ஆசிரியர் பதில்கள்

டிசம்பர் 16-31- 2013

தோல்வி என்பது புதிய அனுபவம் எனும் எடிசன்  கருத்தை மனதிற் கொண்டு தி.மு.க. லட்சியப் பயணத்தைத் தொடரட்டும்!

கேள்வி : மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவனா? மனிதனாகவே தோன்றியவனா? – இரா. மகாலிங்கம், கூடுவாஞ்சேரி

பதில் : சார்லஸ் டார்வின் அவர்களது பரிணாமக் கொள்கைப்படி, மனிதன் குரங்குப் பருவத்திலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றவன். அதனால் எளிதாகப் புரிய _ குரங்கிலிருந்து தோன்றியவன் என்று கூறுகிறார்கள்! மனிதனாகவே பிறந்தவன் அல்ல.

கேள்வி : எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன் என்று சுவாமி விவேகானந்தர் சொல்கிறார். (நூல்: விவேகானந்தரின் அறிவுரைகள்) இதற்கு நாத்திகரான தங்களின் பதில்?
– வி.திருகுமரன், கலைஞர் கருணாநிதி நகர்

பதில் : ஏற்றுக்கொள்ளப்படாத, மறுக்க வேண்டிய கருத்து இது! எவனுக்கு அதிக தன்னம்பிக்கை உள்ளது-? ஆத்திகனுக்கா? நாத்திகனுக்கா? என்ற கேள்விக்குச் சரியான பதில், நாத்திகனுக்கே என்பதுதான்! எதுவும் தன் கையில் இல்லை; எல்லாம் அவன் செயல் – தலைவிதியின்படி என்பவன்தானே தன்னம்பிக்கை இல்லாதவன் – இல்லையா?

கேள்வி :தீபாவளிப் பண்டிகை தினங்களில் கொடுக்கப்படும் ஊக்கத் தொகையை(போனஸ்) தொழிலாளர் தினமான மே 1இல் கொடுத்தால் என்ன? – க. அகலவன், வியாசர்பாடி

பதில் : அறிவுள்ளவர்களும் தெளிவுள்ளவர்களும் சில இடங்களில் இப்படிச் செய்கின்றனர். இன்னும் சிலரோ மக்களை ஏமாற்றிட மதப்பண்டிகைகளை இப்படிப் பயன்படுத்துகின்றனர்.

கேள்வி : இலங்கைக்கு இந்தியா 54,000 கோடி நிதி வழங்கியிருப்பது _ மறுசீரமைப்புப் பணிகளுக்கா? ஈழத்திலே நடத்தப்பட்ட இனப்படுகொலையில் இந்தியாவின் பங்களிப்பை மறைப்பதற்கா? – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் : இரண்டாவதுதான் உண்மை என்றாலும், முதலாவது இங்குள்ள தமிழர்களைத் திருப்தி செய்ய உதவுமே என்பதால்தான்; ஆனால் அது கரையான் புற்றெடுக்க அதில் கருநாகம் குடிபுகுந்த கதைபோல சிங்களவர்களுக்குப் பெரிதும் பயன்படப் போகிறது என்பதே யதார்த்தம்!

கேள்வி : தில்லியில் எதிர்க்கட்சி வரிசையில் நம் எம்.பி.க்கள்! தமிழ்நாட்டிற்கு எதிர்க்கட்சிகள் தேவையில்லை என்று ஒரு ஜாதிக்கட்சி நடிகர் கூறும் கருத்தில் சாரம் இருக்கிறதா? – மலர்மன்னன், முசிறி

பதில் : அத்தகைய உளறல்களையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு உங்கள் நேரத்தையும் எனது நேரத்தையும் தயவுசெய்து வீணாக்காதீர்கள்!

கேள்வி : கோமாரி வந்து சாகும் மாட்டில்கூட மனுதர்மம் பார்க்கும் வீரத்(?) துறவி இராமகோபாலன் கூற்று சரியா? (பசு மாடு செத்தால் நாட்டுக்கு ஆபத்தாம்! அப்படியென்றால் எருமை, எருது, ஆடு பாவப்பட்டவையா?)
– இல. சங்கத்தமிழன், செங்கை

பதில் : பார்ப்பன மனுதர்மவாதிகளின் அற்ப சரக்கில்லா புத்திக்கு இதுவே சரியான எடுத்துக்காட்டு.

கேள்வி : போதுமான நிதியினை அறிவியலுக்கு ஒதுக்காத அரசியல்வாதிகள் முட்டாள்கள் என பாரத ரத்னா விருதுக்குத் தேர்வு பெற்றுள்ள சி.என்.ராவ் என்ற பிரபல விஞ்ஞானி வேதனைப்பட்டுள்ளாரே?
– எஸ்.கோவிந்தசாமி, பெரம்பலூர்

பதில் : அவர் கருத்து சரியே; அவர் மொழி சரியல்ல.

கேள்வி :காமன்வெல்த் மாநாடு விஷயத்தில் பிரதமர் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார் என்ற கலைஞரின் கருத்துக் குறித்து?
– எஸ்.சகானா, சென்னை

பதில் : 100க்கு 100 அப்பட்டமான உண்மையே!

கேள்வி : தேர்தல் விதிமுறைகளை அரசியல் கட்சிகள் மீறும்போது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதேன்?
– பி.செல்வம், அம்மாபாளையம்

பதில் : ஏன், நடவடிக்கை எடுக்கிறதே; ஜெயலலிதா அம்மையார் அப்பட்டமாக மீறியதற்கு விளக்கம் கேட்டது; அவர் கொடுத்த விளக்கம் ஏற்கப்படவில்லை என்பதை செல்லக்கோபமாய் சம்பத் அய்யங்கார் கமிஷன் காட்டியுள்ளதே! போதாதா?

கேள்வி : எந்த நாடும் இலங்கைக்குக் கட்டளையிட முடியாது என்று கூறி கொடுங்கோலன் ராஜபக்சே இங்கிலாந்து பிரதமர் கேமரூன் வேண்டுகோளை நிராகரித்துள்ளது பற்றி? – ஜி.சரஸ்வதி, ஜீயபுரம்

பதில் : முன்பு இட்லர், இடி அமீன் பேசிய பாஷை அது. இப்போது இராஜபச்சே. அவர்களை வரலாறு குப்பைத் தொட்டியில் போட்டு மிதித்தது போலவே இவருக்கும் அக்கதி விரைந்து வந்து கொண்டிருக்கிறது!

 

(வாசகர்கள் ஆசிரியருக்கு கேள்விகளை unmaionline@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் கேட்கலாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *