துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்!
நூல்: வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு
ஆசிரியர்: ரகசியன் | செல்பேசி: 9445182142
வெளியீடு: பொன்னி,
2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ, மடிப்பாக்கம், சென்னை-91
பக்கங்கள்: 88 | விலை: ரூ.60/-
ஒருவரியேனும்
உங்களோடு சேர்ந்து வாக்களிக்கிறேன்
உங்களோடு சேர்ந்து திரைப்படம் பார்க்கிறேன் அவ்வப்போது
உங்களோடு சேர்ந்து மது அருந்துகிறேன்
உங்கள் விரல்களில் இருக்கும் வெண்சுருட்டை
போதை நிறைந்த அப்பொழுதில்
புகைக்கவும் செய்கிறேன்
என்பதினால்
நீங்களாக நான் எப்போதும் ஆனதில்லை
என்றாவது மலர்கள் மொழிந்ததுண்டா
உங்களிடம்?
நிலவின் இதழ் உங்கள் கன்னம்
தீண்டியிருக்கிறதா?
இப்பெரிய நீலம்
உம் கண்களில் நிரம்பி வழிந்திருக்கிறதா?
வெட்டு வாங்கிய மரங்கள்
உம்மிடம் சொல்லி அழுதிருக்கின்றனவா?
தோண்டப்பட்ட மலையில் வழியும்
இரத்தக் கவிச்சியை உணர்ந்திருக்கிறீரா நீவீர்?
நீ இளைப்பாறும் இந்நிழல்
நீரே நட்டு வளர்ந்த மரமா?
சுவைக்கும் கனியும் அப்படியோ?
நீரில்லா இம்மணல் வெளியில்
நதியின் கண்ணீர் ஓடுகின்றதைக் கண்டீரா? வியர்வைக்கு நியாயமான விலை கேட்டதற்கு
உம் சகமனிதன் கொளுத்தப்பட்டான்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்
உம் சகமனிதனின் தலைமையைப்
பொறுத்துக் கொள்ளாமல்
அவனை வெட்டி முண்டமாக்கினர்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்
உம் சக மனிதனின் வாயில்
பீ திணித்தார்கள்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்
அற்புதமாக எழுதும் நீங்கள்
இம்மானிட இழிவுக்கு எதிராக
ஒருவரியேனும் எழுதியதுண்டா?
ஓசோன் படலம் கிழிந்துவிட்டது
பூமி வெப்பம் அடைந்துவிட்டது
ஆயிரமாண்டின் பண்பாடு
அழியத் தொடங்குகிறது
என்று புலம்பும் வாயிலிருந்து
இந்த இழிசெயல்கள் மேல்
காறி உமிழ எச்சில்
ஏன் இல்லை?
இதயத்தில் கசிவில்லை
எறும்புகள் புழுவை
வதைப்பது போல்
மக்களை வதைக்கிறது பசி
பைத்தியத்தின் திமிரில் வரும்
உம் சொற்கள் அல்லது
செயல்கள்
இம்மண்ணின் இதயங்களைக்
கருக வைக்கின்றன
கவின்மிகு பூக்கள் தீயில்
கருகுவது போல்
சன்னல் வழி சொட்டும்
இவ்வழகிய மழை தான்
குடிசை மக்களைத் துன்புறுத்துகிறது
தும்பிகள் பிடிக்க வேண்டிய
விரல்களைச் சுடுகிறது
கண்ணாடிக் குவளை வழி தேனீர்
இன்னும் பல யாவும் கண்டும்
எந்தக் கசிவுமில்லை இருதயத்தில்
இப்பெரும் கடலில் நீலம்
கொட்டிக்கிடப்பது போலவே
இவையாவும் என்றெண்ணி
ஒரே அலைவரிசையில் பயணம் செய்கிறோம்
நம் எழுத்துக்காரர்களைப் போல்
நம் கூத்துக்காரர்களைப் போல்
நம் ஆட்சிக்காரர்களைப் போல்
கொடும் விலங்கொன்று
பசியையும் தீண்டாமையையும்
தின்று வளர்கிறது
கொடும் விலங்கொன்று
குடிசை ஒவ்வொன்றிலும்
ஆழிப்பேரலையையும்
அடங்கா பெரும் காற்றையும்
எங்கள் திசைகளில்
திருப்புகின்றாய்
புயல்களைச் சுவாசித்தே
ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்
ஆயிரம் ஆண்டுகளாய்
வடிகட்டிய மென்காற்றைத் தின்று
வாழ்கிறாய்
ஆரவாரமாய், அமைதியாய், திமிராய்
கட்டப்பட்டுள்ள அவ்விலங்கு
கட்டுக்கடங்காமல் அறுத்துக்கொண்டு
உன் அமைதியை ஆரவாரத்தை திமிரை குதறும்
அந்நாள் வரை துய்
எம் மகிழ்வை அமைதியை
மென்காற்றை
துளிரும் தேசம்
ஒருவருக்கு மலம் திணிக்கிறீர்
எல்லோரும் கொதிக்கிறோம்
நெருப்புக் குளம்பாய்
எங்கள் தாய்களையும்
சகோதரிகளையும் பலாத்காரம் செய்கிறீர்
கருவுருகிறோம்
ஆயுதங்களோடு
எரித்த எம் குடிசைகளின் தீக்களாலே
சூரியன்கள் பல காய்த்திருக்கிறோம்
உங்களின் ஒதுக்குதல்களில் இருந்து
துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்
வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு
தெரிந்த வழி எல்லாம்
பயணிக்கிறோம்
எங்கும் காணவில்லை
வளர்ந்து வரும்
நம் எழுத்தின் கைகளுக்கும்
உறுமும் நம் பேச்சின் பேரொலிக்கும்
துளிர்க்கும் நம் அரசியலுக்கும்
தொடரும் உரையாடலுக்கும் மசியவில்லை
தேவைப்படுகிறது
இன்னும் பல ஆயுதங்கள்
வண்ணங்களை விழுங்கிப்
பெருத்துக் கொண்டிருக்கும்
இருட்டினுள் இருக்கிறது அது
ஆயிரமாண்டின் இதயங்களைக்
கழற்றி எறிந்து விட்டு
அப்பெரும் இருட்டினுள்
பாய்வோம் சூரியனாய்
அறிவின் வாளில்
சாதி கழித்த மலத்தினுள்
புதைந்திருக்கிறது தாய் நிலம்
மலத்தில் பிறந்த மிருகம்
வேட்டையாடிக் கொண்டிருக்கின்றது
மக்களை
ஞானத்தின் கூரிய வாள்
வாய்மையின்
தலைமேல் தொங்கிக் கொண்டிருக்கிறது
மதம் காக்க தெய்வத்தின்
பிணத்திற்கு அரிதாரம் பூசி
ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
ஆயிரங்கள் ஆகிப்போன
நான்கு வர்ணங்களைக் கட்டிக் காக்கிறது
பூணூல்
பிரிக்கப்படாமலிருக்கும்
மந்திரக்கட்டுகள் அறுத்தெறியப்படும்
கூரேறிக் கொண்டிருக்கும்
அறிவின் வாளில்