புதிய ஆய்வுத் தகவல்
புத்தர் கி.மு.3ஆம் நூற்றாண்டில் பிறந்தவர், 4ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்று பல கருத்துகள் நிலவிவரும் நிலையில், புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் மிகப் பழைமையான புத்த விகாரை (கோவில்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபின் கன்னிங்ஹம் தலைமையிலான தொல்லியல் குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட தொடர் புத்த விஹாரைகளின் கீழ் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தாலான விஹாரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மய்யப்பகுதியில் வெற்று இடம் உள்ளது. இந்த வெற்றிடத்தின் மய்யத்தில் மரம் இருந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பழமையான மரத்தின் வேர்கள் அந்த இடத்தில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. லும்பினி தோட்டத்தில் மரத்தின் கிளையைப் பிடித்தபடி ராணி மாயாதேவி புத்தரைப் பிரசவித்த கதையுடன் இதற்குத் தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இதிலிருந்து, புத்தர் மரத்தடியில் பிறந்திருக்கலாம் என்ற வரலாறு உண்மை என்பதும் அவர் பிறந்த இடமான மரம் புனிதமாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.