததைக் கேட்டு, அதனைத் தட்டிச்சென்றது தஞ்சைத் தரணியேயாகும்!
முன்பு அய்யாவின் எடைக்கு எடை வெள்ளியைக் கொடுத்து, தஞ்சை மாவட்டம் பெருமை பெற்ற மண்ணாகும்! அம்மாவட்டம் இப்போது இதனையும் தட்டிச் செல்கிறது! தஞ்சை மாவட்டம் தந்த தனித்தமிழர்தான் இந்தத் தமிழ் மண்ணை இன்று ஆளும் தனிச் சிறப்புடைய முதல்வர்! தந்தை பெரியார்தம் பள்ளியில் தலைசிறந்த மாணவராகத் திகழ்ந்த அவர், இளமைத் துடிப்பின்போதே இயக்கத்திற்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட செயல்வீரர்!
பகுத்தறிவுக் குடும்பத்தின் தலைமகனாம் பேரறிஞர் அண்ணா கட்டிக் கொடுத்த ஆட்சியைக் காத்துவரும் அவர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரியதொரு பொற்காலத்தை உருவாக்கி வரும்-வரலாறு படைக்கும் மாவீரராவார் நமது முதல்வர் டாக்டர் கலைஞர்! அவர் தமிழ்ப் பெருமக்களின் சார்பாக, அய்யா அவர்களுக்குக் காரினைப் பரிசாக அளிக்க இருக்கிறார்!
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் நல்முத்துகளில் ஒருவராக ஆற்றல் மிகு அமைச்சர் என்பதை எதிரிகளும் ஒப்புக்கொண்டு, இளைஞர்கள் சகாப்தம்- இனிய சகாப்தம் என்ற உண்மையினைக் கோடிட்டுக் காட்டிவரும் நமது போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்க, அய்யாவின் தொண்டர்கள், இயக்கத்தின் அடிவரலாற்றில் பங்குகொண்ட அமைச்சர் பெருமக்களும், பொதுப்பணி, உள்ளாட்சி, கூட்டுறவுத் துறை அமைச்சர்களும் பங்கு பெறுகிறார்கள். அய்யாவின் அரும்படையில் ஆங்காங்கு தளபதிகளாக இருந்து சோர்வற்ற தொண்டும், சுயநலம் துறந்த பண்பும், செயலும் கொண்ட நமது இயக்க முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் அவ்விழா ஒரு மாபெரும் தமிழர் விழாவாக அமையப்போகிறது!
பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ என்று எதிரிகளும் மருளும் வண்ணம், கடல் காணா தஞ்சை, கருஞ்சட்டைக் கடல் பொங்கும் காட்சியைக் காணும் வண்ணம், தஞ்சையில் ஒவ்வொருவரும் கூடவேண்டும்! நமது இயக்கத் தோழர்கள் கூட வேண்டும் குடும்பம் குடும்பமாக! கோலாகலமான திருவிழாவாக தஞ்சைத் தரணி எடுக்கும் பெருவிழாக் காட்சியை – மாட்சியைக் காணக் கூடுவோம்! பகுத்தறிவாளர்களுக்கு விழா இல்லையே என்று ஏங்குபவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாகும்! தஞ்சையில் நடைபெறும் மாபெரும் ஊர்வலம், காண முடியாத தனிச்சிறப்பு படைக்கும் மாபெரும் ஊர்வலமாகும்.
நம்மை மனிதனாக்கும் மாமேதை அய்யாவின் அறிவுரை கேட்டிட, அகிலமே திரண்டு வரட்டும் தஞ்சையை நோக்கி! பொன்னான வாய்ப்பு! புதுமைச் சரிதம் படைத்திடும் வாய்ப்பு! புறப்படத் தயாராகிவிட்டீர்களா! என்று குறிப்பிட்டு இருந்தேன்.
கழக மாளிகையாம் பெரியார் மாளிகை நோக்கி (19_8_73)இல் தஞ்சையில் தந்தை பெரியாருக்கு வேன் வழங்குவதற்காக காலை முதலே மாவீரப் படை திரண்ட காட்சியைக் காணாத கண்கள் என்ன கண்களோ! குமரி முதல் சென்னை வரை உள்ள எல்லா மாவட்டங்களிலிருந்தும் தனி பஸ், தனி கார், இரயில் போன்ற பல வசதிகளைப் பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கில் சுயமரியாதை வீரர்கள் தஞ்சைத் தரணியில் திரண்டிருந்தனர்!
காலை 9.30 மணி அளவில், தஞ்சை மணிக் கூண்டு அருகில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு, என்னுடைய தலைமையில் ஏராளமான திராவிடர் கழகத் தோழர்கள்- பகுத்தறிவாளர்களுடன் வந்து மலர் மாலை அணிவித்தேன்! ஒரத்தநாட்டில் காலை ஒரு திருமணத்தை முடித்துவிட்டு, தஞ்சை கழகக் கட்டிடமான பெரியார் மாளிகையில் வந்து தந்தை பெரியார் அவர்கள் தங்கினார்கள்!
வெளியூர்த் தோழர்களும், தாய்மார்களும், மாணவர்களும் அதிகாரிகளும், குடும்பம் குடும்பமாக அய்யா அவர்களை வந்து பார்த்து வணங்கிச் சென்ற வண்ணம் இருந்தனர்.
தந்தை பெரியார் தம் ஆயுள் நீடிப்பதற்கு, அரிய காரணகர்த்தாக்களாக இருப்பவர்களான- அய்யாவின் டாக்டர்களான, வேலூர் டாக்டர் பட், சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியின் தலைமை அதிகாரி டாக்டர் இராமச்சந்திரா, வேலூர் டாக்டர் ஜான்சன் ஆகியோரும் வந்து அய்யாவின் உடல் நலம் விசாரித்தனர்!
மாலை 4.30 மணி அளவில், தஞ்சை கழகத் தலைவர் கா.மா. குப்புசாமி, செயலாளர் இரா. இராசகோபால், க.மா. கோவிந்தராசன், சாமி நாகராசன் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் முதலிய தோழர்களுடன் சென்று கருந்தட்டாங்குடியில் உள்ள தளபதி அழகிரிசாமி, ஜாதி ஒழிப்பு வீராங்கனைகளான லட்சுமி அம்மாள், பரிபூரணத்தம்மையார், தஞ்சை முன்னாள் தலைவர் கோ. ஆளவந்தார் ஆகியவர்கள் சமாதியில் என்னுடைய தலை மையில் கழகத் தோழர்கள் படைசூழ மலர் வளையம் வைத்துத் திரும்பினோம்!
மாலை 6 மணி அளவில் தஞ்சை மோரீஸ் கார்னரிலிருந்து, தஞ்சை இதுவரை காணாத அளவுக்கு மாபெரும் ஊர்வலம் ஒன்று புறப்பட்டது!
யானை ஒன்று முன் செல்ல, அதில் தோழர் சாமிநாதன் கம்பீரமாக அமர்ந்து கழகக் கொடி பிடித்துச் செல்லும் காட்சியுடன் ஊர்வலம் தொடங்கியது!
தலைகள்! தலைகள்!! தலைகள்!!! எங்கு பார்த்தாலும் தலைகள், வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
பஸ்களிலும், லாரிகளிலும், ஒலி பெருக்கியுடனும், ஓவியங்களுடனும், கொடி தோரணங்களுடனும் கணக்கே எடுக்க முடியாத வண்ணம் திரண்ட அவ்வூர்வலத்தில் ஏராளமான வெளியூர்த் தோழர்களும் அணிவகுத்து வந்தனர்!
பாண்டு வாத்தியம், நாதசுவரம், மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள், தீச்சட்டி ஏந்தல், பக்தி மூடநம்பிக்கைகளை மக்களிடம் புட்டுப் புட்டு வைக்கும் வேடங்கள்! இவை எல்லாம் வந்தன! சிம்மாசனம் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு முத்துப் பல்லக்கில் தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அய்யா அவர்களுடன் நானும் அமர்ந்து வந்தோம்.
வழி நெடுக மலர்மாலைகள் அளித்து, தாய்மார்களும், தமிழ் மக்களும் கைகூப்பி, அய்யாவைக் கண்டு உவகை பூத்த காட்சி மெய்சிலிர்க்கக்கூடியதாக இருந்தது. தஞ்சை ரயில்வே ரோடு, மணிக்கூண்டு, கீழவாசல், தெற்கு வீதி போன்று பல முக்கிய வீதிகளைக் கடந்து ஊர்வலம் இரவு 8 மணி அளவில் திலகர் திடலை அடைந்தது! இடையே மழைத்தூறல் விழுந்தது என்றாலும், மக்கள் ஒரு சிறு அளவுகூட கலையவில்லை. ஊர்வலத்தில் புது வேனும் வந்தது. ஊர்வலம் திலகர் திடலை வந்தடைந்தபோது, அங்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர்! எவ்வளவு ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன் இருக்கின்றனர் என்று, பார்த்தோர் அதிசயிக்கும் வண்ணம் அமர்ந்திருந்தனர் அவர்கள்!
கார் பரிசளிப்பு விழா சரியாக இரவு 9 மணி அளவில் தொடங்கியது! தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தலைவர், தோலி. திரு. ஆர். சுப்ரமணியம் அவர்கள் அறிமுக உரை கூறி, இது மாநிலம் முழுவதற்கும் உரிமை உடைய பொது நிகழ்ச்சியானபடியால், நான் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தியபின், போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ராமச்சந்திரன் அவர்களைத் தலைமைதாங்கி நடத்தித் தரும்படிக் கேட்டுக் கொண்டேன்.
அய்யாவின் தொண்டின் பெருமையை விவரித்து விழாத் தலைவர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிறப்புரை நிகழ்த்திவிட்டு, குழு சார்பாக அய்யா அவர்களுக்கு ஒரு கடிகாரத்தினைப் பரிசளித்தார்கள்.
அடுத்துப் பேசிய உணவு அமைச்சர் திரு. மன்னை நாராயணசாமி அவர்கள், தஞ்சை, கழகத்திற்குத் தந்து வரும் ஆதரவுபற்றியும் அய்யாவின் தொண்டுபற்றியும் குறிப்பிட்டார்! குழு சார்பில் டேப் ரிக்கார்டர் ஒன்றினையும் அய்யாவுக்குப் பரிசளித்தார்!
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பேசுவதற்கு முன்பு, தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் டாக்டர் சின்ன துரை மூலம் அளித்த தங்கசாவியை அய்யா அவர்களுக்குத் தந்து பொன்னாடை போர்த்தினார்!
– நினைவுகள் நீளும்…