இணையதளம்
பெரிய நிறுவனங்கள் தங்கள் பொருள்களுக்கு குறிப்பிட்ட வடிவமைப்பினையும், நிறுவனத்திற்கென்று ஒரு வர்த்தகக் குறியீட்டினையும் வைத்திருக்கும். இந்த வடிவமைப்பும், குறியீடும் பிற நிறுவனத்தாரால் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்குச் செய்யப்படும் காப்புரிமை தொடர்புடைய விவரங்களை உள்ளடக்கியுள்ளது இந்த இணையதளம். காப்புரிமை பெற உதவும் நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள், அலுவலக முகவரிகள், தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள், காப்புரிமைச் சட்டங்கள், வடிவமைப்புச் சட்டங்கள், விதிமுறைகள், இந்தியக் காப்புரிமைத் திட்டத்தின் வரலாறு போன்ற பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. விண்ணப்பப் படிவத்தினையும் கட்டணத்தையும் பதிவிறக்கம் செய்து பயன்பெறும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நூல்
நூல்: பெரியாரியம் (சமுதாயம்) | ஆசிரியர்: கி.வீரமணி
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை_-600007 (:044-_2661 8161
பக்கங்கள்:496 | விலை:240/_ (உரைக்கோவை–_1)
தந்தை பெரியாரின் கருத்துகளை _- கொள்கை முழக்கங்களை அந்தந்தக் காலச் சூழலோடு பொருத்தி, அதற்கு விளக்கமளிக்கும் விதத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆற்றிய பெரியாரியல் சொற்பொழிவுகள் தலைப்பு வாரியாகப் பகுக்கப்பட்டு பெரியாரியம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினரும் எளிதில் புரிந்துகொள்ள, உணர்வுப்பூர்வமாக அறிந்து கொள்ள உதவும் நூல். மிகவும் எளிய நடையில் அமைந்துள்ளது இதன் சிறப்பு. அறிவியல் வளர்ச்சி பெற்ற இன்றைய காலகட்டத்தில் நமது சமுதாயத்தில் புரையோடியுள்ள மூடநம்பிக்கைகள், ஏற்றத் தாழ்வுகளை முறியடிக்க பெரியார் போராடிய விதம், அனுபவித்த துன்பங்கள், அய்யா பெற்ற வெற்றியினால் இன்று நாம் அனுபவித்து வரும் உரிமைகள், பெரியாரின் கனவுகளை நனவாக்க இன்னும் நாம் போராட வேண்டிய பிரச்சினைகளை எடுத்துக்காட்டி வீறுகொள்ள வைத்துள்ளது. சமுதாயம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளதைத் தொடர்ந்து ஜாதி_தீண்டாமை, கடவுள் என்னும் தலைப்புகளிலும் வெளிவர உள்ள பெரியாரியம் தொகுதிகள், பெரியாரைப் படிக்க விரும்புவோருக்கு கருத்து வளம் சேர்க்கும் புத்தகங்களாகும்.
குறுபடம் – மீசை
http://www.youtube.com/watch?v=LxmMybxkmK0
ஆண்கள் குடித்தால், புகைப்பிடித்தால் உடல்நலக் கேடு என்று கூறி அறிவுரை சொல்லும் இச்சமூகம், பெண்கள் அவ்வாறு செய்தால் அதை ஒழுக்கக் கேடு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறதே -_ இது சரியா? என்ற கேள்வியை எழுப்பிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள குறும்படம். எதைத் தவறென்று சொல்லி பெண் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறாளோ, அதே தவறை எவ்விதக் கூச்சமுமில்லாமல் அதே இடத்தில் அவளது கணவனும், தந்தையும், அண்ணனும் செய்து கொண்டிருக்கும்போதே நம்முள் ஒரு கேள்வி சுருக்கென உரைக்கத் தோன்றிவிடுகிறது. அவசியம் பார்த்துப் பரப்பப்பட வேண்டிய குறும்படம்.
– சுரேந்தர் செல்பேசி : 9790796975