அய்யாவின் ‘கணக்கில் நீ’ ஆயுட்கால வைப்பு நிதி!

டிசம்பர் 01-15

எண்பத்தியொன்னில்
எடுத்தடி வைக்கும் எங்கள்
தொன்மைத் தமிழ்க்குடியின்
உண்மையான காவலனே!

அண்ணாவே வந்தழைத்தும்
அசைந்திடாத மன உறுதி!
அய்யாவின் கணக்கில் நீ;
ஆயுட்கால வைப்பு நிதி!

வாலிபங்கள் மைனராய்
திரியும் வயதிலேயே
பெரியார் மடியில் வந்து விழுந்த
கோகினூர் வைரம் நீ!

வாலிபமும், வருவாயும்
வருங்கால வசந்தம் காண
ஆசைகாட்டி அழைத்தபோதும்
மோசம் போகாமல்
ஆசையை அறுத்துவிட்டு
அய்யா அழைத்தவுடன்
அனைத்தையும் துறந்து வந்தாய்!

ஈரோட்டுக் கிழவரின்
கரம்பற்றி; கைத்தடியாய்
பகுத்தறிவுப் பாட்டையில்
பத்தியமாய் பயணித்தவன் நீ!

மேடையில் உன் பேச்சோ
போர் முழக்கம்!
ஆதாரங்கள் அதில் வந்து
அணிவகுக்கும்!
எதிரிகளுக்கு எடுக்கும்
குலை நடுக்கம்!
எங்கள் செவிகளிலோ
தேன் இனிக்கும்!

மக்கள் கூடும்
மாலை நேர வகுப்புகளில்
பெரியாரியலைப் போதிக்கும்
பேராசிரியனும் நீதான்!
பெரியாரை இன்னமும்
பயிலும் மாணவனும் நீதான்!

பெரியாரும், அண்ணாவும்
பச்சைத் தமிழர் காமராஜரும், கலைஞரும்
பேணிவளர்த்த சமூக நீதிக்கு
பார்ப்பனப் பெரும்புள்ளிகளை வைத்தே
பாதுகாப்பு வேலி போட்ட
அசகாய சூரன் நீ!
அசுரகுலத் தலைவன் நீ!
நீதி மன்றங்களுக்கும்
நீதி சொல்லிக் கொடுக்கும் பாடசாலை நீ!

அண்ணா அழைத்தபோதே சென்றிருந்தால்
அரசியலின் அதிசயமாய் ஆகியிருப்பாய்!
அய்யாவிடமே நின்றுவிட்டதால்
அரசியலே அதிசயக்கும்
அதிசயமாய் ஆகிவிட்டாய்!

சேர, சோழ, பாண்டியரும்
சரிநிகர் உனக்கில்லை!
அவர்களெல்லாம் வெறும்
அந்தப்புரத்துப் பொலிகாளைகள்!
சோற்றுத் துருத்திகள்;
சோம்பேறிகள்!

பார்ப்பனப் பாதந்தாங்கிகள்;
பெண் பித்தர்கள்!
மன்னர் மரபில் மட்டும்
நீ பிறந்திருந்தால்…
புத்தருக்கு ஒரு அசோகன்போல்
பெரியாருக்கு நீயும் ஆகியிருப்பாய்!

சாமானியனாய்
நீ பிறந்திட்டாலும்….
பெரியாரியலை உலகமயமாக்கும்
பெரும் பணியைத் தலைமேற்கொண்டு
சக்கரம் கட்டி உலகைச் சுற்றி
சரித்திரம் படைக்கின்றாய்!

புவியின் சுழற்சி
நிற்கும் மட்டும்; நின் புகழும்
மங்காது; மறையாது!
மாறாது நிலைத்திருக்கும்!

– சீர்காழி கு.நா.இராமண்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *