குடும்பத்தின் மேல் கண்ணீர்

டிசம்பர் 16-31- 2013

– உவமைக் கவிஞர் சுரதா

உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். சுயசிந்தனையாளர்; புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடன் தங்கியிருந்து பாடல் படியெடுத்தல், அச்சுப் பணி கவனித்தல் போன்ற நூல் வெளியிடுவதற்கான பணிகளை மனம் உவந்து செய்தவர். பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயரை சுப்புரத்தினதாசன் என்று வைத்துக் கொண்டார். காவியம் என்ற பெயரில் கவிதை வார இதழினையும், இலக்கியம், ஊர்வலம், விண்மீன் போன்ற பல இலக்கிய ஏடுகளையும் நடத்தியவர். 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியதோடு 4 திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

நான் நாத்திகன்; பெரியார் வழியில் நடப்பவன்; கவிதை என்பது வரப்பிரசாதம் என்று கூறுவதைக்கூட நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். படிக்கும்தோறும் பழகும்தோறும் ஒருவன் கவிதையில் தேர்ச்சி பெற்றவனாகிறான் என்று ஒரு நேர்காணலின்போது கூறியவர்..

* * *
அன்புள்ள மதிமுத்தம்!
என் தாய். என்னை, முதல் பிரசவத்துக்கு ஊருக்கு அழைத்து வருவதற்கு முன்தினம் உன் கணவர், உன்னைக் கல்லக்குடிக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டாராம்.

வந்தும் சந்திக்க முடியவில்லை!

என் தங்கையின் பருவச் சடங்குக்காக வேறொரு தடவை வந்திருந்தபோது, திடீரென்று எனக்கு சன்னி கண்டு பிழைப்பேனா, போய்விடுவேனோ என்று இருக்கும் நிலையில் _ நீ என்னை வந்து பார்த்தாயாம்.

உனது முகம் குவிந்துவிட்டதாம்! கருவிழிகள் கண்ணீர் திறந்தனவாம். எனக்காக!
அந்தச் சந்தர்ப்பத்திலே _ நீ பார்த்திருக்கிறாய் என்னை. ஆனால், நான் பார்க்கமுடியவில்லை, உன்னை!

இப்படி ஒவ்வொரு காரணத்தாலும், நமது சந்திப்பு, இந்த ஒன்பது ஆண்டுகளாக; வெட்டுப்பட்டுக் கொண்டே வருகிறது.

பக்கத்திலுள்ள சித்திர புத்தூருக்குச் சென்ற மாதம் வந்திருந்தாயாம்; உன் வீட்டுக்காரரோடு, திருமணப் பரிசு வழங்க. கேள்விப்பட்டேன்.

வந்த நீ, அப்படியே இந்த ஏழையின் முகத்தை எட்டிப் பார்த்துவிட்டுப் போகக் கூடாதா?

சித்திர புத்தூருக்கும், என் கூரை இருக்கும் சத்திமுத்தத்துக்கும் தூரமென்ன _ பத்துகாதமா? மனமிருந்தால் வந்திருக்கலாம்.
அப்படியே, நீ வந்துவிட்டாலும். எனது சிறு பருவத்துச் சிநேகிதி வந்திருக்கிறாளே என்று _ பத்து வித பதார்த்தமும், பதினெட்டு வகைக் கூட்டும் செய்து உனக்கு மதிப்பான விருந்து வைத்திட முடியுமா என்னால்?

ஏதோ என்னிடமுள்ள கூழ் கிடைக்கும். கருணைக் கிழங்கு என்றால்தான் உனக்குப் பிரியமாயிற்றே; அவை, என் கொல்லையில் ஏராளமாக இருக்கின்றன. வேண்டுமானால் பூனைக்கண் போல பொரியல் செய்து, அதை உனக்கு வைப்பேன்.
விருந்து வந்தால், சிரித்த முகத்தோடு வரவேற்க வேண்டும் என்பார்கள். எனக்கு ஏது சிரித்த முகம் இப்போது?

கூட்டிலே பறவைகள்; குளத்திலே மலர்கள்; மரத்திலே இலைகள்; மஞ்சத்திலே மனிதர்கள் _ அசந்து நித்திரை போகும் விடிஇருட்டில்; கொண்டைக்கோழி.

கொக்கரக்கோ ஓசை கொடுப்பதற்கு முன், கொடி இடையில் குடம் சுமந்து; நமது ஊர் நெல்லிக் குளத்துக்கு நீராடச் செல்வோமே நினைவிருக்கிறதா. நாம் கொய்யாத கனிகளாக இருந்த பருவத்திலே!

நீரின் உடலில் நாம் நீராடிக் கொண்டே; மொட்டுத் தாமரையை; முதல் நாள் மலர்ந்த அல்லியை; முத்தமிட்டு. எத்தனையோ ஆசை வார்த்தைகளைச் சத்தமிட்டுப் பேசி இருக்கிறோம்.

சிரிக்கும்போது, எனது சிவந்த கன்னத்திலே குழி விழுவது கண்டு, கிளிச்சிறை நீ அதிர்ஷ்டக்காரிடி. உன் கன்னத்தில் எப்படிக் குழி விழுகிறது பார்த்தாயா? நீ போகுமிடத்தில், பொன் விளையும் என்று அடிக்கடி கூறி இருக்கிறாய் என்னிடம்.
அம்மா உன் விரல் பட்டால், தவிடும் தங்கத் தூளாய்விடும்.

_ இப்படி பிச்சைக்காரர்களும்; ஆரூடச் சொற்கள் சொல்லி வந்தார்கள். அன்றாடம் எனக்கு.

கீழத்தெரு குடுமி ஜோதிடர் இருக்கிறாரே; அவர் அளந்ததைத்தான் அருகிலிருந்து நீ கேட்டுக் கொண்டிருந்தாயே.

யோகம் வரும் என்றார்.

எனது இதயம் ஈரமானது.

கோவலனைப் போன்ற பெரும் பொருள் படைத்தவனுக்கு நீ வாழ்க்கைப்படுவாய் என்றார்.

ஆயுட்காலம் முழுவதும், பணத்திலேயே படுத்திருக்கலாம் என்று அப்போது மனக்கனவு கண்டேன்?

இப்போது _மான் விழியிலே, நீரைத்தான் காண்கிறேன்.

அந்த நாட்களிலே, என்னை அதிர்ஷ்டக்காரி என்றாயே மதிமுத்தம்; என் கதையிலே அதிர்ஷ்டமா கலந்திருக்கிறது.

தவிடும் தங்கத் தூளாய்விடும் என்றார்களே. அவர்கள் வாக்குத்தான் பலித்ததா? இல்லை, யோகம் வரும் என்றாரே ஜோதிடர்; அவர் சொன்னதுதான் வந்ததா?

இந்த ஜோதிடக்காரர்கள், இப்படி எல்லோருக்கும் ஏன் ஆசை காட்ட வேண்டும்?

அந்த ஆசையை எதிர்பார்த்து, ஏங்கி ஏமாந்து _ ஏன் மனிதர்கள் இப்படி மனம் முறிந்து போக வேண்டும்?

கவிஞர்கள்; தத்துவ மனிதர்கள்; இசை வாணர்கள் _ இவர்களைச் சிறையிலே தள்ளி வைத்தால்தான் உலகம் குழப்பமில்லாமல் இருக்கும் என்று நம் இராவண வாத்தியாரின் ஓலைச் சுவடியிலே பார்த்த ஞாபகம். அவர்களோடு, இந்த ஜோதிடக்காரர்களையும் சேர்த்துச் சிறையிலே போடவேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆமாம் மதிமுத்தம், இவர்கள் மீது அவ்வளவு ஆத்திரம் எனக்கு!
எனது குடிசையைச் சுற்றிலும் நெற்கதிர்கள் முற்றிக் கிடக்கின்றன. அவைகளை எடுக்கும் உரிமை குருவிகளுக்கு இருக்கிறது. ஆனால் எனக்கு இல்லை. அந்தக் கதிர்களும், என் குடிசைக்கு வராது. ஆனால் என் ஏழைக் கணவர், தனது மேல் துண்டில் வாங்கி முடி போட்டிருக்கும் அரிசிதான் வரும். அரிசியும் அவரும் வந்த பிறகுதான், அடுப்பு வெளிச்சமடையும்!

என் கணவர் இருக்கிறாரே. அவரைக் கல்யாணம் செய்து கொண்டதற்குப் பதில் _ பேசாமல் அவரது புத்தகங்களைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தாலும் நிம்மதி ஏற்பட்டிருக்கும். ஏனென்றால், புத்தகங்கள் பேசுவதுமில்லை. அதிகாரம் செய்வதும் கிடையாது. ஆனால் அவர் இரண்டும் செய்கிறாரே.

பாவம்! என் கணவரைக் குறை கூறுவது தவறு. குடலுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும் விரோதி ஆயிற்றே பசி   அது தாக்கியதும், தாண்டிக் குதிக்கிறார் என்னிடம்.

என் கணவர்; சுயமாக வீடு கட்டத் தெரியாத, நாகப்பாம்பு போன்றவரல்ல. பிறர் பொருளைப் பிரதிபலித்துக் காட்டும், கண்ணாடி போன்றவரல்ல.

அறிவு மாறாட்டம் செய்பவரா? அல்ல அல்ல?

இரவல் பெருமை தேடும் இலக்கியத் திருடரா? அல்லவே அல்ல! இப்படி ஏன் அழுத்தமாகச் சொல்கிறேன் தெரியுமா?

என் கணவர், குளம் போன்றவர் அல்ல _ கிணறு போன்றவர். கிணறு, தண்ணீரைக் கடன் கேட்பதில்லை.  தடாகந்தான் மேகத்தின் உதவியை எதிர்பார்க்கும்.
என் கணவரை எதிர்ப்பவர்கள்கூட, சத்தி முத்தப் புலவர். மிகச் சிறந்த சிந்தனைச் சிற்பி என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

இவர், சிலருக்கு _ பேரறிஞராக விளங்குகிறார். பலருக்குப் பித்தராகப் புலப்படுகிறார். மனிதரிலே பலர் _ இவரை மடையன் என்று முடிவு கட்டுகிறார்கள்.
இவரைப் பற்றி _ இவர் போன்ற அறிஞர்களைப் பற்றி _ இப்படி வெவ்வேறு விதமாகப் பேசப்பட்டு வருவதற்குக் காரணம் என்ன தெரியுமா?

உயர்ந்தது எது? என்ற முடிவும்; ஏன் மதிக்கிறோம்? என்பதற்கு விமர்சனமும் சரியாக இல்லாததுதான்.

கண்டிக்கப்படாத புகழ். இன்று, நம் நாட்டில் யாருக்குமே இல்லாமலிருப்பதற்குக் காரணங்கூட இதுதான்.

கோடை இடி போல மேடைச் சத்தம் போடுகின்றனர். தமிழ் வளர வேண்டும், வாழ வேண்டும், வையமெல்லாம் சுற்றி வரவேண்டும் என்று.

ஆனால், தமிழுக்குச் சக்தி தருபவனை; அறிந்தவர்கள் பாராட்டுவதுமில்லை. அரசாங்கம் ஆதரிப்பதும் கிடையாது.

என் கணவரை ஆதரிக்கவில்லையே என்னும் கசப்பில் இப்படிக் கூறவில்லை மதிமுத்தம்.

கவிஞர் ஒருவரை, கலிங்க அரசாங்கம் அமைச்சராக நியமித்திருக்கிறதாம்! கடார தேசத்திலே கவிதைக்கு முதல் மரியாதையும்; கிரீடத்துக்கு இரண்டாவது வணக்கமும் தரப்பட்டு வருகிறதாம்.

அக்கம் பக்கத்துக் கிளைநாடுகள். அங்கே, அப்படி நடந்து கொள்ள, இங்கே இருந்து வரும் ஆஸ்தானக் கவிஞரை எழுந்து போகச் சொல்லுகிறது பதவியை விட்டு _ நமது அரசாங்கம்!

இது சரியா? இருக்கலாமா? இருக்கத்தான் விடலாமா?

மூங்கிலைத் தேடுகிறான் _ கீதக் குழலுக்காக.
முத்துக்களைத் தேடுகிறான் _ ஆபரணத்துக்காக.
மலரைத் தேடுகிறான் -_ மாலைக்காக.

மதிநுட்பம் மிகுந்த புலவர்களை மட்டும் தேடுவதேயில்லை _ தமிழ் வளர்ச்சிக்காக! இது ஏன்?

என் கணவரை, இந்த அரசாங்கம் ஆதரித்திருந்தால், என் விழியிலே நீர் மிதக்குமா? வீட்டிலே வறுமைதான் பிறக்குமா?

மதிமுத்தம்! நான் கொடுத்து வைக்காதவள். ஆம்! நான் கொடுத்தே வைக்காதவள்தான்!
அழகாகப் பிறந்தேன்.

அருமையாக வளர்ந்தேன்.

அறிஞனுக்குத்தான் வாழ்க்கைப்பட்டேன். ஆனால், அனுபவிக்க வேண்டிய சுகம்; அணுவளவுகூட இன்னும் கிடைக்கவில்லை. என் ஆசைகள் வாடுகின்றன. அவஸ்தைகள் வாட்டுகின்றன. அதனால் அழுகிறேன், அழுகிறேன் அழுதுகொண்டே இருக்கிறேன்! சிவந்த ரத்தத்திலே பிறந்து;  இங்கே சீரழிகிறேன். இந்த வேதனையிலிருந்து வேவதைவிட, ஒரு கட்டு விறகிலிருந்து வெந்து விடலாம் போலிருக்கிறது மதிமுத்தம்!

இந்த லட்சணத்திலே, எனக்குக் குழந்தைகள் வேறு. அதுவும் ஒன்றா இரண்டா. ஒன்பது! அதில் முதல் ஏழும் பெண். அடுத்த இரண்டும் ஆண், கடைசிக் குழந்தையோ; பிறக்கும்போதே நரைத்த தலையோடு பிறந்தது.

யாரோ ஒரு யவன அறிஞன்கூட இப்படித்தான் நரைத்த உரோமத்தோடு பிறந்தானாம். பிறப்பு அதுபோல இருந்தாலும் சிறப்பு எப்படியோ, என் மகனுக்கு.
ஒரு நாட்டிலே, பொருளாதாரப் பிரச்சினையை உண்டாக்குவது, பற்றாக்குறை, பஞ்சம் _ இவை மட்டுமல்ல _ அதிகமான பிள்ளை உற்பத்தி இதுவுந்தான். எனது குடும்ப அனுபவத்தைக் கொண்டு கூறுகிறேன் இப்படி.

ஒரு பெண்
பன்றிபோல பல குட்டிகள்
பெறுவதை விட; சிங்கம்போல
ஒன்று பெறுவது, நல்லது _
உயர்வு _ கவுரவம் _ சுகம்!

இந்த உபதேசத்தை உன் வாழ்விலே ஏன் அனுசரிக்கவில்லை என்று கேட்கலாம்….
மானத்தை மறைப்பதற்கு மட்டுந்தான் என்றிருந்தால்; ஆடையில் சாயம் ஏற்ற வேண்டியதுமில்லை. ஆடை விஷயத்தில்; அழகை எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

உடல் நலத்துக்காக மட்டும் உணவு உட்கொள்வதாக இருந்தால், வேப்பிலைகூட துவையலாக வேண்டி வந்துவிடும்.

ஆனால், நாம் _ ஆடையிலே அழகும்; உணவிலே சுவையும்; இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.

அவசியத்தைவிட ஆசைக்காகத்தான் மனிதன்_அநேக காரியங்களைச் செய்து வருகிறான்.

மாதம் இருமுறைதான் _ கணவனுக்காக மனைவியின் சேலை அவிழவேண்டும் என்று சதகங்கள் சொல்லுகின்றன. ஆனால் நடந்து கொள்ள முடிகிறதா அப்படி? முடிந்தால்; இந்த ஒன்பது வெளிப்பட்டு என் உயிரை வாங்கிக் கொண்டிருக்குமா இப்படி?

குழந்தைகள் _ கவலை தீர்க்கும் மருந்து என்கிறாள் தாய். பிராத்தனை_கவலை தீர்க்கும் மருந்து என்கிறான் பக்தன். பிறர் பொருள் _ கவலை தீர்க்கும் மருந்து என்கிறான் திருடன். ஆனால், என் கவலை தீர்க்கும் மருந்து; குழந்தைகள் அல்ல; கொல்லும் விஷம்! அல்லது சாவு!

உனக்கு உற்றார் உறவினர் எவ்வளவோ பேர் இருந்தும் நீ இப்படி வேதனைப்படலாமா?  என்று கேட்கலாம்! அவர்கள் இருந்து எனக்கென்ன?
உறவினர்தான் வௌவால்களாயிற்றே! பழம் இருந்தால், எடுத்துக் கொண்டு போக மரத்தை நாடி வௌவால்கள் வரும்.

என் குடும்பம் வெறும் இலையுள்ள மரந்தானே _ எப்படி வரும் அந்த வௌவால்கள்.

மற்றவர்கள் போகட்டும் _ உன் சிற்றப்பாபிள்ளை செந்தில்நாயகந்தான் சீரும் சிறப்புமாக இருக்கிறாரே. அவரிடம், உனது கண்ணீர்க் குடும்பத்தைப் பற்றி ஏன் கூறக்கூடாது? கேட்டால் உதவமாட்டாரா? என்று நினைவுப்படுத்துகிறாய்.

இதுவரை, அவரிடம் எந்த உதவிக்கும் உதடு திறந்ததே இல்லை. கேட்டாலும் கிடைக்கும். ஆனால் அது எத்தனை நாளைக்கு?

சிறிய இளநீரைக் கொண்டு, வாழ்நாட்களில் ஏற்படும் தாகத்தை எல்லாம் தீர்த்துக் கொண்டுவிட முடியுமா?

எனது கஷ்டத்தைக் குறைத்துக் கொள்ள, அவர் வீட்டில் போய் இரண்டொரு மாதம் இருந்து வரலாம். ஆனால், அந்நியர் வீட்டில் அறுசுவையோடு உண்ணுவதைவிட _ சொந்த வீட்டில் பட்டினியோடு சுருண்டு கிடப்பதுதானே கீர்த்தி கொடுக்கும் விருந்து!

ஆமாம்_உனக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறதே. அதற்கு என்ன பெயர் இடப்போகிறாய்?

பங்கஜம் என்று முதல் பெண்ணுக்குப் பெயர் வைத்தாயே, அதுபோல ஆரிய வார்த்தையிலா? இல்லை_அமுதத் தமிழ்ச் சொல்லிலா?

மன்னர்கள்_மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், தமிழ்காத்த புலவர்கள்_கலைஞர்கள், அறிஞர்கள்; கற்பரசிகள்; அவர்களது நினைவாக நமது பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதா? மொழி மரியாதை இழந்து_அந்நியர் சொற்களை உபயோகித்து _ நம் குழந்தைகளை அழைப்பதா?

நீயே இப்படி நடந்துகொண்டால் நாட்டிலே படிக்காதவர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

பங்கஜம்_என்னும் பெயரை உடனே, தாமரை என்று தமிழிலே மாற்று.

ஏன் மதிமுத்தம்_குழந்தையின் குழல்_சுருண்டு சுருண்டு இருக்கிறதா? அப்படி இருந்தால், மோதிரக் குழலி என்று உன் மகளுக்குப் பெயர் இடு. அல்லது மேகலை என்னும், ஒரு ஆபரணத்தின் பெயரைத்தான் உனது அரும்புக் குழந்தைக்கு இடேன்.
நீதான், நாகரெத்தினம் போல தேகமெடுத்தவள். அழகின் அழகி! உன் வயிற்றிலே பிறந்த உரு, அந்தி வானம் போல அழகாகத்தானே இருக்கும்! அதனால், உன் மகளை அழகி என்றுகூட அழைக்கலாம்.

ஏன் உனக்குத்தான் கவிஞர்களை மிகவும் பிடிக்குமே_நப்பசலையார் என்னும் சங்ககாலப் பெண்கவியின் பெயரைத்தான் உன் பெண்ணுக்கு வையேன்.

இப்படிப் பெயர் வைத்தால்_நப்பசலையாரின் நினைவு வரும். அடுத்து, அந்த அம்மையாரின் வாழ்க்கை வரலாறும்; அவர் வளர்த்துத் தந்த பெருமையும் விளங்கும். பிறகு அவரைப் போல ஆகவேண்டும் என்ற எண்ணம்; உனது இன்ப மகளுக்கு ஏற்படும்!

இன்னொரு சேதி, மிக முக்கியம் இது. உன் கணவர் ஊரான கல்லக்குடியை, தாலமிபுரம் என்று மாற்றிவிடத் திட்டம் தீட்டுகிறார்களாம்_மார்புநூல் மனிதர்கள். இந்த வஞ்சக வேலையை_உன் கணவரிடம் கூறு. ஊராருக்கும் உரைக்கச் சொல்_உணர்வு பெற்று எழ!

இதில் நாம், ஏமாந்தால்_நம் தமிழ் ஏமாந்தது_என்பதுதான் பொருள். இப்படி நாம் அடிக்கடி ஏமாந்துவிட்டதால்தான்_ திருமறைக்காடு_வேதாரண்யமாகத் திரும்பியிருக்கிறது. முதுகுன்றம்_விருத்தாசலம் என்று உச்சரிக்கப்படுகிறது. மயிலாடுதுறை_மாயூரம் என்று எழுதப்பட்டு வருகிறது.

வேறு மொழிக்காரர்கள்_நமது விருந்துத் தமிழை இனியும் வீணாக்கவிடக் கூடாது. அதற்கு, நமது உணர்ச்சிகளையும் கவனத்தையும் பழுதுபடாமல் பக்குவமாக வைத்துக் கொள்ளவேண்டும். விஷ ஜந்துக்களைப் போல; எப்போதும் ஜாக்கிரதையாகவும் இருந்து வரவேண்டும்.

ஆயுதங்கள் அசைவது குறைந்தால் _ வீரம் சுருங்கிவிடும். மொழியைப் பாதுகாக்கத் தவறிவிட்டால் _ இனி உணர்ச்சி ஏற்பட வழியில்லாது போய்விடும்.

இந்த இரண்டு நிலைகளும் வளர்ந்துவிட்டால் _ பிறகு;  அந்நியத்தனமும்; அடிமை நடத்தைகளும்_நம் நாட்டை, ஆக்ரமித்து அதிகாரம் செய்ய ஆரம்பித்து விடும்!

மதிமுத்தம்! என் கணவர், தமிழ் மதுரை சென்று பாண்டியனைப் பார்க்க விரும்புகிறார். அவரை அனுப்பிவைக்க_வழிச் செலவுக்கு வழியில்லை. வயிற்றுக்கே இல்லாமல் வாடும்போது, வட்டப்பணம் எப்படி இருக்க முடியும் என்னிடம்.

தயவு செய்து ஏதோ கொஞ்சம் உதவி செய். இது உனக்குப் புண்ணியமல்ல _ பெருமை. நம் தமிழுக்கு நீ தரும் நன்கொடை.

குடும்பக் கதையைக் கூறி; கடைசியில்_கைப்பொருளுக்கே வழிவைக்கப் பார்க்கிறாளே கிளிச்சிறை என்று நினைத்துவிடாதே. நீ அப்படி நினைக்கவும் மாட்டாய். அதனால்தான்  கேட்கிறேன். கடிதத்தை விட்டும் உன்னைக் கேட்கவைக்கிறேன்!

அழுதுகொண்டே எழுதி முடித்த இந்த ஓலை; உன்னிடம் வந்ததும்; இந்த உதவி செய்ய மறந்துவிடாதே மதிமுத்தம்!

இப்படிக்கு,
கண்ணீர்விடும் கிளிச்சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *