அம்மா மறைந்தாரே!
1978 மார்ச் 16ஆம் தேதி காலை கழகத் தலைவர் அம்மாவுக்கு நெஞ்சு வலி திடீர் என்று ஏற்பட்டது. உடனே சென்னை பொது மருத்துவமனை தீவிர இருதய நோய் சிகிச்சைப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தேன். தீவிர இருதய நோய் சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்தவரும், கழகத் தலைவர் அம்மா அவர்களுக்கு நாள்தோறும் மருத்துவப் பராமரிப்பைச் செய்துவருபவருமான டாக்டர் ஜெகந்நாதன் உடனே விரைந்து வந்தார்.
டாக்டர் ஜெகந்நாதன் அவர்கள் பொது மருத்துவமனைக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தீவிர இருதய நோய் சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த நடமாடும் ஊர்தி (mobile van)யைக் கொண்டுவரச் செய்தார்.
உடனடியாக ஊர்தி விரைந்து வந்தது. அவசர உதவியாக மேற்கொள்ள வேண்டிய மருத்துவ உதவிகள் உடனடியாகச் செய்து அம்மா அவர்களை அந்த ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கு தீவிர இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவக் குழுவில் இடம்பெற்று இருந்த மருத்துவர்கள் டாக்டர் செந்தில்நாதன், டாக்டர் லட்சுமிகாந்தன் ஆகியோர் தலைமையில் டாக்டர் திருநாவுக்கரசு, டாக்டர் முகமது அலி, டாக்டர் மேரி, டாக்டர் சிவாஜி, டாக்டர் திருமலை, டாக்டர் சுப்பிரமணி, டாக்டர் மியாஸ் ஆகியோர் தீவிரமான சிகிச்சை மேற்கொண்டனர்.
சிறிது முன்னேற்றம் தென்படுகிறது என்று கருதப்பட்ட நிலையில் திடீர் என்று திருப்பம் ஏற்பட்டு பிற்பகல் 1-_05 மணி அளவில், நமது அருமைத் தலைவர் அம்மா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தார்கள். நான் பெரியார் திடலிலிருந்து அம்மா அவர்களோடு மருத்துவமனைக்கு உடன் சென்று கடைசி வரை அம்மா அவர்கள் அருகிலேயே பொது மருத்துவமனையிலேயே இருந்தேன். உயிர் பிரிந்த அம்மா அவர்களது உடலை மருத்துவமனையிலே பக்குவம் செய்து ஒப்படைத்தார்கள்.
பொது மருத்துவமனையிலிருந்து கழகத் தலைவர் அம்மா அவர்களது உடல் பிற்பகல் 4 மணிக்கு பெரியார் திடலுக்கு எடுத்து வரப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் மறைவுக்குப் பிறகு, அவர் போட்டுத்தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், இயக்கத்தை வழி நடத்திச் சென்ற கழகத் தலைவர் அம்மா அவர்களின் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பெரியார் திடலை நோக்கி, சாரை சாரையாக கண்ணீர் வெள்ளத்துடன் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. மலர் மாலைகளும் மலர் வளையங்களும் மலைபோல் குவிந்துகொண்டே இருந்தன. தமிழினத்தின் வளர்ச்சிக்கு உயிரும் ஊட்டமுமாய் இருக்கும் இந்த இனப் பாதுகாப்புப் பேரியக்கத்தின் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திட அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழின மக்களும் குடும்பம் குடும்பமாய் வந்துகொண்டே இருந்தனர். நேரம் நெருங்க நெருங்க கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது!
அப்போது தமிழ்நாடு சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எம்.ஜி.ஆர்.அவர்கள்தான் முதல் அமைச்சர்.
இருவருக்கும் உடனடியாக அம்மா மறைவுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக கலைஞர் அவர்கள் பெரியார் திடலிலிருந்த என்னோடு தொடர்பு கொண்டு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து, ஆறுதல் கூறினார்.
மாண்புமிகு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சட்டமன்றத்தில் அன்னையார் மறைவுபற்றி இரங்கல் கூறி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார். (அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது).
ஏராளமான கழகத் தோழர்களும் தோழியர்களும் சென்னை பெரியார் திடல் நோக்கி திரளத் தொடங்கிவிட்டனர். எனது மனநிலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு சோகக் கடலில் தத்தளித்த வண்ணம் வேதனையுடனும் துயரத்திலும் நொந்த நிலையில் அவதிப்பட்டது; மறுநாள் (17ஆம் தேதி) அதிகாலையிலேயே வெளி மாவட்டங்களிலிருந்து கருஞ்சட்டைப் பட்டாளம் பெரியார் திடலில் வந்து குழுமிவிட்டது. தங்களுக்குத் தாயாக இருந்து வழி நடத்திச் சென்ற அம்மாவின் உடலைக் கண்டு அனைவரும் கதறி அழுத காட்சி காண்போர் கண்களிலும் நீரை வரவழைத்தது. எங்கு பார்த்தாலும் தேம்பி அழுத முகங்களே காணப்பட்டன.
மாவட்ட திராவிடர் கழகங்களின் சார்பில் ஒவ்வொரு மாவட்டமாக தோழர்கள் ராணுவம்போல் கருஞ்சட்டையுடன் அணிவகுத்து நின்று மலர்வளையம் வைத்து தங்கள் இறுதி மரியாதை செலுத்திய காட்சி உள்ளத்தைப் பிழிவதாக இருந்தது.
தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பத்துடன் புறப்பட்டு மறைந்துவிட்ட தலைவருக்கு இறுதி மரியாதையைச் செலுத்தத் திரண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் ஒரே கருஞ்சட்டை மயமாய் காட்சியளித்தது.
பிற்பகல் 2-:15 மணிக்கு தமிழக நிதியமைச்சராக இருந்த நாஞ்சில் கி.மனோகரன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி எனக்கு ஆறுதல் கூறினார். 2:20 மணி அளவில் அமைச்சர்கள் சி.பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், சவுந்தரபாண்டியன் ஆகியோர் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து செய்தித்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார்.
சரியாக 3:45 மணிக்கு தி.மு.க. தலைவர் கலைஞர், முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் வந்து மரியாதை செலுத்தினர். சற்று நேரத்திற்கெல்லாம் பேராசிரியர் அன்பழகன், சாதிக்பாட்சா மற்றும் தோழர்கள் தொடர்ந்து வந்து மரியாதை செலுத்தினர். சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தலைவர் பண்டரிநாதன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. கலைஞர், பேராசிரியர், அமைச்சர் பெருமக்கள் எல்லோரும் அம்மாவின் உடலுக்கருகே அமர்ந்திருந்தனர்.
சட்ட அமைச்சர் நாராயணசாமி துணைவியாருடன் வந்து மலர் வளையம் வைத்து கண்ணீர் விட்டு அழுதார்.
மரியாதை செலுத்த வரும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே சென்றது. எங்கும் சோகமயம்! கண்ணீர் மழை!
சரியாக நான்கு மணிக்கு அம்மாவின் உடலை டிரக் வண்டியில் ஏற்றுவதற்கான பணிகள் தொடங்கின. மலர் மாலைகள் மலர் வளையங்கள் டிரக் வண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கழகத் தோழர்களும், காவல்துறையினரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். 4:35 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
இயக்கத்தின் சுமைகளை, உடல் நலிவுள்ள காலத்திலும் தன்மேல் சுமந்து கொண்டிருந்த அம்மா அவர்களின் உடலை டிரக் வண்டி சுமந்து சென்றது. வண்டியின் ஒரு பக்கத்தில் நானும், மற்றொரு பக்கத்தில் அம்மாவின் சகோதரர் தியாகராஜன் அவர்களும் அமர்ந்திருந்தோம். அம்மாவின் உடலின் மேல் இனஇழிவை ஒழித்து தமிழர்களின் தன்மானத்திற்கு உயிர் கொடுக்கும் கழகத்தின் கொடி போர்த்தப்பட்டது. தந்தையின் மறைவுக்குப் பின்னால் என்ன செய்யப்போகிறோம் என்று ஏங்கிக் கிடந்த கருஞ்சட்டைக் குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்து லட்சியப் பயணத்தை வழி நடத்திச் சென்ற அம்மாவின் இறுதிப் பயணம் கண்ணீர் மழையில் தொடங்கியது.
இலட்சோப லட்ச மக்கள் என்னும் சமுத்திரத்தில் அம்மாவின் உடல் தெப்பமாக மிதந்து சென்றது! தாய்மார்கள் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து, பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட இயக்கத் தலைவர் மறைந்தார்களே என்று கண்ணீர் வடித்தனர்.
ஊர்வலத்தின் முன்னால் கருப்புக் கொடியைத் தாழ்த்திப் பிடித்து தோழர் ஒருவர் முன் சென்றார். அதைத் தொடர்ந்து திருச்சி நாகம்மை பெண்கள் ஆசிரியைகள், மாணவிகள் அதைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கருப்புச் சின்னம் அணிந்து சோகமாக அணிவகுத்து வந்தனர்.
அம்மாவை இழந்து விட்ட கருஞ்சட்டைப்படை, அதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கில் விழிகளில் கண்ணீர் மல்க அணிவகுத்து வந்தது. அதைத் தொடர்ந்து டிரக் வண்டி சென்றது.
டிரக் வண்டிக்குப் பின்னால் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், தி.மு.க.தலைவர் கலைஞர், பேராசிரியர், சாதிக் பாட்சா, அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், ஆர்.எம்.வீரப்பன், சவுந்திரபாண்டியன், நாராயணசாமி (முதலியார்), முன்னாள் அமைச்சர் ராசாராம், ராசாங்கம், இ.காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் ஆகியோர் உடன் வந்தனர்.
லட்சுமணன் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் ஏ.ஆர்.மாரிமுத்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான என்.எம். மணிவர்மா, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் நடந்து வந்தனர். சாலையின் இருமருங்கிலும் வீடுகளிலும் மாடிகளிலும் கட்சி வேறுபாடின்றி தமிழினமே அணிவகுத்து வந்த காட்சியை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்தனர். மறைந்த தலைவர் அம்மா அவர்களுக்குக் கண்ணீர் மல்க கைகூப்பி தங்கள் மரியாதையைச் செலுத்தினர். ஊர்வலம் ரண்டால்ஸ் சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை, சைடன் ஹாம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை (முன்பிருந்த பெயர்) வழியாக பெரியார் திடலை வந்தடைந்தது.
தந்தையின் வாழ்க்கையோடும் லட்சியத்தோடும் தன்னை நிழலாக அமைத்துக் கொண்டுவிட்ட அம்மா அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கும் அய்யா நினைவிடத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சோகமே உருவாக அமர்ந்திருந்தனர்.
கலைஞர், பேராசிரியர், அமைச்சர்கள், பொன்னையன், ஆர்.எம்.வீரப்பன், நாராயணசாமி (முதலியார்), ராகவானந்தம் மற்றும் கே.ஏ.கிருஷ்ணசாமி, முன்னாள் அமைச்சர் ராசாராம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நெ.து. சுந்தரவடிவேலு, முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் லத்தீப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சங்கரய்யா, உமாநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தா.பாண்டியன், ஏ.எஸ்.கே., ஜனதா கட்சியைச் சார்ந்த ரமணிபாய், இ.காங்கிரஸ் கட்சித் தலைவர் கருப்பையா மூப்பனார், ஆற்காடு வீராசாமி மற்றும் அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அய்.ஏ.எஸ். அதிகாரிகள், திரைப்பட நடிகர் அசோகன் ஆகியோர் சோகமே உருவாக அமர்ந்திருந்தனர். அனைத்துக் கட்சித் தமிழினத் தலைவர்களும் சேர்ந்து தன்மான இயக்கத்தின் ஒளிவிளக்காம் அம்மா அவர்களின் உடலைத் தாங்கிய பேழையைக் குழிக்குள் இறக்கினர். அம்மா, அம்மா! என்ற அவலக் குரல்கள் எங்கும் எதிரொலித்தது! இதயத்தைப் பிளந்து உணர்ச்சிகள் வெடித்தன!
தாங்கமுடியாத துயரத்தில் உடல் தள்ளாடிய நிலையில் என்னை கலைஞர் அவர்கள் தேற்றி ஆறுதல் கூறினார். புலவர் இமயவரம்பன் மயக்கமுற்று வீழ்ந்தார்! படுகுழியில் வீழ்ந்துவிட்ட தமிழனைக் கைதூக்கி உயர்த்திவிட வந்துதித்த தன்மான இயக்கத்தின் முன்னோடித் தலைவர் அம்மா மறைந்துவிட்டார் என்று கலங்கினோம்.
கதறக் கதறக் கண் மறைவில் போன அன்னையின் பிரிவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகத்தான் நாடே கண்ணீர் வடித்தது. கடையடைப்புகள் நடந்தன. இரங்கல் ஊர்வலம் நடத்திய செய்திகள் வந்தவண்ணமிருந்தன; இரங்கல் தந்திகள் குவிந்துபோயின. அன்னையார் உடலடக்கத்தின் பின் மத்திய தி.க. நிர்வாகக் கமிட்டி இரவு ஏழரை மணியளவில் பெரியார் திடலில், கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்கள் தலைமையில் கூடியது.
மத்திய கமிட்டி உறுப்பினர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மற்றும் கிளைக் கழக முக்கிய பொறுப்பாளர்கள் இக்கமிட்டியில் கண்ணீர் காயா நிலையில் கடமையுணர்வின் உந்தலால் கூடியிருந்தனர்.
கமிட்டிக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேறின. 1. தந்தை பெரியார் அவர்களுக்குப் பின்னால் நமது இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நம்மை வழி நடத்திச் சென்றவரும், தந்தை பெரியார் அவர்களைக் காத்து அவர்கள் மறைவிற்குப் பின் அவரது கொள்கைகளைக் காத்து நமக்கெல்லாம் தலைவராக விளங்கிய அன்னையார் அவர்கள் திடீரென இயற்கை எய்திய நிலை குறித்து நேரில் வந்தும், தந்திகள் மூலம் தங்கள் மரியாதையைத் தெரிவித்துக்கொண்ட பொதுமக்களுக்கும், பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இக்கமிட்டி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறது.
2. மார்ச் 26 முதல் பதினைந்து நாட்கள் மாவட்டத் தலைநகரம் அல்லது முக்கிய நகரங்களில் சூளுரை நாள் என்று நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டு தந்தை பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவிதச் சபலங்களுக்கும் ஆளாகாமல் தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது தலைமையில் செய்து முடிப்போம் என்று முன்பு நாம் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை அருமைத் தலைவர் அம்மா அவர்களின் மறைவைத் தொடர்ந்து மீண்டும் புதுப்பித்துக் கொள்கின்றோம்.
3. வணக்கத்திற்குரிய அய்யா அவர்களாலும் அவர்கட்குப் பிறகு அம்மா அவர்களாலும் தலைமை ஏற்றுப் பெருமைப்படுத்தப்பட்ட இந்த இயக்க நிர்வாகத்திற்கு என்றைக்கும் அவர்களே தலைவர்கள் என்கின்ற முறையில் இயக்க நிர்வாகத்திற்குத் தலைவர் என்கின்ற ஒரு அமைப்பு இனிமேல் என்றைக்கும் தேவையில்லையென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது. 4. கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று ஏற்கெனவே 25.12.1977 அன்று மத்திய கமிட்டியால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு வணக்கத்திற்குரிய அம்மா அவர்களின் அங்கீகாரம் பெற்ற நம்முடைய கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களே திராவிடர் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளராகப் பணியாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்ட அந்தத் தீர்மானத்தை உறுதிப்படுத்தி நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களை அந்தத் தீர்மானத்தை முழுமனதுடன் ஒப்புக்கொண்டு இயக்கத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்று வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பணியாற்றுமாறு இக்கமிட்டி கேட்டுக்கொள்கிறது என்பனவாகிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழகத் தலைவர் அம்மா அவர்கள் உடலடக்கம் நடைபெற்று முடிந்த சிறிது நேரத்தில், பெரியார் திடலில் கூடியிருந்த கழகக் குடும்பங்கள் அடங்கிய மக்கள் கடல் முன் அய்யா, அம்மா இல்லாத நிலையில் ஆற்றிய முதல் உரை…
– கி.வீரமணி
– (நினைவுகள் நீளும்)