கேள்வி : மறைந்த தாய்-, தந்தை படங்களுக்கு மாலைபோட்டு, விளக்கு ஏற்றி தெய்வமாக வழிபடலாமா? – இரெ. மருதசாமி, மயிலாடுதுறை
பதில் : படங்கள் வைக்கலாம். மாலைபோட்டு பூஜை செய்வது தேவையில்லை. அவர்கள் மனிதர்கள்தான். நன்றி காட்டலாம். பக்தி தேவையில்லை.
கேள்வி : மோடி என்ற மாபெரும் கற்பனைக் கோட்டையில் குடியேற நினைக்கும் பா.ஜ.க. குறித்து என்ன நினைக்கிறீர்கள்? – எஸ். வடிவேல், ஆவூர்
பதில் : மோடி மஸ்தானின் ஒவ்வொரு நாள் பேச்சுமே அவரைக் குடியேற விடாது. அவருக்கு எதிரி அவரது நாக்கும் வாக்கும்தான்!
கேள்வி : அமெரிக்க பார்லிமெண்டில் முதல் தீபாவளி கொண்டாடியதை பார்ப்பன ஏடுகள் எழுதி மகிழ்வது எதனைக் காட்டுகிறது? தீபாவளி கதையைக் கேட்டால் அமெரிக்கர் என்ன நினைப்பார்கள்? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : பண்பாட்டுப் படையெடுப்பில் நம்ம ஹிஸீநீறீமீ ஷிணீனீமும் அகப்பட்டுவிட்டாரே என்ற பூரிப்பே அவாளுக்குப் போதுமே!
கேள்வி : ஈழத்தில் இலட்சோபலட்சம் தமிழர்களைக் கொன்று கொடுங்கோலன் ராஜபக்சே நடத்திய நரவேட்டையில் (இனப்படுகொலையில்) சோனியா காந்தியின் குடும்பமும் ஒளிந்திருப்பது உண்மையா? – சீர்காழி கு.நா. இராமண்ணா, சென்னை
பதில் : கசப்பான உண்மைகள் எப்போதுமே ஒளிந்திருக்கவே செய்யும்.
கேள்வி : மனித குல சித்ரவதைக்கு உலகிலேயே இலங்கை அரசு ஒரு சரியான முன்னுதாரணம் எனக் கொள்ளலாமா?
– எஸ். கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : அதோடு கற்பனைக்கெட்டாத நிகழ்வுகளுக்கும்கூட முன்னுதாரணம் என்றும்கூட கூறலாம்.
கேள்வி : அரசியலில் ஆதாயம் கருதி மதங்களையும் ஜாதிகளையும் அதிக அளவில் பயன்படுத்துவதால் எந்த அளவு முக்கிய பின் விளைவுகள் ஏற்படும் என கருதுகிறீர்கள்? – எஸ். சாந்தி, அம்மாபாளையம்
பதில் : மிக மோசமான காட்டுமிராண்டி பருவமும் ஜாதி, மதக் கலவரங்கள் போர்களாக மாறி, இரத்த ஆறு ஓடும் பேரபாயம் அதன் தவிர்க்க இயலாத விளைவாக அமையக்கூடும்.
கேள்வி : அமெரிக்காவில் உள்ள மெசினிஸ்டு மாநில அரசு 1975இல் தனித் தமிழீழக் கோட்பாட்டை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழ்நாடு அரசும், புதுவை அரசும், மலேசிய அரசும் ஈழத் தமிழர் தனி நாடு தீர்மானத்தை நிறைவேற்றுவார்களா? – திங்கள் நகர் நூர்தீன், நெய்யூர்
பதில் : அத்தகைய அரசுகள் இப்போது வராது! வீண் கனவுகள் தேவையில்லை.
கேள்வி : மிகப் பெரிய இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் சமயங்களில் ஆத்திகர்கள், கடவுள் அருளால் இந்த அழிவுகள் நிகழ்ந்தன என்று ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்? – கி. மாசிலாமணி, செங்கை
பதில் : தெய்வாதீனமாக தப்பித்தார்கள் என்றுதான் சிறியகோட்டைச் சொல்லி, இழப்பு மிகப் பெரிய கோடாக ஆனதை வேறு ஆதீனமாக(-!)வே காட்டுவர் பக்தர்கள்!
கேள்வி : பொதுவாக மத்திய அரசு வழங்கும் விருதுகள் பற்றி தங்கள் கருத்து என்ன?- ச. அன்புமணி, சாத்தூர்
பதில் : அய்யய்ய… சொல்ல வெட்கமாகுதே! இவ்வளவு விவாதத்திற்குரியதான பின் அவை எப்படி விருதுகளாக இருக்க முடியும்?
கேள்வி : தங்களது 81ஆம் பிறந்த நாளில் தாங்கள் விடுக்கும் செய்தி என்ன?
– ம. வெங்கடேசன், தேனி
பதில் : பெரியார் உலகம் சமைக்க உறுதியேற்று முடிப்பதே!