அரைக்கோப்பைத் தேநீரும் நாலு இட்லியும்

டிசம்பர் 01-15

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

அய்ம்பது ஆண்டுகளுக்குமுன் _ இந்தத் திராவிட இயக்கத்தின் _ ஈடுஇணையற்ற இந்தத் தமிழர் தலைவரின் தேவை _ அரைக்கோப்பைத் தேநீரும் நாலு இட்லியும்தான். ஆம்! இன்றும் அதே நிலைதான். மனிதர் மாறவில்லை. வயது ஏறியிருக்கிறது. சுருண்ட முன்நிற்கும் அழகிய கேசம் நரைத்துப் படிந்திருக்கிறது. ஆயினும் இன்றும் அதே அரைக்கோப்பைத் தேநீருடன் நான்கு இட்லியுடன் கூட்டம் முடிந்து கொள்கை முழக்கமிட்டுக் கார் ஏறும் தலைவராக வேறு யாரையும் சுட்டிக்காட்ட முடியவில்லை.

ஆனால் அவர் வென்றெடுத்த சாதனைகளைப் பட்டியல் போட்டால், படம் பிடித்துக் காட்டினால் ஏடும் போதாது, இடமும் போதாது. அவரின் அந்த எளிமை மாறவில்லை இன்றும்.

சாதனைகளில் எல்லாம் தலையாய சாதனை மூத்திரச் சட்டியைச் சுமந்து, மூன்று கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் முழக்கமிட்ட தந்தை பெரியாரின் கொள்கைகள் இன்று உலகமயமாகி வருகின்றன எனும் பெருமிதத்திற்குச் சொந்தக்காரர் என்று பட்டியல் இட்டால் ஒருவர்தான் _ ஆம்! நிச்சயமாக ஒருவர்தான் _ ஆசிரியர், தமிழர் தலைவர் ஒருவர்தான் என்பதை வரலாற்றாசிரியர்களான நாம் அல்ல வரலாறே பதிவு செய்திருக்கிறது.

சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம் ஆகிய கொள்கைகளின் மாற்று வடிவம்தான் தந்தை பெரியார். அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் கொள்கைகளை _ உலகமயமாகி வரும் தந்தை பெரியாரின் கொள்கைகளை வென்றெடுப்போம்! என்று வெற்று முழக்கமில்லாது வெற்றி முழக்கமாக முழங்கி வரும் மாமனிதர்தான் நம் தமிழர் தலைவர். ஏன் பெரியாரைத் தோள்மீது தூக்கிச் சுமக்கிறார்? ஏன் பெரியாரை உலக மயமாக்குகிறார்?

அதற்கு விடையாக அவருக்குக் கிடைக்கிறது ஒரு தகவல். 50 ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உலகத் தத்துவ அறிஞர்கள் மாநாட்டிலே மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருந்த உலகம் போற்றும் பேரறிஞர் வால்டர் ரூபன் இந்தியச் சமூகத்தில் மேலிருந்து கீழ்வரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக்கொண்டிருக்கும் மிகப் பெரிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம் அல்லது வைதீகம். இந்த நோய்க்கு எதிராகப் போராடுகிறார் பெரியார் ஈ.வெ.ரா. எனவே இன்றைய இந்தியாவின் முன்னுதாரணமற்ற பேராளுமை பெரியார் ஈ.வெ.ரா.தான் என்று குறிப்பிட்ட முன் உதாரணம் ஆசிரியர் முன் நிற்கிறது. பெரியாரை உலகமயமாக்கத் தூண்டுகிறது.

எனவேதான், ஆசிரியர் அவர்கள், அய்யாவின் 135ஆவது ஆண்டில் அரிமா நோக்குடன் அந்தச் சிங்கம் நடைபோட்ட பாதையைப் திரும்பிப் பார்க்கிறோம். திசைகளில் அவர் கிழக்கு என்பது புரிகிறது. வரலாற்றில் இனிவரும் காலத்தில் பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின்

என்றுதான் புதிய இணைப்புகள் தோன்றும். அதுதான் நியாயமும்கூட என்று எழுதுகிறார்.

அந்த வேரின் பலம்தான் வீழ்த்தப்பட முடியாத வீறுகொண்ட இயக்கமாகவும், தோல்வி காணாத கனல்களாகவும், துவண்டு போகாத தொண்டர்களாகவும், தொய்வில்லாத பிரச்சாரமாகவும் உலகமயமாகி ஒளிவீசிக் கொண்டிருக்கும் கலங்கரை வெளிச்சமாகி இன்று உயர்ந்து நிற்கிறது. ஆம். ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதுபோல் பெரியாருக்குப் பின் என்று புதிய இணைப்புகள் தோன்றுகையில் பெரியாருக்குப் பின் பெரியார் உலகமயமாகி ஒளிவீசினார், அந்தத் திருப்பணியைச் செய்தவர் கி.வீரமணி எனும் பெரியாரின் முதன்மைத் தொண்டர் என்று வரலாறு மறக்காமல், மறுக்காமல் குறிப்பிடும்.

பெரியார் உலகமயமாக இந்தப் பெருந்தொண்டர் தமிழர் தலைவர் என்ன செய்துவிட்டார் என்பதைப் பட்டியலிட்டால் இங்கே இடம் போதாது. பெரியாருக்குப் பின் நான் என்பது அவரிடம் இல்லை. நாம் என்பதே இருக்கிறது. அதுவே முதல் அடிச்சுவடு உலக மயாமாக்குதலுக்கு. தமிழர் தலைவர் என்றும் எங்கும் கூறிவருவன:

நம் இயக்கத்தில் நான் எப்போதும் இல்லை. நாம் என்பதே எங்கும் இருக்கிறது. இருக்கும், இருக்கவேண்டும். கூட்டுக்குழு மனப்பான்மையுடன் நாம் ஒருங்கிணைந்து உழைத்தால் மாமலையும் ஒரு கடுகு. நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பது நமது தனித்ததோர் முழக்கமல்லவா!

அதனாலேதான் தாம் நிகழ்த்திய மாபெரும் சாதனை என்றாலும் பார்ப்பன முதலமைச்சர், பார்ப்பனத் தலைமை அமைச்சர், பார்ப்பனக் குடியரசுத் தலைவரைக் கொண்டிருந்த வேளையில் நிகழ்த்திய அந்தச் சாதனையைத் தனது என்று கருதாமல் எவ்வளவு அடக்கமாகக் கூறுகிறார் தமிழர் தலைவர் என்பதைப் பாருங்கள்.

பெரியார் காலத்தில் வித்திடப்பட்ட வகுப்புரிமை சுருக்கப்படவில்லை. விரிந்தோங்கித் தந்த சட்டப்பாதுகாப்புடன் கோலோச்சுகிறது. 69 சதவிகிதம் – கல்வி, வேலைவாய்ப்புகள், தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர், அருந்ததியர், இஸ்லாமியர் என்று பசியேப்பக்காரரை அடையாளம் கண்டு பந்தியில் அமரவைத்து விருந்து பரிமாறப்படுகிறதே! பெரியாருக்குப்பின் என்ற சரித்திரக் குறிப்பில் இது முக்கியமாக கோடிட்டுக் காட்டப்பட வேண்டியதாகும்.

நம் இயக்கத்தின் சமூக நீதிக் குரல் ஓங்கியது எனில் அதற்குக் காரணகர்த்தா அய்யாவின் அடிச்சுவட்டில் மாற்றமில்லாது நடைபோடும் தமிழர் தலைவரேதான் முழுமுதற் காரணம். இதன் விளைவாக ஆசிரியர் குறிப்பிட்டதுபோல், தமிழர் தலைவர் குறிப்பிட்டதுபோல் இடஒதுக்கீட்டுக்கு நீதிமன்றத் தீர்ப்புகளால் ஆபத்து வரும்போதெல்லாம் அரசியல் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர வடமாநிலத் தலைவர்கள் உட்பட பலரும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குரல் கொடுக்கிறார்கள். மத்திய அரசும் அதன் முக்கிய அமைச்சர்களும் வாக்குறுதியைத் தருவதோடு செயல்பட முனைப்புடன் இருக்க தொடர்ந்து வற்புறுத்தப்படுகிறார்கள். இதில் கட்சி அரசியல் இல்லை. இரண்டே அணிகள். இடஒதுக்கீட்டுக்கு _ சமூக நீதிக்கு ஆதரவான அணி, எதிர்க்கும் மற்றொரு அணி என்றும் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

தம் கருத்துக்கு வலுவூட்ட உலகப் புகழ்பெற்ற அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக நோபல் பரிசுபெற்ற அறிஞர் அமர்த்தியாசென் அவர்களும், பெல்ஜியம் நாட்டுப் பேராசிரியரான ஜீன் டிரெடே அவர்களும் இணைந்து எழுதிய இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் நிச்சயமற்ற பெருமை எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் —-An uncertain Glory India and its Contradictions  என்னும் நூலை மேற்கோளாகக் காட்டும் அளவிற்கு அறிவுத்திறன் மிக்க தலைவராக நம் தலைவர் விளங்குவது நமக்குப் பெருமை, சிறப்பு, உயர்வு ஆகியனவாகும்..

தந்தை பெரியார்தான் இனி வரலாற்று முதல்வர் _ வரலாற்று நாயகர் _ என்றும் உயர்ந்து நிற்பார் என்பது காலத்தின் தேவை என்பது மட்டுமல்ல _ கட்டாயமும் கூட என்பதை எண்ணித்தான் தமிழர் தலைவரின் சீரிய, பொறுப்புமிக்க, ஆற்றல்மிகுந்த தலைமையின் கீழ் அதன் பணிகளைப் பன்முகப் பார்வையுடன் தொடர்ந்து தொய்வின்றிச் செய்துகொண்டே இருக்கிறார்.
இதற்குச் சான்று மலேசியாவில் தொடங்கி ஆப்பிரிக்கா, மியான்மர் ஆகிய பகுதி வரை பெரியார் இயக்கம் பரவி வருவதே ஆகும்..

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கிப் பல முதன் ஊர்களிலும் மலேசியத் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் விழா பல ஆண்டுகளாகச் சீரோடு கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரிலோ, பெரியார் சமூக சேவை மன்றம் எனும் அமைப்பு, மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் மய்யத்தில் அய்யாவின் அருந்தொண்டைப் பரப்புரை செய்கிறது.

பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கத்  திருநாட்டில் சிகாகோவில், வாஷிங்டன் பகுதியில் மேரிலாண்டு பகுதிகளில் தந்தை பெரியார் விழா கருத்தரங்குகளைத் திட்டமிட்டு நடத்துகிறது.

அதுமட்டுமல்லாது அடிமைத்தனத்தில் ஊறிப்போயிருந்த ஆப்பிரிக்க நாட்டில் _ கானா நாட்டில் பழைய கோஸ்டில் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் சார்பில் தந்தை பெரியார் 135ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா செப்டம்பர் 23 அன்று கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கலந்து கொள்ள அய்யா ஆப்பிரிக்காவிலும் கால் ஊன்றினார் என்றால் சாதாரண நிகழ்வன்று அது.

உலகத்தின் முதல் நாத்திகர் புத்தரின் கொள்கை பரப்பும் அறிஞர்கள் ஆண்டுதோறும் மியான்மரில் பெரியார் சுயமரியாதை இயக்கம் சார்பில் அய்யா விழா கொண்டாடப்படுவதையும், குவைத் நாட்டில், துபாயில் பெரியார் விழாக்கள் பெருஞ்சிறப்போடு கொண்டாடப்படுகிறது என்றால் பெரியாருக்குப் பின் _ வீரமணி அவர்களின் தொண்டு, சிறப்புமிக்க பணி பெரியாரை உலகமயமாக்குவதில் வெற்றி முகட்டைத் தொட்டுவிட்டது என்பதுதானே பொருள். கடல்கடந்து மட்டுமல்லாது விந்திய மலையைக் கடந்தும் பெரியாரியம் ஒடியா மொழியில் குஜராத்திய மொழியில், மராத்திய மொழிகளில், ஓங்கி ஒலிக்கிறது. ஆம், பெரியாரின் தத்துவத் தேர் தடையின்றி ஓடுகிறது. கொள்கைக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது.
நாம் சொல்வதைவிட அடுத்தவர்கள் சொல்லக் கேட்பதுதான் பெருமை. வள்ளுவர் கூட சான்றோன் எனக் கேட்ட தாய் என்கிறார்-.

புவனேஸ்வரத்தில் பெரியாரானா ராச்சனா எனும் தலைப்பில் தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்புகள் வெளியீட்டு விழாவில் உத்கல் பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவரும் ஒடிசா மாநில பகுத்தறிவாளர் சங்கத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் பிரசாந்த் ரதா தம் தலைமை உரையில் தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவுப் பிரச்சார அமைப்பினை தமிழர் தலைவர் முன்னெடுத்துச் செல்வது குறித்துக் கூறியது ஒரு சான்று. இரண்டாவது சான்று, பேராசிரியர் தானேசுவர் சாகு ஒடியா மொழியாக்கப் பணிக்கு ஆசிரியர் காட்டிய அறிவுரை, வழிமுறை குறித்துக் கூறியனவாகும்.

ஆனால், இவ்வளவு சாதனைகள் புரிந்தும், பெரியாரை உலகமாக்கி உயரிய சிறப்புப் பெறச் செய்தும், பெரும்பணி ஆற்றிய அந்தத் தலைமையிடம் ஆர்ப்பரிப்பு, ஆரவாரம், பகட்டு, பெருமை ஏதும் இல்லை என்பதைப் பாருக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நம் கடமை. அந்தத் தலைவர் 50 ஆண்டுகளுக்குப் பின்னும் அதே எளிமை, அதே அரைக்கோப்பைத் தேநீர், 4 இட்லியுடன் (சில வேளைகளில் 4 அல்ல 3 இட்லி மட்டும்தான்) தன் உணவை முடித்துக் கார் ஏறுவது, ரயில் ஏறுவது வியப்பின் வெளிச்சமே.

படிக்கத் தெரிந்த பள்ளிச் சிறுவன் முதல் படிப்பறியா பாமரனிலிருந்து, வெளிநாட்டிலிருந்து வாழும் எவரும் கண்டு வியக்கும் 95 அடி உயரப் பெரியாரையும், பெரியார் உலகத்தையும் இனி வரும் உலகம் காணச் செய்யும் ஆசிரியர், பெரியாருக்குப் பின் _ நாம் கண்டெடுத்த பெருஞ்செல்வம் _ சொத்து.

வரலாற்றைப் படைக்க, வரலாற்றை உருவாக்க, வரலாற்றை நிலைநிறுத்த பாரம்பரியமும் பழம் பெருமைக் குடும்பப் பாரம்பரியமும் தேவையில்லை. அறிவும், உழைப்பும் போதுமென்ற பெரியாரின் வாக்கை நிலைநிறுத்தும் நாணயமான கடலூர் கிருஷ்ணசாமி வீரமணி வாழ்க! என்று நம் ஆசிரியரின் பிறந்த நாளில் முழங்குவோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *