மணியம்மையார் தலைமையின் வெற்றிகள்
இந்திராவுக்குக் கறுப்புக் கொடி காட்டும் கிளர்ச்சியையொட்டி கைது செய்யப்பட்ட கழகத் தலைவர் அம்மா அவர்களை உடல்நலம் கருதியும் இரக்கத்தின் அடிப்படையிலும் அவர்கள் மீது (மட்டும்) போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற்று விடுதலை செய்வதாக அன்றைய தமிழக அரசு 14.11.1977 அன்று அறிவித்தது. அதற்குப் பதிலாக விடுதலையில் 15.11.1977 அன்றே கழகத் தலைவர் அம்மா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள்.
அரசின் தந்திரத்தை அம்பலப்படுத்தி தமிழக அரசின் திடீர் இரக்கம் என்ற தலைப்பில் அம்மா அவர்கள் எழுதிய அந்த அறிக்கையில், எனது உடல்நலம் கருதியும், என்மீது இரக்கம் கொண்டு தமிழக அரசு விடுதலை செய்துவிட்டதாகவும், என்மீது போடப்பட்டிருந்த வழக்கு மட்டும் பின்வாங்கப் பெற்றதாகவும் கேட்டு, நான் மிகுந்த வேதனையும் சங்கடமும் மேலும் அதிர்ச்சியடைந்தேன்.
என் எதிரிலேயே தோழர்கள் ரத்தம் பீறிட அடிக்கப் பட்டதைப் பார்த்தபோது ஏற்பட்டதைவிட பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளேன்.
நமது காருண்ய மிக்க தமிழக அரசுக்கு இந்த இரக்கம் மிகுந்த கண்ணோட்டம் 30ஆம் தேதி வந்திருக்குமானால், விலைமதிப்பற்ற மூன்று தமிழர்களின் உயிரும், பல்லாயிரக்கணக்கான நமது மக்கள் _ இயக்கத்தினர் _ பொதுமக்கள் பலர் மண்டை உடைந்து, கால் உடைந்து முடமாகி, குண்டடிப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதந்த கொடுமை ஏற்பட்டே இராது. பொதுச்சொத்து நாசங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
எனக்குக் கடந்த பல நாட்களாக கடுமையான காய்ச்சல், மயக்கம், நெஞ்சுவலி. எனக்கு ஏதாவது திடீர் முடிவு ஏற்பட்டால் அரசுதான் பொறுப்பு. தனக்குப் பழி நேர்ந்துவிடுமே என்ற எண்ணத்தில்தான், அதன் பொறுப்பை நீக்கிக் கொள்ள ஒரு தந்திர ஏற்பாடே தவிர, நீதி, நியாயம் கருதி செய்யப்பட்டதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்கள். இந்த அறிக்கை மருத்துவமனையிலிருந்து விடுக்கப்பட்டது. கறுப்புக்கொடி போரில் கைதாகி, காவலோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அம்மாவை 1.12.1977 அன்று தமிழக அரசு விடுதலை செய்தது. அதன்பிறகு இந்திரா வருகை தொடர்பான துப்பாக்கிச் சூடுபற்றி விசாரிக்க நீதிபதி பி.எஸ்.சோமசுந்தரத்தை, ஒரு நபர் கமிஷனாக தமிழக அரசு நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
15.11.1977இல் சென்னை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட கழகத்தோழர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். கழகத் தலைவர் அம்மா அவர்கள் ஆள்வோருக்கு அறிவுரையாக, அரசுக்கு எனது வேண்டுகோள் என்று இதற்கு முன் நடந்தது எப்படியிருந்த போதிலும், இனியாவது எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படக்கூடாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும், போட்ட வழக்குகளை வாபஸ் பெற்று, சிறையில் உள்ள தோழர்களை விடுதலை செய்து, எல்லோரும் துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபடட்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.
அம்மா அவர்களின் தலைமைக்குக் கிடைத்த வெற்றிகள்
தந்தை பெரியார் அவர்களுக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என்று 03.07.1978 அன்று அன்றைய தமிழக அரசினால் டெல்லிக்கு கடிதம் எழுதப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்றும், கல்லூரிகள், கட்டடங்களுக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் இன்று தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசு 30.11.1977 அன்று தந்தை பெரியாருக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது என்று முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னதாக அஞ்சல்தலை பற்றி முதல்வர் 1974 ஜூலையில் தந்தை பெரியார் அவர்கள் நினைவாக அப்போது இருந்த தமிழ்நாடு அரசு அப்போது ஆட்சியிலிருந்த மத்திய அரசுக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தது என்றும், 1975ஆம் ஆண்டு தந்தை பெரியாருக்குத் தபால் தலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் மத்திய அரசுக்கு அப்போதைய தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தபால் தலை வெளியிடுவதற்கான ஆலோசனைக் குழு, 1977ஆம் ஆண்டுக்கான தபால் தலை வெளியிடுபவர்களின் பெயர் பரிசீலனையை முடித்துவிட்டதால், அதுபற்றி அந்த ஆண்டினைப் பரிசீலனை செய்ய முடியாது என்று மத்திய அரசிடமிருந்து பதில் வந்தது என்றும் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றபோது இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடமிருந்து வற்புறுத்தப்படவில்லை.
இதன் பிறகு 07.02.1978 அன்று பெரியாருக்கு தபால் தலை வெளியிடப்படும் என்று அஞ்சல் துறை அமைச்சர் தெரிவித்தார். அதற்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாக கழகத் தலைவர் அம்மா அவர்கள், சார்பில் கழகப் பொதுச்செயலாளராகிய நான் சென்றேன். மத்திய தபால் தந்தி அமைச்சர் பிரிஜ்லால் வர்மா அவர்களை அன்று பகல் பன்னிரெண்டேகால் மணியளவில் ஆளுநர் மாளிகையில் கழகத்தின் சார்பில் சந்தித்து அய்யா அஞ்சல்தலை வெளியிடவிருப்பதாக தங்கள் நன்றியையும் தமிழக மக்களின் பாராட்டுதலையும் தெரிவித்தேன்.
அய்யா நூற்றாண்டு விழாவில் பங்கேற்குமாறு விடுத்த அழைப்பையும் அமைச்சர் ஏற்றார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கும் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டதற்கு பரிசீலிக்கிறேன் என்று கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து, தந்தை பெரியார் அவர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் முறையை டைப்ரைட்டர்களில் பயன்படுத்த அக்கறையுடன் அரசு பரிசீலிப்பதாக, எஸ்.ஆர்.ராதா (அ..தி.மு.க.) கேட்ட கேள்விக்கு பதிலாக சட்டமன்றத்தில் முதல்வர் கூறினார்.
இந்திராகாந்தியுடன் எம்.ஜி.ஆர்
அம்மா அவர்கள் எழுதிய இறுதித் தலையங்கமும் வேண்டுகோளும்
என்.ஜி.ஜி.ஓ. பிரச்சினையும், அரசின் விசித்திர அணுகுமுறையும் என்ற தலையங்கத்தை அன்னை மணியம்மையார் அவர்களே அன்று எழுதியிருந்தார்கள். ஸ்டிரைக்கால் நிர்வாகக் குலைவு ஏற்பட்டிருந்த நிலையில் சமரசத் தீர்வுக்கு அரசை வலியுறுத்தும் நயமான அறிவுரைக் களஞ்சியமாய் அமைந்த தலையங்கம் இது என்பதால் அதனை முழுமையாக(விடுதலை 09.03.1978 பக்கம் 2) இங்கு தருகின்றேன்.
என்.ஜி.ஜி.ஓ. பிரச்சினையும், அரசின் விசித்திர அணுகுமுறையும்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் அனுதாபத்தோடு பரிசீலித்துச் சாதகமான ஒரு முடிவினை மிக விரைவில் அறிவிக்கும் என்று எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் சட்டசபையில் வாக்குறுதி அளித்திருந்தார். இப்போது அதற்கு மாறாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஓர் உத்தரவை அரசு பிறப்பித்திருக்கிறது இது அரசு ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும். எனவே இதனை வன்மையாகக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தோம். அரசின் இந்தப் போக்கினால் எல்லாப் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அரசாங்கம் அரசு ஊழியர்களின் கோரிக்கையைப்பற்றி விரைவில் சாதகமான முடிவெடுத்து அறிவிப்பதோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராகப் பிறப்பித்த அடக்குமுறை உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். கடந்த 6.8.78 அன்று சட்டப் பேரவையில் என்.ஜி.ஜி.ஓ. பிரச்சினை சம்பந்தமாக தி.மு.க.வும் ஜனதாவும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் வெளிநடப்புச் செய்தபொழுது, அவ்வாறு வெளிநடப்புச் செய்யாது, அரசாங்கம் என்.ஜி.ஜி.ஓ. பிரச்சினையில் முறையாக நடந்துகொள்ளும் என்று எதிர்பார்த்து வெளிநடப்பு செய்யாதிருந்த மற்ற இரு கட்சிகளான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி, காங்கிரஸ் கட்சிகளும்கூட அரசாங்கத்தின் போக்கில் பெரும் ஏமாற்றங்கண்டு மற்ற கட்சிகளுடன் சேர்ந்து வெளிநடப்புச் செய்ததோடு அல்லாமல் எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கைகளிலும் கையொப்பமிட்டுள்ளன.
எதிர்க்கட்சிகளின் கூட்டம் என்று ஒரு கூட்டத்தைக்கூட்டி, அதன்பின் என்.ஜி.ஜி.ஓக்கள் வேலை நிறுத்தத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அறவே இல்லை என்று கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கு என்ன சொல்லப் போகிறார்? அத்தனை பிரதான எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து மேற்கொண்ட கூட்டறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனரே இதனுடைய அர்த்தத்தைப் புரிந்து கொண்டு தமிழக முதல்வர் நடந்து கொள்ளப் போகிறாரா அல்லது தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதித்துக்கொண்டு மேலும் மேலும் சிக்கல்களில் தவிக்கப் போகிறாரா?
எடுத்தேன் -_ கவிழ்த்தேன் என்ற பேச்சு எனக்கு நிகர் யார் என்கின்ற மனோபாவம், எனக்குத் தெரியாத விஷயம் உலகில் என்ன இருக்கிறது? என்னையும் எதிர்க்க அவ்வளவு தைரியமா? நான் நினைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? என்பது போன்ற அணுகுமுறைகள், அகம்பாவமுறைகள், பேச்சுகள் தனிப்பட்ட மனிதனுக்கே தகாத ஒன்று என்கிறபொழுது முக்கியமான ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து பொதுப்பணி ஆற்ற முற்பட்டிருக்கும் ஒருவருக்கு எத்தகைய அபாயத்தையும் எவ்வளவு பெரிய இடர்களையும் நெருக்கடிகளையும் அமைதியற்ற நிலைமையையும் உருவாக்கும் என்பதைச் சொல்லவே தேவை இல்லை. தமிழ்நாட்டு நாலரைக் கோடி மக்களின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் நிலை இது.
தமிழ்நாடு முழுவதும் ஸ்தம்பித்துக் கிடக்கிறது! மாமுல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு வெறிச்சோடிக் கிடக்கிறது. மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஒரு மோசமான நேரத்தில் அரசு இயந்திரம் துரிதமாகச் செயல்பட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், முடிச்சுகளை அவிழ்ப்பதற்குப் பதிலாக மேலும் மேலும் படு முடிச்சுகளைப் போட்டுக் கொண்டு போவதில் அதிதீவிர அக்கறை காட்டிக் கொண்டிருப்பது மிகவும் வேதனையான நிலை.
வீதிக்கு வருவேன் _ பொதுமக்கள் துணையோடு வேலைநிறுத்தத்தைச் சந்திப்பேன் என்று சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் பொறுப்பைத் தம் கையிலே வைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதல்வர் கூறுவது என்றால், இதனுடைய பயங்கரம் எங்கே போய் நிற்கும்?
அந்தப் பேச்சின் எதிரொலி இப்பொழுதே கிளம்பிவிட்டதாகத் தெரிகிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் ஆங்காங்கே தாக்கப்படுவதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன. என்.ஜி.ஜி.ஓ. சங்கத்தின் பொதுச்செயலாளர், அரசு ஊழியர்கள் கொடுமையாகத் தாக்கப்படுவது பற்றி போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யும் அளவுக்கு வன்முறையை நமது முதல்வர் தொடங்கிக் கொடுத்து இருக்கிறார்.
சகல அதிகாரங்களும் தன் கையில் இருக்கிறது என்கிற தைரியத்தில் இன்றைக்கு நமது முதல்வர் பொதுமக்களைத் (குறிப்பாக தங்கள் கட்சிக்காரர்களை) தூண்டிவிட்டு ஆனந்தப்படலாம். இன்றைக்குச் சுவையாக இருக்கும் வன்முறை நாளைக்கு ஏவி விட்டவர்கள் பக்கம்கூடத் திருப்பி விடக்கூடும்.
ஸ்டிரைக் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதை அடிக்கடிப் பயன்படுத்தி மரியாதையைக் கெடுத்துவிடக் கூடாது என்பது எங்களின் கருத்து. ஆனால் இன்றைய தினம் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஸ்டிரைக்கிற்கு முழுப் பொறுப்பு இன்றைக்குத் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்களே! ஏற்பட்ட ஸ்டிரைக்கை எப்படியும் முடிவுக்குக் கொண்டு வந்துவிடக் கூடாது என்பதிலே தமிழக முதல்வர் மும்முரமாக இருப்பதாக அவரின் பேச்சும் போக்கும் நிதர்சனமாகக் காட்டுகின்றன. தமிழினத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் ஒரு பாதுகாப்பற்ற நிலையை எண்ணி வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கிறது. தமிழின மக்களைக் காப்பாற்ற தந்தை பெரியார் இன்று இல்லையே என்ற ஏக்கம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு நிற்கிறது. இதற்கான காரணத்தை, தமிழின மக்கள் இன்றாவது புரிந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசு ஊழியர்களுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள வேறுபாடு இருப்பது கூடாது என்பது நமது இயக்கத்தின் அடிப்படைக் கருத்து. தந்தை பெரியார் அவர்களும் அறிஞர் அண்ணா அவர்களும் இந்தக் கருத்தை எப்பொழுதும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஒற்றைக்கண்ணில் வெண்ணெயும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் மனப்பான்மைதான் அது என்று இந்த உதாரணத்தைக்கூட திராவிட இயக்கம் அடிக்கடி பயன்படுத்தியே வந்திருக்கிறது. திராவிடர் இயக்கப் பாரம்பரியத்தைப் பற்றி எப்பொழுதும் நம் முதல்வர் அவர்கள் பெருமையாகப் பேசிக்கொண்டு வருபவர். இந்த நிலையில் நமது திராவிட இயக்கக் கொள்கைக்கு அப்பால் நின்று இந்தப் பிரச்சினையை அணுகுவது தவறான ஒன்றாகும்.
அரசு ஊழியர்கள் 15 கோரிக்கைகள் வைத்துள்ளனர் என்றால் அவை அத்தனையையும் உடனடியாகத் தீர்த்துவிட முடியாது. இயன்றவையும் உண்டு. தற்போதைக்கு இயலாதவைகளும் இருக்கலாம். மாநில அரசுக்கு உள்ள நிதிநிலை யாரும் அறியாததல்ல. முடிந்த அளவுக்குத் தீர்த்து சுமூகமான சூழலை உருவாக்க முயல வேண்டியதுதான் ஒரு அரசின் பொறுப்பு.
மற்ற மற்ற தொழிற்சாலைகளில் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் உரிமைக்காகவும் வாய்ப்பு வசதிகளுக்காகவும் சட்டங்களை உருவாக்கிக் கண்காணித்து வரும் ஒரு அரசாங்கம் தனது தொழிலாளர்களாகிய அரசு ஊழியர்களை நடத்துவதில் மட்டும் ஏன் தடம்புரள வேண்டும்?
அமைச்சர்கள் வருவார்கள்; போவார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் அப்படி அல்லவே, ஆட்சியை நடத்திச் செல்லும் இயந்திரம் அரசு ஊழியர்கள்தானே! அத்தகைய இயந்திரத்தைப் பழுதுபடுத்த அந்த இயந்திரத்தை இயக்கிச் செல்லும் இயக்குநரே முயன்றால் அதன் விளைவு எவ்வளவு ஆபத்தானது! பயணிகள் மீது கோபப்பட்டு வேண்டுமென்றே பேருந்தை மரத்தின் மீது ஒரு ஓட்டுநர் மோதவிடுவாரேயானால் அதனால் வரும் ஆபத்து பயணிகளுக்கு மட்டுமல்லவே!
வீண் கவுரவம் பார்க்காமல், உணர்ச்சி வயப்படாமல், தனக்கு முற்றிலும் புதியதான இந்த ஆட்சித் துறையில் நிதானமாக அனுசரணையாக நமது முதலமைச்சர் நடந்து கொள்ளவேண்டும். தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக என்.ஜி.ஜி.ஓக்கள் ஒட்டுமொத்தமாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளது இந்த ஆட்சிக்காலத்தில்தான். இதற்கு அடிப்படைக் காரணம் ஆட்சியின் அணுகுமுறையிலே உள்ள அடிப்படைக் கோளாறுதான். தவறை உணர்ந்து தமிழ்நாட்டின் ஆட்சிப் பீடத்திலே இருப்போர் திருத்திக்கொள்வது நல்லது.
என்.ஜி.ஜி.ஓக்கள் பிரச்சினை என்னும் நெருப்பை அணைப்பதாகச் சொல்லி தம் பேச்சு என்ற பெட்ரோலை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஊற்றிக்கொண்டிருக்க வேண்டாம்.
இது கசப்பான அறிவுரையாக இருக்கலாம். இப்பொழுது பற்றியுள்ள கடுமையான சுகவீனத்திற்கு இந்த மருந்து தவிர்க்க முடியாததே!
பிறருக்கு வழிகாட்ட வேண்டிய தமிழ்நாட்டின் நிலை இப்படி ஆகிவிட்டதே என்ற வேதனையோடு நான் இதை எழுதுகிறேன்.
என்.ஜி.ஜி.ஓக்களும் அரசு ஊழியர்களும் பொறுமை இழக்காமல் கடமை மறக்காமல் தங்கள் உரிமைகளை வற்புறுத்த வேண்டுகிறேன்.
சட்டத்தைப் புரட்டாமல், அடக்கு முறைகளை ஏவாமல், பொது ஒத்துழைப்பு பெறும் அணுகு முறையே இன்றைய அரசுக்கு அவசரத் தேவை. – விடுதலை, 09.03.1978
என்.ஜி.ஜி.ஓ. ஸ்டிரைக் நமது முக்கிய வேண்டுகோள்
இதே பிரச்சினையையொட்டி 14.3.1978 அன்று தமிழக அரசுக்கு அன்னை மணியம்மையார் அவர்கள் வேண்டுகோளினை விடுத்திருந்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான என்.ஜி.ஜி.ஓக்கள் தொடர்ந்து பத்து நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய மிக முக்கிய மகத்தான பொறுப்பு, நாலரைக் கோடி மக்களை ஆண்டு கொண்டு இருக்கிற தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களையே சாரும். கடந்த கால கசப்பான விஷயங்கள் பற்றி இப்பொழுது தோண்டிக் கொண்டு ஆராய்வதில் பிரயோசனமும் வந்துவிடப் போவதில்லை.
இப்பொழுது உடனடிப் பிரச்சினை இந்த ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்பதுதான். முதலமைச்சர் முயன்றால், முனைந்தால் முடியாதது ஒன்றுமில்லை. வீண்கவுரவத்தைத் தள்ளிவிட்டு தயவுசெய்து மக்கள்படும் அவதிக்கு உடனடிப் பரிகாரத்தைக் காண முயற்சி செய்யுங்கள். இந்த நிலையில் இதைவிட முதலமைச்சருக்கு வேறு பணியே இருக்க முடியாது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தோழர்களுக்கும், சங்க நிர்வாகிகளுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள்: இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த அளவுக்கு விட்டுக் கொடுத்துப் போக முடியுமோ அந்த அளவுக்கு விட்டுக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், இந்த வேலை நிறுத்தத்தில் உங்கள் பிரச்சினை மட்டும் இருப்பதாகக் கருதாதீர்கள் -_ உங்களையும் சேர்த்த _ உங்களுக்கு மேலான பொதுமக்களின் சகஜநிலை மிகக் கோரமாகப் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறது.
முதலாவதாக, அத்தியாவசிய துறையைச் சேர்ந்தவர்களை (Essential Service) உடனடியாக வேலைக்குத் திரும்ப ஏற்பாடு செய்யுங்கள். மருந்தகங்களில் வைத்தியம் பார்க்க கியூவில் நிற்பவர்கள் வசதி படைத்த பெருந்தனக்காரர்கள் அல்ல _ சாமானியமானவர்கள் _ அன்றாடங் காய்ச்சிகள் _ அவர்களை அவதிப்படும்படி விட்டுவிட்டு உங்கள் கோரிக்கைகளை மட்டும் உரத்த குரலில் எழுப்பாதீர்கள்!
பொதுநலக் கண்ணோட்டம் என்பது எல்லாவற்றுக்கும் மேலான என்.ஜி.ஜி.ஓக்களும் அமைச்சர்களும் எலியும் பூனையும் அல்ல. கணவனும் மனைவியும் போல குடும்ப உறவுடன் இருக்க வேண்டியவர்கள், ஊடல் நிரந்தரமாகக் கூடாது; என்பதே நமது அன்பு வேண்டுகோள்.
இருதரப்பினரும் இதை ஒரு வறட்டுக் கவுரவப் பிரச்சினையாக்கி முரட்டுத்தனம் காட்ட வேண்டாம். என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
(நினைவுகள் நீளும்)