தயான் சந்த் என்பவரைத் தெரியுமா?
விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில்லை என்று தயான் சந்த்தை நிராகரித்த இந்திய அரசுதான் இன்று சச்சின் டெண்டுல்கரைத் தேடிக் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, யார் அந்த தயான் சந்த் என்பதைப் பார்க்கலாம். விதிகளை மாற்றி விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என்றால் முதல் விருது தயான் சந்த்துக்குத்தான் தரப்பட வேண்டும் என்கிறது அவரது சாதனைப் பட்டியல்.
ஹாக்கி விளையாட்டு வீரரான இவர்தான் இந்தியாவுக்கு 3 ஒலிம்பிக் தங்கம் வாங்கிக் கொடுத்தவர். இவர் தலைமையில் சென்ற இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தோற்றதே இல்லை.
1932இல் 37 போட்டிகளில் 133 கோல், 1934_35இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் ஆடிய ஆட்டத்தை முறியடிக்க இன்னும் ஒருவர் பிறக்கவில்லை. இவரது ஆட்டத்தைப் பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன், ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை ஹாக்கி அணியில் சேர்த்து விட்டார்கள்! கிரிக்கெட்டில் ரன்கள் எடுப்பது போல் அல்லவா கோல்கள் அடிக்கிறார்! என்று சொன்னாராம்.
அன்றைய பன்னாட்டுப் பத்திரிகைகள் இவர் மட்டையில் பசையைத் தடவி வைத்திருக்கிறாரோ? பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே! என்று எழுதினவாம்!
ஆஸ்திரிய நாட்டில் இவருக்குச் சிலை வைத்துள்ளார்கள். எப்படித் தெரியுமா? நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை அமைத்து, அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையைக் கையில் பிடித்த வண்ணம் இருக்கும்!
1905இல் பிறந்து 1979இல் மறைந்த தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதிதான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது! ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் உள்ளதா என சோதித்தார்களாம்.
ஒருமுறை ஹாக்கிப் போட்டியில் விளையாடியபோது, தயான் சந்த்தினால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லையாம்; இவர் அடித்த கோல்கள் இலக்கினுள் விழவில்லை. பின்னர் நடுவரிடம் சென்ற தயான் சந்த், இரு கோல் கம்பங்களுக்கு இடையே உள்ள தூரம் சரியான அளவில் அமைக்கப்படவில்லை என்று முறையிட்டுள்ளார். இதனை ஏற்று அளவெடுத்துப் பார்த்துள்ளார்கள். அப்போது, பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூர அளவு சரியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அனைவரும் வியந்துவிட்டனர்.
தயான் சந்த்தின் திறமையைப் பார்த்த ஹிட்லர், ஜெர்மன் குடியுரிமையுடன் ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாகச் சொல்லி இருக்கிறார்! ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்டார் தயான் சந்த்!
பன்னாட்டு ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள தயான் சந்த்துக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது; விளையாட்டு அமைச்சகமும் பரிந்துரை செய்தது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா கொடுக்கப்படுவதில்லை என்பதால் அதை அரசு நிராகரித்துவிட்டது.
இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வாங்கிக்கொடுத்த தயான் சந்த்துக்கு வழங்காத பாரத ரத்னா, தனது சொந்த சாதனைக்காக விளையாடியதோடு மட்டுமல்லாமல், விளையாட்டை வைத்து கோடிகளில் சம்பாதித்தவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்பற்றுக்கும், உழைப்புக்கும் இந்தியாவில் மதிப்பு இவ்வளவுதானா?
– விளையாட்டுப்பிள்ளை