சுதந்திரச் சிந்தனைப் பள்ளிகள் – சு.அறிவுக்கரசு.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், தன் மனைவியை மணவிலக்கு செய்ய இங்கிலாந்து மன்னர் விரும்பினார். உலகக் கிறித்துவர்களின் தலைவரான போப் அனுமதியின்றி ஓரணுவும் அசையக்கூடாது என்பது அன்றைய மதம். அந்த மதக்கட்டளைப்படி போப்பிடம் மணவிலக்குக்கான அனுமதி கேட்கப்பட்டது. போப் தரவில்லை. இறைவன் போட்ட முடிச்சை மனிதன் அவிழ்க்கக்கூடாது என்று கூறித்தான் கிறித்துவத் திருமணங்கள் செய்து வைக்கப்படுகின்றன. அப்புனிதச் சடங்கைக் கேலிக் கூத்தாக்கும் இங்கிலாந்து மன்னரின் கோரிக்கையைப் போப் மறுத்தார். நீ யார் மன்னனுக்கு மறுப்புச் சொல்ல? நீ என் மதத்தலைவன் இல்லை என்ற ரீதியில் மன்னன், தன் நாட்டுக்குத் தனி தேவாலயம், தனி மதம், தனி மதத் தலைவர் (ஆர்ச் பிஷப்) என்று பிரகடனம் செய்துவிட்டார். ஆர்ச் பிஷப் மூலம் மணவிலக்குப் பெற்றார். மறுமணமும் செய்து கொண்டார் மனம் விரும்பிய மங்கையை. அப்படி உருவானதுதான் புரொடஸ்டன்ட் கிறித்துவம் எனப்படும் கிறித்துவ மதப் பிரிவு. போப் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கத்தோலிக்கக் கிறித்துவர்கள் என்றும் ரோமன் கத்தோலிக்கர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இந்த வரலாற்றுப் பின்னணியில் பார்த்தால், போப்பின் அதிகாரத்தை நிராகரித்துத் தனிமதம் கண்ட நாட்டுக்குப் போப் வருவது வியப்புதான். கம்யூனிச நாடுகளுக்கே போகும் போப், இந்த நாட்டுக்குப் போனதில் வியப்பில்லை. கம்யூனிஸ்டுகளெல்லாமே மத நம்பிக்கை கொண்டவர்கள்தானே என்கிற நம்பிக்கை போப்புக்கு இருக்கலாம், அதிலும் தப்பில்லைதான்.
ஜே.பி. சந்திரபாபு என்கிற குணச் சித்திர நடிகர் ஒருவர் இருந்தார். தூத்துக்குடியைச் சார்ந்த பிரபல காங்கிரசுக்காரர் ஒருவரின் மகன். அவருக்குத் திருமணம் நடந்தபின் முதல்முறையாக இருவரும் சந்தித்தபோது அவரது மனைவி அவரிடம், தான் வேறொருவரைக் காதலித்ததாகவும் பெற்றோர்கள் இந்த விருப்பமில்லாத் திருமணத்தை நடத்தி வைத்து விட்டதாகவும் மனம் திறந்து கூறிவிட்டார். தன் மனைவியை அவரின் காதலருடன் சேர்த்து வைப்பதாக சந்திரபாபு உறுதி கூறி, அவரைத் தன் சகோதரியாக நடத்தினார். சில நாள்களில் காதலருடன் குடும்ப வாழ்க்கை நடத்தத் தம் மனைவியை அனுப்பிவைத்தார். அவர் கத்தோலிக்கக் கிறித்துவர் என்பதால் மணவிலக்குக் கிடைக்காது என்று அதற்கான முயற்சி எடுக்கவில்லை. மறுமணமும் செய்து கொள்ளவில்லை. மன உளைச்சலால் மதுப்பழக்கத்திற்கு ஆளாக, மரணத்தை முத்தமிட்டார். மதம் செய்த கொடுமைகளில் இதுவும் ஒன்று,
அப்படிப்பட்ட மதத்தின் கோரப் பிடிகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும், சுதந்திரச் சிந்தனையாளர்களாக மாறவேண்டும், அதன் வாயிலாக எதையும் ஏன், எப்படி, எதனால் எனக் கேள்வி கேட்கும் பகுத்தறிவு மனப்பான்மை வளர்ந்து பரவவேண்டும் என்கிற உயரிய நோக்கங்களைக் கொண்டு சுதந்திரச் சிந்தனைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிற கருத்துக்கு டாகின்ஸ் வலு சேர்க்கிறார். பிறந்த குழந்தைகள் எல்லாமே கடவுள், மத நம்பிக்கையின்றிதான் பிறக்கின்றன; அவற்றின் பெற்றோர்கள்தாம், தங்களின் நம்பிக்கைகளைக் குழந்தைகளிடம் திணிக்கின்றனர். இந்நிலை கூடாது. பள்ளிப்பருவத்திலேயே சொல்லிக் கொடுத்து, சுயமாகச் சிந்தித்து முடிவுக்கு வருமாறு அவர்களை வளர்த்திட வேண்டும் என்பது குறிக்கோள்,
அவர் தொடங்கிய அறக்கட்டளையின் சார்பில் தம் பகுத்தறிவு, நாத்திகக் கருத்துகளைத் தம் இணையதளம் மூலம் பரப்பி வருகிறார். போலி அறிவியலையும் மாற்று மருத்துவம் போன்றவற்றையும் அவர் கடுமையாகத் தாக்குவார். மூடநம்பிக்கைகளுக்குப் புதுப்புது விளக்கங்களைக் கூறி, அறிவியல் போலக் காட்ட முயற்சிக்கும் அறிவியலாளர் பட்டியலில் அய்சக் நியூட்டனையும் அவர் விட்டு வைக்கவில்லை. வானவில்பற்றிக் கூறிய நியூட்டன் அதன் அற்புதமான அழகுபற்றிக் கூறாமல் மாறான எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார் என்கிறார். ஜான் டயமண்டு என்பார் எழுதிய பாம்பு எண்ணெய் (SNAKE OIL) எனும் நூலுக்கு முன்னுரை எழுதும் போது மாற்று மருத்துவம் (ALTERNATIVE MEDICINE) பற்றிய தம் கருத்துகளை வெளிப்படுத்தினார். இவ்வகை மருத்துவம் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்கிறார். தொடு சிகிச்சை, காந்த சிகிச்சை, ஹோமியோபதி போன்ற மருத்துவங்கள் தீதானவை என்பதோடு மக்களுக்குப் பொய் நம்பிக்கைகளைத் தருகின்றன எனக் கூறியுள்ளார். நோயைத் தீர்க்க வேலை செய்யும் மருந்து என்றும் வேலை செய்யா மருந்து என்றும் இருவகைகள் மட்டுமே உள்ளன என்கிறார்.
பகுத்தறிவின் விரோதிகள் எனும் தலைப்பில் 2007 இல் தயாரித்த தொலைக் காட்சிப் படத்தில் ஜோசியம், ஆன்மிகம், ஆவிகள், மாற்று நம்பிக்கைகள், மாற்று மருத்துவமுறைகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவற்றைச் சாடுகிறார். நம்பிக்கைப் பள்ளிகளின் தொல்லை என ஒரு படம் தயாரித்து கல்வியில் எப்படியெல்லாம் மூட நம்பிக்கைகளைப் புகுத்தி எதிர்காலத் தலைமுறையினர் அறிவைப் பாழடிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.
கர்த்தரின் சம்மதத்தைப் பெற்றே ஈராக் மீது போர் தொடுத்தேன் என்று உளறிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சைக் கண்டித்து நாளேடுகளில் நிறைய எழுதினார். இவை போன்றவை (A DEVIL’S CHAPLAIN) சாத்தானின் பாதிரி எனும் நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் அரசாட்சி முறையில் அரசியை அகற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவரைக் கொண்ட குடியாட்சி முறை வரவேண்டும் என்று எழுதியுள்ளார். 1970 முதல் தொழிற்கட்சிக்கு வாக்களித்து வந்த டாகின்ஸ், தாராள ஜனநாயகக் கட்சி (LIB -ERAL DEMOCRATS) தொடங்கப்பட்டதிலிருந்து அதன் ஆதரவாளராக இருந்து வருகிறார். நம்பிக்கை என்பதற்கு எதிரான கொள்கை களையும், மத நிந்தனைச் சட்டங்களுக்கு எதிர்ப்பாகவும், மாற்று மருத்துவமுறைக்கு எதிராகவும், பள்ளி களில் (கடவுள், மத) நம்பிக்கைகளுக்கு ஆதரவான பாடங்களைக் கற்பிப்பதற்கு எதிராகவும் கொள்கைகளைக் கொண்ட கட்சியாக அது இருப்பதால் அக்கட்சியைத் தாம் ஆதரிப்பதாக அக்கட்சியின் மாநாட்டில், 2010 தேர்தலின் போது பேசும்போது குறிப்பிட்டார்.
ஆக, அவர் கொண்டிருக்கும் எல்லாக் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் அடிப்படை பகுத்தறிவு, நாத்திகம், மனித நேயம் ஆகியவையே! அவருக்கும் நமக்கும் பெருமை தரக்கூடிய செய்தி இது.
பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நூல்களை எழுதியிருக்கிறார். எட்டு ஆவணப்படங்களைத் தயாரித்திருக்கிறார். ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதிக் குவித்திருக்கிறார். கடவுள் – ஒரு பொய் நம்பிக்கை என்ற நூல் மட்டுமே 20 லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றன. இந்நூல் 31 மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு உலகின் எல்லா நாடுகளிலும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. என்கார்டா என்சைக்ளோபீடியா, என்சைக்ளோபீடியா ஆஃப் எவல்யூசன் (பரிணாமம்) ஆகியவற்றின் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றி அவற்றைத் தொகுத்துள்ளார்.
1967 இல் தன்னுடன் பணிபுரிந்த அறிவியல் பேராசிரியர் மரியன் ஸ்டாம்ப் என்பாரை மணந்து கொண்டார். 1984 இல் மணவிலக்குப் பெற்ற இவர்களுக்குக் குழந்தை இல்லை. பின்னர் ஈவ்பர்ஹாம் என்பாரை ஆக்ஸ்போர்டில் மணந்து ஜூலியட் எம்மா டாகின்ஸ் எனும் பெண் குழந்தைக்குப் பெற்றோர் ஆயினர். அவர் மனைவி புற்றுநோயால் இயற்கை அடைந்த பிறகு லல்லா வார்ட் எனும் நடிகையை 1992 இல் மணந்துள்ளார்.
அவர் எழுதிய (SELFISH GENE) சுயநல மரபணு எனும் நூல் மிக அற்புதமான நூல் என அறிவியல் உலகம் பாராட்டும் நூல். மரபணுக்கள் அடிக்கடி பிரிந்தும், பிறகு இணைந்தும் செயல்படும் ஆற்றல் கொண்டவை என்கிறார். அவை தனித்து இருக்க இயலாதவை; பிறவற்றுடன் இணைந்து ஒன்றை உருவாக்கியவை என்கிற கருத்துகள் அவைபற்றிய நிலையை அறிய உதவுகின்றன.
அதுபோலவே பூமியின் பெரிய நாடகம் (THE GREATEST SHOW ON EARTH) எனும் நூல் உயிர்களின் பரிணாமத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் நூல்.
பல்கிப் பெருகுவாயாக என்று கர்த்தர் ஆசிர்வதித்தார் என்று கூறிக்கொண்டே – கருத்தடை கர்த்தருக்கு எதிர்ப்பானது எனச் சொல்லிக் கொண்டே செயல்படுவதால் உலகம் மக்கள் தொகையால் நிரம்பி வழிவதைக் கண்டு மனம் வெதும்புகிறார். கத்தோலிக்கர் கிறித்துவத்தின் அணுகுமுறையைக் கண்டிக்கிறார்.
மதவாதிகளின் கொள்கைகளுக்கும் வெகுமக்களின் நம்பிக்கைகளுக்கும் எதிர்ப்பான கருத்துகளை வெளிப்படுத்திச் செயல்படும் நாத்திக அறிவியல் அறிஞரான ரிச்சர்டு டாகின்ஸ்சுக்கு 1989 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவியல் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. ஹடர்ஸ்பீல்டு, வெஸ்ட்மினிஸ்டர், டர்வராம் போன்ற பல்கலைக்கழகங்களும் டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியுள்ளன. தொடர்ந்து வரல், ஆன்ட்வெர்ப், அபர்டீன், பிரஸ்ஸலில் உள்ள வ்ரிஜ், வாலன்கியா ஆகிய பல்கலைக்கழகங்களும் இதே பெருமையைத் தந்துள்ளன. டி.லிட் பட்டங்களை செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவை அளித்தன.
இவரது எழுத்துப் பணிகளைப் பாராட்டி பலப்பல பாராட்டுகளும் விருதுகளும் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன – இவர் பெற்ற மெடல்கள் எண்ணிலடங்காதவை. உலகெங்கும் பரவியுள்ள ஏடுகள் தங்கள் அமைப்புகளின் சார்பாக இவரது அறிவியல் இலக்கியப் பணியைப் பாராட்டி, பாராட்டு விருதுகள் அளித்துத் தங்களை உயர்த்திக் கொண்டுள்ளன. பிரிட்டிஷ் பிரபஞ்ச நூல் விருது, டைம் ஏட்டின் விருது, தி டெய்லி டெலிகிராப் போன்ற ஏடுகளின் விருதுகள் குறிப்பிடத்தக்கவை. பிரிட்டனின் முக்கிய 100 பேர்களில் முதல்வராக இவர் 2004 இல் கணிக்கப்பட்ட பெருமையும் உண்டு, உலகில் வாழும் பெரும் மேதைகள் 100 பேர்களில் 20 ஆம் இடத்தை இவர் பெற்றது டெய்லி டெலிகிராப் ஏட்டின் கருத்துக் கணிப்பில்.
2003 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச நாத்திகக் கட்டமைப்பின் சார்பில் சிறப்பு மிகு நாத்திகச் செம்மலுக்கு விருது ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த விருதின் பெயர் ரிச்சர்டு டாகின்ஸ் விருது என்பதாகும். இதுஒன்றே, இவரின் அறிவை, ஆற்றலை, பணிவை மொத்த உலகமும் பாராட்டிக் கொண்டிருப்பதைப் பறைசாற்றும்.
நோயாளிகள் தம் ஆழ்மனதில் சிலவற்றை உண்மை, சரியானவை என்று நினைத்துக் கொண்டு அதற்கான ஆதாரங்களைத் தேடிப் போகாமல் திருப்தி அடைகிறார்கள். அத்தகைய எண்ணத்தை மருத்துவர்களாகிய நாங்கள் நம்பிக்கை (FAITH) என்கிறோம் எனக் கூறி கடவுள், மத நம்பிக்கையாளர்களைத் தோலுரிக்கிறார்.
கணினியைத் தாக்கும் வைரஸ் போல, கண்டறிவதற்குக் கடினமானவையாக இத்தகைய எண்ணங்கள் இருக்கின்றன. பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இவை தெரியாதவை மட்டுமல்ல, அவை இல்லையென்று மறுத்திடும் மனோபாவமும் இப்படிப்பட்டவர்கட்கு உண்டு என்கிறார் டாகின்ஸ். கடவுள் பற்றிய பக்தர்களின் கணிப்பு தவறானது என அறிவியல் எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் ஏற்க மறுக்கிறது இத்தகைய மக்களின் மனம்.
தேவாலயங்களின் கம்பீரம், அங்கு இசைக்கப் படும் இனிய இசை, கூறப்படும் அற்புதக் கதைகளும் அவற்றின் வசனங்களும் உங்கள் மதத்தை நிர்ணயிப்பது ஓரளவே. உங்களுக் கான மதத்தை நிர்ணயிப்பது நீங்கள் குறிப்பிட்ட பெற்றோர்களுக்குப் பிறந்த விபத்தே ! கிறித்துவப் பெற்றோருக்குப் பிறந்ததால் குழந்தையும் கிறித்துவக் குழந்தையாக்கப்படுகிறது. அதுபோலவே இந்து, இசுலாம், பவுத்தம், யூதம் போன்ற மதக் குழந்தைகளின் நிலையும்.
கலிலியோவுக்கு மன்னிப்பளித்த கத்தோலிக்கம் அதைவிட மின்னல் வேகத்தில் டார்வினியக் கொள்கையின் உண்மையை அங்கீகரிக்கிறது என்று கூறி மதவாதிகளைப் பரிகாசம் செய்கிறார்.
உலகம் இருப்பதற்கும் உயிர்கள் வாழ்வதற்கும் கடவுள் தேவைப்படுகிறார் என்று பலரும் நினைக்கிறார்கள். அது மிகவும் தவறான கருத்து. ஆனால், நமக்களிக்கப்படும் கல்வி, அந்த உண்மையை நமக்குத் தெரிவிப்பதாக அமையவில்லையே! என வருந்துகிறார் ரிச்சர்டு டாகின்ஸ். உலகமெங்கும் கல்வித்திட்டம் மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுப்பதாகவே உள்ளன. மூடநம்பிக்கைகளிலேயே பெரும் கொடுமையான மூடநம்பிக்கை என்பது கடவுள் நம்பிக்கையே என்றார் தந்தை பெரியார். அத்தகைய நம்பிக்கையைக் கல்வித்திட்டம் வளர்க்கிறது, எல்லா நாடுகளிலும்!
இது அழிக்கப்படவேண்டும்.