நூல்: தேவபாரதி சிறுகதைகள்
வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்
28/21, டாக்டர் கலைஞர் நகர் 4 ஆம் தெரு, திருவொற்றியூர், சென்னை – 600 019.
மொத்தப் பக்கங்கள் : 248
விலை : ரூ.220/-பல்வேறு காலகட்டங்களில் எழுதிய பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமாகிய (1960லிருந்து) கதைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.
அய்ம்பது வருடங்கள் முடிந்தாலும், மனிதர்களின் மனநிலை, சமுதாயப் பிரச்சினைகள், மனிதர்களின் குணநலன்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே பாங்கில்தான் உள்ளன என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
கால் ஊனமுற்ற நிலையிலும், தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து, இல்லற வாழ்க்கையினை இன்பமாக நடத்தும் துரைசாமி கதாபாத்திரம் தொகுப்பிற்கு வெளிச்சம் போல் அமைந்துள்ளது.
மலைமேல் இருக்கும் கோவிலுக்குக் கஷ்டப்பட்டு ஏறி வந்து, 20 வருடமா இந்தச் சாமி முன்னாலயே நின்று பார்த்து, உள்ளே வர்றவங்க போறவங்களை வரிசையா விட்டுக் காவல்காத்த எனக்கே ஒன்னும் செய்யலை. என்றோ ஒரு நாள் 5 நிமிடம் 10 நிமிடம் பார்த்து கூட்டம் கூட்டமா வந்து கும்பிட்டுப் போறவங்களுக்கு இந்தச் சாமி – கல்லு என்ன செய்யப் போகுது? உண்மையைச் சொன்னதற்குத் தண்டனை கொடுத்ததோடு, பைத்தியக்காரப் பட்டம் வேறு என்று இந்த மனுசப் பசங்கள கதையில் இடம்பெற்றுள்ள மொட்டை என்ற கதாபாத்திரப் புலம்பல் அறிவுப் பொறியினைத் தட்டி எழுப்பக்கூடியது.
மனிதனின் மனநிலைகள் பல கோணங்களில் அலசி ஆராயப்பட்டிருப்பினும், சில கதைகளில் தொய்வு நிலை காணப்படுவது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தியிருப்பதே தேவபாரதி சிறுகதைகள்.
நூல்:
பகுத்தறிவுக் கனிகள் வெளியீடு: சிந்தனை பதிப்பகம்
எண்: 8, அம்பா அங்காடி, ஸ்கிம் சாலை,பேருந்து நிலையம்
அருகில், திண்டுக்கல்-1.
மொத்தப் பக்கங்கள் : 32
விலை : ரூ.20/-இன்றைய சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் மூடப்பழக்கவழக்கங்களை முற்றிலும் களைய முயற்சி எடுத்துள்ளார் நூலாசிரியர். சொல்ல வந்த கருத்துகளை வெண்பாக்களில் வடிவமைத்து, சமுதாயத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரப் போராடியுள்ளார்.
புராணம் என்றாலே புளுகுமூட்டை, கட்டுக்கதை என்று அறிந்திருந்தும், அதனை நம்பி மக்கள் ஏமாறும் தன்மை எளிமையான முறையில் சுருங்கச் சொல்லி விளக்கப்பட்டுள்ளது.
விநாயகனின் தோற்றம், சிவனின் திருவிளையாடல்கள், அய்யப்பனின் பிறப்பு… என்ற இந்துமத அவலங்களை விளக்கி வினா எழுப்பப்பட்டுள்ள விதம் பகுத்தறிவைத் தூண்டக்கூடியது.
ஆதிசேடன் என்னும் அரவம் சுமக்கிறதாம்(!) காதிலே பூச்சுற்றக் கண்டீரோ? மேதினியோ/ தானாய்ச் சுழலுதய்யா! சாத்திரம் சொல்வதெல்லாம்/ வீணென்று தூற்றியே வீசு/ என்று விஞ்ஞான விளக்கம் கூறி சிந்தனைக்கு வித்திடப்பட்டுள்ளது.
அனைத்து மதங்களிலும் காணப்படும் மூடநம்பிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மருத்துவத்தில் நம்பிக்கை வைக்காமல் இறை நம்பிக்கையால் ஏற்படும் விளைவுகள் போன்றன அலசி ஆராயப்பட்டு மனிதனாய் வாழ வழி காட்டப்பட்டுள்ளது.
சூத்திரர், பஞ்சமர் என்ற பாகுபாட்டை அழித்து அறிவுச் சுடர் ஏற்றிய பெரியார், ஜாதி விலங்கினைத் தகர்த்தெறிந்து நீதி கண்ட அம்பேத்கர் வழியினைப் பின்பற்றி நடக்க வழி கூறப்பட்டுள்ளது.
பக்திப் போதையில் மூழ்கிப் பகுத்தறிவை இழந்து தவிப்போரின் மனதினைப் பண்படுத்த உதவுவதே பகுத்தறிவுக் கனிகள்.
– செல்வா