இன்னும் இருக்கிறார்கள்
இப்படியும் மனிதர்கள்
இடம் : நுங்கம்பாக்கம்
நேரம் : மதியம் 1.30 மணி
நாள் : வியாழக்கிழமை
அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். சம்மந்தமே இல்லாமல் அந்த நேரத்திற்குக் கடும் போக்குவரத்து நெரிசல். மழை வேறு தூறிக் கொண்டிருந்தது.
ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி முன்பாக சிக்னலில், என் பக்கத்தில் 50 வயது மதிக்கத்தக்க பச்சை நிறச் சட்டை அணிந்த நபர், கருஞ்சிவப்பு நிற சேலையும், கனமான நகைகளும் சூழ அமர்ந்திருந்த அவரின் 40 வயது மதிக்கத்தக்க மனைவி இருவரும் ஹீரோ ஹோண்டாவில் காத்திருந்தனர்.
கிரீன் சிக்னல் விழுந்ததும் டூவீலரை இயக்கி முன்னே போக ஆயத்தமானார். அவருக்கு முன்னால் இருந்த கார் ஒன்று இடதுபுறம் திரும்புவதற்காக பின்னாலேயே வர, இந்த நபர் எவ்வளவோ ஹாரன் அடித்தும், கத்தியும் கார் வந்து இவரின் டூவீலர் மீது உரச, வண்டியோடு கீழே விழப் போனவர் வண்டியைத் தடுமாறி நிறுத்தினார். இவை நடந்து முடிப்பதற்குள் பின்னால் இருந்து எல்லோரும் தங்களிடம்தான் ஹாரன் இருப்பதுபோல் அடித்துக் கொண்டிருந்தார்கள். இவரை ஓவர்டேக் செய்ய ஆட்டோ ஒன்று முயல, மீண்டும் உரசியதில் கணவனும் மனைவியும் கீழே விழுந்தார்கள். தவறுதலாக பின்னால் வந்து இடித்த கார் ஓட்டுனர், ஓவர்டேக் செய்ய முயன்று கீழே தள்ளிவிட்ட ஆட்டோ டிரைவர், இருவரும் தத்தம் வண்டியை விட்டுக் கீழே இறங்கி சாரி கேட்க வந்தனர். இந்தப் பச்சைச் சட்டை மனிதர் அவர்கள் இருவரையும் திட்டித் தீர்க்கப் போகிறார் என்று பார்த்தால், இவர் கீழே விழுந்த மனைவியைப் பார்த்து, மூதேவி! உன்கூட வந்தாலே எதுவும் வௌங்காது; தரித்திரம் புடிச்சவளே, இன்னக்கிப் போயிச் சேர்ந்த மாதிரிதான்…. என அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு அந்த அம்மாவையே திட்டிக் கொண்டிருந்தார்.
அந்த அம்மா, கண்களில் நீர் கோர்த்து அழத் தயாரானார். இவர் கடைசி வரை கார் டிரைவரையும், ஆட்டோ டிரைவரையும் ஒன்றுமே சொல்லவில்லை! எல்லோரும் புறப்பட்டுப் போனதும் இருவரும் கிளம்பிப் போனார்கள். யெல்லோ பேஜெஸ் வரை அவர்கள் என் வழியிலேயே வந்தார்கள். அந்த அம்மா அழுவதும், முந்தானையில் துடைப்பதுமாகவே இருந்தார். அவர்கள் மயிலாப்பூர் பக்கம் திரும்பினார்கள். சொல்ல மறந்துவிட்டேன், அந்த வண்டியின் பின்னால் பாரதியாரின் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது!
# கடந்த இரண்டு மாதங்களில், இதே போன்று நான் பார்த்த மூன்றாவது சம்பவம் இது!
– முகநூலில் நெல்சன் சேவியர்