வக்கிர எண்ணமும், குற்றச்செயல்களின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணமும் சில மனிதர்களுக்கு ஏற்படுவது பழங்கதைதான். ஆனால், அதற்கு அவர்கள் போட்டுக் கொள்ளும் முகமூடிகளாக மதமும், கடவுள் பக்தியும், ஜோதிடமும் இருப்பதுதான் இந்தியாவின் சிறப்பம்சம்.
வடநாடு தொடங்கி தென்னகம் வரை சாமியார்கள் செய்யும் அட்டகாசங்களும் அநியாயங்களும் தொடர்கதைகளாகி வருகின்றன. கடவுள் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் மக்கள் இவர்களின் பிடிக்குள் சிக்கி மானத்தையும், பொருளையும், அறிவையும் இழப்பதோடு மட்டுமல்லாமல் உயிரையும் இழப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
மீண்டும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. திருச்சியில் பிரபல ஜோதிடராக வலம் வந்த ஒரு சாமியார் கொலை செய்யும் அளவுக்குப் போயுள்ளார்.
அந்தச் சாமியாரின் பெயர் கண்ணன். சிறீரங்கத்தைச் சேர்ந்தவர். 9ஆம் வகுப்புவரை படித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் ஒரு சாமியாரிடம் மந்திரம் என்ற பெயரில் ஏமாற்று வித்தைகளைக் கற்றுக் கொண்டுள்ளார். அப்போது, கண் அசைவிலேயே தான் நினைக்கும் செயலினை மற்றவர்களின் மூளையை இயங்கச் செய்து செயலாற்ற வைக்கும் நோக்கு வர்மக் கலையிலும் தேர்ச்சி பெற்றாராம்(?). பின்னர், அங்கிருந்து திருச்சிக்கு வந்து ஜோதிடத்தையும் சாமியார் தொழிலையும் செய்து வந்துள்ளார். அப்போது, திருச்சி திருவானைக்காவைச் சேர்ந்த வைர வியாபாரி தங்கவேல், தொழிலில் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபட மனைவி யமுனாவுடன் சாமியார் கண்ணனிடம் சென்றுள்ளார். பரிகாரம் என்ற பெயரில் அடிக்கடி வந்து சென்றதில் யமுனாவுக்கும் சாமியாருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தங்கவேல் கண்டித்ததால் அவரைக் கொலை செய்துள்ளனர். அடுத்து, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் யமுனாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த துரைராஜ் என்பவரைக் கொலை செய்ததுடன் அவரது ஓட்டுனர் சக்திவேலையும் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்ணன் கூறியுள்ளார். மேலும், யமுனாவின் மகனுக்கும் மகளுக்கும் இவர்களது அந்தரங்கம் தெரியவர அவர்களது கதையையும் முடித்துள்ளனர். பெற்ற பிள்ளைகளையே கொல்வதற்கு உடந்தையாக இருந்து வேடிக்கை பார்த்துள்ளார் யமுனா.
இப்போது சாமியார் கண்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலை செய்துவிட்டு எவரும் தப்பமுடியாது என்கிற நிலையை நமது காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. அந்த நம்பிக்கை இன்னும் மக்களிடம் இருக்கிறதுதான். ஆனால், குற்றம் நடந்து முடிந்தவுடன் குற்றவாளிகளைப் பிடிப்பது என்பது மட்டும் போதுமானதா? குற்றத்தை நடக்கவிடாமல் தடுக்க முன் முயற்சிகளை காவல்துறை எடுக்க வேண்டாமா? பொதுவாக சமூக விரோதிகளைக் கண்காணிக்கும் பணியைக் காவல்துறை தொடர்ந்து செய்துவருகிறது. அதுபோல ஜோதிடம், மாந்திரீகம், பில்லி, சூனியம் செய்யும் சாமியார்களையும் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இந்த திருச்சி சம்பவம் உணர்த்திவிட்டது.
சாமியார் கண்ணனைப் பிடிக்க வேண்டிய காவல்துறை, அவரிடமே குறி கேட்கும் மூடத்தனத்தையும் செய்துள்ளதுதான் வேடிக்கையின் உச்சகட்டம்.
மதச்சார்பின்மையின் மீது அமைக்கப்பட்டுள்ள நமது அரசியல் சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய காவல்துறையினர், தமது மத நம்பிக்கைகளை பணியிடங்களில் திணிக்கும் சட்டமீறலைச் செய்கின்றனர். காவல் நிலையங்களிலேயே கடவுளர் படங்களை மாட்டிவைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் சரஸ்வதி -ஆயுத பூஜைகளைக் கொண்டாடினால், அதே மத நம்பிக்கையின் மூலம் தொழில் நடத்தும் திருச்சி கண்ணனைப் போன்றோர் அதனைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்களா? காவல்துறையினரையும் தமது பக்திப் பிரசங்கங்களின் மூலம் ஏய்த்துவிடலாம் என்று கருதுவதால்தான் இத்தகைய சாமியார்கள் எளிதில் தமது குற்றச்செயல்களை அரங்கேற்றுகின்றனர்.
சாமியார்கள் கடவுளின் தூதுவர்கள் என்று கருதும் காவல்துறையினர் இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவுதான் இத்தனைக் கொலைகளும் நடக்குமளவுக்குச் சென்றுவிட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது சாமியார்களைக் கண்காணிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்குத் துணை செய்யும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு விரைந்து இயற்றவேண்டிய சரியான தருணம் இதுதான்.
– சமன்