ஒப்பிட முடியாத வாழ்க்கை

டிசம்பர் 01-15

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்காகவே தம்மை ஒப்படைத்துக் கொண்ட மனிதர்! தனி வாழ்வை கிஞ்சிற்றும் நுகராமல், பொது வாழ்வே முழு வாழ்வு என வாழ்பவர். பள்ளிப் பருவத்திலே மேடை ஏறி வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒரு சேரப் பெற்றவர். ஒரு இளைஞராக வாழ்ந்த காலத்தில், உரிய எந்த ஒன்றையும் அனுபவித்து மகிழாதவர்.

குறிப்பாக எல்லா சட்டத் திட்டங்களுக்கும் உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில், நேர்மையோடு வாழ்வதென்பது அவ்வளவு சாத்தியமில்லை.

அந்தக் காலங்களில் இப்படியான ஒரு சூழலைச் சில தமிழ்நாட்டுப் பள்ளிகள், தங்கள் விடுதிகளில் (Hostel அமல்படுத்தின. ஒரு மாணவனை முழு மனிதனாக ஆக்கும்பொருட்டு, பெற்றோர்கள் அங்கு வளர்த்தெடுக்க விரும்பினார்கள். எனினும் அவைகூட, கால ஓட்டத்தில் கரைந்து போயின.  இப்படியான பொதுக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, சுயக்கட்டுப்பாடுகளுடன், பெரியார் கொள்கையை மட்டுமே மையமாகக் கொண்டு வளர்ந்து, மிளிர்ந்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு மனிதருக்கான சராசரி இன்பங்களைக் கூட அனுபவிக்காமல் வளர்ந்தவர். இன்றைக்கு உலகளவில் அவர் புகழ்பெற்று, இயக்கத்தையும் அப்படியே வளர்த்து, உச்ச நிலையில் இருக்கிறார் என்றால், அதற்காக அவர் வழங்கியது தம் வாழ்வு முழுவதையும்! இப்படியான ஒரு உழைப்பை, ஒரு தொழில் அல்லது அரசியல் கட்சியில் வழங்கியிருந்தால், அதன் பலனே வேறு. பத்து வயதுச் சிறுவன் வீரமணிக்கும், இன்றைய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குமான இடைப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்த்தாலே நம் நெஞ்சம் சிலிர்க்கிறது. காரணம், அப்படியான ஒரு வாழ்வை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது; வேறு யாருடனும் ஒப்பிடவும் முடியாது. திராவிடர் கழக வரலாறு என்பது நெடிய பாதை மட்டுமல்ல; அது ஓர் கொடிய பாதை! விஷத்தை விடவும் கொடிய பார்ப்பனியத்தோடு மோதுகிற பாதை. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பாதை. எனினும், இன்றைய சூழலில் நிறைய மாறியிருக்கலாம். கொடிய பாதைகள், பெரியார் பாதைகளாக மாற்றப்பட்டிருக்கலாம்.

ஆனாலும், அன்றைய சூழலில் அதனோடு வாழ்ந்து, உழன்று, போராடியவர் ஆசிரியர் கி.வீரமணி என்பதை மறந்துவிடக் கூடாது. பொதுவாக இந்த உலகம், முதலீட்டு உலகமாகவே  இருந்து வந்திருக்கிறது. எதில் முதலீடு செய்தால் இன்பம் காணலாம் என்பதாகவே மனிதனின் கணக்கு இருக்கிறது. ஒரு அய்ந்து ஆண்டு உழைப்பை முதலீடாகக் கொடுத்தால், அரசியல் அள்ளித் தரும் என்பது ஒரு கணக்கு. இது உள்ளூர் அரசியல் தொடங்கி, உலக அரசியல்வரை நீள்கிறது. இதுதவிர, உண்மையான சமூகச் சிந்தனையாளர்கள் அவ்வப்போது செயல்படுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மேலை நாடுகளில் எழுதுவதும், பேசுவதுமாக அவர்களின் சமூகப் பணி இருந்து வந்திருக்கிறது. உறவின் வெறுப்பு, சமூக எதிர்ப்பு, வாழ்வின் வெறுமை, உயிருக்கு மிரட்டல், மன உளைச்சல், உடல் சோர்வு என்பதெல்லாம் அவர்களுக்கு மிக மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை. இதை நாம் குறையாகப் பதிவு செய்யவில்லை. மாறாக, அவர்களின் சமூகச் சூழல் அப்படி. ஆனால், நம் சூழலோ வேறு. உலகில் எங்குமே ஏற்பட்டுவிடக் கூடாத, பார்ப்பனக் கருத்துகள் நிறைந்த நாடு நம் நாடு.

உலகில் நிறைய விசயங்களுக்கு தரவரிசைப் பட்டியல் தயார் செய்கிறார்கள். அதைப் போல உலகின் கொடுமைகள் என வரிசைப்படுத்தினால் அதில் பார்ப்பனக் கொடுமைகள்தான் முதலிடம் பிடிக்கும். மற்றக் கொடுமைகளுக்கு அடுத்தடுத்த இடமே கிடைக்கும். காரணம், எல்லாக் கொடுமைகளும் ஒரு சேரப் பெற்றதுதான் பார்ப்பனியக் கொடுமை. கொடுமைகளின் பிறப்பிடம் பார்ப்பனியம், கொடுமைகளின் தாய் வீடு பார்ப்பனியம் என்றெல்லாம் நாம் வர்ணித்தால் அதில் கடுகளவும் பொய் இருக்க முடியாது; மிகை இருக்க முடியாது. இதை வெறும் எழுத்து வடிவிலோ, உணர்ச்சி விளிம்பிலோ நின்று எழுதவில்லை. மாறாக, அறிவியல் பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக இவற்றை நாம் உறுதி செய்ய முடியும்.

அப்பேற்பட்ட ஆபத்து நிறைந்த, வலிமை பொருந்திய ஒரு கூட்டத்தை நேரெதிர் நின்று களம் கண்ட இயக்கம் திராவிடர் கழகம். அந்தக் கழகத்தில் தம் வாழ்வையே அவர் அர்ப்பணித்திருக்கிறார். இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையில் அல்லது பொதுவான சில கருத்துகளில் மாறுபட்டவர்கள் இருக்கலாம். எனினும், ஆசிரியர் கி.வீரமணி என்கிற மனிதரின் அர்ப்பணிப்பும், உழைப்பும் தமிழ்நாட்டின் அத்தனை பூமித் தடத்திலும் நிரவிக் கிடக்கிறது என்பதை எந்த நியாயாவாதியும் மறுக்கமாட்டார். தனக்கான சௌகரியத்தை மனிதன் தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருப்பதும், தனக்காக மற்றும் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து வரும் மனிதர்களையும் மனதில் வைத்துச் சேர்த்து யோசித்தால், மேலே கூறியவை அனைத்தும் ஒப்பிட முடியாத சாதனைகள் என்பதை எளிதில் அறிய முடியும். அச்சாதனைகளை அவர் தொடர்ந்து செய்வார். அதனால்தான் கி.வீரமணியாய் இருந்தவர் தமிழர் தலைவரானார்!

– வி.சி.வில்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *