கி.வீரமணி பழகுவதற்கு இனிமையானவர்; எல்லோருக்கும் மரியாதை கொடுத்துப் பேசுவது அவரது பண்பாகும். வணக்கம் செய்வோருக்குத் தலையாட்டும் கர்வம் இல்லை; முகம் மலர்ந்து இரு கரம் கூப்பிப் புன்சிரிப்போடு பதில் வணக்கம் செய்கின்றார். தம்மிடம் வருபவர்களை அமரச் சொல்கின்றார்; யாரையும் நிற்க வைத்துப் பேசும் பழக்கம் அவரிடம் இல்லை. வாகனத்தில் பயணம் செய்கின்றபோது தனித்துப் பயணிப்பது இல்லை; தோழர்களை ஏற்றிக் கொண்டு உரையாடியவாறே செல்கின்றார்.
ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்க்கின்ற பண்பினை கி.வீரமணியிடத்தில் காணமுடிவதில்லை. கூட்டத்திற்குக் கால தாமதமாக வரும் பழக்கமும் அவரிடம் இல்லை. முன்கூட்டியே வந்திருந்து காத்திருக்கின்றார். கழகத் தோழர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கின்றார். குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் கேட்டறிகின்றார்.
மணவிழா அழைப்பிதழ் தருவோரிடம் திருமணத்தைச் சிக்கனமாக நடத்துங்கள் என்று அறிவுறுத்துகின்றார். சுவரொட்டி விளம்பரங்கள், அழைப்பிதழ்களில் தன் பெயர் சிறிய எழுத்தில் இருக்கிறதா -_ பெரிய எழுத்தில் இருக்கிறதா? என்பதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.
கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் நட்புறவாகப் பழகுகின்றார். ஒருமுறை சந்தித்து உரையாடினாலே ஈர்த்து விடுகின்றார். வயது முதிர்ந்த பெரியார் தொண்டர்களை மேடையில் ஏற்றிக் கௌரவிக்கின்றார். உடல் நலம் குன்றிய தோழர்களை மருத்துவமனையிலும் அவர்களது இல்லத்திலும் சந்தித்து நலம் விசாரித்து நம்பிக்கை ஊட்டுகின்றார்.
இயக்கத் தோழர்கள் அன்பின் மிகுதியால் உணவை அதிகமாகப் பரிமாறிவிடுகின்றபோது அருகில் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு, உணவை விரயமாக்காமல் உண்கின்றார். கட்சித் தோழர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்கின்றார்; செய்த உதவிகளை யாரிடமும் சொல்லாமல் மௌனம் காக்கின்றார்.
தமக்கு வருகின்ற அன்பளிப்புப் பொருட்களை இயக்கத்திற்குக் கொடுத்து விடுகின்றார். கி.வீரமணியைச் சந்தித்துப் பேசுவதற்கு எவ்விதத் தடையும் யாருக்கும் கிடையாது. யாரையும் காக்க வைக்காமல் உடனே சந்தித்து அனுப்பி வைக்கின்றார். சுற்றுப் பயணத்தின்போது கி.வீரமணி ஆடம்பர விடுதிகளில் தங்குவதில்லை. கட்சித் தோழர்கள் கூட்டம் கூட்டமாக அறைகளில் வந்து சந்திப்பதைத் தடுப்பதில்லை.
கி.வீரமணி தமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்லும்போது உடனே பணத்தைக் கொடுத்து விடுகின்றார். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டபோதிலும் தீவிர சுற்றுப் பயணம் செய்து சுறுசுறுப்புடன் இயங்குகின்றார். உடல் நலமில்லை; சோர்வாக இருக்கின்றேன் என்றெல்லாம் கி.வீரமணி கூறுவதே இல்லை.
குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர், நீதிபதி, உயர் அதிகாரி, கல்வியாளர் என்று பலரிடமும் செல்வாக்குடன் திகழும் கி.வீரமணி அதனைப் பற்றி எவரிடமும் பெருமையாகக் கூறுவது இல்லை. திராவிடர் கழகத்தின் செல்வாக்குக்கும், பல அரிய சாதனைகளை நிகழ்த்தியதற்கும் கி.வீரமணியே காரணமாக இருக்கின்றார் என்றாலும், நான் என்று சொல்லாமல் நாம் என்றே கூறுகின்றார்.
கி.வீரமணி பாராட்டப்பட வேண்டியவர்களை மனம் திறந்து பாராட்டுகின்றார். ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிக் குறை கூறுவதில்லை. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதை வீரமணியிடத்தில் காண முடிவதில்லை. எப்போதும் கொள்கையாளராகவே இருக்கின்றார்.
பொய் சொல்லுவதில்லை; மது அருந்துவதில்லை; மறைமுகமாகக் காரியம் ஆற்றுவதில்லை; வாக்கு மாறிப் பேசுவதில்லை; பிழைகளைப் பொறுத்துக் கொள்கின்றார். நெருக்கமானவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்துகின்றார். நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்றவர்; கலகலப்பானவர்; ஒளிவு மறைவு இல்லாதவர்; காலந்தவறாதவர்; எளிய உணவை மேற்கொள்பவர்; சேர்ந்து உண்பதை விரும்பக் கூடியவர்.